11

11

“பாலஸ்தீன் – இஸ்ரேல் மோதலுக்கு அமெரிக்காவே காரணம்.” – புடில் சாடல்!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் என இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான், இந்த போருக்கு மூல காரணம் என்று ரஷ்யா விமர்சித்துள்ளது.

 

இஸ்ரேல் – பாலத்தீன போர் தற்போது சர்வதேச போராக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் மிகப்பெரிய போராக மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பிரச்சனையில், தற்போது மற்ற நாடுகள் தலையிட்டு வருகின்றன. அமெரிக்கா ஏற்கனேவே போர் கப்பல்களை, ஆயுத தளவாடங்களை அங்கே அனுப்பி உள்ளது.

இதில் தற்போது மறைமுகமாக சவுதி – ஈரான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடும் தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் சவுதி – இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்க இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை.

 

இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை, இஸ்ரேல் தாக்கி வருகிறது.

இந் நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதிக்கான கொள்கைகளின் தோல்விகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம்.

அமெரிக்கா சமாதான தீர்வை ஏகபோகமாக கொண்டு வர முயன்றது. தாங்கள் வைத்ததுதான் சட்டம், நாங்கள் மட்டுமே அமைதியை கொண்டு வருவோம் என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமைதிக்கு பதிலாக தற்போது போர்தான் உருவாகி உள்ளது.

இரண்டு பக்கமும் அமெரிக்கா கொடுத்த தேவையில்லாத அழுத்தம்தான் இந்த போருக்கு காரணம். பாலஸ்தீன மக்களின் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் பார்க்கவில்லை. அவர்களை கணக்கிலேயே கொள்ளாமல் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள்தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம்.

 

ஐநா இந்த விவகாரத்தில் தனிப்பட்ட பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதை இஸ்ரேலும் அமெரிக்காவும் மதிக்கவில்லை.

தனி பாலஸ்தீனம் மட்டுமே இந்த மோதலுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். பாலஸ்தீன மக்களின் தனிப்பட்ட கவலைகள், பிரச்சனைகள் பற்றி அமெரிக்கா யோசிக்கவில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் விமர்சித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை – விடுதிகளில் இரவு நேர சோதனை !

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக அனைத்து பல்கலைக்கழக விடுதிகளிலும் இரவில் சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

 

பல்கலைக்கழக விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பகிடிவதை செயல்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

பல்கலைக்கழக விடுதிகளில் இந்த சோதனைகளை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவ ஆலோசகர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

இவ்வாறு பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

 

பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகளை 076 54 53 454 என்ற வாட்ஸ்அப் இலக்கம் மூலம் தெரிவிக்குமாறும் தற்போது அதிகளவிலான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து !

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

 

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இன்று (11) முக்கிய சந்திப்புகளில் ஈடுப்பட்டதுடன், ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆரம்பமாகவே 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை சார்பில் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியா சார்பில் கையொப்பமிட்டார்.

 

அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 126 வீடுகள், நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

பதுளை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலேயே மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்திய அரசால் மலையகத்தில் ஏற்கனவே 4 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

பாரத பிரதமர் மோடி, மலையகம் வந்திருந்தவேளை 10 ஆயிரம் வீடுகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது.

 

முன்னர் வீடொன்றுக்கு 10 இலட்சம் ரூபா உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வீடொன்றுக்கு 28 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“ஆசிரியர் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்விப் பல்கலைக்கழகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும்.” – கல்வி அமைச்சர்

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் கல்வி முறைமைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். இலங்கையின் முன்பள்ளிக் கல்வி, பாடசாலைக் கல்வி, தொழிற்பயிற்சிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய நான்கு துறைகளும் ஏனைய முன்னேறிய கல்வி முறைகளுக்கு அமைவாக பாடநெறிகள் மற்றும் வளங்களுக்கு இணையாக அபிவிருத்தி செய்யப்படும்.

