09

09

“நாங்கள் மிருகங்களுடன் மோதுகிறோம். காசா மக்களுக்கு குடி தண்ணீருக்கு கூட அனுமதி இல்லை. ” – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு !

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வரும்நிலையில், காசா பகுதியை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ்,

‘‘காசா பகுதியை நாங்கள் முழுமையாக முற்றுகையிட்டுள்ளோம். அப்பகுதி அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு என எதுவும் கிடைக்க அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் மனிதர்களுடன் சண்டையிடவில்லை. மிருகங்களுடன் மோதுகிறோம். எனவே, அதற்கேற்ப தான் நடந்துகொள்ள முடியும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நேற்றைய ஒரே நாள் இரவில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் என ஆகியவற்றை கொண்டு காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாதிகளின் 500-க்கும் மேற்பட்ட இலக்குகளில் தாக்கப்பட்டன என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

லெபனானில் இருந்து ஆயுதங்களுடன் ஊடுருவிய தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 9 பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

 

சனிக்கிழமை முதல் ஹமாஸ் போராட்டகுழுவினர் நடத்தி வரும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இந்தத் தாக்குதல்களின்போது 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு, காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வெளித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனயர்கள் 500 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தப் போர் காரணமாக, பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 மக்கள் வெளியேறியுள்ளனர். காசா பகுதியில் 1,00,000 ரிசர்வ் துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

சமீப நாட்களில் இஸ்ரேலிய குடியேறிகள் அல் – அக்ஸா மசூதி வளாகத்தில் நடத்திய தாக்குதல் மற்றும் சமீப மாதங்களில் இஸ்ரேலால் குறிப்பிடத்தகுந்த அளவில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டத்தை அடுத்து, ஹமாஸ் போராட்ட குழுவினரின்  இந்தத் தாக்குதல் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பல தசாப்தங்களாக நடந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஹமாஸ் நடத்திய ரொக்கெட் வெடிகுண்டு தாக்குதல் சூழலை ரத்தக் களமாக்கியுள்ளது. இதற்கு, இஸ்ரேல் பதிலடியாக காசா பகுதிகளில் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

‘ஹமாஸ் தீவிரவாதிகள் ஊடுருவப்பட்ட காசாவுக்கு அருகில் இருக்கும் தெற்கு பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் இராணுவம் மீண்டும் கைப்பற்றிவிட்டது. என்றாலும் சில இடங்களில் சண்டை தொடர்கிறது’ என்று இஸ்ரேலிய ராணுவ படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹக்கரி தெரிவித்துள்ளார்.

486 காெக்கேன் போதை மாத்திரைகளுடன் 20 வயது நபர் முல்லைத்தீவில் கைது !

முல்லைத்தீவில் ஐஸ் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருளுடன் குறிித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனவும் , இவரிடம் இருந்து 486 காெக்கேன் போதை மாத்திரைகளும், 34 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர் நேற்றைய தினம் (08) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.” – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

“இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தாது. முன்னெப்போதும் இல்லாத இந்தத் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது’’. மோதல்கள் மற்றும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இஸ்ரேலில் பல இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.வெளிவிவகார அமைச்சு அவர்களை சரியான இடங்களுக்கு அனுப்பி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான இஸ்ரேலியர்கள் சுற்றுலாப் பயணிகளாகவும் பல்வேறு பணியாளர்களாகவும் உள்ளனர். அவர்கள் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு நாம் உதவ வேண்டும்.

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் குறித்து தேடிப் பார்க்குமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளேன்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் எனும் இரு நாட்டுக் கொள்கையை இலங்கை எப்போதும் ஆதரித்து வருகிறது. அதற்கு நாம் நிச்சயம் ஆதரவு வழங்குவோம்.

சில சமயங்களில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நாம் கண்டித்திருக்கிறோம். இருப்பினும், இவை அனைத்தும் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தாது. முன்னெப்போதும் இல்லாத இந்தத் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது’’. மோதல்கள் மற்றும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆபிரிக்க ஒன்றியம் கொண்டு வந்த பிரேரணைக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்கிறது. இந்த நெருக்கடியினால் மற்றொரு பாதிப்பும் ஏற்படும்.

ஒரு பீப்பாய் பெற்றோலின் விலை 100 டொலர் வரை உயரும் என்று எதிர்பார்க்கலாம். அதன் பிறகு பெப்ரவரி இறுதியில் இருந்து மீண்டும் விலை குறையும். இந்த நெருக்கடியானது எரிபொருளுக்கு மேலும் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதன் விளைவாக எரிபொருளின் விலை நீண்ட காலத்திற்கு உயர்ந்திருக்கும். இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்’’. என மேலும் குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீன ஹமாஸிற்கு ஆதரவளிப்பதாக ஈரான், சிரியா, லெபனான் அறிவிப்பு!

