28

28

பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபாயா’ ஆடையை அணியத் தடை – பிரான்சில் புதிய கட்டுப்பாடு !

பிரான்ஸ் பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் ‘அபாயா’ எனப்படும் முழு அங்கி ஆடையை அணியத் தடை விதிக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கட்டுப்பாடு அமுலுக்குக் கொண்டுவரப்படும்” என்று பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது அந்நாட்டில் விவாதப் பொருளாகியுள்ளது.

 

பிரான்ஸ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் எந்தவித மத அடையாளங்களுடன் மாணவர்கள் வரக் கூடாது என்பது சட்டமாக உள்ளது. அதன்படி பெரிய அளவிலான சிலுவைகள், யூதர்களின் கிப்பாஸ், முஸ்லிம்கள் பயன்படுத்தும் தலையை மறைக்கும் முக்காடு என எதுவும் அனுமதிக்கப்படுவதுல்லை. இந்நிலையில், இஸ்லாமிய சிறுபான்மையினச் சிறுமியர் அணியும் அபயா எனப்படும் முழு அங்கியை அச்சமூக சிறுமிகள் அரசுப் பள்ளிக்கு அணிந்துவர தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

முன்னதாக, கடந்த 2004-ல் பள்ளிகளில் தலைக்கு மட்டும் அணியப்படும் முக்காடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. 2010-ல் முகத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸின் 50 லட்சம் முஸ்லிம்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இந்தச் சூழலில் அபயாவுக்கு தடை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “அபயா எனப்படும் முழு அங்கியை இனிமேல் பள்ளிச் சிறுமிகள் அணிந்துவர அனுமதிக்கப் போவதில்லை. ஒரு குழந்தை பள்ளி வகுப்பறைக்குள் நுழையும்போது அதன் புறத்தோற்றத்தைக் கொண்டு குழந்தையின் மதத்தை கண்டுபிடிக்கும்படி அவர்கள் ஆடை, அணிகலன்கள் இருக்கக் கூடாது” என்றார். ஏற்கெனவே பிரான்ஸில் பெண்கள் ஹிஜாப் அணியத் தடையிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள பிரான்ஸ் நாட்டின் முஸ்லிம் சிறுபான்மையின அமைப்புகளின் கூட்டமைப்பான தி பிரென்ச் கவுன்சில் ஆஃப் முஸ்லிம் ஃபெயித், ஆடை மட்டுமே மத அடையாளம் ஆகிவிடாது. ஆகையால் அபயா தடை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள சூழலில் அந்நாட்டு கல்வி அமைச்சரின் இந்த புதிய கெடுபிடி பலதரப்பு மக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் அதிருப்தியில் உள்ளனர்.

“இலங்கை அரசாங்கம் இந்தியாவின் கருத்துக்கு இடமளிக்கவேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் அதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ‘ஷி யான் 06’ என்ற சீன ஆய்வுக்கப்பல் நாட்டுக்கு வருகைதரவுள்ளது.

இவை இலங்கையில் இந்திய – சீன இராஜதந்திர மோதலுக்கு வழிவகுக்கும் எனவும், மேற்குறிப்பிட்ட நாடுகளுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் இலங்கைக்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என்றும், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் மற்றும் சீன ஆய்வுக்கப்பலின் வருகை என்பன நிகழ்ச்சி நிரலிடப்பட்டதன் அடிப்படையில் நடைபெறுவதனால் எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகள் நியாயமானவை என்று இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இவ்விவகாரத்திலும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தியா வெளிப்படுத்தும் பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் முற்றிலும் நியாயமானவை என்று சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுக்கு சார்பாக செயற்படவேண்டும் என்ற நோக்கில் இக்கருத்தை வெளியிடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ‘இந்தியா இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் உள்ளது. இருப்பினும் சீனா இப்பிராந்தியத்துக்கு உட்பட்ட நாடு அல்ல. எனவே இந்தியாவின் நட்பு நாடு அல்லாத சீனா, இப்பிராந்தியத்தின் பிறிதொரு நாட்டில் முன்னெடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பாதுகாப்புசார் கரிசனைகளைத் தோற்றுவிப்பது நியாயமானதொன்றேயாகும்’ என்று தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறுவதில் அர்த்தமில்லை என்றும், மாறாக இதில் இந்தியாவின் கருத்துக்கு இடமளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்திய சுமந்திரன், இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.

குருந்தூர்மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து எந்த வித முறைப்பாடுகளும் இல்லை – பொலிசார் !

குருந்தூர்மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து எந்த வித முறைப்பாடுகளும் இல்லாததால் இது தொடர்பில் எவரையும் கைதுசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குருந்தூர் மலையை அடிப்படையாகவைத்து உருவாகும் குழப்பநிலைக்கு காரணமான நபரை புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர் எனதெரிவித்தார்.

இது குறித்து கேள்வி எழுப்பியவேளை இது தொடர்பில் எந்த முறைப்பாடும் முன்வைக்கப்படவில்லை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முறைப்பாடுகள் அவசியம் முறைப்பாடுகள் இல்லாமல் விசாரணைகளை முன்னெடுக்கவே கைதுசெய்யவோ முடியாது எனினும் குருந்தூர் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்ற சிறிய சம்பவங்கள் குறித்து அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் விகாரை அமைப்பதை இடைநிறுத்திய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக பிக்குகள் போராட்டம் !

திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கு கோரப்பட்ட அனுமதி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரையின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விகாரையை நிர்மாணிப்பதால் ஏற்படும் பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமாருக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து, ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், விகாரை கட்டுவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகளால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேரர்கள் போராட்டம்!

திருகோணமலை, மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, ஏ-6 பிரதான விதியில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பௌத்த பிக்குகளும், சிவில் சமூக உறுப்பிர்களும் கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக குறித்த வீதியுடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

காலாகாலமாக தமிழ் மக்கள் வாழும் குறித்த பகுதிக்குள் விகாரை அமைத்தால் அது இன முறுகலை ஏற்படுத்தும் என்று அப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனது சகோதரர் அனுப்பிய 320 மில்லியன் டொலர்கள் செலவிலான ரொக்கெட் தொடர்பில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது – நாமல்ராஜபக்ச விசனம் !

இந்தியாவின் சந்திராயன் குறித்தும் தனது சகோரரின் விண்வெளி முயற்சிகள் குறித்தும் நாடாளுமன் உறுப்பினர் நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் விண்கலத்தினை தனது சகோதரர் அனுப்பிய ரொக்கட்டுடன்  தொடர்புபடுத்தி சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் – நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் தனியார் துறை முயற்சியாகவே ரொக்கட்டினை அனுப்பினார் அதில் அரசாங்கம் தொடர்புபட்டிருந்தால் மாத்திரமே அது குறித்து கோப் குழுவினர் விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வர்த்தகர் ஒருவரின் முதலீடு குறித்து நாங்கள் கேள்வி எழுப்ப முடியாது அதில் அரசாங்கத்திற்கு தொடர்பிருந்தால் மாத்திரம் எதிர்கட்சி தலைவர் நாடாளுமன்ற விசாரணையை கோரமுடியும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சேற்றை வாரிவீசும்அரசியல் சூழலை அடிப்படையாக கொண்டவை இந்த கருத்துக்கள் இவ்வாறான கருத்துக்களால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Sri Lanka's takeoff to space age today! – DaillyFT | SupremeSAT

Our Lanka: Sri Lanka steps into space today with first satellite

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் மகனான ரோஹித ராஜபக்சவினால்  2012 ஆம் ஆண்டு இலங்கை நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சுப்ரீம் சட் 1 (Supreme SAT-1) செயற்கைக்கோளுக்கு 320 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டிருந்ததது.

இந்தநிலையில், இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பேசிய போது “  “இந்தியா 2008, 2019 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் முறையே சந்திரயான் 1, 2 மற்றும் 3 என மூன்று தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டு இறுதியாக எப்படியோ நிலவை அடைந்தது.

எனினும், இந்த 3 செயல்முறைகளுக்கும் 263 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் 3 முறை முயற்சித்தும் செலவழித்த பணத்தை விட நம் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் செயற்கைக்கோளுக்கான செலவு அதிகம்.

இதற்காக செலவிடப்பட்ட 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்த அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நிலவில் இறங்குவது எப்படி போனாலும் நாட்டை வங்குரோத்தாக்குவதற்கு இதுவும் காரணமே” என தெரிவித்திருந்த நிலையிலேயே இதற்கு நாமல் ராஜபக்ச மேற்குறித விளக்கம் கொடுத்துள்ளார்.

EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக கொழும்பில் போராட்டம் – குவிக்கப்பட்ட பாதுகாப்பு படை !

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (28) இந்த போராட்டம் இடம்பெற்றது.

கொழும்பில் பதற்றம்! முக்கிய இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் (படங்கள்) | Colombo Etf Epf Protest

குறித்த போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவு இன்று (28) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திர, சரித ஹேரத், வாசுதேவ நாணயக்கார, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 24 பேர் மற்றும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவுள்ளவர்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பதற்றம்! முக்கிய இடத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் (படங்கள்) | Colombo Etf Epf Protest

 

யாழ் மாவட்டத்தில் 70,408 பேர் வறட்சியால் பாதிப்பு !

யாழ் மாவட்டத்தில் 22,044 குடும்பங்களைச்  சேர்ந்த 70,408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.மாவட்டச்  செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இத்தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, மருதங்கேணி, சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர்ப் பற்றாக்குறையான பகுதிகளுக்கு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நிதி உதவியுடன் பவுசர்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போதைய நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் குடிநீர்த் தேவையுடைய குடும்பங்களின் தொகை அதிகரிக்கக்கூடும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டுமென குறித்த பிரதேச செயலக,  பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் போது நெடுந்தீவு உட்பட தங்களால் நீர்வழங்கல் செய்யப்படும் பிரதேசங்களிற்கு குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கக் கூடிய வகையில் நீர்வழங்கலை மேற்கொள்ள முடியுமெனவும் தற்போது மாவட்டத்தில் அவ்வாறான
சேவைகள் 18 குடிநீர் மூலங்கள் மூலமாக செயற்படுவதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை
பொறியியலாளர் தெரிவித்தார்.

அதே வேளை எதிர்வரும் கால வறட்சியினை கருத்திற் கொண்டு
நீர்ப் பாவனையில் விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக நீரைப் பாவிக்க பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.