29

29

அமெரிக்காவில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா – எதிர்க்கும் வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்து. சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இந்த சட்ட மசோதா உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மசோதா அம்மாநில கவர்னர் கவின் நியூசோமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், சட்டமாக்கப்படும். மசோதா நிறைவேற்றியதன் மூலம், சாதி பாகுபாடு எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலம் என்ற பெருமையை கலிபோர்னியா பெற்றுள்ளது. உறுப்பினர் ஆயிஷா வஹாப் அறிமுகப்படுத்திய இந்த மசோதாவிற்கு ஏராளமான சாதி சமத்துவ மக்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.

 

எஸ்.பி.403 சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்த அனைத்து உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்த வஹாப், நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பாகுபாட்டில் இருந்து மக்களை பாதுகாக்கிறோம் என்றார். அதேவேளையில் வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி (CoHNA) கலிபோர்னியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் எனக் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆட்களற்ற வீடுகளை இலக்கு வைக்கும் போதைக்கு அடிமையானவர்கள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்கள் அற்ற வீடுகளில் ஒன்று கூடும் போதைக்கு அடிமையானவர்கள், அந்த வீடுகளில் இருந்து போதையை நுகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அவர்கள் வீடுகளுக்குள் இருந்து பெரும் குரல் எழுப்பி சத்தங்களையும் எழுப்புவதனால் , அவ்வீடுகள் அமைந்துள்ள வீதிகளால் பயணிப்போர் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர்.

 

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில், ஊசி மூலம் அதிகளவில் போதையை உட்செலுத்துவதாலும், தொடர்ந்து போதையை நுகர்வதால் கிருமி தொற்றுக்கு இலக்காகியும் உயிரிழப்புக்கள் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளமையால், சந்தேகத்திற்கு உரிய இடங்களில் பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தை பெற்றெடுத்த 14 வயது சிறுமி – தகவலை மூடி மறைத்த வைத்தியசாலையின் விசேட சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர் !

சிறுமி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்காமல் மறைப்பதற்காக கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயதுடைய சிறுமி பண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

 

சிறுமி 14 வயதில் கர்ப்பமாக இருந்ததால் அவர் பிரசவித்த குழந்தை குறைந்த எடையுடையதாக இருந்ததன் காரணமாக ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக இந்தச் சிறுமி அறுவைச் சிகிச்சை நிபுணரால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவுக்கு அனுப்பி வைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

 

அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்தச் சிறுமி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், வைத்தியசாலை ஊழியர்கள் இது தொடர்பில் வைத்தியசாலை சட்ட மருத்துவப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், குறித்த வைத்தியர், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அவ்வாறான அறிவித்தலை வழங்கக் கூடாது என அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

 

எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அசுத்தமாக இருந்த இலங்கை கடற்கரையை தூய்மையாக்கிய வெளிநாட்டு இளைஞர்கள்!

இலங்கை மக்கள் பாரியளவில் அசுத்தப்படுத்தியிருந்த அம்பலாங்கொடை கடற்கரையை இன்று (29ஆம் திகதி) காலை சுத்தப்படுத்தும் பணியில் வெளிநாடுகளைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் குழுவொன்று ஈடுபட்டது.

அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகாலையில் வந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தின் சில உத்தியோகத்தர்களைத் தவிர பலர் தாமதமாகவே வருகை தந்தனர்.

அம்பலாங்கொட பொல்வத்த ஆஷிகா செனவிரத்னவினால் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு இளைஞர்கள் குழுவொன்று கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இணைந்துகொண்டது.

யாழில் ”யாழ் முயற்சியாளர் – 2023”என்ற விற்பனைக் கண்காட்சி ஆரம்பம் !

யாழில் ”யாழ் முயற்சியாளர் – 2023”என்ற விற்பனைக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியானது இன்றைய தினமும், நாளைய தினமும் யாழ்ப்பாணம், நல்லூர்,முத்திரைச்சந்தி அருகாமையில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றிற்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் விதமாகவே இக்கண்காட்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

 

அத்துடன் ’மேலதிக அரசாங்க அதிபர் (காணி), நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் கமலகுமாரி கருணாநிதி, தொழிற்துறை திணைக்களத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் உள்ளிட்ட பலரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் !

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இதனை குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட குறித்த சட்டமூலத்தில் ஒருசில பிரிவுகள் தொடர்பாக பலர் கவலைகளை எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் அனைவரது கருத்துக்களையும் கருத்திற்கொண்டு தேவையான திருத்தங்களை செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிக்க சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதேநேரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளார்.

மாவா போதைப்பொருளுடன் பாடசாலை மாணவன் யாழ் தீவக பகுதியில் கைது!

யாழ்.தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மாவா போதை பொருளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

 

இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

கத்தியுடன் வர்த்தக நிலைய பணியாளர்களை அச்சுறுத்திய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கைது !

யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவனொருவர் கத்தியுடன் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று அங்கு பணிபுரிபவர்களை அச்சுறுத்தியமைக்காகவே அம்மாணவன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் குறித்த மாணவனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் ஆங்கில பாடத்தை வெற்றிகரமாக முடித்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் !

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தேசிய மொழிப் பயிற்சி நிறுவனம் நடத்தும் ஆங்கில மொழிப் பாடத்தை ஐந்து பேர் மட்டுமே வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இது தொடர்பான சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசியப்பட்டியல் எம்.பி, கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.பி., மற்றும் காலி, குருணாகல், மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆகியோர் இந்தப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்கள் ஆவர்.

ஆரம்பத்தில் 15 எம்.பி.க்கள் இதில் ஈடுபட்டிருந்த போதிலும், அது படிப்படியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எம்.பி.க்களின் வசதிக்காக பாராளுமன்ற அமர்வு நாட்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

எம்.பி.க்கள் தவிர, 42 பாராளுமன்ற ஊழியர்களும் ஆங்கில மொழி பாடத்தில் பதிவு செய்யப்பட்டனர்.

ஊசி போதைப்பொருள் பாவித்த இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி பலி – யாழில் சம்பவம் !

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, இன்னுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில், உடலில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.