05

05

“பெண் அமைச்சரை நாய் என கூறிய ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர்.” – பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன் என எச்சரித்த டயானா !

பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சர் டயனா கமகே எச்சரிக்கை விடுத்தார்.

தன்னை பெட்டை நாயென ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்ததாக குறிப்பிட்டு சபையில் வியாழக்கிழமை (05) சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றத்தில் மட்டுமல்ல நாட்டில் எங்கேயும் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை. பெண்களை யார் என்று நினைத்தீர்கள். பெண்களை பெட்டை நாய் என்று இந்த சபைக்குள் கூற முடியாது. பெண்களிடம் கன்னத்தில் அறைவாங்கும் நாளில் புரியும்.

அதனால் பெண்களை அவதித்து பேசுவது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான மோசமான வார்த்தை பிரயோகங்கள் இந்த சபையில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அதனால் தொடர்ந்தும் இதற்கு இடமளிக்க முடியாது. அதனால் பெண்களை மோசமாக பேசுபவர்களுக்கு என்னிடம் தான் கன்னத்தில் அறைவாங்க நேரிடும்.

மத்தும பண்டார கடந்த நாள் பாராளுமன்றத்தில் என்னை ‘தகாத வார்த்தைகளால் திட்டினார். இது உண்மையில் வார்த்தைகளின் வடிவத்தில் பாலியல் துஷ்பிரயோகம். இது 52 சதவீத மக்கள்தொகை கொண்ட நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவமதிக்கும் செயலாகும். பாராளுமன்றத்திற்கு எம்.பி.க்களை தேர்வு செய்வது பெண்களே. பெண்களை இழிவுபடுத்த இந்த எம்.பி.க்களுக்கு உரிமை இல்லை. அவர் சிறப்புரிமைக் குழுவின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகக் கையாளப்பட வேண்டும்.எதிர்க்கட்சியில் என் மீது வெறுப்பு கொண்டவர்கள் அதிகம். அவர்களால் ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடியாது. மத்தும பண்டார எனது புடவைகளில் ஒன்றை அணிந்து ஒரு பெண்ணின் வேலையைச் செய்யலாம். நான் அவரது கால்சட்டை ஒன்றை அணிந்து ஒரு ஆணின் வேலையைச் செய்ய முடியும் என்றார்.

இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பெண்கள் தொடர்பான கொள்கைகளில் எதிர்க்கட்சியினராகிய ஐக்கிய மக்கள் சக்தியின் உயர் பதவிகளிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி மாவட்ட அமைப்பாளர்களும் சரி ஒரே மாதிரியான கொள்கைகளை பின்பற்றுவதை அவதானிக்க முடிகின்றது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி குறித்த தரப்பினரிடம் இது பற்றி கேளிவி எழுப்பியிருந்த போதிலும் கூட சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இது தொடர்பான எதுவித பதிலும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபா பரிசு – இலங்கை கிரிக்கெட் சபை

19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு 10 மில்லியன் ரூபாயை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

19 வயதான அவர், சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் கான்டினென்டல் மல்டி ஸ்போர்ட்ஸ் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் தோற்றத்தை 2.03.20 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்காக முதல் ஆசிய விளையாட்டு தடகள தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்த தருஷி கருணாரத்னவுக்கு கிரிகெட் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

தருஷி கருணாரத்ன 2019 ஆம் ஆண்டு அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் 400 மீற்றர் மற்றும் 800 மீற்றர் போட்டிகள் இரண்டிலும் தங்கப் பதக்கம் வென்றார்.

“மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருவாராக இருந்தால், அங்கே அவருக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கும்.” – நாடாளுமன்றில் சாணக்கியன் !

பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்காமல் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருவாராக இருந்தால், அங்கே அவருக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனாதிபதி மட்டக்களப்பு வரவுள்ளார். இந்நிலையில் மட்டக்களப்பு மயிலத்தமடுவில் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக 22 நாட்களாக போராடி வருகின்றனர். தங்களுடைய மேய்ச்சல் தரை பிரதேசங்களை அபகரித்து, ஏனைய மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள் சிலரின் வழிகாட்டல்களில் புதிதாக விவசாயம் செய்ய வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேண்டுமென்றால் அவர்கள் வேறு எங்காவது அதனை செய்யலாம். இதற்காக தங்களின் மேய்ச்சல் தரைகளை பயன்படுத்த முடியாது. அங்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து விவசாயம் செய்தால் அங்குள்ள பண்ணையாளர்கள் தமது மாடுகளை எங்கு கொண்டு செல்வது.

அத்துடன் பண்ணையாளர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதாக ஜனாதிபதி வாய்மூலம் வாக்குறுதி வழங்கியுள்ள போதும், மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் போராட்டம் தொடரும். இல்லாவிட்டால் இதன் விளைவுகளை மட்டக்களப்பு வரும் போது ஜனாதிபதி பார்க்கக்கூடியதாக இருக்கும். ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வர முதல் இதனை தீர்க்காவிட்டால் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய கெளரவத்தை நாங்கள் வழங்குவோம் என்றார்.

