September

September

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்த விசேட கலந்துரையாடல்!

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்தி அப்பகுதியிலிருந்து சுற்றுலாத்துறைக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

அறுகம்பை பகுதியை அடிப்படையாக கொண்டு அம்பாறை மாட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலின் போது அறியப்பட்ட பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது.

 

அதற்கமைய இப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டின் போது ஏற்படும் சவால்கள் தொடர்பில் விரிவாக அவதானம் செலுத்தப்பட்டதோடு, அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்தற்காக துறைசார் நிறுவனங்களின் தலையீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

 

இதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சுற்றுலாத்துறை திட்டமும் வெளியிடப்பட்டதோடு, மூன்று வருடங்களுக்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதியின் கருத்தறிவதற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

 

மேற்படிச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக ஒரு மாதத்தில் மீண்டும் கூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

 

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்க, பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக்க அபேவிக்ரம மற்றும் துறைசார் நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.

“நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம்.” – நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நிதி நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு உதவுவதற்கான முறையான திட்டம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

 

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (20) நடைபெற்ற அபிவிருத்திக்கான நிதியுதவி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் ஆற்றிய சிறப்புரையிலேயே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார்.

 

“யாரையும் கைவிடாத உலகில் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான நிதியளிப்பு” எனும் தொனிப்பொருளில், நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்த 2023 மாநாட்டுடன் இணைந்தாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் பல நாடுகளின் அரச தலைவர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

 

“ஒரு பொதுவான கட்டமைப்பு அல்லது செயன்முறை இல்லாததன் விளைவாக நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் அவலநிலை குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உதாரணமாக கூறுவதாயின், இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்த பின்பு அனைத்து வெளிநாட்டு நிதி கொடுக்கல் வாங்கல்களும் நிறுத்தப்பட்டதைக் குறிப்பிடலாம்.

 

இதன் காரணமாக பாரிய அரசியல் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருந்தாலும், அமெரிக்க அரசிடமிருந்து கிடைத்த பசளை நன்கொடையால் பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

 

இவ்வாறாகப் பார்க்கும்போது, நிதிச் நெருக்கடி காணப்படும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்க முறையான திட்டம் தேவை என்பதை வலியுறுத்தும் அதேநேரம், இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என்பதோடு, உலகளாவிய பொருளாதார நிலைமை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

 

இந்த ஆண்டு, எதிர்பார்க்கப்படும் உலகளாவிய மொத்த தேசிய உற்பத்தி 105 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இதில் 91 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் பொதுக் கடனாகும். எனவே, இந்த அனுமானங்களை மையப்படுத்தியே நாம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதனால் தற்போது எம்மிடத்தில் உள்ள விடயங்களை கொண்டு பயனடைய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீடிக்கப்பட்ட கடனாக பெற்றுக்கொள்ளும் இயலுமை உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பயன்டுத்துவதே இங்கு முக்கியமானதாக காணப்படுகின்றது.

 

அதனையடுத்து, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வருடாந்தம் 500 பில்லியன் டொலர்களையும் வழங்குவதாகவும், குறுகிய காலக் கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் நீண்ட காலக் கடனாக மாற்றப்பட வேண்டும் எனவும் செயலாளர் நாயகத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை செயற்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த இலக்குகள் எதிர்காலத்தில் அடைந்துகொள்ள வேண்டியிருப்பதால், செயலாளர் நாயகம் முன்வைத்த யோசனைகளை சாத்தியமாக்குவது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். அதேசமயம், மேலும் இரண்டு முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக உரம் மற்றும் எரிபொருளுக்கான மானியங்களை விரிவுபடுத்துவது தொடர்பான உலக வங்கியின் முன்மொழிவு மிக முக்கியமான யோசனை யாகும். இதன்போது சேமிக்கப்படும் பணத்தை வேறு தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் இயலுமையும் கிட்டும்.

 

அடுத்த முக்கியமான யோசனையாக, வர்த்தக நிதி தொடர்பான உலக வணிக அமைப்பின் (WTO) முன்மொழிவை கருத முடியும். அதனால் ஏற்றுமதி விரிவுபடுத்தப்படும்.

 

கடன் வழங்குநர்களுக்கு நெருக்கடிகள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அந்தச் சலுகைகளை உடனடியாக வழங்காவிட்டால், இந்த முன்மொழிவுகள் பயனற்றதாகிவிடும். எங்களுக்கு பேச்சுமூலமான ஆதரவு கிடைத்துள்ளது. அந்த வார்த்தைகள் எப்போது செயல்படுத்தப்படும் என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

 

தற்போதைய சவால்கள் மற்றும் அதற்கான பயனுள்ள தீர்வுகளை பற்றி பேசுவதற்கும் நிலையான அபிவிருத்திக்காக 2030 ஒழுங்கு பத்திரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கும் உறுப்பு நாடுகளுக்கும் ஏனைய பங்குதாரர்களுக்கும் இவ்வாறான உயர்மட்ட கலந்துரையாடல்கள் சிறந்த களமாக அமையும்.” என்றும் தெரிவித்தார்.

