September

September

அரகலய போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 1414 மில்லியன் ரூபா !

அரகலய போராட்டத்தின் போது சேதப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உடமைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை 1414 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

31 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கனவே 714 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஜூலை 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் அன்றைய ஆளும் கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், உடைமைகள் தீயிட்டு நாசமாக்கப்பட்டன.

இவ்வாறு சொத்துக்களை இழந்த உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க உள்விவகார அமைச்சின் கீழ் உள்ள பாராளுமன்ற விவகாரப் பிரிவு நடவடிக்கை எடுத்தது. இதன்படி 31 உறுப்பினர்களுக்கு 714 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 700 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது . இந்த மேலதிக ஏற்பாட்டை பெறுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நட்டஈடு வழங்குவதற்கு மேலும் 200 மில்லியன் ரூபா தேவைப்படும் என்றும் பாராளுமன்ற விவகாரப் பிரிவு வலியுறுத்துகிறது.

இதேவேளை, போராட்டத்தின் போது சொத்துக்கள் அழிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அல்லாத 73 உள்ளுர் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் பிரஜைகளுக்கு 519 மில்லியன் ரூபா நஷ்டஈடாக அரசாங்கம் வழங்கியுள்ளது. அந்த நபர்களுக்கு இழப்பீடு வழங்குவது இழப்பீட்டு அலுவலகத்தால் செய்யப்படுகிறது. அவர்களுக்கு வழங்க வேண்டிய மீதி இழப்பீடு எதிர்காலத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

வெளியிடப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு சட்டமூலம் – இலங்கையை விட்டு வெளியேறப்போகும் கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ?

நேற்றிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலம் சமூக வலைத்தள நிறுவங்களை இலங்கையை விட்டு விரட்டும் கொடூரமான சட்டம் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,

கூகுள், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் இந்த சட்டத்தை வரவேற்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்த வர்த்தமானியின் பிரகாரம் எது உண்மை எது உண்மையல்ல என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வாகேட்டுக்கொண்டுள்ளார்.

இணைய பாதுகாப்பு ஆணைக்குழுவை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டமூலம் ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரம் மீதான சாத்தியமான தாக்கம் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் முதலீட்டாளர்களை ஒருபோதும் ஈர்க்க முடியாது என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

“சீனச்சார்பு – இந்தியச்சார்பு ஆகிய எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் நலன்களே எமக்கு முக்கியம்.” – கடல்சார் நாடுகளுக்கான பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம், அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக நியூயோர்க் நகரில் நேற்று (18) நடைபெற்ற கடல்சார் நாடுகளுக்கான 3 ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

 

கார்னகி எண்டோவ்மென்ட் (Carnegie Endowment)மற்றும் சசகாவா மன்றம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்தியதோடு, சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் இன் கொள்கை ஆராய்ச்சி தொடர்பான சிரேஷ்ட உப தலைவர் டென் பெயரினால் (Dan Baer) இது நெறிப்படுத்தப்பட்டது.

 

பிரதான உலக வல்லரசுகளுக்கு இடையிலான போட்டியில் தலையிடுவதற்கு, இந்து சமுத்திர மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தின் தீவு நாடுகள் விரும்பவில்லை என்றும், இந்த நாடுகள் தமது சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு உட்பட அவர்களின் முதன்மையான விடயங்களில் கவனம் செலுத்தி, தமது நாடுகளின் இறைமை மற்றும் சுதந்திரத்தைப் பேண முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

மேலும், இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டணி அமைக்காது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தி நிற்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேபோன்று, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளும் தமது நாடுகளின் இறைமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளடக்கிய க்வொட் (Quad) நாடுகள் மற்றும், சீனாவின் இலக்குகளுடன் தொடர்பில்லாத இந்து சமுத்திரத்தின் மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தின் தீவு நாடுகள் தமது சொந்த முன்னுரிமைகளைக் கொண்டிருப்பதாகவும், அவற்றைமதிக்கத் தயாராக இருக்கும் எந்தவொரு தரப்பினருடனும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப இலங்கையும் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். சீனாவின் எழுச்சியானது APEC மற்றும் ASEAN போன்ற பிராந்திய கட்டமைப்பிற்குள்ளேயே நடந்ததாகவும், அதனை பல நாடுகள் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

