12

12

யாழில் சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் – வைத்தியர் உட்பட மூவரை கைது செய்ய கோரிக்கை !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை, மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் 03 பேரை உடனடியாக கைது செய்யுமாறு  நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் குறித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விடுதி வைத்தியர், பெண் மற்றும் ஆண் தாதி உத்தியோகத்தர்கள் ஆகிய மூவரையும் உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த வழக்கில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் EXIM வங்கி இணக்கம் !

4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு இலங்கையும் சீனாவின் EXIM வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன.

நீண்ட கால கடன்களை மீளச் செலுத்துவதற்கான இலங்கையின் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இந்த உடன்பாடு உதவியாக இருக்குமென நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொதுக்கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான சீன EXIM வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கடன் பெறுநர்கள்,வணிகக் கடன் வழங்குநர் குழுவுடன் சீன EXIM வங்கி தொடர்ந்தும் உறவைப் பேணுமென இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கும் சீன EXIM வங்கிக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது.

அந்த ஒப்புதலின் பின்னர், இரண்டாவது தவணைக் கொடுப்பனவான 334 மில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்குமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையும் ன EXIM வங்கியும் அடுத்த சில வாரங்களுக்கு இதற்காக தீவிரமாக செயற்படுமென நிதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“நீதிபதி சரவணராஜாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர் திட்டமிட்டே வெளிநாடு சென்றுள்ளார்.” – விசாரணை முடிவை அறிவித்தது குற்றபுலனாய்வு பிரிவு !

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அவை குறித்து விசாரணை நடத்திய குற்றபுலனாய்வு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜா 2021 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நீதவானாக நியமிக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் முகவர் ஒருவர் ஊடாக விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டது என்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அமெரிக்காவில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த தொலைபேசி எண் செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ம் திகதி இலங்கை திரும்புவதற்கு டிக்கெட் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதவான் விமான டிக்கெட்டை பயன்படுத்தவில்லை என்பது விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவரது ஆவணத்தில் நைரோபியே அவரது இலக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் சேவையிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய இரண்டு அதிகாரிகளும், உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக்காக 12 மணித்தியாலங்கள் உட்பட தினமும் நான்கு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேலும் நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் பிரேமன், பாதுகாப்பு போதுமானதாக இல்லை என நீதிபதி ஒருபோதும் கூறவில்லை என்றும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி தம்மிடம் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

நீதிபதி வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது காரை விற்றுவிட்டு செப்டம்பர் 23ஆம் திகதி வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றில் கடமையாற்றி வரும், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றப் பதிவாளர் கூறியுள்ளார்.

இதேவேளை தனது கணவர் நீதிபதி என்ற முறையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு இல்லாதது குறித்து குறிப்பிட்ட அவர் சமீபகாலமாக அவ்வாறான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கூறவில்லை எனவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தனது கணவர் வெளியேறியதாகவும், அவர் வெளிநாடு செல்வது தனக்குத் தெரியாது என்றும்நீதிபதியின் மனைவி கூறியுள்ளார்.

“நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை ஐரோப்பாவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.” – சரத் வீரசேகர

“நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை ஐரோப்பாவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.” எனவும் “தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாது போன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும்.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்.டி.டி.ஈ. அமைப்பை நாம் பெரும்பாலும் அழித்துள்ளோம். ஆனால், நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை உள்ளிட்ட ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் பிரிவினைவாத புலம் பெயர் அமைப்புக்கள், தங்களின் கனவை இன்னமும் விடவில்லை. தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே இவர்களின் இலக்காகும்.

