27

27

சிம்பாப்வேவின் புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் மங்கக்வா !

ஆப்பிரிக்க நாடான சிம்பாப்வேவில் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் திகதிகளில் நடந்தது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

 

தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் ஜனாதிபதி  எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி ஏற்க மறுத்து உள்ளது.

 

இதுகுறித்து எதிர்க்கட்சி செய்தி தொடர்பாளர் கூறும்போது, சரியான சரி பார்ப்பு இல்லாமல் அவசர மாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார். தேர்தல் 23-ந்திகதி ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட இருந்தது. ஆனால் வாக்கு சீட்டு அச்சடிப்பதில் ஏற்பட்ட தாமதம், சிக்கல்கள் காரணமாக 24-ந்திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் ஜனாதிபதி தேர்தல் முடிவு நாளை வெளியிடப் படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒரு நாள் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ராபர்ட் முகாபே அரசு, இராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. அதன்பின் இடைக் கால அதிபராக எம்மர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் எம்மர்சன் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இதனால் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை எம்மர்சன் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். தற்போது 2-வது முறையாக எம்மர்சனின் வெற்றியை எதிர்க்கட்சி ஏற்காததால் போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது.

அதிகரித்த வரட்சி – கிளிநொச்சியில் இந்த நிலையில் ஆயிரக்கணக்கான மீன்கள் !

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு களப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துள்ளன.

இதனால் மீன் இனங்கள் அழிந்து வரும் நிலை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் அதிக வெப்பத்தினால் வறட்சி ஏற்பட்டு, அதனால் பல இழப்புகள் இடம்பெறுவதோடு பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற போது முக்கிய பதவியிலிருந்த சந்தோஷ் ஜா !

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக இராஜதந்திர சேவையில் உள்ள சந்தோஷ் ஜா இலங்கைக்கான அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் கொழும்பில் உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் இராஜதந்திர பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

2020ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமனம் பெற்ற சந்தோஷ் ஜா, 2019 முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார்.

மேலும், 2017 – 2019 ஆண்டுகளில்  வொஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், 2015 – 2017 வரையிலான ஆண்டுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சின் கொள்கை திட்டமிடல் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்த காலப்பகுதியில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாடுகளுக்கும் சவால்களுக்கும் பதிலளிக்கும் திறன் கொண்ட இராஜதந்திர பிரிவை உருவாக்க பங்களிப்பு செய்திருந்தார்.

குறிப்பாக, முக்கிய இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும், பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயற்பட்டவராகவே இராஜதந்திரி சந்தோஷ் ஜா காணப்படுகிறார்.

அதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார். அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களையும் கையாண்டுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அமெரிக்க – இந்திய அணு ஆயுத பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினராகவும் பொறுப்புக்களை ஏற்றிருந்தார். இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக, இலங்கையில் இறுதிப்போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் கட்டுமான துறைகளை மேம்படுத்தும் இந்திய திட்டங்களிலும் முக்கிய பங்கை வகித்திருந்தார்.

எனவே, இலங்கையின் உள்ளக அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பரந்துபட்ட அனுபவத்தை கொண்ட மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜாவை கொழும்பில் அடுத்த உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்க டெல்லி அனுப்புகிறது.

இலங்கையை மையப்படுத்திய சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்து இந்தியாவின் மூலோபாய கவலைகள் அதிகமாக காணப்படுகின்ற சூழலில் இந்த நியமனம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தலைமைப்பிக்குவின் துர்நடத்தை – விகாரையிலிருந்து தப்பியோடிய சிறுவயது பிக்குணிகள் !

மினுவாங்கொடையில் உள்ள பௌத்த விகாரையிலிருந்து மூன்று இளம்பெண் பௌத்த துறவிகள் காணாமல்போனமை தொடர்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

12, 15, 18 வயதுடைய பெண் பௌத்த துறவிகள் காணாமல்போனமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

விகாரையின் தலைமை மதகுரு மோசமாக நடந்துகொண்டதாகவும், இதனை தொடர்ந்து அவர்கள் அந்த விகாரையில் இருந்த பெண்ணுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் பின்னர், அவர்கள் நுவரெலியாவில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து உறவினர்கள் அவர்களை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பிடிக்குள் சிக்கியுள்ள இலங்கையில் காலனித்துவ ஆட்சியே நடக்கிறது.” – அனுரகுமார விசனம் !