 

அண்மைக்காலமாக இந்தக் கட்டமைப்பிற்கு அப்பால் மாபெரும் வல்லரசுப் போட்டி விரிவடைந்து வருவதால் உறுப்பு நாடுகள் மத்தியில் கவலை தோன்றியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

 

தெற்கு பசுபிக் சமுத்திரம் மற்றும் இந்துசமுத்திரம் ஆகியவை, பெரும் மூலோபாய மதிப்பைக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தெற்கு பசுபிக் பிராந்தியம் அமெரிக்க கடற்படைக்கு இன்றியமையாத கேந்திரமையமாகும் என்றும், இரண்டாம் உலகப் போர்காலத்தின் போது இந்துசமுத்திரம்முக்கிய பங்காற்றியது என்றும் தெரிவித்தார்.

 

பவளக் கடல் (The Coral Sea) மற்றும் மிட்வே போரின் போதும்இரண்டாம் உலகப் போரின் போதும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியதும் மற்றும் அட்மிரல் யமமோட்டோவின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதும் ஹவாய் உட்பட இந்ததென் பசுபிக் பிராந்தியத்தில் தான் என்பதைஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

 

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் முக்கியத்துவத்தை இதன்போது விளக்குவதற்காக, வின்ஸ்டன் சர்ச்சிலின் அறிக்கையை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி, “இலங்கையை கைப்பற்றுவது என்பது இந்து சமுத்திரத்தில் அதிகாரத்தை இழப்பதாகும்”என்றும் குறிப்பிட்டார்.

இந்து-பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம், குறிப்பாக சீனாவின்சவால்களால் எடுத்துக்காட்டப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது பிராந்திய இயக்கம் மற்றும் ஒத்துழைப்பை மீள் மதிப்பீடு செய்ய தூண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஐரோப்பிய சக்திகள் மற்றும் நேட்டோவை தொடர்புபடுத்துவதற்காக G7 குழு எடுக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்ததுடன், பிரான்ஸ் மட்டுமே அதற்கு ஆதரவளித்தது என்றும், இந்த சம்பவம் இந்து சமுத்திர ரிடம் சங்கத்தின் (IORA) விதிகளை மீறுவதாகக் கருதப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்து சமுத்திரத்தின் மேற்பரப்புப் போர் அச்சுறுத்தல்களைக் குறைக்கும் வகையில் நீர்மூழ்கிக் கப்பல் போர் அச்சுறுத்தல்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்து சமுத்திரரிம் சங்கத்திற்குள் (IORA) தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தீவு நாடுகள் தொடர்பிலான பாதுகாப்பு உரையாடல்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும், அந்த நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி மேலும்சுட்டிக்காட்டினார்.