இதனால்தான், நாம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெனிவாவில் இவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அத்தோடு, வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த புராதன சின்னங்களை அழிக்கும் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

யுத்தத்திற்கு பின்னர் 12 ஆயிரத்து 422 புலி உறுப்பினர்களை நாம் புனர்வாழ்வளித்து, சமூக மயமாக்கியுள்ளோம். பயங்கரவாதத்தை நாம் கட்டமைப்பு ரீதியாக இல்லாதொழித்தாலும், அவர்களின் ஈழக் கனவு இன்னமும் இருப்பதனால், எமக்கு இன்னமும் அச்சுறுத்தலான சூழல் இன்னமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில்தான் மீண்டும், எல்.டி.டி.ஈ. அமைப்பு தலைத்தூக்கி வருவதாக இந்தியாவிலிருந்து எமக்கு புலனாய்வுத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுதொடர்பாக இராணுவப் புலனாய்வுத் துறையினர், ஆராய்ந்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலை முன்மாதிரியாக கொண்டு நாட்டை முன்னேற்ற அனைவரும் ஒன்றிணையுங்கள்.” – ஐக்கியதேசிய கட்சி அழைப்பு !

பொருளாதார யுத்தத்துக்கு முகம்கொடுத்திருக்கும் எமது நாட்டை அதில் இருந்து மீட்கும் பயணத்தில் இஸ்ரேலை முன்மாதிரியாக்கொண்டு இணைந்துகொள்ளுமாறு  எதிர்க்கட்சித் தலைவரிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் இளைஞர் யுவதிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்தத்தின் மூலம் எங்களுக்கு  பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த முன்மாதிரியான விடயங்கள் இருக்கின்றன. அதுதான் இஸ்ரேல் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் தேசிய இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொண்டு நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினையில் ஒன்றாக இணைந்து செயற்பட அவர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசியல் பேதங்களை பின்தள்ளிவிட்டு ஒன்றாக இணைந்துசெயற்பட இஸ்ரேல் தற்போது எடுத்துள்ள தீர்மானம் இலங்கைக்கு சிறந்த முன்மாதிரியை வழங்குகிறது.

இலங்கை பொருளாதார ரீதியில் யுத்தம் ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில்  இலங்கையிலும் எதிர்க்கட்சிக்கும் வேறு அரசியல் கட்சிகளுக்கும் தற்போது இருக்கும் பொறுப்பு இதுவாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோன்று வெளிநாடுகளில் இருக்கும் இஸ்ரேல் இளைஞர் யுவதிகள் தங்களின் நாட்டுக்கு வந்து, தற்போது நாட்டுக்காக செயற்பட தயாராகி வருகின்றனர்.

தங்கள் நாடு நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நேரத்தில் இளைஞர் யுவதிகள் தங்களின் கடமையை செய்வதற்கு முன்னுக்கு வருகிறார்கள். இதுவும்  எமது நாட்டு இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த முன்மாதிரியாகும்.

அதனால் இஸ்ரேலை முன்மாதிரியாக்கொண்டு  நாட்டை கட்டியெழுப்பும் பயணத்துக்கு  இணைந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் இளைஞர் யுவதிகளிடமும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

“பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” – ஈரான், அரேபியா அறிவிப்பு !

ஹமாஸ் – இஸ்ரேல் போர் குறித்து ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருவரும் தொலைபேசியில் விவாதித்துள்ளனர். உலக அரங்கில் மிக முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

Iran President, Saudi Crown Prince discuss Gaza in first talk since ties  restored - India Today

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஈரானிய அரசு ஊடகம்,

“பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” என இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளது. அப்போது, “நடந்துகொண்டிருக்கும் போரினை தடுக்க சர்வதேச அளவில் சவுதி புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது” என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியிடம் உறுதியளித்தார் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதையும் சவுதி விரும்பவில்லை” என்றும் ஆலோசனையில் முகமது பின் சல்மான் கூறியிருக்கிறார். சவுதி மற்றும் ஈரான் இடையேயான இந்தப் பேச்சுவார்த்தைகள் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட 47 பேருக்கு 2016-ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த மரண தண்டனை பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும், மேற்காசிய நாடான ஈரானிலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த தவறவில்லை. இதனால், சவுதி – ஈரான் உறவில் விரிசல் ஏற்பட ஒருகட்டத்தில், ஈரான் உடனான உறவை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியா பகிரங்கமாக அறிவித்தது.