இலங்கைக்கு அதன் வரிவிதிப்பு அல்லது நிதிக் கொள்கைகளை தீர்மானிக்க சுதந்திரம் அல்லது இறையாண்மை இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய பிக்கு முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

“வரிவிதிப்பு, நிதிக் கொள்கைகள் போன்றவற்றின் அனைத்து முடிவுகளும் அமெரிக்க தலையீட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்ப செய்யப்படுகின்றன.

நாடாளுமன்றத்திற்கு பொது நிதி அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டாலும், இலங்கையில் வரிகளை சுமத்துவதற்கும், மாற்றுவதற்கும் மற்றும் நீக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அதிகாரம் உள்ளது.

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டு நாள் விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோரியபோது, அது சாத்தியமில்லை, விவாதம் இரண்டு நாட்களுக்கு நீடித்தால், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய காலக்கெடுவை பாதிக்கும்.

இது, சட்டங்களைத் திணிப்பதும், பொது நிதி மீதான கட்டுப்பாடும் இனி நாடாளுமன்றத்தின் கீழ் இல்லை என்பதை இது காட்டுகிறது. அத்துடன் தற்போதைய ஆட்சி காலனித்துவ ஆட்சிக்கு ஒத்ததாக இல்லையா?  எனவே மக்களின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கான புதிய போராட்டம் தற்போது தேவைப்படுகிறது.” என்றார்.

பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை !

குற்றவியல் சட்ட விதிகளின் கீழ் பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில், இலங்கை மத்திய வங்கி பல்வேறு பெயர்களில் ஊக்குவிக்கப்படும் பிரமிட் திட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்தது.

அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஏழு நிறுவனங்களின் பட்டியலையும் மத்திய வங்கி பெயரிட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு !

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் புதன்கிழமை (30) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வட, கிழக்கு மாகாணங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை ‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’ என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுட்டிக்கப்படவுள்ளது.

இத்தினத்தன்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அவ்விரு மாகாணங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இறுதிக்கட்ட போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2300 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் நீட்சியாக எதிர்வரும் புதன்கிழமையன்று வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள அவர்கள், தமது உறவுகளுக்கான நீதி நிலைநாட்டப்படுவதை முன்னிறுத்தி இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு சகல தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.

அதேபோன்று உள்ளகப் பொறிமுறையின் மீது தாம் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், நம்பத்தகுந்த சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தும் அதேவேளை, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஊடாக கோரிக்கை விடுக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை உள்ளடக்கி தெற்கில் இயங்கிவரும் அமைப்பான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி எதிர்வரும் 31ஆம் திகதி வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதியமைச்சிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளது.

அதுமாத்திரமன்றி அன்றைய தினம் மாலை ‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் காணாமல்போவதற்கு இடமளிக்காதிருப்போம்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவுகூரல் நிகழ்வு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

வவுனியாவில் 162,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்ட கோயில் மாம்பழம் !

வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

உக்குளாங்குளம் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ஆம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.

Gallery

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 162,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இவ் மாம்பழத்தை வவுனியா – உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ச.சிந்துஜா என்பவர் 162,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வவுனியா, தவசிகுளம் பகுதியிலுள்ள ஸ்ரீ விநாயகர் இந்து ஆலயத்தில் கடந்த 13.08.2023 அன்று விசேட பூசை மற்றும் நிகழ்ச்சியின் பின்னர் இடம்பெற்ற ஏலத்தில் மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த மாம்பழத்தை லண்டனை சேர்ந்த தம்பதியினர் வாங்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

“குருந்தூர் மலை வழிபாடு தொடர்பான பிரச்சினையை தீர்க்க கதிர்காமத்தினை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்.” – பேராசிரியர் சன்ன ஜயசுமன

குருந்தூர் மலையில் சர்ச்சைகள் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் அதிகரித்து வருவதால் அதற்கு நிரந்தரமான தீர்வொன்றை பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்மொழிந்துள்ளார்.