இலங்கை உட்பட பல தீவு நாடுகள் இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி, அமெரிக்கா மாலை தீவில் தூதரகமொன்றைத் திறப்பது போன்ற அண்மைக்கால முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆசியான் அமைப்பின் தலையீடு, ரஷ்ய-உக்ரைன் போர் மற்றும் BRICS+உருவாக்கம் ஆகியவற்றின் காரணமாக இந்து சமுத்திரத்தில் அதிகார சமநிலை உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த மாறும் பூகோளநோக்கு, தீவு நாடுகளின் சுதந்திரத்தைப் பேணுவதற்கு ஆதரவளிப்பதுடன், மேலும் இந்து சமுத்திரரிம் சங்கம் (IORA), ஆசியான் (ASEAN)மற்றும் BRICS+ ஆகிய அமைப்புகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பைப் பேண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இங்கு,  ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஹம்பாந்தோட்டை வர்த்தகத் துறைமுகத்தை சீன இராணுவத் தளமாக முத்திரை குத்துவது தொடர்பில் இலங்கை கவலையடைவதாகத் தெரிவித்தார். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலைத் துறைமுகத்தை இலங்கை அபிவிருத்தி செய்து வருவதாகவும், சர்வதேச அரங்கில் இந்த விடயத்தை முன்வைக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்திய மற்றும் பசுபிக் சமுத்திரங்களுக்கு இடையேயான தொடர்பை இனங்கண்டு, இரு பிராந்தியங்களின் சிறிய தீவு நாடுகளுக்கிடையில் செயலூக்கமான ஒத்துழைப்பை வலியுறுத்திய ஜனாதிபதி, ‘இந்து-பசுபிக்’ கருத்தியலுக்கு இந்து சமுத்திரரிம் சங்கம் (IORA), இன் தேவை அதிகளவில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும், இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் பிராந்தியத்தில் தீவு நாடுகளின் சுதந்திரம்,  அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை, அவர்களின் தனிப்பட்ட முன்னுரிமைகளின் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் (Online Safety Bill) தொடர்பில் வர்த்தமானியில் அறிவிப்பு!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் (Online Safety Bill) வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Online Safety Commission எனப்படுகின்ற நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது, சில தொடர்பாடல்களை தடை செய்வது, தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் (Online Account) மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில விடயங்கள் இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இந்த சட்டமூலத்தின் பிரகாரம், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐவர் அடங்கிய ஆணைக்குழுவொன்று பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்களது பதவிக்காலம் மூன்று வருடங்களாகும்.

 

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பவியல், சட்டம், ஆட்சி, சமூக சேவைகள், ஊடகவியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அல்லது முகாமைத்துவ துறைகளின் ஒன்றில் அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் தகைமைகள் மற்றும் அனுபவத்தைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.

 

தடை செய்யப்பட்ட அறிக்கையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தடை செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட்ட நபர்களுக்கு அல்லது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு உத்தரவுகளை வழங்கவும் ஏதேனும் தடை செய்யப்பட்ட அறிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையிடலுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பணிப்புரை வழங்கவும் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை இல்லாமலாக்குவது அல்லது அத்தகைய நிகழ்நிலை அமைவிடத்தில் இருந்து தடை செய்யப்பட்ட கூற்றை அகற்றுவதற்கு எவரேனும் இணைய சேவை வழங்குநர்களுக்கு அல்லது இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்கு பாதகமாகவுள்ள எவையேனும் தொடர்பாடல்களை உகந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

 

இந்த ஆணைக்குழுவிற்கு எதிராக எவ்வித சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றைத் தொடுக்க முடியாதென்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகள் இந்த சட்டமூலத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

 