இதனடிப்படையில் குறித்த நான்கு கல்வித் துறைகளும் சர்வதேச மட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படும்.

எதிர்காலத்தில் ஒன்றிணைக்கப்பட்ட ஆசிரியர் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்விப் பல்கலைக்கழகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும்.

இதன்மூலம் யாழ் குடாநாட்டின் கேந்திர நிலையமாக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அமையும். வடமாகாணத்தில் உள்ள ஆசிரியர் பயிலுனர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும். இதன்மூலம், 2027ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பயிற்சியுடன் பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்புவதே எமது எதிர்பார்ப்பு.

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் இருந்து முறையான தொழில்சார் பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான பரந்த வாய்ப்புகள் உருவாக்கப்படும்” இவ்வாறு சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

“நாம் கடன் சக்கரத்தில் தொடர்ந்து இருக்கப்போகின்றோமா அல்லது அதிலிருந்து வெளியேறி முன்னேறிச் செல்கிறோமா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவத் தொழில் கண்காட்சியை இன்று (11) முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தை (National IT and BPM Week) ஆரம்பித்துவைக்கும் முகமாக இந்தக் கண்காட்சி , ஒக்டோபர் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல் தொழில்நுட்ப தொழில்முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் குறித்து அறிவை வழங்குதல், திறன் மேம்பாடு, தொழில் ஆலோசனை மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

மேல்மாகாணத்தில் (சா / தரம் மற்றும் உ / தரம்) கற்கும் பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவன மாணவர்கள், தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளவர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை தெளிவூட்டும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

03 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தொழிற்துறை மற்றும் தொழில் ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை, வதிவிடப் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான தளத்தை வழங்குவதோடு, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறைகள் குறித்த செயலமர்வுகளும் நடத்தப்படும்.

இக்கண்காட்சியில் பங்கேற்கும் பலர் இதன் மூலம் எவ்வாறு நமது வெளிநாடு செல்லும் ஆசையில் வெற்றி பெறலாம் என்றே எதிர்பார்க்கின்றனர். இது அனைவரினதும் கனவாகும். ஆனால் இக்கண்காட்சி மூலம் நமது நாட்டிற்கு எவ்வாறு பயன் பெறுவது என்பதிலேயே நான் கவனம் செலுத்தினேன்.

இன்று வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்ற தருணத்தில் நாம் இருக்கிறோம். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவது மட்டும் போதுமானதல்ல. பெற்ற கடனை திரும்பச் செலுத்த வேண்டும். நமக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கும் பணம் செலுத்த வேண்டும். அதற்கான அந்நியச் செலாவணி எம்மிடம் இல்லை. எனவே, நாம் மீண்டும் கடன் பெற வேண்டியேற்படும்.

நாம் கடன் சக்கரத்தில் தொடர்ந்து இருக்கப்போகின்றோமா அல்லது அதிலிருந்து வெளியேறி முன்னேறிச் செல்கிறோமா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, இந்த நாட்டில் மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரத்துடன், நாம் உலகச் சந்தைக்கு நகர்ந்து, வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகளின் வருமானத்தை அதிகரித்து மேலதிகக் கையிறுப்பை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செயற்பட்டுவதன் காரணமாக இந்த நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

இந்த திட்டத்தின் முக்கிய அங்கம் நமது பொருளாதார நவீனமயமாக்கல் ஆகும். மிகவும் போட்டி நிறைந்த பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை அதன் முக்கிய பகுதிகளாகும். டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி பேசினால், நாம் முன்னோக்கிச் செல்லும் போது பல விடயங்களை நிறைவு செய்ய வேண்டியுள்ளது.