அவருடைய முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குருந்தி மலையானது (குருந்தூர் மலையானது) தொல்பொருளியல் பகுதியாகும். அதற்கான சான்றாதாரங்கள் பல காணப்படுகின்றன. ஆகவே அந்தப் புராதன இடத்தினை பேணுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது.  எனினும், குறித்த பகுதியில் பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் வழிபாடுகளைச் செய்துவந்ததாக வரலாற்றின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது.

ஆகவே, தற்போதைய நிலைமையில், இந்த விடயத்தினை மையப்படுத்தி பௌத்தர்கள், இந்துக்கள் இடையே முரண்பாடான நிலைமைகள் வலுவடைவதற்கு இடமளிக்காமல், நிரந்தரமானதொரு தீர்வினை காண்பது அவசியமாகிறது.

அதன் அடிப்படையில், குறித்த மலையின் கீழ்ப் பகுதியில் உள்ள பிரதேசத்தில் தொல்பொருளியல் விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், இரு சமயத் தலங்களை நிர்மாணிப்பதே பொருத்தமானதாகும்.

குறிப்பாக, மலையின் கீழ்ப் பகுதியில் தலா ஒவ்வொரு ஏக்கர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்து மற்றும் பௌத்த தலங்களை நிர்மாணிப்பதன் ஊடாக இரு தரப்பினரும் தமது இறை நம்பிக்கைக்கு அமைவாக வழிபாடுகளை முன்னெடுக்க முடியும்.

இதற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமத்தினை முன்னுதாரணமாகக் கொள்ள முடியும். அதன் மூலமாக பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினைக் காண முடியும் என்றார்.

“முல்லைத்தீவில் மக்கள் குடியிருக்க நிலமில்லை. ஆனால் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ளது.” – துரைராசா ரவிகரன் விசனம் !

“முல்லைத்தீவில் மக்கள் குடியிருக்க நிலமில்லை. ஆனால் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்ளது.” என  முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு நிலம் இல்லை. தொழில் முயற்சிக்கென 28,626 இளைஞர், யுவதிகள் ஒரு ஏக்கர் வீதம் தமக்குக் காணி தருமாறு மாவட்ட செயலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும் அதற்கு சாதகமான பதில்கள் இல்லை.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரத்தின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பானது 2415 சதுர கிலோ மீற்றர் தரையாகவும், 202 சதுர கிலோ மீற்றர் உள்ளக நீர்ப் பிரதேசமாகவும் காணப்படுகிறது.

இதில் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் 222006 ஏக்கர், 36.72 சதவீதமான நிலம் வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்டு காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 167484 ஏக்கர் 30.37 நிலப்பரப்பை வனவள திணைக்களம் மேலதிகமாக தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்துள்ளது.

தற்போது காடு பேணல் சட்டத்தின் கீழ் ஒதுக்கக்காடுகளாக மீண்டும் 42,631 ஏக்கர் 7.15 சதவீதமான நிலப்பரப்பை வனவள திணைக்களம் கோரியுள்ளது. அவ்வாறு குறித்த நிலப்பரப்பும் வனவள திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டால் மொத்தமாக உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்வாங்கப்பட்டுவிடும்.

மிகுதி நிலப்பரப்பில் பெரும்பகுதியை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியமணல் திணைக்களம், படையினர் உள்ளிட்ட தரப்பினர் ஆளுகை செய்கின்றனர்.

குறிப்பாக வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பில், மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைக்காக சுமார் 50,000 ஏக்கர் காணி தேவை எனவும், அவற்றை விடுவித்து தருமாறு மாவட்ட செயலகம் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் முறையான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், வேறு திணைக்களங்கள் காணிக் கோரிக்கை முன்வைக்கும்போதும், குடியேற்றங்களுக்காக காணிக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதும் காணிகளை விடுவிக்கின்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருக்க காணி இல்லாத நிலை காணப்படுகிறது.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள நிலையில், கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

நீண்ட காலமாக இவ்வாறு மேய்ச்சல் தரைக்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றபோதிலும் இதுவரை மேய்ச்சல் தரைக்குரிய காணிகள் வழங்கப்படவில்லை.

அந்த வகையில், தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் குடியிருக்க காணி இல்லாததோடு, கால்நடைகளுக்கும் மேய்ச்சல் தரைக்கான காணிகள் இல்லை என்கிற நிலைமையே ஏற்பட்டுள்ளது என்றார்.