28

28

குருந்தூர்மலை நில ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியதற்காக உயிர் அச்சுறுத்தல் – நாட்டை விட்டு வெளியேறினார் நீதிபதி ரீ.சரவணராஜா !

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு,

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

 

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) காவல்துறை பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து வந்தனர்.

 

சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் 21.09.2023ஆம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும் படி அழுத்தம் பிரயோகித்தார்.

 

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.

இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

 

அவர், தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

“இலங்கையின் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க திட்டம்.” – சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே

இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அவசியமான ஊக்குவிப்புத் திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

 

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதெனவும், அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பதில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்த போதே பதில் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் டயனா கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

 

இன்று (27) சர்வதேச சுற்றுலாத் தினமாகும். சுற்றுலாத்துறை அமைச்சு அதனை சுற்றுலாத் தினத்தை எளிய முறையில் கொண்டாடியதாகவும், இந்நாட்டின் சிறந்த சமையல் கலை நிபுணரான பபிலிஸ் சில்வாவுக்கு “ஜய ஸ்ரீ லங்கா” என்ற பெயரிலான சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

அது மிகச்சிறந்த விருதாகும். அவர் கீழ் மட்டத்திலிருந்து கல்கிசை ஹோட்டலொன்றில் பிரதான சமையல் கலை நிபுணர் என்ற அந்தஸ்த்து வரை தன்னை வளர்த்துக்கொண்டுள்ள கதை மிகவும் அற்புதமானது. சுற்றுலாத்துறையில் சமையல் கலை நிபுணர்களை மறந்துவிட முடியாது என்பதால் அவர்களுக்கான ஊக்குவிப்புத் திட்டமொன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் ஆரம்ப பகுதியில் 10 இலட்சம் சுற்றுலாப் பிரயாணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவ்வருட இறுதிக்குள் 15 இலட்சம் பேரை வரவழைக்க முடியும் என எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

வருடத்தின் இறுதி காலப்பகுதியிலேயே நாட்டுக்கு சுற்றுலாப் பிரயாணிகளில் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பிரயாணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்த்திருக்கும் நிலையில், அடுத்த மாதத்தின் இடைப்பகுதியிலிருந்து அவர்களை வரவழைப்பதற்கான ஊக்குவிப்புத் திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

குறிப்பாக எல்ல, நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு உள்ளிட்ட சுற்றுலாப் பிரயாணிகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் இரவு நேரங்களில் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டில் சுற்றுலா ஈர்ப்பு மிக்க நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்றியமைக்க வேண்டும் என்றும், சில சட்டத்திட்டங்களை தளர்த்த வேண்டும் என்பதோடு, சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் செலவுகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தவறும் பட்சத்தில் நாட்டிற்கு வருமானம் கிட்டாது என்றும் வலியுறுத்தினார்.

 

அதேபோல், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளதெனவும், சிலர் செய்யும் தவறான செயற்பாடுகளினால் முழு நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

அதனால் சுற்றுலாப் பயணிகளிடத்தில் அதிக தொகையை அறவிடும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, அவர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

சுற்றுலாப் பயணிகளில் பிரயாண வசதிக்காக டெக்ஸி சேவைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும், அது தொடர்பிலான சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

இந்நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு உள்நாட்டு கஞ்சா உற்பத்திக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும், இரு வாரங்களுக்குள் அதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.

 

இந்த வேலைத்திட்டம் ரூபாய்களை ஈட்டுவதாக அன்றி டொலர்களை ஈட்டிக்கொள்வதற்கானதாக அமைய வேண்டும் என்றும் அதற்கான அதிகார சபையொன்றின் கீழ் ஏற்றுமதி வலயத்திற்கு உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் !

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் , மாவட்ட செயலர் , பொலிஸார் உள்ளிட்டோர் நடாத்திய சந்திப்பின் போதே பொலிஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

இதன்போது முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில் ”யாழ்ப்பாணத்தில் தற்போது அறிமுகமாகியுள்ள தனியார் போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறைந்தளவு , கட்டணங்களை வசூலிக்கின்றன.

 

இதனால் நீண்ட காலமாக சேவையில் ஈடுபடும் எமது வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே நாம் பெரும் தொகை பணத்தினை செலவழித்து மீற்றர் கருவியை பொருத்தினோம். அப்படியிருந்தும் அந்நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளே அதிக சேவைகளில் ஈடுபடுவதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

 

இதற்குப் பதில் அளித்த மாவட்ட செயலாளர்” சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மீற்றர் பூட்டுவது என்பது கட்டாயம். அதனையே நாமும் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

 

அதேவேளை உரிய அனுமதிகளை பெற்று சேவையில் ஈடுபடும் எந்த முச்சக்கர வண்டிகளையும் தடுக்க முடியாது. அத்துடன் , போக்குவரத்து சேவையை வழங்கும் தனியார் நிறுவனத்தை தடுக்கும் அதிகாரம் எமக்கு இல்லை.

 

மீற்றர் பொருத்தி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொதுமக்களால் தினமும் முறைப்பாடுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தனியார் நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் இதுவரையில் எந்த முறைப்பாடும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை ” இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியாவில் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி !

வவுனியாவில் பனைசார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி இன்று(28) இடம்பெற்றது. அண்மையில் பனை அபிவிருத்தசபையின் அனுசரனையோடு வவுனியா உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பனைசார் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான பயிற்சி நெறியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் குறித்த பயிற்சிநெறியையடுத்து, இன்று நெளுக்குளத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் இதற்கான கண்காட்சி நடைபெற்றிருந்தது.

 

இந்நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ கலந்துகொண்டிருந்தார். இதன்போது மரநடுகை உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில். மருத்துவ தவறால் சிறுமியொருவரின் இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் – நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

யாழில். மருத்துவ தவறால் சிறுமியொருவரின் இடது கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரத்தில், ”சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஊடாகப் பரிசோதிக்குமாறு யாழ்,நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 08 வயது சிறுமி ஒருவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் போது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாதமையால் , சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

 

இச்சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை , மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை நடாத்திக்கொண்டு இருக்கும் வேளையில் , சிறுமியின் பெற்றோரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் ஊடாக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஒருவர் ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் கோரியமைக்கு அமைய, பெயர் குறிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கானது எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தனுஷ்க குணதிலக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை – அவுஸ்ரேலிய சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் விடுதலையளித்து தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

32 வயதான அவர், டி20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தபோது, இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கும் காணொளி கடந்த வாரம் நீதிமன்றில் காட்டப்பட்டது.

 

இதனை தொடர்ந்து அவரது நேர்காணலில் உண்மை வெளிப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு தனுஷ்க குணதிலகாவை குற்றமற்றவர் என்று அறிவித்தார்.

இதேவேளை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த தனுஷ்க குணதிலக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

 

“நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக. இன்று எனது சட்டத்தரணி முருகன் தங்கராஜ் இங்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் மிக்க நன்றி. எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. அதனால் இறுதியில் நீதிபதி சரியான முடிவை எடுத்தார். நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது. “எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வரை என்னால் காத்திருக்க முடியாது.”

இதேவேளை தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.