24

24

இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் பாதுகாப்பு சபை கூட்டத்தில் புதிய தீர்மானம் !

மட்டக்களப்பு – புனானியில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகத்தின் உரிமத்தை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு தொடர்ந்தும் வழங்கவும் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை ஹோமாகமவில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரிக்கு வழங்கவும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரத்தில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கியூபா மற்றும் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.

பாதுகாப்புத்துறை சார்ந்த பிரதானிகளை தவிர, இலங்கை தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

2019ஆம் ஆண்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் குறித்து பாதுகாப்பு சபை கூட்டத்தில் கவனத்துக்குட்பட்டது.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் நிர்மானிக்கப்பட்டிருந்த இந்த ஷரிஆ பல்கலைக்கழத்தின் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை ஹோமாகமவில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரிக்கு வழங்கவும் பல்கலைக்கழகத்தின் உரிமத்தை தொடர்ந்தும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு வழங்கவும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து மட்டக்களப்பு – புனானியில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய, இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 22 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் !

தற்போது 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை 22 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்;து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துளளார்.

இதற்கு உலக உணவுத் திட்டம் அனுசரணை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது 2024 ஆம் ஆண்டுக்கு அவசியமான பாடப்புத்தகங்களில் 50 வீதமானவை அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

தனியார் துறையினருக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கை இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் டிசம்பர் 15 ஆம் திகதியளவில் பாடப்புத்தகங்களை அச்சிடும் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சை பெற்றுவந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு – ஊழியர்களின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு !

களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைப்பிரசவப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹொன்னந்தர சர்வோதய மாவத்தை, கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த அகிலா போனிபஸ் என்பவர் கடந்த 8ஆம் திகதி பிரசவத்துக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் இரட்டைக் குழந்தைகளை அவர் பெற்றெடுத்த நிலையில், குழந்தைகள் குறைமாத குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டன.

அவற்றில் ஒரு ஆண் குழந்தை கடந்த 19ஆம் திகதி உயிரிழந்த நிலையில், சுவாசக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின், மற்ற குழந்தைக்கு பாலூட்ட சென்றபோது அந்தக் குழந்தையும் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இந்தச் சம்பவங்கள்  தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் கொஹுவல பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

இது தொடர்பில் களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய தெரிவிக்கையில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம், இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட கடன் – முழுமையாக திருப்பி செலுதியது இலங்கை !

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் இறுதி தவணையாக இலங்கை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பங்களாதேஷிடமிருந்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை கடனான பெற்றிருந்தது.

 

இலங்கை, கடந்த வருடம் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த நிலையில், தமது அனைத்து வெளிநாட்டு கடன் செலுத்துகைகளையும் ஒத்திவைத்திருந்தது. இந்தநிலையில், குறித்த கடன் தொகையில் கடந்த ஒகஸ்ட் 17 ஆம் திகதி 50 மில்லியன் அமெரிக்க டொலரையும், கடந்த 2 ஆம் திகதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை திருப்பிச் செலுத்தியது. அத்துடன், குறித்த கடனின் இறுதி தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலரை கடந்த 21 ஆம் திகதி இலங்கை செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். இந்த கடன் தொகைக்கு வட்டியாக 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை செலுத்தியுள்ளது.

 

இந்தநிலையில், பங்களாதேஷிடமிருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன், தற்போது வட்டியுடன் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். தற்போது, முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட திகதியை விட ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த கடன் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனல் 4 ஆவணப்படம் – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஐ.நாவுக்கு அனுப்பி வைத்த ஹன்சீர் ஆசாத் மௌலானா !

சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.

இதேவேளை சனல் 4 இன் ஆவணங்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிராகரித்து புலனாய்வு பிரிவின் அதிகாரிசுரேஸ் சாலே ஐக்கியஇராச்சியத்தின் ஒளிபரப்பு  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைத்த  முறைப்பாட்டை ஒவ்கொம் எனப்படும் அந்த அமைப்பு நிராகரித்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில்  சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்திற்கு நேரடியாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.

இந்த வேண்டுகோள் குறித்து ஆராயுமாறு  லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் கொழும்பை கேட்டுக்கொண்டுள்ளது – இவ்வாறான சட்ட நடவடிக்கையில் தனியார் சட்டஅமைப்பொன்றை ஈடுபடுத்தினால்  அதற்காக ஐந்துமில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட் செலவாகலாம் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

“உலகச் சந்தையில் போட்டிபோடக்கூடியவாறு உள்ளூர் தனியார் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.” – நந்தலால் வீரசிங்க

உலகச் சந்தையில் போட்டிபோடக்கூடியவாறு உள்ளூர் தனியார் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ளாது விட்டால் சவால்களுக்கு மத்தியில் நீடித்திருக்க முடியாதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு அண்மையில் ‘கொந்தளிப்பான தருணத்தில் தலைமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்நாட்டில் உள்ள தனியார் துறையினருக்கு நீண்ட வரலாறுகள் காணப்படுகின்றன. அவர்கள் அரசாங்கத்திடத்தில் தமது வணிகத்துறை நிலைத்திருப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.

குறிப்பாக, தமது துறையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றார்கள். இறக்குமதி வரிச்சலுகைகளை வழங்குமாறு கோருகின்றார்கள்.

உண்மையில் உள்நாட்டின் தனியார் துறையினர் நிலைத்திருப்பதாக இருந்தால் அவர்களுக்கான சந்தை வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டதாக அமைய வேண்டும்.

குறிப்பாக, உலகளாவிய ரீதியில் உள்ள சந்தை வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்துவதற்கான ஏதுவான நிலைமைகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுப்பதையே நோக்காக கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் உலக சந்தையை அணுகும்போது அதில் காணப்படுகின்ற சவால்களுக்கு முகம்கொடுத்து போட்டித்தன்மையான களத்தின் ஊடாக முன்னேறுவதன் ஊடாகவே தனியார் துறையினர் தொடர்ச்சியாக நீடித்து நிலைத்திருக்க முடியும்.

குறிப்பாக, இந்தியா, தென்கொரியா, சீனா போன்ற நாடுகள் அவ்விதமான முறைமைகளையே பின்பற்றுகின்றன. ஆகவே, இலங்கையின் தனியார் துறையினரும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தை வாய்ப்புக்களை திட்டமிடல்களுடன் பயன்படுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் வெற்றிகளை அடையாலம் என்றார்.