31

31

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி !

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிசார் இன்று (31) கைது செய்துள்ளனர்.

வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களிடம் கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணம் பெற்றுள்ளார்.

ஒருவரிடம் இருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றுள்ளதுடன், பிறிதொருவரிடம் 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார்.

எனினும் கனடா அனுப்பாது மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா  தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருட்டு !

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.

 

ஆலய தேர் திருவிழா புதன்கிழமை (30) நடைபெற்றது. அதன் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

அவ்வேளையில், சன கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தோரின் நகைகளை திருடி உள்ளனர்.

 

நகை திருட்டுக்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. முறைப்பாட்டின் பிரகாரம் சுமார் 25 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர்மலையில் விகாரை கட்டிய தொல்பொருள் திணைக்களம் – முல்லைத்தீவு நீதிமன்றம் வெளியிட்டுள்ள கட்டளை !

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அத்துமீறி விகாரை கட்டப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்டுள்ளது.

 

நீதிமன்ற கட்டளைகளை மீறி அங்கு கட்டுமானங்கள் இடம்பெறுவதாக குறித்த ஆலயத்தினுடைய பக்தர்களால் ஆதாரங்களுடன் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து அங்கு கட்டுமானப்பணிகள் இடம்பெற்றனவா..? என்பது தொடர்பாக ஆராய்வதற்காக நீதிமன்றத்தால் கள விஜயம் செய்யப்பட்டது.

ஏற்கனவே செய்யப்பட்ட கள விஜயத்தை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

 

அதாவது கட்டளையை வழங்கிய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை எனவும் கட்டளை வழங்கியுள்ளார்.

 

இதன்போது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆலய நிர்வாகம் சார்பிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகி இருந்ததோடு ஆலய நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

இதேவேளையிலே தொல்லியல் திணைக்களம் சார்பாக தொல்லியல் திணைக்களத்தின் வவுனியா, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் மற்றும் தொல்லியல் திணைக்கள சட்டத்தரணிகள் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் – 8 மாதங்களில் 5000 முறைப்பாடுகள்!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்த வருடம் 5000 இக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் காப்புறுதி அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

அவற்றில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296 முறைப்பாடுகளும், கடுமையான காயங்கள் தொடர்பாக 163 முறைப்பாடுகளும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 242 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன.

 

மேலும், சிறுவர்கள் பிச்சை எடுப்பது தொடர்பாக இதுவரை 196 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுதொடர்பான முறைப்பாடுகள் பெரும்பாலும் கொழும்பு மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து பதிவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் இணையவெளியில் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக 110 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சிறுமிகள் தொடர்பில் 76 முறைப்பாடுகளும், சிறுவர்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பான தகவல்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மூன்று கோடி ரூபாய் ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் இளைஞன் கைது !

மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் வைத்து சுமார் 3 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒரு வரை செவ்வாய்க்கிழமை (29) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

 

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பஸ் குறித்த போதைப்பொருள் கடத்தி செல்லப்பட்ட நிலையில், விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த பஸ் விசேட அதிரடிப்படையினரால் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் போதைப்பொருள் உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.