06

06

இராணுவத்தின் ஆட்குறைப்பு தொடர்பில் பேசியதற்காக பாதுகாப்புச் செயலாளரால் அச்சுறுத்தப்பட்டேன் – பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி

அண்மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற குழுக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத் தளபதியும் தம்மை அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி பாராளுமன்றில் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் இராணுவத்தின் ஆட்குறைப்பு தொடர்பில் அவர் கருத்து வெளியிட்ட போது, ​​பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தைக் குறைப்பதற்கு இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதை விட உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் செலவினங்களைக் குறைப்பதே சிறந்தது என குழுக் கூட்டத்தில் தாம் குறிப்பிட்டதாகவும், பாதுகாப்புச் செயலாளரே இவ்வாறு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக இவ்வாறான அச்சுறுத்தல் அறிக்கைகளை வெளியிடுவது நிலையியற் கட்டளைகளுக்கு எதிரானது எனவும், அவர்களை சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது மிகவும் பாரதூரமான நிலை எனவும் குரல் பதிவுகளை சரிபார்த்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தேசிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 30 வீதமான வாகனங்கள் கறுப்பு புகையை வெளியிடுகின்றன – வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம்

அதிக கறுப்பு புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியத்தில் மக்கள் முறைப்பாடு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் புகார்களை 0703500525 என்ற வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம்.

வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, புகாரில் வாகனம் கறுப்பு புகையை வெளியிடுவதையும் அது பயணிக்கும் இடத்தையும் தெளிவாகக் காட்டும் புகைப்படத்தைக் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தியின் தரவின் அடிப்படையில், வாகனத்தை அடையாளம் காண நிதியின் ஒழுங்குமுறை பிரிவு விசாரணைகளை நடத்தும், மேலும் அதை சரிசெய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும்.

இந்த காலத்திற்குள் வாகனம் பழுதுபார்க்கப்படாவிட்டால், அதன் வருவாய் உரிமம் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் நிதியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உமிழ்வுப் பரிசோதனை மையங்கள் மற்றும் நடமாடும் மையங்களின் சேவைகள் சரியாகச் செய்யப்படவில்லை என்றால் புகார்களையும் பதிவு செய்யலாம் என நிதியம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 0703500525 என்ற வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது 0112669915 என்ற எண்ணிலோ புகார்களை தெரிவிக்க முடியும்.

இலங்கையின் 30 வீதமான வாகனங்கள் கறுப்பு புகையை வெளியிடுகின்றமை தெரிய வந்துள்ளதாக வாகன உமிழ்வு சோதனை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.

வாகனங்கள் வெளியிடும் கறுப்பு புகையில் உள்ள நச்சு வாயுக்கள் புற்றுநோய் மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார பிரிவுகள் தெரிவித்துள்ளன.

டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டம் ஒக்டோபர் 11 முதல் ஆரம்பம் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தொழில்நுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கு இணையாக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றுபட்டு டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை செயற்படுத்தும் முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் பொருளாதார முறைமையின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வியாழக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார கொள்கையினால் சர்வதேச போட்டித்தன்மைிக்க பொருளாதாரத்துடன் போட்டியிடும் வகையில் இலங்கையை தயார்படுத்த முடியும் என்பதால், அதனூடாக அடுத்த தசாப்பத்தில் இலங்கையின் வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கான இயலுமை கிட்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்காக டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை சமூகமயப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக பொதுமக்களை தெளிவூட்டும் செயலமர்வுகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைவாக “DIGIECON 2030″ வேலைத்திட்டம் இம்மாதம் 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குதற்கான, டிஜிட்டல் பொருளாதார திட்டமிடலொன்றை இதனூடாக தயாரிக்க எதிர்பார்த்திருப்பதோடு, டிஜிட்டல் பொருளாதார கொள்கை தயாரிப்பு பணிகள் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

டிஜிட்டல் பொருளாதார திட்டத்தினால் சர்வதேசத்தின் போட்டித்தன்மை மிக்க சூழலுக்கு ஏற்ப இலங்கையை தயார்படுத்த முடியும். அதனூடாக இலங்கைக்குள் வலுவான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் பொருளாதாரத்தினால் மொத்த தேசிய உற்பத்திக்கு 4% பங்களிப்பு கிடைக்கிறது. அதனை 2030 களில் 15 % ஆக அதிகரித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக மாநாடுகளும், செயலமர்வுகளும் நடத்தப்படவுள்ளன.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர் ”எம்.ஜீ.என்.எம்.விக்ரமசிங்க, DIGIECON 2023 -2030  வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம, மென்பொருள் சேவைக்கான இலங்கைச் சங்கத்தின் (SLASSCOM) தலைவர் ஜெஹான் பேரின்பநாயகம், இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சங்கத்தின் (FITIS) தலைவர் இந்திக்க டி சொய்சா, இலங்கை கணினி சங்கத்தின் தலைவர் அஜந்த அதுகோரல, இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைவர் (IESL) பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க, NERDC பணிப்பாளர் ஜெனரல் நிலாந்தி பெர்னாண்டோ, பிரித்தானிய கணினிச் சங்கத்தின் தலைவர் அலென்சோ டோல் (Mr.Alenzo Doll) ஆகியோரும் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

