உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் -4 காணொளி தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(05) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அதற்கான தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களின் விபரங்கள் குறித்து சனல் 4 என்ற ஊடகம் காணொளியை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த சனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவிக்குழு ஒன்றை நிறுவுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பல அதிர்ச்சித் தகவல்களை பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளவிடயங்கள்.,
“ என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது. நான் உண்மையை சொல்ல வேண்டும்.” என பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதலில் சாதாரண பொதுமக்களே ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் கொன்று குவிக்கப்பட்டனர்.
இவர்கள் கொல்லப்பட்டமை ஆட்சியை கைப்பற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசியலில் மிகவும் விசுவாசமாக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் ஆசாத் மௌலானா அரசியலில் ஈடுபட்டுவந்தவர்.
என்னிடம் ஆபத்தான கைதிகள் உள்ளனர், அவர்கள் கடும்போக்கானவர்கள். அவர்களில் ஒருவரை சந்திக்குமாறு பிள்ளையான் தன்னிடம் தெரிவித்ததாக ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.
இதையடுத்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்த செய்னி மௌலவியை தான் சந்தித்ததாக ஆசாத் மௌலானா கூறுகின்றார். இதையடுத்து இதுவொரு நல்ல சந்தர்ப்பம். நாம் அவர்களை பயன்படுத்துவோம் என பிள்ளையான் எனக்கு கூறினார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிள்ளையான் எனக்கு கூறுகிறார் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு .
இதையடுத்து தான் தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்தவர்களுக்கும் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் இடையிலான சந்திப்பை கிழக்கில் ஒரு கைவிடப்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்ததாக ஆசாத் மௌலானா கூறுகிறார்.
இதன்போதே செய்னி மௌலவி தனது சகோதரனான சஹ்ரானை எனக்கு அறிமுகப்படுத்தினார் எனக் கூறுகிறார் ஆசாத் மௌலானா. அதன் பின் நான் உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலேயை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.
குறித்த சந்திப்பு நிறைவடையும் வரை நான் வெளியில் காத்து நின்றேன். சந்திப்பு நிறைவடைந்து வெளியில் வந்த சுரேஷ் சாலே “ ராஜபக்ஷர்களுக்கு இலங்கையில் ஒரு குழப்பமான நிலை தேவையாக உள்ளது. அதுவே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க ஒருயொரு வழி” என்று கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் யாரெல்லாம் சந்திப்பில் கலந்துகொண்டார்களோ அவர்களின் முகங்களை நான் அடையாளப்படுத்தி படங்களை வெளியிட்டேன் என்கிறார் ஆசாத் மௌலானா.
முதலாவது படம் சஹ்ரான், அவர் தான் அமைப்பின் தலைவரும் தற்கொலைதாரியுமாவார். இதன் பின்னர் நான் பிள்ளையானுடன் கதைத்தேன். அப்போது அவர் “ நீ வாயை மூடிக்கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு அது போதும்” என்றார்.
அவர்களது மக்களையே ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் கொலைசெய்தார்கள். இதுவொரு கசப்பான உண்மை என்கிறார் ஆசாத் மௌலானா.
பிரித்தானிய தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (05) ஒளிபரப்பப்பட்ட சனல் 4 டிஸ்பாட்ச்கள் ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் இந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.
இதன் முழுமையான ஆவணப்படம் பிரித்தானிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (5) பிற்பகல் 11 : 05 க்கு வெளியாகவுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 269 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது வெளிநாட்டில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.
இதேவேளை, ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த நிலையில், சுரேஷ் சாலேயும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காணொளி