11

11

பிள்ளையானுக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது ஏன்..? – அனுரகுமார திஸாநாயக்க கேள்வி !

பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சினால் 35 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை அவசியம் என கோருபவர்களும், அதற்கு பொறுப்புகூற வேண்டியவர்களும் தற்போதைய அரசாங்கத்திலேயே அங்கம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செனல் 4 வெளிப்படுத்தலுக்கமைய, பிள்ளையானும், ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளும் ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே சிறைச்சாலையில் இருந்துள்ளனர்.

பிள்ளையான் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் மூலம் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டிய பகுதிகள் உண்டு என்பது புலப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சினால் பிள்ளையான் உள்ளிட்ட பலருக்கு நீண்டகாலமாக 35 இலட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தொகை எதற்காக வழங்கப்பட்டது என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனவே, இந்த தாக்குதல்கள் குறித்து சுயாதீனமாக விசாரணையொன்று அவசியமாகின்றது. அத்துடன், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் இத்தகைய சதிகளை மேற்கொண்டு, இனவாதத்தை தூண்டிவிடுபவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டுமென பாரா ளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு – விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் மீட்பு !

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஐந்தாம்நாளான  இன்று (11)  முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால்  அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரை துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நான்காம் நாள் அகழ்வுப்பணியின் போது விடுதலைப்புலி அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய போதிலும் அகழ்வாய்வுகள் தொடர்பில் அன்றையதினம் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக இருந்த யாழ் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதலன் தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளாகி காதலி பலி !

எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில்  வைத்து காதலன் தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளாகி  வத்துபிட்டிவல  போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த காதலி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்  விவசாய பட்டதாரியான குருணாகல் ரிதிகம பிரதேசத்தில் வசிக்கும்  28 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

காதலியை தாக்கிய காதலன் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான காதலி வேறு ஒரு இளைஞருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த சந்தேகத்தின்  அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படம் – விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் கூறப்பட்ட சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அதேவேளை,பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

எவ்வாறாயினும் வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை மேற்கோள் காட்டி தொடர்ச்சியாக அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை கத்தோலிக்க திருச்சபை, பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூக குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் விமர்சித்துவருகின்றன.

கடந்த 2021 மே மாதம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பேசிய முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு பெரிய சதித்திட்டத்திற்கு தெளிவான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து, பல தரப்பினரும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்த அதேநேரம் அவர் இந்த ஆண்டு ஏப்ரலில் வாக்குமூலம் பதிவு செய்ய பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தனியார் மயமாகும் இலங்கையின் மருத்துவக்கல்வி – 3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதி !

3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

மருத்துவம் படிக்க தகுதியான பல மாணவர்கள் உள்ளனர். எனினும் நாட்டில் தற்போது 11 பல்கலைக்கழகங்களே உள்ளன. இது போதாது. எமது பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டமும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதே தரத்தில் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவருவோரை உலகிற்கு நாம் வழங்க முடியும்.

எனவே அதற்கு இணையான திட்டத்தை தயாரிக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் 3 தனியார் பல்கலைகழகங்களை உருவாக்க நான் அனுமதி அளித்துள்ளேன் என தெரிவித்தார்.