போதுமான நிதி இல்லை – நிறுத்தப்படும் நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள்..?

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

 

மீண்டும் அகழ்வு பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? ஏற்கனவே எடுக்கப்பட்ட 17 உடற்கூற்றுக்கான பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கப்பெறும் என முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவை இன்று (05) தொடர்பு கொண்டு வினவிய போது,

 

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் நிதி இல்லை என நேற்று (04) கூறியுள்ளதாகவும் அகழ்வு பணி நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாகவும், உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த மாதம் செப்ரெம்பர் (06) ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது.

 

இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த அகழ்வுப்பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரம் அளவில் இதே குழுவினரால் மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள். தனிமையில் வாடும் 50 வீதமான இலங்கை முதியவர்கள்.” – வெளியாகியுள்ள ஆய்வின் முடிவுகள்!

இலங்கையில் வயோதிபர்களில் ஆறு முதல் ஏழு வீதமானோர் டிமென்ஷியா நோயாளர்களாக மாறியுள்ளதாக இலங்கை முதியோர் சங்கத்தின் செயலாளர் டொக்டர் மல்ஷா குணரத்ன தெரிவித்தார்.

மேலும், தற்போது இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், வீட்டில் உள்ள முதியவர்கள் தனிமையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

 

கடந்த 1ஆம் திகதி சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர் சமூகத்தின் சுகாதார மேம்பாடு, நோய்களில் இருந்து அவர்களைத் தடுப்பதுடன், முதிர்வயதை ஆரோக்கியமாக கழிப்பது தொடர்பாக நேற்று (04ஆம் திகதி) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஹிக்கடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் நாற்பத்தெட்டு வீதமான வயோதிபர்கள் தனிமையில் தவிப்பதாக இங்கு நிபுணர் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், அதிகளவான முதியோர்கள் மேல் மாகாணத்தில் இருப்பதாக சனத்தொகை புள்ளிவிபர திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

முதியவர்கள் மீது குடும்பத்தினர் அக்கறை காட்ட வேண்டும்.

 

மேலும் அகிகளவு மருந்துகளை வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுக்கும்போது அது வேறு கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் விளைவாக, வயதானவர்களுக்கு உடல் கோளாறுகள் மற்றும் டிமென்ஷியா போன்ற மனநல கோளாறுகள் ஏற்படுகிறது வேண்டும் தெரிவிக்கப்படுகிறது

“வெளிநாடுகளில் மிருகங்களின் நோய்க்கு கூட பயன்படுத்தாத கதிர்வீச்சு இயந்திரங்கள் மூலம் இலங்கையில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.” – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச !

நாட்டில் புற்றுநோயாளர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கோபோல்ட் கதிர்வீச்சு வெளிநாடுகளில் மிருகங்களுக்கு கூட பயன்படுத்துவதில்லை. அதனால் காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரம் புற்றுநோயாளிகள் உருவாகின்றனர். அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பது செலவு குறைந்த முறையாகும். லினியா எக்ஸலேட்டர் என்ற கதிர்வீச்சையே பயன்படுத்த வேண்டும். அதுவே தற்போதுள்ள நவீன உபகரணம். ஆனால், எமது நாட்டில்  கோபோல்ட் கதிர்வீச்சே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கதிர்வீச்சை வெளிநாடுகளில் மிருகங்களின் புற்றுநோய்க்கு கூட பயன்படுத்துவதில்லை.

அத்துடன், லினியா எக்ஸலேட்டர் கதிர்வீச்சு உபகரணம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி மற்றும் கராப்பிட்டிய ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனை பதுளை, இரத்தினபுரி, குருநாகல், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், இரண்டாம் கட்டமாக இந்த உபகரணங்களை வழங்குவதற்கு 2 மில்லியன் டொலர்கள் செலவாகும் என்று சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் கோபோல்ட்  கதிர்வீச்சு சாதனங்களை தொடர்ந்தும் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இதன் விளைவாக, ஒரு லினியா கதிர்வீச்சு இயந்திரத்தின் விலையில் பாதி செலவிடப்பட்டு, காலாவதியான, வெளிநாடுகளில் விலங்குகளுக்கு கூட பயன்படுத்தாத இயந்திரங்களை இறக்குமதி செய்யத் தயாராகியுள்ளனர். இந்த காலாவதியான இயந்திரங்களுக்குப் பதிலாக லினியா கதிர்வீச்சு இயந்திரத்தை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் இந்தியாவில் இருந்து பெனசியா என்ற கதிர்வீச்சு இயந்திரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றாலும், இந்த கதிர்வீச்சு இயந்திரம் இந்தியாவில் கூட பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்றார்.