 

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

“போர் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – திருகோணமலையில் போராட்டம்!

சர்வதேச நீதிப்பொறிமுறையின் ஊடாக இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான விசாரனைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை காரியாலயம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் வடகிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது.

பாலியல் குற்றங்களுக்கு உடன் சர்வதேச விசாரனை வேண்டும், நீதிப்பொறிமுறையை உறுதிப்படுத்து போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

13 வயது சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் – பௌத்த பிக்கு கைது !

13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து வரும் பிக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

சந்தேகநபரான பிக்கு விகாரையில் வசிக்கும் சிறுவன் ஒருவரை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

குறித்த தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எஹெட்டுவெவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

இதன்படி, எஹெட்டுவெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் தசுன்!

2023 சர்வதேச உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (புதன்கிழமை) இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

2021 இல், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரிய, கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, இலங்கை அணியின் தலைமை தசுன் சானகவிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

தசுன் சானகவின் தலைமையின் கீழ், இலங்கை அணி அண்மைய மாதங்களில் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றத்தை காட்டியிருந்தன.

 

இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாரிய தோல்வியை சந்தித்தமையால் நிலையில் தசுன் சானகவின் தலைமைத்துவம் குறித்து கேள்வியெழுப்பட்டுவந்தது.

 

இந்நிலையில் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் சானக இருக்க வேண்டும். தசுன் சானக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று அணியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியவர் என்று  இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கா கருத்து தெரிவித்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

“பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஆன்மீக உரையாடலில் ஈடுபட்டேன்.” – பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலக !

தனுஸ்க குணதிலக மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் உறவில் இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான் அச்சமடைந்ததாக தனுஸ்ககுணதிலக தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தனுஸ்க தெரிவித்துள்ள விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட பெண்ணை அவரது வீட்டில் முத்தமிட்டது அவருடன் பாலியல் உறவு கொண்டது போன்ற விடயங்களை தனுஸ்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த பெண்ணுடன் இடம்பெற்ற ஆன்மீக உரையாடல் குறித்து தனுஸ்க தெரிவித்துள்ளார், இந்த உரையாடலின் போது எனது முன்னைய ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

அந்த உரையாடல் சுவராஸ்யமாக இருந்தது என நான் நினைத்தேன் அந்த பெண்ணிற்கு இலங்கை கலாச்சாரம் பௌத்தம் குறித்து நன்கு தெரிந்திருக்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் தனுஸ்க குணதிலக பின்னர் அழுவதையும் தனது முகத்தை துடைப்பதையும் காணமுடிகின்றது.

நான் சிரித்துக்கொண்டே நான் முன்னைய ஜென்மத்தில் நான் யார் என தெரிவிக்க முடியுமா என கேட்டேன் நானும் அவரின் அயலவர்களும் தாய்லாந்தில் பிறந்தோம் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் எனது போன ஜென்மத்தைபார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டார் நான் அச்சமடைந்தேன் எனவும் தனுஸ்க தெரிவித்துள்ளார்.

ஏன் என தெரியவில்லை எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது அந்த பெண் சற்றுவித்தியசாமானவராக காணப்படுகின்றார் என நினைத்தேன் அந்த பெண் எனக்கு டக்சியை ஏற்பாடு செய்து தந்தார் நான் ஆடையணிந்துகொண்டு முத்தமிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குற்றஞ்சாட்டிய  பெண் முன்னைய ஜென்மங்கள் குறித்த பேச்சுக்களை தான் முதலில் ஆரம்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

இந்தியா – கனடா மோதல் எதிரொலி – இடைநிறுத்தப்பட்ட விசா சேவை !

இந்திய கனடா மோதலையடுத்து கனேடிய பிரஜைகளுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்கு சம்பந்தம் இருப்பதாக கனடா அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

 

இதற்கு இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், சமீபத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மற்றும் அங்கு வாழும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியா தெரிவித்தது.

ஆனால் இந்தியாவின் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த கனடா பொது பாதுகாப்பு அமைச்சர், கனடா ஒரு பாதுகாப்பான நாடு என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில், கனேடிய நாட்டு மக்களுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கு இடையே இராஜங்க மோதல் அதிகரித்து வரும் நிலையில் செயல்பாட்டு காரணங்களுக்காக விசா சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒத்திவைக்கப்பட்டது உயர்தர பரீட்சை – பரீட்சை திகதி தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதியை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இது தொடர்பான அறிவிப்பு பரீட்சை ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், உயர்தரப் பரீட்சைக்கான திகதியை பரீட்சை ஆணையாளர் அடுத்த வாரம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

உயர்தரப் பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மைய நாட்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

அவர்களின் அந்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

“கொழும்பு துறைமுக நகரத்தில் பெட்டிக்கடைகளை அமைக்காமல் ஆரம்பத்தில் வகுத்த திட்டங்களை மாற்றமில்லாமல் செயற்படுத்த வேண்டும்.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

