18

18

அதிகளவிலான கதிர்வீச்சு – ஐபோன் 12 பாவனைக்கு தடைவிதித்த பிரான்ஸ் !

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மொபைல்போன் அதிகளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக அண்மையில் பிரான்ஸ் தெரிவித்தது. அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன. தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும். அந்த வகையில் முதல்முறையாக யுஎஸ்பி-சி டைப் போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 12, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகளவில் கதிர்வீச்சை வெளியிட்டு வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதனை அந்த நாட்டின் தேசிய ஃப்ரிக்வென்சி முகமை (AFNR) தெரிவித்துள்ளது. அதன்பேரில் பிரான்ஸ் நாட்டில் ஐபோன் 12 விற்பனைக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், மென்பொருள் அப்டேட் செய்வதன் மூலம் இதை நிறுத்த முடியும் என்றும். அப்படி அதை செய்ய தவறினால் புழக்கத்தில் உள்ள ஐபோன் 12 போன்களை திரும்ப பெற உத்தரவு பிறப்பிக்கப்படும் என பிரான்ஸ் ஜூனியர் அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் தெரிவித்துள்ளார். இதற்கு 2 வாரம் காலம் ஆப்பிள் நிறுவனத்துக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

 

உலகளாவிய கதிர்வீச்சு தரநிலைக்கு உட்பட்டு ஐபோன் 12-ன் இயக்கம் இருப்பதாக உலக நாடுகளின் முகமைகள் தெரிவித்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை அந்நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. இருப்பினும் தாங்கள் மேற்கொண்டு பரிசோதனை, ஆப்பிள் மேற்கொண்ட சோதனைக்கு முற்றிலும் மாறானது என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ கஜேந்திரன் பொலிஸார் முன்னிலையில் சில ரௌடிகளால் தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது.” – மு. சந்திரகுமார்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸார் முன்னிலையில் சில ரௌடிகளால் தாக்கப்படும் போது  பொலிஸார்  நடந்துகொண்ட விதம் மிகவும் கண்டனத்திற்குரியது என முன்னாள் பாராளுமன்ற சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

செல்வராசா கஜேந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட  ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அவர்  இந்த நாட்டின் ஓர் உயர்ந்த சபையின் கௌரவ உறுப்பினர் அவரை தெருவில் ஒன்று கூடிய சில ரௌடிகள்  சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸாரின் முன்னிலையில் தாக்குவது என்பது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்.

தமிழ் மக்களின்  பிரதிநிதி ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைமை எப்படியிருக்கும்?  வன்முறைகளை தடுத்து சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய பொலிஸார் அந்த இடத்தில்   எந்த நடவடிக்கையும்  எடுக்காது இருந்தது என்பது தமிழ் மக்கள் விடயத்தில் அவர்களின் நிலைப்பாட்டை அப்பட்டமாக காட்டி நிற்கிறது.

இதுதான் இந்த நாட்டின் நிலைமை, தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்படுகிறார்கள் என்பதற்கு கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் என்பது ஒரு நல்ல உதாரணம் எனத் தெரிவித்த அவர் நினைவேந்தலுக்கான உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேற்கொள்ளவிடாது வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது மட்டுமன்றி மக்கள் பிரதிநிதி ஒருவரை வீதியில் விரட்டி விரட்டி தாக்குபவர்கள் மீதும் அந்த தாக்குதல் சம்வத்தை கட்டுப்படுத்தாது நின்ற பொலிஸார் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

“இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனிதஉரிமை துஸ்பிரயோகங்கள்.” – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் விசனம் !

இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனிதஉரிமை துஸ்பிரயோகங்கள் உத்தேச நல்லிணக்க உண்மை ஆணைக்குழுவின் நோக்கங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் உத்தேச ஆணைக்குழு குறித்து கடந்தகால உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குடும்பத்தவர்கள் மனித உரிமை பாதுகாவலர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனைகளில் ஈடுபடாததால் அவர்கள் அவற்றை நிராகரித்துள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் கடந்தகால ஆணைக்குழுகளின் ஆதாரங்களை புறக்கணித்துள்ளதும் பாதிக்கப்பட்டவர்கள்   அவர்களது குடும்பத்தவர்கள் மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பு படையினரின் முன் ஆபத்திற்குள்ளாக்கியுள்ளதும் அவர்கள் மீண்டும் ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தோன்றினால்  மீண்டும்மன அழுத்தங்களிற்கு உள்ளாவார்கள்என்பதும் அவர்கள் உத்தேச ஆணைக்குழுவை நிராகரிப்பதற்கான காரணம் எனவும்  சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நாங்கள் எங்கள் குரல்களை எழுப்பினால் அவர்கள் எங்களை கைதுசெய்வார்கள் – இலங்கையின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற 39 பக்க அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த ஆவணம் இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தின் போது காணாமல்போனவர்களின் ( தமிழ் சிறுபான்மையினத்தவர்கள்)  சார்பில் நீதிகோருபவர்கள் பரப்புரை செய்பவர்கள் செயற்பாட்டாளர்கள் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்படுவது அச்சுறுத்தப்படுவதை ஆவணப்படுத்தியுள்ளது.

மாற்றுக்கருத்துடையவர்களை மௌனமாக்குவதற்காக  அதிகாரிகள்  மிகவும் ஆபத்தான  பயங்கரவாத தடைச்சட்டததை பயன்படுத்துகின்றனர் உண்மை மற்றும் நல்லிணக்கத்தை கோருபவர்களிற்கு எதிராகவும் இதனை பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை அரசாங்கத்தின் ஆதரவுடனான நில ஆக்கிரமிப்புகள் தமிழ் முஸ்லீம் சமூகத்தினரினது நிலத்தையும் அவர்களது வழிபாட்டு இடங்களையும் இலக்குவைக்கின்றன என வும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உண்மையும் பொறுப்புக்கூறலும் மிகவும் அவசியமான விடயங்கள் ஆழமான தேவையான விடயங்கள் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின்  ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி ஆனால் நம்பகதன்மை மிக்க செயற்பாடுகளிற்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் ஆதரவும் அந்த சமூகங்களிற்கு எதிரான அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வருவதும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்..

சமீபத்தைய ஆணைக்குழுவின் நோக்கம் காணாமல்போனவர்களின் நிலையை கண்டுபிடிப்பதோ அல்லது அதற்கு காரணமானவர்களை தண்டிப்பதோ இல்லை மாறாக  தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் குறித்த சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திலிருந்து தப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதை அதன் சமீபத்தைய அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை !

நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

காதல் உறவுகளின் போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

இதற்காக புதிய சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற குற்றத்திற்காக பிடிபடும் நபருக்கு முதல் தடவை ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

இரண்டாவது முறை அல்லது மீண்டும் மீண்டும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதத் தொகை இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMF உடனான பயணம் நல்லதல்ல எனக்கூறும் பெரும்பான்மையான இலங்கையர்கள் – ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் !

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என இலங்கை சனத்தொகையில் 28% மட்டுமே நம்புவதாக வெரிட்டி ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெரிட்டி ரிசர்ச் கடந்த ஜூன் மாதம் 1008 இலங்கைப் பிரஜைகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பை நடத்தியது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 45% பேர் சர்வதேச நாணய நிதியத்துடனான பயணம் நல்லதல்ல என்று கூறியுள்ளனர்.

ஐஎம்எஃப் உடனான இந்த ஒப்பந்தம் நல்லதாக இருக்குமா இல்லையா என்பது குறித்து தங்களால் திட்டவட்டமான கருத்தை தெரிவிக்க முடியாது என்று கணக்கெடுப்பில் பங்கேற்ற 27% பேர் கூறியுள்ளனர். 28 வீதம் பேர் மட்டுமே IMF ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என நம்புகின்றனர்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான அடிப்படைத் தேவையாக இருந்த உள்நாட்டுக் கடன் உகப்பாக்கம் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், எனவே வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதையும் விரைவில் முடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

50 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்த இலங்கை அணி தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு !

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்தமை குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடொன்றை அளித்துள்ளது.

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான புரவெசி பலய அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

இறுதிப் போட்டியில் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை பலமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியை காட்டிக்கொடுத்துள்ளனரா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில், இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதுவே, இதுவரை இறுதிப் போட்டிகளில் இலங்கை அணி பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திலீபனின் நினைவேந்தல் ஊர்தியை தடைசெய்ய கோரிய வவுனியா பொலிசாருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு !

த.வி.பு அமைப்பின் உறுப்பினர் தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது, பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் குழப்பங்கள் ஏற்படுத்தாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு உத்தரவு பிறத்துள்ளது.

குறித்த ஊர்திப் பவனி வவுனியாவிற்கு வந்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை கவனத்தில் எடுத்த நீதிமன்றம், இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி, பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது.

அத்தோடு இன முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

“12 மாதங்களில் மட்டும் 17 பல்கலைக்கழகங்களில் 36 பகிடிவதைச் சம்பவங்கள் ” – 57 மாணவர்கள் இடைநிறுத்தம் !

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்கு விசேட குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடமக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பல்கலைக்கழகங்களின் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த கலாசாரத்தை நாம் நிறுத்தியே ஆகவேண்டும். பல்கலைக்கழகங்களில் இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களினாலேயே இந்த பகிடிவதை அறங்கேற்றப்படுகிறது.

இதனால் மாணவர்கள் உடல்- உள ரீதியான கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த 12 மாதங்களில் மட்டும் 17 பல்கலைக்கழகங்களில் 36 பகிடிவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

57 பேருக்கு வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சுயாதீன விசாரணைக்குப் பின்னரே இவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வகுப்புத்தடை செய்யப்பட்ட மாணவர்கள், தங்களின் குற்றங்களுக்கு மன்னிப்புக் கோரினால் அவர்களுக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குல் – ரிஷாட் பதியுதீன் கண்டனம் !

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதான தாக்குதலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அவரது கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“சிறுபான்மைச் சமூகங்கள் இன்னும் அடக்குமுறைக்குள் இருப்பதையே இந்தத் தாக்குதல் வெளிப்படுத்துகிறது. சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சிறுபான்மை மக்களின் நிலை எப்படியிருக்கும்?

பேரினவாதக் கும்பலின் அட்டகாசங்களுக்கு சிறுபான்மை மக்கள் பலியாவது அல்லது அவமானப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவற்றைச் செய்யாமல் சமூக ஐக்கியம் எங்கே வரப்போகிறது?

பொலிஸாருக்கு முன்னால் இவ்வாறன அடாவடித்தனங்கள் இடம்பெறுவது சட்டவாட்சியை கேலிக்கூத்தாக்குகின்றது. சட்டத்தின் ஆட்சியை பேரினவாதக் கும்பல் கையிலெடுக்கும் நிலைமைகள் ஒழிக்கப்படாத வரை, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பே கிடையாது. அரசியல் உரிமைகளை உணர்வு ரீதியாக மதிக்கவும் இடமில்லாத இந்த ஆட்சியில், நாம் எந்த நம்பிக்கையில் வாழப்போகிறோம்?” இவ்வாறு அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது தாக்குதல் – ஆறு பேருக்கு விளக்கமறியல் !

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கி வந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (18)  குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – கொழும்பு ஏ6 பிரதான வீதியூடாக திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியானது சர்தாபுர பகுதியில் வைத்து தாக்கப்பட்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் வாகனத்தில் பயணித்த குறித்த நபர்களை தாக்கியதாகவும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட  ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும், அவர்கள் 35ற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களுக்கு ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.