அதன்போது, தகவல் தொழில்நுட்பத்தில் அறிவும் பயிற்சியும் கொண்ட மனித வளம் தேவை. அந்த படைப்பலத்தைக் கட்டியெழுப்ப நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

நாங்கள் புதிய பல்கலைக்கழக கட்டமைப்பொன்றை ஆரம்பிப்போம். அதன்போது, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொறிமுறைப்படி அரசாங்கம் 03 பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை தொடங்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் போன்று இலாபத்தை மீண்டும் பல்கலைக்கழகத்தில் முதலீடு செய்யும் குழுவுடன் அந்த நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எப்படியிருந்தாலும், இந்த புதிய தொழில்நுட்ப அறிவை வழங்க பல புதிய பல்கலைக்கழகங்களை நிறுவ எதிர்பார்த்துள்ளோம். இரண்டாவதாக, தற்போதுள்ள 450 தொழிற்பயிற்சி மையங்களை இணைத்து தொழிற்கல்லூரிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தொழில் பயிற்சி நவீனமயமாக்கப்படவுள்ளது. இவை அனைத்தையும் செய்யும் அதேவேளை, பாடசாலைகளுக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலம் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் துறை என்பவற்றில் தங்கியுள்ளது. எனவே நாம் அதற்குள் செல்ல வேண்டும்.

நெல் விளைச்சல் வெற்றிபெறாதபோது, கறுவா விளைச்சலுக்கு சென்றோம். கறுவாவை இழந்தபோது கோப்பி பயிரிடப்பட்டது. கோப்பி இல்லாத காலத்தில் தேயிலை, இரப்பர் தென்னை ஆகியன பயிரிடப்பட்டன. இப்போது நாங்கள் சுற்றுலாத் துறை மற்றும் ஆடைத் தொழில் செய்கிறோம். இவை அனைத்தும் கடந்த காலத்தைச் சேர்ந்தவை. ஆனால் நாம் எதிர்காலத்திற்கு செல்ல வேண்டும். அதற்காக முடிந்தவரை பல்வேறு குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இந்த நாட்டின் தேவையை விட இரண்டு மடங்கு மக்களை நாம் உருவாக்க வேண்டும். சிலர் வெளிநாடு செல்கிறார்கள். அவர்கள் நம் நாட்டுக்கு அன்னியச் செலாவணியை அனுப்புகிறார்கள்.

இன்று, ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியா போன்ற கிழக்கு ஆசியாவின் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. எனவே அனைவரும் இணைந்து முன்னேறுவோம். புதிய பல்கலைக்கழகங்களில் நீங்கள் இணையலாம். மேலும், தொழில்முறை மையங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை நீங்கள் வழங்கலாம்.

மேலும் இந்த அறிவை பாடசாலைகளுக்கு கொண்டு செல்வதில் நாம் இணைந்து பணியாற்றலாம். அதற்கு நீங்கள் தயாரா இல்லையா என்பதே எனது கேள்வி. பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க இந்தப் பணிகளுக்கு தலைமையேற்றுள்ளார். அந்தந்த அமைச்சுகளின் செயலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பத்துடன் புதிய தொழிற்சாலைகள் உருவாகும்போது, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன. இன்று பலர் வேலை இழந்துள்ளனர் அவ்வாறான இளைஞர்களுக்கு இந்த அறிவை வழங்க முடியும். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். அதற்கான உங்கள் பதிலைக் கூறுங்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலையில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படும் குளம் – பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் !

மூதூர், கங்குவேலி குளமானது சிலரினால் சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு, பாரிய இயந்திரங்களைக் கொண்டு குளம் சேதமாக்கப்பட்டு வருவதன் காரணமாக குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி குளமானது சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாய சம்மேளத்தினரால் மூதூர் பிரதேச செயலாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விவசாய சம்மேளனம் தெரிவிக்கிறது.