சனல் 4 விவகாரம் – கத்தோலிக்க திருச்சபையுடன் கலந்தாலோசிப்பதற்கு அரசாங்கம் தயார் என அறிவிப்பு !

சனல் 4 விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையுடன் கலந்தாலோசிப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரமொழிப் பத்திரிகையொன்றில் பிரசுரமான ‘சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான முழுமையான விசாரணை மற்றும் கண்காணிப்புக்கு சர்வதேச விசாரணைக் குழு ஒன்று தேவை’ என தலைப்பிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை மேற்கோள்காட்டி ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஹெரால்ட் அந்தோணி ஆண்டகையின் வேண்டுகோளுக்கிணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 88 தொகுதிகள் மற்றும் 48,909 பக்கங்கள் அடங்கிய அனைத்து ஆவணங்களையும் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், புனித ஹெரால்ட் அந்தோனி பாதிரியாரிடம் கையளித்தார்.

திருச்சபையின் தலைவர், புனித ஹெரால்ட் அந்தோனி பாதிரியாருடன் நேற்று வியாழக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தொலைபேசியில் கலந்துரையாடிய போது, தான் குறித்த அறிக்கையை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, அந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தயாராக உள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்துவதுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையின் அரசியலமைப்பிலும் வேறு எந்த சட்டத்திலும் சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதன்படி, இதுபோன்ற விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது.

செனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக  ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. திருச்சபை, ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் இது குறித்து மேலும் கலந்துரையாட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஒரே வருடத்தில் வெட்டப்பட்ட ஒன்றரை இலட்சம் மாடுகள் – ஆறு மில்லியன் லீட்டர்கள் வரை வீழ்ச்சி கண்ட இலங்கை பால் உற்பத்தி!

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தரவுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த ஆண்டில் (2022) 148,000 மாடுகள் வெட்டப்பட்டுள்ளன.

இந்த புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டில் 4000 மாடுகள் குறைவாக கொல்லப்பட்டுள்ளன. 2021 இல் இலங்கையில் 152,000 மாடுகள் கொல்லப்பட்டன.

 

2022 ஆம் ஆண்டளவில் இலங்கையில் பசுக்களின் எண்ணிக்கை 1,128,000 ஆகவும் பால் உற்பத்தி 419 மில்லியன் லீற்றராகவும் இருந்தது. பால் உற்பத்தியும் 2021ஐ விட 2022ல் ஆறு மில்லியன் லீட்டர் குறைந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டில் 43,000 செம்மறி ஆடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 18,000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் பன்றிகள் வெட்டப்படுவது பாதியாக குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், 33000 பன்றிகள் வெட்டப்பட்டன.

ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக போராடிய நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் !

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு (Narges Mohammadi) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரானில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் அவருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரானிய ஆட்சியாளர்கள் அவரை 13 முறை கைது செய்துள்ளனர். ஐந்து முறை அவர் குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 31 ஆண்டுகள் அவர் சிறைத்தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார். துயரம் என்னவென்றால், நர்கிஸ் முகம்மதி இன்னும் சிறையில் தான் இருக்கிறார்.

 

இயற்பியல் மாணவியான முகம்மதி, சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

 

ஈரானிய பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டார்.

 

இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

பிணையில் வெளிவந்த முகம்மதி, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

 

அவரது இந்த போராட்டம், 2015 ஆம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, கூடுதலாக சில ஆண்டுகள் சிறைக்குள் இருக்கும் நிலையை உருவாக்கியது.

 

சிறைப்பிடிக்கப்பட்டதிலிருந்து, நர்கிஸ் முகம்மதி, ஈரானில் போராட்டங்களுக்கான வலு குறையாமல் இருக்க உதவிக்கொண்டேயிருந்தார்.

 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (06) அமைதிக்கான நோபல் பரிசு நர்கிஸ் முகம்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“ரணிலின் கைப்பொம்மை போல் நான் நடப்பதாக கூறப்பட்டுள்ளமை விந்தையாக இருக்கின்றது.” – விக்கினேஸ்வரன் புதிய விளக்கம்!