கொழும்பு துறைமுக நகர விடயத்தில் அரசாங்கம் தொழினுட்ப ரீதியில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட  வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான உண்மை, பொய் ஆகியவற்றை நாட்டு மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். 2002 ஆம் ஆண்டு  ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் மீண்டெழும் இலங்கை’ தொடர்பான கொள்கைக்கு அமைவாகவே துறைமுக நகரம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள அவசியமற்ற முனையங்கள்,கட்டிடங்கள் ஆகியவற்றை நீக்கி துறைமுகத்துக்குள் துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கு ஆரம்பத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது. தெற்கு துறைமுக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தெற்கு கடற் பகுதியில் இருந்து வடக்கு கடற் பகுதிக்கு மணல் இழுத்துச் செல்லும் வேகம் அதிகளவில் காணப்படுவதால் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் மணல் மேடுகள் தோற்றம் பெறும் சூழல் காணப்படுவதாக தேசிய ஆராய்ச்சியாளர்கள்  குறிப்பிட்டதை தொடர்ந்து துறைமுகத்துக்கு அப்பாற்பட்ட வகையில்  கொழும்பு துறைமுக நகரம் உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

2014 ஆம் ஆண்டு இறுதி காலாண்டு பகுதியில் கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.அபிவிருத்தி பணிகள் தொடர்ந்ததன் பின்னர் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வறான பின்னணியில் 2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்ப்பட்டதன் பின்னர் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவை நியமித்தார்.

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகளை துறைமுக அதிகார சபை முன்னெடுக்க முடியாது என அந்த குழு அறிக்கை சமர்ப்பித்ததை தொடர்ந்து துறைமுக நகர நிர்மாண பணிகள் தொடர்பான அதிகாரங்கள் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட்டது.எமது அமைச்சின் கீழ் அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் 2014 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டன.

கொழும்பு துறைமுகத்தின் ஏகபோக உரிமை 2014 ஆம் ஆண்டு சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையை மாற்றி கொழும்பு துறைமுக நகரத்தின் முழு உரிமையையும்  நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறுப்பாக்கி நாட்டின் இறையாண்மையை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாத்தது என்பதை பகிரங்கமாக குறிப்பிட முடியும்.

முறையாக சுற்றாடல்  தரப்படுத்தல் ஏதும் இல்லாமல் தான் 2014 ஆம் ஆண்டு  கொழும்பு துறைமுக நகரத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுற்றாடல் தொடர்பில் தரப்படுத்தலை மேற்கொண்டு நிர்மாணப் பணிகளை முன்னெடுத்தோம்.முறையான சுற்றாடல் தரப்படுத்தலை மேற்கொள்ளாமலிருந்திருந்தால் ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு கட்டிடம் உட்பட கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் உள்ள பாரம்பரியமான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும்.

2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 4 பிரதான முதலீட்டாளர்களை கொழும்பு துறைமுக நகரத்துக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். 52 நாள் அரசியல் நெருக்கடி, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஆகிய சம்பவங்களினால் அனைத்து முயற்சிகளும் பலவீனப்படுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு துரதிஷ்டவசமாக நாட்டை காக்க கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.இறுதியில் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

இலங்கை வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. ஆகவே நாட்டுக்கு வரும் முதலீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.கொழும்பு துறைமுக நகரத்தில் பெட்டிக்கடைகளை அமைக்காமல் ஆரம்பத்தில் வகுத்த திட்டங்களை மாற்றமில்லாமல் செயற்படுத்த வேண்டும். கொழும்பு துறைமுக நகரத்துக்கு சீனா மாத்திரம் முதலிடவில்லை. இலங்கையும் அதிகம் நிதியை முதலிட்டுள்ளது.ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் தொழினுட்ப ரீதியில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றார்.

7மாதங்கள் தொடங்கி 18வயது வரையிலான சிறுமிகளின் 1,500 க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்களுடன் பௌத்த பிக்கு கைது !

ராகம பிரதேசத்தில் உள்ள  விஹாரை ஒன்றில் வசிக்கும் 19 வயதுடைய  இளைஞர் ஒருவர்,  சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் பெரியவர்களுடன் உடலுறவு  கொள்ளும் வீடியோக்களை ஆபாச இணையத்தளங்களில் வெளியிட்டு  விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில்    கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் 7 மாதங்கள் முதல் 18 வயது வரையிலான சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததாகவும், அவர்களில் 80 சதவீதமானேர்  10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் என்றும்  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபரிடமிருந்து  மூன்று கணினிகள்  மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்கள் மற்றும் சிறுமிகளின்  புகைப்படங்களும்  பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சமூக ஊடக குழுக்களில் சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பாலியல் காட்சிகள் பரவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கணினி குற்ற புலனாய்வு பிரிவின் சமூக ஊடக குற்ற புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.