03

03

“தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்”. – மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள்

எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே பண்ணையாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ந்து  19வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும்,கால்நடை பண்ணையாளர்களின் நிலத்தை விட்டுவெளியேறுமாறும்,கால்நடை பண்ணையாளர்களை வாழவிடுமாறும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போராடிவரும் தம்மை கேலிக்குரியதாக எண்ணுவதாகவும் தீர்வினை வழங்கவேண்டியவர்கள் இவ்வாறு தம்மை கருதுவது கவலைக்குரியது எனவும் தமக்கான தீர்வினை சில தினங்களுக்குள் வழங்காவிட்டால் மாவட்டத்தில் பாரியளவிலான வீதி மறிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும்,   சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலேசியாtில் இலங்கையர் மூவர் கொல்லப்பட்ட விவகாரம் – சந்தேகநபர் சிறைக்காவலில் உயிரிழப்பு !

மலேசியா – சென்டுல் பகுதியில் இலங்கையர்கள் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைமையக அதிகாரி டத்தோ அலாவுதீன் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு பிரதான சந்தேக நபர்களுக்கு கொலைகளை செய்வதற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று இலங்கையர்களும், பாகிஸ்தானியரும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர். நான்கு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு முக்கிய சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்தது.

உயிரிழந்த இலங்கையர் தவிர மேலும் ஆறு இலங்கையர்களும், பாகிஸ்தானியர் ஒருவரும் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்” எனத் தெரிவித்தார்.

“ஆசிய கண்ட நாடுகள் மட்டும் ஏன் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீற்றம் !

சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். டிடபில்யூநியுஸ் உடனான பேட்டியின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பிய வேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்.

நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள்  என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர் நான் அவ்வாறு செயற்படவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து பிரிட்டனில் பலர் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் ஏன் நீங்கள் சனல் 4னை மாத்திரம் கருத்தில் கொள்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர்உறுதியான வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என தெரிவித்தமைக்கு ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன என்பதற்காக நான் எதனையும் செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்- சிஐடியின் முன்னாள் அதிகாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ஏன் அது பற்றி கேள்வி எழுப்பகூடாது என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்புகின்றது உங்களுடன் பணிபுரிந்த முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்புகின்றார் என்ற குற்றச்சாட்டிற்கு நீங்கள் அதனை முதலில் என்னிடம் கேட்கவில்லை நான் கேள்வி எழுப்பிய பின்னரே கேட்கின்றீர்கள் நீங்கள் சனல் 4 அறிக்கை முற்றிலும் உண்மையான விடயம் என்பது போல என்னிடம் கேள்வி எழுப்பினீர்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியவோ அல்லது ஜேர்மனியோ அவ்வாறான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளாத போது எதற்காக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் மாத்திரம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிலர் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருந்தாலும் நாடாளுமன்றம் அதனை கேட்கவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி முடங்கியது யாழ்ப்பாணம் நீதிமன்றவளாகம் !

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்றையதினம் முடக்கப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கின.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு திங்கட்கிழமை (02) ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக இன்றும் நாளையும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பது என தீர்மானம் எடுத்திருந்தனர்.

நாளையும் (04) யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமை

“சுமந்திரனை போல வேறொருவர் நீதிமன்றத்தை மலினப்படுத்தியிருந்தால் கடூழிய சிறைதண்டனை தான்.” – நீதியமைச்சர் மற்றும் சுமந்திரன் இடையே வாக்குவாதம் !

சுமந்திரன் நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசியதைப் போன்று வேறொருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே நீதி அமைச்சர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச,

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 2020.10.20 ஆம் திகதி நாடாளுமன்ற உரை ஊடாக நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். உயர்நீதிமன்றம் பயனற்றது, உயர்நீதிமன்றத்தில் உள்ளவர்கள் வீடு செல்ல வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நவாஸ் கட்டளைப் பிறப்பித்ததாக இவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிமன்றத்தை மலினப்படுத்தினார்.

சுமந்திரனை போன்று நீதிமன்ற கட்டமைப்பை பிறிதொருவர் விமர்சிக்கவில்லை. பிறிதொருவர் விமர்சித்திருந்தால் இன்று அந்த நபர் கடூழிய சிறைதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். இவரே நீதிமன்றத்தை மலினப்படுத்தினார் என்று சாடினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், நான் குறிப்பிட்ட விடயத்துக்கு பொருத்தமற்ற வகையில் நீதியமைச்சர் உரையாற்றுகிறார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் நீதியமைச்சர் முறையாக பதிலளிக்கவில்லை. நான் நீதிமன்றத்தை விமர்சித்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிபதிகளின் பெயரை குறிப்பிட்டு நான் உரையாற்றவில்லை என்றார்.

“முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம்.” – நாடாளுமன்றில் நீதி அமைச்சர் !

“முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அது தொடர்பான விசாரணை நடத்தும் அதிகாரம் இருப்பது  நீதிச் சேவை ஆணைக்குழுவுக்காகும்.“ என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் பாரியவிடயம். அதேபோன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பான பயங்கரவிடயமாகும். நீதிபதி வழங்கிய உத்தரவுகள் காரணமாக அவருக்கு மரண அச்சுறுத்தல் உட்பட பல்வேறு அழுத்தங்கள் தொடர்பாக மிகவும் பயங்கரமான அறிவிப்போன்றை அவர் விடுத்திருக்கிறார்.

அதனால் அவரின் அறிவிப்பு தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொண்டு  இதன் பின்னணியில் இருக்கும் மறைமுக சக்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் தாெடர்ந்து பதிலளிக்கையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி வெளிநாடொன்றுக்கு சென்ற பின்னரே அவரிடமிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று கிடைக்கிறது. அதில் அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தான் பதவி விலகுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மன அழுத்தம், அச்சுறுத்தல் இருக்குமானால் அவர் வெளிநாடொன்றுக்கு சென்று கடிதம் அனுப்பவேண்டியதில்லை.

அத்துடன் நீதிபதி ஒருவருக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர் யாராக இருந்தாலும் அவரை நீதிமன்றத்துக்கு அழைப்பு விடுக்கலாம், பிடியாணை கட்டளை விடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. அதேபோன்று குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்தாவிட்டால் அதன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். ஏனெனில் நீதிவான் நீதிபதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரம், நியமன அதிகாரம் என அனைத்தும் நிர்வகிக்கப்படுவது நீதிச்சேவை ஆணைக்குழுவினாலாகும். நீதிச்சேவை ஆணைக்குழு அரசியலமைப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவாகும்.

அதனால் முல்லைத்தீவு நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அந்த அதிகாரம் இருப்பது நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மாத்திரமாகும்.

எனவே யாருக்காவது இது தொடர்பில் பிரச்சினை இருக்குமானால் அவர்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்து, அது தொடர்பில் பதில் ஒள்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதம நீதியரசர் தலைமையிலான அந்த ஆணைக்குழுவுக்கு உத்தரவிடவோ அதில் தலையிடவோ அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆணைக்குழு தேவையெனில் அது தொடர்பில் விசாரணை நடத்தி பதில் ஒன்றை வழங்கும் என்றார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் !

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் இன்று (03) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தில் உள்ள சில விதிகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பிற அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரே வருடத்தில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவிப்பு !

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

44 ஆயிரத்து 208 சந்தர்ப்பங்களில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 44 ஆயிரத்து 241 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் 12 கிலோ 995 கிராம் கொக்கெய்ன போதைப்பொருளும் 100 கிலோ 932 கிராம் ஹஷீஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.