13

13

தமிழகத்திற்கும் – இலங்கைக்குமான பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பம் !

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை (14) ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படுமென அமைச்சின் செயலாளர் ருவன்சந்திர தெரிவித்துளார்.

செரியாபாணி (Cheriyapani) எனும் பயணிகள் கப்பல் 100 பயணிகளுடன் நாகப்பட்டினத்தில் இருந்து நாளை 14 ஆம் திகதி காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது. மணித்தியாலத்திற்கு 36 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த பயணிகள் கப்பல், 60 கடல்மைல் தூரத்தை 3 மணித்தியாலங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

14 ஊழியர்கள் ,150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளைக் கொண்ட இந்த குளிரூட்டப்பட்ட கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்களை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஷ்வரத்திற்குமிடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்ய வேண்டும்.” – இரா.சாணக்கியன்

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய இழுவைப் படகு விடயம் குறித்து பிரதமர் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் எதிர்மறையான கருத்துகள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் இந்திய இழுவை படகுகளுக்கு பாஸ் அடிப்படையில் அனுமதி வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதே நேரம் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு துளியேனும் இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் அத்துமீறிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இதனை எவ்வறு பார்க்கின்றீர்கள்?

டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இழுவைப்படகு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமலல்லாது அவருக்கு மாதமொன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுப்பதாகவும் பாராளுமன்றத்திலே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் தொடர்பான விடயங்கள் இருக்கின்றன.

அந்த விடயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க டக்ளஸ் தேவானந்தா அவர்களை மீன்பிடி அமைச்சராக நியமித்ததற்கான காரணமே வடக்கு கிழக்கிலே இருக்கும் தமிழர்களுக்கும் தென்இந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கும் முரண்பாடு வரவேண்டும், அதன் காரணமாக தென்இந்திய முதலமைச்சருக்கோ, அரசியல்வாதிகளுக்கோ இலங்கையில் வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மக்கள் மீதான எதிரான சிந்தனை வரவேண்டும் என்பதற்;காகவே திட்டமிட்ட வகையிலே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பது நான் அடிக்கடி சொல்லும் விடயம்.

கௌரவ அமைச்;சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உண்மையிலேயே வாயால் சொல்வது ஒன்று நடைமுறைப்படுத்துவது ஒன்று. அந்த அமைச்சிற்கு பொருத்தமில்லாத ஒருவர். அவர் மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாகவோ அல்லது வேறு ஏதாவது அமைச்சுப் பொறுப்பை, எமது மாவட்டத்திலேயும் ஒரு திணைக்களம் கூட சுற்றுநிரூபம் வெளியிடப்படாத அமைச்சை வைத்திருக்கும் அமைச்சர்களைப் போல அவரும் ஏதாவது தன்னுடைய சலுகைகளை எடுக்கக் கூடிய வகையிலான அமைச்சைக் கேட்டெடுத்து பேசாமல் இருப்பதே பொருத்தம் என்று தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை – சட்ட மா அதிபர்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (13) அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் கலாநிதி ஹரினி அமரசூரிய உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்போதே சட்ட மா அதிபரினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

புலிகளின் தங்கத்தை தேடி வவுனியாவின் மூன்று இடங்களில் பொலிஸார் அகழ்வு நடவடிக்கை !

வவுனியா, புதியகோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் என சந்தேகிக்கப்படும் பல இடங்களில் வியாழக்கிழமை (12) வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது குறித்த காணி அமைந்துள்ள இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணை ஆய்வக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பூவரசங்குளம் பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டு பேக்ஹோ இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மாஜிஸ்திரேட் வாசிம் அகமது உத்தரவிட்டார்.

இலங்கையில் 15சதவீத பாடசாலை மாணவர்கள் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் – கண் மருத்துவர் ஹிரண்ய குணசேகர

இலங்கையில் 15 சதவீத பாடசாலை மாணவர்கள் தொலைதூரக் கண்பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் கண் மருத்துவர் ஹிரண்ய குணசேகர தெரிவித்துள்ளார்.

உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

குழந்தைகளின் கண் நோய்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் குழந்தை கண் நோயால் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.

குழந்தைகள் மிக அருகில் தொலைகாட்சி பார்ப்பது, புத்தகங்களைப் படிப்பது, தலைவலி, அடிக்கடி கண் சிமிட்டுதல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீரிழிவு நோயினால் ஏற்படும் கிளௌகோமாவின் பக்கவிளைவாக குருந்தூர கண்பார்வை குறைபாடு பாதிப்பும் உள்ளது.

குருந்தூர கண்பார்வை குறைபாடு மயோபியா என்று அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு பிரெய்லியை அறிமுகப்படுத்தக்கூடாது. சில குழந்தைகள் குருந்தூர கண்பார்வை குறைபாடுடன் பிறக்கிறார்கள், பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் ரூபெல்லாவின் வெளிப்பாட்டின் காரணமாகவும் இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது.