இலங்கைக்குள் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான கூற்றுக்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான கூற்றுகள் மூலம் அநாவசியமான முறையில் ஆத்திரமூட்டுதல், பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக்கூட்டம் ஒன்றைக் குழப்புதல், மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற திடமான உள்நோக்கத்துடன் போலியான கூற்றுகளை பகிர்தல், மோசடி செய்தல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொய் கூற்றுகளின் மூலம் வேண்டுமென்றே நிந்தை செய்தல், கலகத்தை அல்லது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான சம்பவங்கள் தொடர்பான கூற்றுகளை தொடர்பாடல் செய்தல், சிறுவர் துஷ்பிரயோகம், தவறொன்றைச் செய்வதற்காக தன்னியக்கச் செய்நிரல்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல், ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையுடன் இணங்கி செயற்படத் தவறுதல் என்பன இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இந்த சட்டத்தின் கீழ் தவறிழைக்கும் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்க, அபராதம் விதிக்க அல்லது குறித்த இரண்டு தண்டனைகளையும் ஒரே தடவையில் விதிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு சிலாவத்தை கிராமத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிராம மக்களின் முன்மாதிரியான செயற்பாடு !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த கிராம அமைப்புக்கள் ஒன்றுதிரண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிலாவத்தை கிராமத்தில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்ப்படும் விளைவுகள், பாதிப்புக்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்களின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கிராம அலுவலர் தலைமையில் முல்லைத்தீவு தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி W.B.M.A அமரசிங்கவின் உதவியுடன் கிராமத்தில் சிவில் பாதுகாப்பு குழு ஒன்றை அமைத்து போதைப்பொருள் பாவனையை தடுக்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழகம் உள்ளிட்ட கிராம மட்டத்தில் உள்ள அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கி சிவில் பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிவில் பாதுகாப்பு குழு தமது கிராமத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றவர்களை கண்டறிந்து காவல்துறையினரை  அழைத்து அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்ப்படுத்தும் செயற்ப்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில்  சிலாவத்தை கிராமத்தின்  தீர்த்தக்கரை பகுதியில் அதிகமாக கசிப்பு விற்பனை இடம்பெற்றுவரும் நிலையில் அவ்வாறு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் அதிகளவான கசிப்புடன் கைது செய்யப்பட்டு  காவல்துறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று கிராமத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களையும் குறித்த சிவில் பாதுகாப்பு குழு கண்டுபிடித்து  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

“நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை தாக்கி உயிராபத்தை ஏற்படுத்திய அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.” – பிரதமர் தினேஷ் குணவர்தன

திருகோணமலையில்  திலீபனின் ஊர்தி பவனியின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது குண்டர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்குவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. கொட்டன்கள் கொண்டு தாக்கி நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குழுவினர் கைது செய்யப்படுவார்கள்.

இந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

நாட்டில் இன வன்முறையை மீண்டும் தூண்டச் சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது.” என்றார்.

இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ. 63,912 தேவை.” – மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

2023 ஜூலை மாதத்திற்கான மாதாந்திர வறுமைக் கோட்டு அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த நாட்டில், ஒரு நபர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்ய ரூ. 15,978 தேவை என மேற்படி கணக்கெடுப்பு கூறுகிறது.
தேசிய ரீதியில் இந்தத்தொகை ரூ. 16,089 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2023 இல் மேற் கொண்ட புள்ளிவிவரத்தின்படி, நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச மாதச் செலவு ரூ. 63,912 ஆகும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் இந்த அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இத் தொகை ரூ. 17,352 ஆகும் .

மொனராகலை மாவட்டத்தில் மிகக் குறைந்த வாழ்க்கைச் செலவு பதிவாகியுள்ளதுடன் அதன் பெறுமதி ரூ. 15,278.ஆகும் .

“இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும் விதத்தில் புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.” – மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம்

“இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும் விதத்தில் புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.” என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 15ம் திகதி அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்  திருத்தப்பட்ட சட்டமூலத்தை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கவனத்தில் எடுத்துள்ளது.

சட்டமூலத்தின் முன்னைய பதிப்பு 2023 மார்ச் மாதம் 22ம் திகதி வெளியானது.

சட்டமூலத்தின் முன்னைய வடிவம்  குறித்து பல கரிசனைகளை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் வெளியிட்டிருந்தது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஆரம்பவடிவத்தில்  பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

தண்டனையில்  ஒன்றாக மரணதண்டனை நீக்கப்பட்டமை தடுப்பு உத்தரவு தொடர்பில் மாற்றங்கள் செய்யப்பட்டமை  போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.

இரண்டு மாதங்களிற்கு தடுப்பு உத்தரவினை வழங்குவதற்கான அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் திருத்தப்பட்ட சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்றால் என்பதை மிகைப்படுத்துதல்  பயங்கரவாதத்திற்கான குற்றங்களை மிகைப்படுத்துதல் போன்ற சிக்கலான விடயங்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

 

உத்தேச சட்டமூலத்தில்  குற்றச்சாட்டுகளை சுமத்தாமலே நீட்டிக்கப்பட்ட தடுப்புகாலங்கள் விளக்கமறியலை நீடித்தல் போன்றன காணப்படுகின்றன.