முல்லைத்தீவு நீதிபதியாக இருந்த சரவணராஜா தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்த காணொளி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில் அது தொடர்பாக அவரே தெளிவுபடுத்தியுள்ளார்.

 

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தி குறிப்பில் –

“நீதிபதி சரவணராஜாவிற்கு மொழிப்பிரச்சனை இருந்திருக்கும்” கூறுகின்றார் சி.வி.விக்னேஸ்வரன் மேற்படி தலையங்கத்துடன் வெளியாகியிருக்கும் காணொளி எம் மக்களிடையே என் மீது ஒரு தவறான கருத்தை ஏற்படுத்தியிருப்பதை நான் அவதானிக்கின்றேன்.

 

சட்டத்துறை தலைமையதிபதி நீதிபதி சரவணராஜாவை அழைத்து அவரின் தீர்ப்பை மாற்றும்படி கோரியதாக வந்த செய்தியைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டது. அது அவ்வாறு நடந்திருக்கமாட்டாது என்ற கருத்தை நான் வெளியிட்டிருந்தமை உண்மையே. அதற்கான காரணத்தை கீழே தருகின்றேன்-

 

1. தீர்ப்பு எழுதுவதற்கு முன்னர் நீதிபதியை சட்டத்துறை தலைமையதிபதி தம் காரியாலயத்திற்கு அழைத்தார் என்று எங்கும் கூறவில்லை. அப்படி நடந்திருந்தால் அது ஒரு பாரதூரமான குற்றம். அதனைக் கட்டாயமாக நீதிபதி அவர்கள் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பார். அப்படியான செய்திகள் ஏதுமில்லை.

 

2. தீர்ப்பு எழுதியதின் பின்னரே அவரை அவ்வாறு சட்டத்துறைத் தலைமையதிபதி அழைத்ததாக செய்திகள் கூறுகின்றன. அப்படியாயின் எழுதிய தீர்ப்பை நீதிபதி ஒருவர் எவ்வாறு மாற்றமுடியும் என்ற கேள்வி எழுகின்றது. தீர்ப்பை அளித்ததன் பின்னர் மாற்றுமாறு கோர சட்டத்துறைத் தலைமையதிபதி அத்தகைய சட்டசூனியம் மிக்கவர் என்று நாம் கருதமுடியாது.

 

3. எனவே நடந்தது வேறொன்றாக இருந்திருக்க வேண்டும்.

 

4. இது இவ்வளவிற்கும் நீதிபதி மேற்கண்டவாறு கூறியதாக எமக்கிருக்கும் ஒரேயொரு சான்று ஏதோவொரு பத்திரிகை அல்லது வலைத்தளத்தின் கூற்றே. நீதிபதி அவ்வாறு கூறியதாக எந்தவொரு காணொளியும் எனக்குத் தெரிந்தவரை இல்லை.

 

5. பின் என்ன நடந்திருக்கக் கூடும் ? நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிராக நான்கு மேன்முறையீடுகள் இப்பொழுது இருக்கின்றன. அந்த வழக்குகளில் நீதிபதி சரவணராஜா அவர்கள் பிரதிவாதி என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. நீதிபதி ஒருவருக்கு வழக்கமாக சட்டத்துறை தலைமையதிபதியே மன்றில் ஆஜராவார். அப்பொழுது நீதிபதி சட்டத்துறைத் தலைமையதிபதியின் கட்சிக்காரர் ஆகிவிடுவார்.

 

சட்டப்படி ஜனாதிபதி ஒரு கட்சிக்காரராக வரும் சந்தர்ப்பத்தில் அல்லாது சட்டத்துறைத் தலைமையதிபதி கட்சிக்காரரை தேடிப்போகவேண்டிய அவசியமில்லை. கட்சிக்காரர் சட்டத்துறைத் தலைமையதிபதியை நாடி வரவேண்டும்.

5. பின் என்ன நடந்திருக்கக் கூடும் ? நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிராக நான்கு மேன்முறையீடுகள் இப்பொழுது இருக்கின்றன. அந்த வழக்குகளில் நீதிபதி சரவணராஜா அவர்கள் பிரதிவாதி என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. நீதிபதி ஒருவருக்கு வழக்கமாக சட்டத்துறை தலைமையதிபதியே மன்றில் ஆஜராவார். அப்பொழுது நீதிபதி சட்டத்துறைத் தலைமையதிபதியின் கட்சிக்காரர் ஆகிவிடுவார்.

