October

October

நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்திக்க தமக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 23 திகதியிட்டு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன உளைச்சல் காரணமாக தான் வகித்து வந்த பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதாக நீதிபதி சரவணராஜா தெரிவித்திருந்தார்.

நீதவான் இராஜினாமா செய்வதற்குரிய காரணிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கூடிய விரைவில் அறிக்கையை பகிரங்கப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபரிடமும் கடிதங்களை கையளிக்க திட்டமிட்டுள்ளனர்.

அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை உள்ளிட்ட அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பாக தீவிர பிரச்சினையை ஏற்படுத்தும் என கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பாக உடனடி விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் ஆகியோர் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

“மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து எதுவுமே கிடைக்கவில்லை.” -ஜே.வி.பி

மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை இதுவரை எதையும் பெறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் நம்பிக்கையுடன் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாகவும், 17 மாதங்களுக்குப் பிறகும் இலங்கையால் ஒரு டொலரில் மறுசீரமைக்கவோ முடி வெட்டவோ முடியவில்லை என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையானது இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நிச்சயமற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம் பல்வேறு வரிகளை விதித்ததுடன் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரித்தது, இது மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

“இலக்கு அரச வருமானம் அடையப்படவில்லை. அதிக வரிகளை விதிக்கவும், மின் கட்டணங்களை மேலும் அதிகரிக்கவும், IMF தொடர்ந்து அரசாங்கத்தை வற்புறுத்துகிறது. IMF அறிக்கையின்படி, இலங்கை எதிர்பார்த்த இலக்கை விட 15 சதவீதம் குறைவாகவே அரச வருவாயைப் பெறுகிறது.”

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரிக் கோப்புகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. மின்சாரக் கட்டணங்களும் 22 சதவீதம் அல்லது முதல் அலகிற்கு 8 ரூபா வரை அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’ – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் !

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (01) காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தினரது போராட்ட இடத்துக்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல் உள்ள நாட்டில் எமக்கு நீதி எப்போது?’, ‘சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுந்திரு’, ‘கையளிக்கப்பட்ட மாணவர்கள் எங்கே?’, ‘குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?’, ‘தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?’, ‘சின்னஞ்சிறு சிறார்களும் ஆயுதம் ஏந்தியவர்களா?’, ‘பாடசாலை சென்ற மாணவன் எங்கே?’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர்.

இலங்கையில் காணாமல்போன தமிழ் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் ஒளிப்படங்களையும் இதன்போது கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உடனடியாக தொழிற்பயிற்சி – அமைச்சரவை அங்கீகாரம் !

உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கிந்தோட்டை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகள் பின்னர் நாடளாவிய ரீதியில் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகள் பரீட்சையின் பின்னர் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் தொழிற்பயிற்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

 

இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் சடுதியாக அதிகரிப்பு !

இவலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சுகாதார அமைச்சு தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கையின்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை ஆயிரம் பிறப்புகளில் 12.3 ஆக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் பேண்தகைமை சுட்டெண்ணின் படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் ஆயிரம் பிறப்புகளில் 07 ஆக பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகப்பேறு இறப்பு விகிதம் 100,000 பிறப்புகளுக்கு 29.5 ஆக அதிகரித்து வருவதாகவும், புதிதாகப் பிறந்த குழந்தை (ஒரு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள்) இறப்பு விகிதம் 1000 பிறப்புகளுக்கு 6.8 ஆக அதிகரித்து வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.

“நீதவான் சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்.” – ஒரு நாடாக நாம் எங்கே இருக்கிறோம்? என அனுரகுமார கேள்வி !

முல்லைத்தீவு நீதவான் சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில்  உண்மையைக் கண்டறிய வெளிப்படையான விசாரணைகளை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற முப்படைகள் மன்றத்தின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் நீதவான் கூறியது உண்மையென்றால் அது பாரதூரமான நிலைமையாகும்.

நீதிபதியின் கூற்றுகள் உண்மையாக இருந்தால், ஒரு நாடாக நாம் எங்கே இருக்கிறோம்? என்பதனை சிந்திக்க வேண்டும்.

ஒரு நீதிபதி அரசாங்கத்திற்கு பாரபட்சமில்லாத தீர்ப்பை வழங்கியதற்காக மரண அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேர்ந்தால், அது ஒரு தீவிரமான சூழ்நிலை ஆகும். அதேசமயம், நீதிபதியின் கருத்தில் உண்மை இல்லையென்றால், அதன் பின்னணியில் உள்ள சதியை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்றார்.

100,000 ஆக குறைக்கப்படுகிறது இலங்கையின் இராணுவத்தினரின் எண்ணிக்கை !

2030 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களை பாதியாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இராணுவத்தின் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை சுமார் 100,000 ஆக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை மீளாய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை சுமார் ஒரு இலட்சமாக குறைத்து இராணுவத்தை தொழில்நுட்பமயபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதேவேளை கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது இலக்கு என அமைச்சர் தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
லங்காதீப

புகலிடக்கோரிக்கைக்காகவே பதவியில் இருந்து விலகியுள்ளார் நீதிபதி சரவணராஜா – சரத்வீரசேகர

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை நான் அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

புகலிடக் கோரிக்கைக்காக நீதிபதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா..? என்பது சந்தேகமளிப்பதாகவும் நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

“நீதிபதி T.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேற நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவே காரணம்.” – ஐனநாயக அமைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத் தீவு நீதிபதியை விமர்சித்த நிலையில், அதற்கு ஐனாதிபதி, பாதுகாப்பு துறை அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களமோ நடவடிக்கை எடுக்காமையினாலேயே முல்லைத்தீவு நீதிபதி T.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறக் காரணம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஐனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் இதுவரையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்காமையினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மேன்;முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளில் பிரதிவாதியாக உள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் நீதிபதி சரவணராஜாவுக்கு எதிராக எந்தவித தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

குருந்தூர்மலையில் ஆதிசிவன் மலை தொடர்பான வழக்கில் நீதியை வழங்கிய நீதிபதி ஒரு தமிழர் என்பதால் அவர் அச்சுறுத்தப்பட்டதாகவும், ஊடகங்களை சுதந்திரமாக இயங்கவிடமால் செய்வதற்காக பயங்கரவாத சட்டத்தை அமுவ்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் மு.தம்பிராசா குற்றம் சுமத்தியுள்ளார்.