நீதித்துறை மற்றும் மனித உரிமைகளிற்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவமயமாக்கலை தீவிரப்படுத்தும் விதத்திலும் உத்தேச சட்டமூலம்காணப்படுகின்றது.

குறிப்பாக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் ஊரடங்கு தொடர்பான உத்தரவுகள் குறித்து அதிக கரிசனை கொண்டுள்ளது-அவை வெளிப்படையாக ஜனநாயகத்திற்கு முரணானவை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரத்தை விரிவாக்க முயல்கின்றன.

2022 இல் அரகலய மூலம் ஜனாதிபதி பதவியை நீக்கவேண்டும் என மக்கள் விடுத்த வேண்டுகோளிற்கு மாறாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்பது ஜனாதிபதியின் அதிகாரங்களை விரிவாக்குவதற்கான ஒரு முயற்சி என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சுட்டிக்காட்டவிரும்புகின்றது.

அதிகளவு அரசியல் பொறுப்புக்கூறல் ஆட்சிமுறையில் மாற்றம் போன்றவற்றிற்கான வேண்டுகோள்கள் வெளியாகியுள்ள போதிலும் அமைப்புகளை தடைசெய்வதற்கான அதிகாரங்கள் – கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளை வெளியிடுவதற்கான அதிகாரங்கள் போன்றவை மூலம்  உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகின்றது.

திலீபனை நினைவு கூற தடைவிதித்த கொழும்பு நீதிமன்றம் !

கொழும்பு மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (19) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மேலும் மருதானை பிரதேசத்தில்  நினைவேந்தல்களை நடத்துவதற்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை மற்றும் மருதானை  பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக  இந்த தடை  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘ஒடுக்கப்படும் தமிழ் மக்களோடு நிற்போம்’ என்ற கோஷத்துடன் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று செவ்வாய்கிழமை பி.ப 3.00 மணிக்கு மருதானையில் அமைந்துள்ள சமய, சமூக நடுநிலையத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நோக்கிப் பயணித்த திலீபனின் நினைவு ஊர்தி மீதும், அந்த ஊர்தியில் பயணித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் வகையில் ‘முதுகெலும்பு இருப்பவர்கள் ஆயத்தமாகுங்கள். கொழும்புக்கு வருகைதரும் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோம்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதிவுகள் நேற்று முன்தினமும், நேற்று காலையிலும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளப்பக்கங்களில் அதிகளவில் பகிரப்பட்டன.

அதனையடுத்து திலீபன் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாகவும், வன்முறைத்தாக்குதல்கள் மற்றும் அநாவசியமான குழப்பங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் இன்று மாலை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வை இரத்துச்செய்வதாக கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் காலை அறிவித்தது.

இதுஇவ்வாறிருக்க பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

இதேவேளை நேற்றையதினம் தியாகி திலீபனின் நினைவேந்தல் நடைபயண ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“ஒரு வழக்கறிஞராக கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாதனை.” – அமைச்சர் அலி சப்ரி

“ஒரு வழக்கறிஞராக கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாதனை எனவும் கோட்டாபாய  பிரிவினைவாதத்தை தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய தளபதி எனவும்  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தனது கருத்தை தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச 2019 அதிபர்த் தேர்தலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவருடைய சட்ட விவகாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் நீங்கள். அப்போது செய்தது தப்பு என்று இப்போது நினைக்கவில்லையா?

இதற்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக இல்லை. ஒரு வழக்கறிஞராக, நான் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது. அது என் கடமை. கோட்டாபய ராஜபக்ச பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தார். ஆனால், இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்க அவர் செய்த பணியை புதிதாக வந்துள்ள மக்களுக்கு நினைவில் இல்லை. ஆனால் அது மக்களின் நினைவில் நீங்காத ஒன்று. அவரைப் பாதுகாத்ததே எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.”என்றார்.