உலகில் சுமார் 128 மில்லியன் மக்கள் இத்தகைய கருந்தூர பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர் எனவே பெற்றோர்கள் இது குறித்து குழந்தைகளிடம் மிகவும் அவதானத்துடன் இருத்தல் அவசியம்.

காசாவில் இருந்து வெளியேறிய 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் – தொடர்ந்தும் நெருக்கடி கொடுக்கும் இஸ்ரேல் !

கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இன்று 7-வது நாளாக இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இந்தச் சூழலில் இன்று (அக்.13) தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் போரினால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு நிலவரப்படி காசா பகுதியில் இருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் அங்கமான மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (Office for the Coordination of Humanitarian Affairs) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. காசா பகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் என எதையும் விட்டுவைக்காமல் இஸ்ரேலியப் படைகள் தாக்கிவரும் சூழலில் உயிருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். கடைசித் தகவலின்படி காசாவிலிருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலில் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள் பல சேதமடைந்துள்ளன. காசாவில் இருந்து இதுவரை வெளியேறியவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஐ.நா.வின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 27 ஆயிரம் பேர் பாலஸ்தீன அரசு ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சுமார் 1.50 லட்சம் பேர் காசாவின் தெற்கில் மைதானங்களில், பொது கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 752 குடியிருப்பு கட்டிடங்களும், பிற கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளன. 1948-க்குப் பின்னர் இதுவே இந்தப் பிராந்தியத்தின் மிக மோசமாக தாக்குதல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காசாவில் தண்ணீர், சுகாதார வசதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் தொடங்கியதிலிருந்து இப்போது வரை அங்கே 6 கிணறுகள், 3 நீரேற்று நிலையங்கள், ஒரு தண்ணீர் ஊற்று மற்றும் ஒரு நீர் சத்திகரிப்பு நிலையம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் கர்ப்பிணிகள் உணவு, தண்ணீரின்றி வாடிவருகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் தீவிர தாக்குதல் பகுதிகளில் 11 லட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை உடனடியாக மீட்காவிட்டால் அத்தனை பேரும் பட்டினியாலேயே உயிரிழக்க நேரிடும் என்றும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருவதால், இரு நாடுகள் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளி குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாக கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமானதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. ஐ.நா. பள்ளிகளிலும், அருகில் உள்ள கட்டிடங்களிலும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இருதரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 2,400-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில், தரைவழி தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருகிறது. தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்டு ஹெக்ட் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தீவிரவாதிகளின் நுக்பா படைகளின் இருப்பிடங்களை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. இவர்கள்தான் கடந்த வாரம் ராக்கெட்குண்டு தாக்குதல் நடத்தியவர்கள்.

ஹமாஸ் கடற்படையின் மூத்த தலைவர் வீட்டில் ஏராளமான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்த் லாகியா நகரில் நடத்திய வான் தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

“நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு செல்வந்தர் முதல் வறியவர் வரை அனைவருக்கும் வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

“நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு செல்வந்தர் முதல் வறியவர் வரை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்

“ மனித மூலதனத்தை போன்றே டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வதும் சவாலாகியுள்ளது. அதேபோல் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குறைந்தளவான வளங்களுடனேயே நாம் டிஜிட்டல் வசதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

அதனால் தனியார் துறையினரின் தனிப்பட்ட முதலீடுகள் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதற்கமைய டிஜிட்டல் வசதிகள் தொடர்பிலான எமது கொள்கை மேற்படி விடயத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படும்.

அதேபோல் மேல் மாகாணத்தின் கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

அதன் பின்னர் அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் நகரங்களை நோக்கி நகர வேண்டும். அதேபோல் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை விநியோகிப்பவர்களும் முதலீடுகளை எதிர்பார்த்துள்ளனர்.

அதேபோல் முதலீடுகளை முன்னோக்கி கொண்டுச் செல்லும் இயலுமை அரசாங்கத்திடம் உள்ளது.அதனால் தற்போதுள்ளதை விடவும் மாறுபட்ட நிதித்துறை ஒன்று எமக்கு அவசியப்படுகிறது. செல்வந்தர்கள் மற்றும் வறியவர்களுக்கு இடையில் டிஜிட்டல் தொடர்பாடல் ஒன்று இருக்க முடியாது.

அதனை நாம் நனவாக்கி கொள்வது எவ்வாறு என்பதை சிந்திக்க வேண்டும். அந்த வகையில் நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்குள்பிரவேசிக்கும் இயலுமை சகலருக்கும் கிட்ட வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் !

இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன் மீது மேற்கொண்டுவரும் தாக்குதலை கண்டித்தும் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை (13) ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டம் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராகவும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (13) தெவட்டகஹபள்ளிவாசலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.