ஹமாஸ் போராட்ட குழுவினருக்கு ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது. இவர்கள் அனைவருமே இப்பகுதியில் அமெரிக்காவின் கொள்கையை எதிர்க்கின்றனர்.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘ ஹமாஸ் தாக்குதல், ஆக்கிரமிப்பாளர்களின் முன்னிலையில் பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீன பகுதி மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இதர நாடுகளிலும் ஆதரவாளர்கள்  உள்ளனர்.’’ என தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலால் பெருமிதம் அடைகிறோம் என ஈரான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கூறியுள்ளன. இந்த சூழலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பேற்க வேண்டும் என கட்டார் கூறியுள்ளது.

 

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள் – ஒரே வருடத்தில் 1.45 பில்லியன் டொலர்களை தொட்டது வருமானம் !

இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சுற்றுலா வருமானம் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது சென்ற ஆண்டின் (2022) இதே காலகட்டத்தை விட வியத்தகு 67% உயர்வடைந்த தொகையாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதாந்திலும் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானம் எதிர்பார்த்த இலக்கை விட குறைவாக பதிவாகியுள்ளது.

செப்டம்பர் மாத வருவாய் 152.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.இது சென்ற ஆண்டின் வருவாயில் 28% சரிவைக் காண்பிப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஒன்பது மாதங்களிலும் அதிகளவு வருமானத்தை ஈட்டிய மாதமாக ஜூலை மாதம் காணப்படுகிறது, 219 மில்லியன் அமெரிக்க டொடாலர்களாக பதிவாகியுள்ளது.

 

இதுவே இந்த ஆண்டின் இதுவரையில் எட்டப்பட்ட மாத வருமானங்களில் அதிக வருமானமாகவுள்ளது.

 

1.55 மில்லியன் பார்வையாளர்களை வரவழைத்து ஆண்டு இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொடாலர்களுக்கு மேல் வருமானத்தை ஈட்டுவதை இலங்கை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் எதிர்வரும் குளிர்காலத்தில் இலங்கை சுற்றுலாத்துறை அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டு செயலாற்றி வருகிறது.

2023 இன் முதல் ஒன்பது மாதங்களில் 1.01 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

யாழ்.நல்லூரில் நான்கு பேர் கொண்ட குழுவால் வாள்வெட்டு தாக்குதல் – இளைஞர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் காயமடைந்தார்.

 

காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

நேற்று (08) இரவு 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றனர்.

 

கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இவ்வாறு காயமடைந்தார்.

 

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“சர்வதேச விசாரணைகளுக்கு இடம் கொடுக்க முடியாது என கூறிய ரணில் ; ஓர் முதுகெலும்பு உள்ள தலைவர்.” – கோட்டாபய பெருமிதம்!

சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தமையை பாராட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“ஜனாதிபதியின் பதவியிலிருந்து நான் விலகியபோது புதிய ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவைப் பரிந்துரைத்திருந்தேன். அதற்கமைய நாடாளுமன்றம் அவரைப் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்தது.

ரணில் விக்ரமசிங்க முதுகெலும்பு உள்ள சிறந்த தலைவர் என்பதை அவர் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் காட்டி வருகின்றார்.

இலங்கை இறைமையுள்ள நாடு. இங்கு வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை. நாடாளுமன்றத்தை மீறி எவரும் முடிவுகளை எடுக்க முடியாது.

நாடாளுமன்றத் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகின்றார். உண்மையில் அவர் சிறந்த தலைவர்” என்றார்.

“இலங்கையில் 12 பேருக்கு ஒருவர் அரச ஊழியர் – இப்போதைக்கு புதிய ஆட்சேர்ப்பு ஏதுமில்லை” – அரசாங்கம் திட்டவட்டம் !

எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு தாங்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

“15 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியன் ஆகும். மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் உள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். இது பெரும் சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை மேற்கொள்ள முடியாது” என்றார்.

இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கண்டனப் போராட்டம் !

முல்லைத்தீவில் இன்று நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கண்டனப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கறுப்புத் துணியால் வாயினைக் கட்டியவாறு அமைதியாக மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தைத் தொடர்ந்து, மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரனிடம் நீதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைப்பதற்காக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

 

இதன்போது, முல்லைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்படும் அத்துமீறிய குடியேற்றங்களுக்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

 

இப் போராட்டத்தில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மதகுருமார், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.