இரு நாடுகளையும் மீண்டும் இணைக்க உலக நாடுகள் பலவும் ஆர்வம் காட்டின. இதன்பின் கடந்த மார்ச் மாதம் சீனா இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்துவைத்தது. அதன்படி, ஈரானும், சவுதி அரேபியாவும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன. தொடர்ந்து இரு நாடுகளிலும் அடுத்த இரண்டு மாதங்களில் தூதரகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த சமாதானங்களுக்கு பிறகு முதல் முறையாக இருநாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரத்தில் மேலும் சர்வதேச கவனம் விழுந்துள்ளது.

 

கடற்தொழிலுக்கு பாஸ் நடைமுறை – எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் !

கடற்தொழிலில்  ஈடுபடும் தமக்கு தொழில் ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாஸ் நடைமுறை மற்றும்  மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாட்டை கண்டித்து மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் வியாழக்கிழமை (12) காலை 11.45 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பள்ளிமுனை கடற்கரையில் இருந்து அட்டை பிடிக்க கடலுக்குச் செல்லும் பள்ளிமுனை கிராம மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு,மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கடற்படையினர் இடையூரை ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் புதன்கிழமை (12) வியாழக்கிழமை காலை பள்ளிமுனை கடற்கரையில் இருந்து கடலட்டை பிடிக்க தொழிலுக்குச் செல்ல முயன்ற போது தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

படகு ஒன்றில் 3 பேர் மாத்திரமே செல்ல முடியும் என கடற்படை அறிவித்தமையினால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாம் பாஸ் நடை முறையினால் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்து இன்றைய தினம் பள்ளிமுனை கிராம மக்கள் தமது கிராமத்தில் இருந்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலகம் வரை வருகை தந்து மாவட்டச் செயலக பிரதான நுழை வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலில் பிடிபடும் ஒவ்வொரு வகையான கடல் உணவுகளுக்கும் ஒவ்வொரு அனுமதிப் பத்திரமா?,வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் மீன்பிடியில் ஈடுபடும் போது ஏன் எங்களை கடலுக்குள் செல்ல தடை விதிக்கின்றீர்கள்?,சுதந்திரமாக வடபகுதி கடலில் தொழில் செய்த எங்களுக்கு ஏன் இப்போது தடை ?,உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடல் தொழிலுக்குச் செல்லும் போது கடற்படையினர் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்ற போதும்,மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் தமக்கு பாரிய இடையூரை ஏற்படுத்துவதாகவும்,கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமையவே கடற்படையினர் கெடுபிடிகளை மேற் கொள்ளுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

எனவே கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களுக்கு தொழில் ரீதியாக வழங்கப்படும் தனித்தனி பாஸ் நடைமுறை நிறுத்தப்பட்டு பொதுவான பாஸ் வழங்கப்பட வேண்டும் எனவும்,அட்டை பிடிக்க செல்லும் போது படகு ஒன்றில் மூவர் மட்டுமே செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும் எனவும்,மன்னார் கடற்றொழில் திணைக்களம் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் கைதான 9 ஈரானிய பிரஜைகளுக்கும் மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு !

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது ஈரானிய பிரஜைகளுக்கு தீவிர விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (12) குறித்த 9 ஈரானிய பிரஜைகளுக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குறித்த ஈரானிய பிரஜைகள் கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பு பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் 100 கிலோ ஹெரோயினுடன் சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் சோதனைக்காக அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டு சுமார் 84 கிராம் பொதிகளில் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து,  இன்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், நீதிபதி ரணராஜாவினால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போரட்டம் !

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (12) மதியம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் 01.10.2023 தீர்மானத்திற்கமைவாக வியாழக்கிழமை (12) அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்வினை வேண்டியுமே அடையாள ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மதியம் 12.00 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் “மொழித் தேர்ச்சி கொடுப்பனவை மீள் வழங்கு, பல்கலைக்கழக ஊழியர்களின் இல்லாமல் ஆக்கப்பட்ட சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, ஊழியர்களின் சேமலாப, நம்பிக்கை ஓய்வூதிய நிதிகளை கொள்ளையடிக்காதே, அரசே அரச பல்கலைக்கழக முறைமையை காப்பாற்று, வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு ஏற்றாற்போல் சம்பள அதிகரிப்பை வழங்கு” உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.