சட்டப்படி ஜனாதிபதி ஒரு கட்சிக்காரராக வரும் சந்தர்ப்பத்தில் அல்லாது சட்டத்துறைத் தலைமையதிபதி கட்சிக்காரரை தேடிப்போகவேண்டிய அவசியமில்லை. கட்சிக்காரர் சட்டத்துறைத் தலைமையதிபதியை நாடி வரவேண்டும்.

சிரேஸ்ட சட்டத்தரணிகள் கூட கட்சிக்காரர் எவ்வளவு உயர்பதவி வகித்தாலும் அவர்கள் தமது தனியறையில் வந்து தம்மைச் சந்திக்கவேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள். திருமதி சிறிமாவோ பண்டார நாயக்க பிரதம மந்திரியாக இருந்தபோது ஒரு வழக்கில் திரு.தியாகலிங்கம் கியூ.சீ அவர்களின் சேவையை நாடினார். தன்னை வந்து சந்திக்கும்படி திருமதி சிறிமாவோ அவர்கள் திரு.தியாகலிங்கத்திடம் வேண்டினார். திரு.தியாகலிங்கம் “மன்னிக்கவேண்டும்! கட்சிக்காரராகிய நீங்கள் என்னை வந்து சந்திப்பதே முறை” என்று கூறி சிறிமாவோவை போய்ப் பார்க்க மறுத்துவிட்டார். பின்னர் திருமதி சிறிமாவோ, தியாகலிங்கத்தின் வீடுதேடிச் சென்று அவரைச் சந்தித்தார்.

எனவே நீதிபதி அவர்கள் சட்டத்துறைத் தலைமையதிபதியை சந்திக்கவேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால் அது அந்த நான்கு மேன்முறையீடுகளிலும் நீதிபதி அவர்கள் சட்டத்துறைத் தலைமையதிபதியின் கட்சிக்காரர் என்ற முறையில்தான் அவ்வாறு சென்றிருக்க முடியும் என்று யூகிக்க இடமிருக்கின்றது.

6. சென்ற அவரிடம் மன்றிலே கொடுத்து மேன்முறையீட்டிற்கு இலக்காகிய அவரின் தீர்ப்பை மாற்றுமாறு எந்த விதத்தில் சட்டத்துறைத் தலைமையதிபதி கூறியிருக்கமுடியும்? ஒரு சாதாரண குடிமகன் கூட அவ்வாறு கோரியிருக்க மாட்டான். ஆகவே நடந்தது என்னவாக இருந்திருக்கக்கூடும் என்று யோசித்தேன். ஒருவேளை சட்டத்துறைத் தலைமையதிபதி “You could have avoided writing a judgment of this nature”என்று சாதாரணமாக கூறியதை “You should have avoided writing a judgment of this nature” என்று நீதிபதி அவர்கள் பொருள்கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். அதனால்தான் மொழிப்பிரச்சனை காரணமாக இருந்திருக்குமோ என்று சிந்தித்தேன்.

7. எதுவாக இருந்தாலும் இவையாவும் எமது யூகமே! நீதிபதியின் நேரிடை செவ்வியின் பின்னரே உண்மை தெரியவரும். ஆனால் அவரிற்கு அச்சுறுத்தல் பிறரால் கொடுக்கப்பட்டது என்பது உண்மையே. அது கண்டிக்கப்பட வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நேற்று (05) மனித சங்கிலிப் போராட்டத்தில் அதையே வலியுறுத்தினோம்.

 

கடைசியாக நான் மொழிபற்றி கூறியதை ரணிலுக்கு நான் வக்காலத்து வாங்குவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ரணிலின் கைப்பொம்மை போல் நான் நடப்பதாக கூறப்பட்டுள்ளமை விந்தையாக இருக்கின்றது. நீதிபதி ஒரு வேளை புரிந்து கொண்டிராத காரணத்தால் மேற்படி தன் கூற்றை வெளியிட்டிருக்கலாம் என்று நான் கூறியதற்கும் ரணிலுக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. வெளிநாட்டில் இருந்த ரணில் விடுக்கப்பட்டு மேன்முறையீட்டில் இருந்த ஒரு தீர்ப்பை மாற்றக் கோருமாறு சட்டத்துறை தலைமையதிபதிக்கு ஆணையிட்டதாக கூறவருகின்றார்களா? உண்மையை அறிந்துகொள்வதே ஒரு நீதிபதியின் வேலை. அரசியல்வாதியும் உண்மையைக் காணவே விழையவேண்டும். ஒருவரின் சிந்தனைகளுக்கு வஞ்சகக் காரணங்களை எழுப்பிவிடும் ஊடகத்தினரை எவ்வாறு அழைப்பது?

 

அவர்கள் தான் பதில் தரவேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.