இது தொடர்பில் திருகோணமலை கச்சேரியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஆளுநரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், இதனையடுத்து ஆளுநரின் பணிப்புரைக்கமைய, திருகோணமலை பிராந்திய நீர்பாசனத் திணைக்கள பணிப்பாளரையும் சந்தித்து உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், புதன்கிழமை வரை குறித்த சட்ட விரோத நடவடிக்கை தொடர்ந்ததாகவும் சம்மேளன உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

கங்குவேலி கிராமத்தில் உள்ள கங்குவேலி குளமானது கடந்த ஒரு வாரகாலமாக சிலரினால் ஆக்கிரமிக்கப்பட்டு, கனரக வாகனங்களின் உதவியுடன் குளத்தின் அணைக்கட்டு சேதமாக்கப்பட்டும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டு குளத்து நீரானது வெளியேற்றப்பட்டு குளத்தினுள் விவசாயம் மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் இக்குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்ற கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இக்குளமானது அந்த கிராம மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு மிக நீண்ட காலத்தின் பின்னர், 2019ஆம் ஆண்டு 24 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது.

புனரமைப்பு நடவடிக்கையின்போது சிலர் குளத்தின் அணைக்கட்டுப் பகுதிகளை சேதமாக்கி சட்ட விரோதமான முறையில் குளத்தினுள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன், தாங்கள் நீண்டகாலமாக இப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்ய அனுமதிக்குமாறும் கோரி குறித்த நபர்களினால் கொழும்பு நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2019.12.05ஆம் திகதி சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த அப்போதைய மாவட்ட செயலாளர், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குறித்த 11 பேருக்கும் ஸ்ரீமங்களபுர பகுதியில் மாற்றுக் காணி தருவதாக தெரிவித்து குறித்த 11 பேரையும் வெளியேற்றி குளத்தின் புனரமைப்புப் பணியை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தனர். எனினும், இதுவரைக்கும் குறித்த நபர்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதும் தெரிய வருகின்றது.

இவ்வாறான நிலையில், தற்போதும் இக்குளம் மீண்டும் சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸாரிடம் முறையிட்டபோதும், இந்த பிரச்சினை யாராலும் கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

அத்துடன், இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, குளத்தின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடைசெய்து, இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என கங்குவேலி திருக்கரைசயம்பதி விவசாய சம்மேளனத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

“பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று, எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

“பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று, எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று(11) இடம்பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களையும் பேசியிருந்தார்.

“பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு உலக அளவில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற யதார்த்தினை 1978 ஆம் ஆண்டு அங்கு பயிற்சிக்காக சென்றிருந்த காலத்திலேயே என்னால் உணரக்கூடியதாக இருந்தது” என்ற விடயத்தினையும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாலஸ்தீன மக்களின் உணர்வுகளையும் ஆழ்மன விருப்பங்களையும் நான் நேரில் கண்டிருக்கிறேன், அங்கு நான் ஆயுதப்பயிற்சி எடுத்த காலத்தில் அவர்களது போராட்டத்திலும் பங்கெடுத்திருக்கிறேன்” என்ற தனது அனுபவத்தினையும் அவர் இந்த வேளையிலே பகிர்ந்திருந்தார்.

“எமது மண்ணிலும் நானிருந்த எமது அன்றைய ஈ பி ஆர் எல் எவ் அமைப்பும் கண்காட்சிகளை நடத்தி பாலஸ்தீன விடுதலைக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்திருந்தது, போர் வெறியர்களாக அவர்கள் போராட புறப்பட்டவர்கள் அல்ல  தம் தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் அவர்கள் . ஒரு கையில் ஒலிவ மரக்கிளையும், மறு கையில் ஆயுதமும் ஏந்தியுள்ளோம், எது வேண்டும் என்று அன்று யசீர் அரபாத் எழுப்பிய கேள்வி சகலரையும் ஈர்த்திருந்தது.

