14

14

ஹமாஸ் அல் கொய்தாவை விட பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலானது அல் கொய்தாவை விட பயங்கரமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 நாட்களாக ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலிற்கும் கடுமையான போர் நடைபெற்று வருகின்ற நிலையில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. இந்தநிலையில், இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்க கேட்க, அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,

“நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் இராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலுக்கு நேரில் சென்றுள்ளனர். அதேவேளை, பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக உள்ளது. பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.

இப்போரில் காணாமல் போயிருக்கும் அமெரிக்கர்களை குறித்து அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நான் ஆறுதல் கூறியுள்ளேன். அத்தோடு, அவர்களை மீட்க அமெரிக்கா அனைத்தையும் செய்ய தயாராக உள்ளது என நம்பிக்கை தெரிவித்துள்ளேன்” என்றார்.

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை –

இலங்கை பாராளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் தமக்கு தீவிரமான கரிசனை இருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலங்கள் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. எனவே, அவை மனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்று அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பொறிமுறைகளுக்கு நீண்டகாலமாக கரிசனையை ஏற்படுத்தும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ரவினா ஷம்தாசனி தெரிவித்துள்ளார்.

மரண தண்டனையை ஒரு சாத்தியமான தண்டனை என்ற விதியை நீக்குவது உட்பட, வரைவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும் திருத்தப்பட்ட வரைவில் உள்ள பல விதிகளின் நோக்கம் மற்றும் பாரபட்சமான விளைவுகள் குறித்து இன்னும் பாரிய கரிசனைகள் உள்ளன.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் ஏற்புடவையல்ல. இந்த நிலையில் குறித்த யோசனை, பயங்கரவாதத்தின் பரந்த வரையறையை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் போதிய நீதித்துறை மேற்பார்வையின்றி, மக்களைத் தடுத்து நிறுத்தவும், கேள்வி கேட்கவும், தேடவும், கைது செய்யவும், தடுத்துவைக்கவும், காவல்துறைக்கும் – இராணுவத்திற்கும் – பரந்த அதிகாரங்களை வழங்குகின்றது.

ஊரடங்குச் சட்டம், கட்டுப்பாடு உத்தரவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களை குறிப்பிடுதல் ஆகியவற்றில் பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் போதுமான சமநிலை இல்லாமல் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புகின்றன. இணைய வழி பாதுகாப்பு யோசனையை பொறுத்தவரை, இது பொதுமக்கள் உட்பட இணைய தகவல் தொடர்புகளை கடுமையாக பாதிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. சட்டமூலத்தின் பல பிரிவுகள், தன்னிச்சையான மற்றும் குற்றங்களின் தெளிவற்ற விதிமுறை வரையறைகளைக் கொண்டிருக்கின்றன.

இவை, பெரும்பாலும் அனைத்து வகையான சட்டபூர்வமான வெளிப்பாட்டையும் குற்றமாக்கக்கூடும். எனவே இந்த சட்டமூலம், கருத்துச் சுதந்திரத்தின் மீது பாரிய விளைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது.

இந்தநிலையில் சிவில் சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுயாதீன நிபுணர்களுடன் மேலும் அர்த்தமுள்ள ஆலோசனைகளை மேற்கொள்ளுமாறும், சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில், சட்ட வரைவுகளில் கணிசமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

சனல் – 4 குற்றச்சாட்டுக்களை ஆராய பாராளுமன்ற விசேட குழு !

செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“இஸ்ரேல் – பலஸ்தீன் போர்ப்பதற்றம்” – உயர்வடைய ஆரம்பித்துள்ள மசகு எண்ணெய்யின் விலை !

இஸ்ரேல் – ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் இன்று (14) மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை 87.69 டொலராகவும், ஒரு பீப்பாய் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 90.89 டொலராகவும் அதிகரிக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் இன்றைய விலை 3.23 டொலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – பாலஸ்தீன் போர்ப்பதற்றத்திற்கு நடுவிலும் கூட தாய்நாடு திரும்ப விருப்பம் காட்டாத இலங்கையர்கள் !

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் மோதல் நிலவி வருகின்ற போதிலும், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எவரும் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையர்கள் எவரேனும் திரும்பி வர விரும்பினால், அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, ஆனால் மோதல் இடம்பெறும் காசா பகுதிக்கு அண்மித்த பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் கூட அங்கு தங்குவதற்கு அதிக விருப்பத்துடன் உள்ளனர்.

நாடு திரும்ப விரும்பும் எந்தவொரு இலங்கையர்களுக்கும் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸா பகுதியை அண்மித்துள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகளின் அடாவடித்தனம் – இருவர் கைது !

யாழ் போதனா வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபரை அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் சேர்ந்து ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று(14) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு ஊழியரின் காடைத்தனத்தை வீடியோ எடுத்த மருத்துவ பீட மாணவி மீதும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபர் மதுபோதையில் இருந்ததாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பிலும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் அடாவடியான செயலுக்கும் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தரப்பு தெரிவிக்கின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.