ஆம், ஒலிவமரக்கிளை அங்கு சமாதானத்தின் சின்னம், சமாதானம் வேண்டுமா யுத்தம் வேண்டுமா என்று விடுதலைக்கான முழு முனைப்பையும் வெளிப்படுத்தியவர்கள் அவர்கள். அவர் கூறிய அத்தகைய வழிமுறையே, சிறந்ததென நானும் கருதியிருந்தேன், பாலஸ்தீனத்தை பாடமாக ஏற்று, எமது போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் அன்று கருதியதுண்டு. இன்று போர் மேகங்கள் அங்கு சூழ்ந்துள்ளன, இரு தரப்புமே பொது மக்களை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும், அதேபோல் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு நிரந்தர சமாதானம் அங்கு நிலவ வேண்டும். மேலும் பாலஸ்தீனத்தில் மாத்திரமல்லாமல் மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமென்ற நிலை எல்லா இடத்திலும் நிலவ வேண்டும்.

 

அதேவேளை, பாலஸ்தீன விவகாரத்தினை போன்றே எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான சரியான வழிமுறைகளை முன்கூட்டியே 30 வருடங்களுக்கு முன்னர் தன்னால் முன்மொழியப்பட்டபோது அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தற்போது, பேரழிவுகளுக்கு பின்னர் ஏற்றுக்கொண்டிருப்பதையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆசிரியர் கலாசாலையின் பயிற்சி ஆசிரியர்களும் யாதார்த்தினை புரிந்து கொண்டு எமது எதிர்கால சந்ததியினரை சரியாக வழிநடத்த வேண்டும் எனபதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.

இணையசெயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை பயன்படுத்தும் மக்கள் – யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் !

யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் புதன்கிழமை (11) கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

அண்மைய நாட்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இணைய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக தாம் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறு கோரியுமே இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி, யாழ். நகரில் உள்ள வீதி வழியாக வருகை தந்து இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்து நிறைவுபெற்றது.

“52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமை தவறு.“ -நாமல் ராஜபக்ஷ

“52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமை தவறு.“என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தியாவின் தந்தி டி.வி.க்கு வழங்கிய நேர்காணலிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அல்லது அந்த நிலையப்பாட்டை சரியென நினைக்கிறீர்களா? என்று தந்தி டி.வி.யின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நாமல்,

அது தவறானது, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எமது மக்கள் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ 52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி. வேறு எந்த ஜனாதிபதியும் அவ்வாறு வெற்றிபெறவில்லை.

நாங்கள் நாட்டை பொறுபேற்ற போது நாடு மிகவும் நெருக்கடியான சூழலிலேயே இருந்தது. துரதிஷ்டவசமான பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று, வேலையில்லாப் பிரச்சினை, வட்டி வீதங்கள் அதிகரிப்பு, டொலர் கையிருப்பில்லாத காலப்பகுதியிலேயே நாம் நாட்டை பொறுப்பேற்றோம் என்று பதிலளித்தார்.

ராஜபக்ஷர்களின் ஆட்சியை கவிழ்க்க சர்வதேச ஆதரவுடன் சதி நடைபெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாமல் போனதைப்போல்தான் எம்மாலும் தமிழர்களின் மனங்களில் நம்பிக்கையை பெறமுடியாமல் போனது. எப்போது பா.ஜ.க. தமிழகத்தில் வெற்றி பெறுமோ அப்போது நான் நமது கட்சியை வடகிழக்கில் வெற்றிபெற செய்வேன் என்று சொல்லியுள்ளேன். என்றும் கூறியுள்ளார்.

மேலும், என்னுடைய தந்தை சொல்வார் இந்தியாவும் இலங்கையும் உறவினர் என்று. உறவினர் என்பதால் ஏற்றம் இறக்கம் இருக்கத்தானே செய்யும். மோடியின் தமிழ் பேசும் விதமும் அப்பாவின் தமிழ் பேசும் விதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

இதேவேளை எனக்கு டென்டுல்க்கரை எப்பவும் பிடிக்கும் யுவராஜையும் பிடிக்கும் இப்போது ரோகித் சர்மா, கோலி, பும்ரா, அதேபோல் சினிமாவில் விஜய்யை மிகவும் பிடிக்கும் ஆனால் என்னுடைய அப்பாவுக்கு ரஜினியை பிடிக்கும் என்றும் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.