15

15

“பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிக்கும் தென்னிலங்கை சக்திகள் பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்.” – அருட்தந்தை மா.சத்திவேல்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கின் சக்திகள் போராடுவதை வரவேற்கின்றோம். அத்தோடு பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே பாலஸ்தீனத்துக்கான போராட்டம் உண்மையானதாக அமையும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்துக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையில் வெடித்திருக்கும் போர் மிகவும் உக்கிரமானது. ஒன்றும் அறியாத சாதாரண மக்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள் என இரு பக்கமும் ஆயிரங்களை தாண்டி இதுவரை கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ளனர்.

இதனை மனித நேயம் கொண்டவர்களால் அங்கீகரிக்க முடியாது. இத்தகைய நிலை உருவாவதற்கு யுத்தத்தை விரும்பும் பயங்கரவாத நாடுகளும், அதற்கு அமைதி காத்து அனுமதி அளிக்கும் உறவு நாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் பொறுப்புக்கூறல் வேண்டும்.

பாலஸ்தீனத்தை இறைமையுள்ள நாடாக அங்கீகரிப்பதும் சொந்த நிலத்தில் அந்நியமாக்கப்படும் மக்களுக்கு வாழ்வுக்கான உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதுமே தீர்வுக்கான ஒரே வழி என இன அழிப்புக்கும், இனப்படுகொலைக்கும் முகங்கொடுத்து நீதிக்காக சர்வதேசத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கும் மக்களாக ஐ.நா. சபையை கேட்டுக்கொள்கின்றோம்.

பாலஸ்தீன மக்களின் தாயக உரிமையை, இறைமையை அங்கீகரிக்காமல் அவர்களது பூமியிலேயே அவர்களை அந்நியர்களாக்கி உலக வல்லரசுகள் தமது அரசியல், பொருளாதார நலங்களுக்காக அவர்களை அழிக்க நினைப்பது பயங்கரவாதமே. அதன் உப விளைவாகவே ஹமாஸ் போன்ற இயக்கங்கள் உருவெடுத்தன. அதனை பயங்கரவாதமாக்குவதும் பயங்கரவாதமே. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோன்று நாடுகள் பிரிந்து போர்க்கொடி தூக்கி இருப்பது வறுமையில் வீழ்ந்துள்ள நாடுகளை மேலும் வறுமைக்குள் தள்ளுவதாக அமையும். இது உலக அமைதி, ஒழுங்கை மேலும் மோசமாக சீர்கெடச் செய்யும். இதுவும் பயங்கரவாதமே.

இலங்கையில் வட கிழக்கு தமிழர்களின் நீண்ட நாள் அரசியல் அபிலாசைகள் தீர்க்கப்படாததன் காரணமாகவே பல்வேறு விடுதலை அமைப்புகள் தோற்றம் பெற்றன. இறுதியில் பிரச்சினைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கமே காரணம் என அவர்களை அழித்தவர்கள் இதுவரை வடகிழக்கு தமிழர்களின் இறைமையை அங்கீகரிக்காமல் பௌத்த சிங்கள மேலாண்மை வாதத்தில் இராணுவத்தின் துணையோடு, இராணுவ முகம் கொண்ட சிங்கள பௌத்த பிக்குகளை ஏவிவிட்டு நில ஆக்கிரமிப்பை தொடர்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் வீதியில் நின்று போராடுவதற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் இன்னும் ஒரு வடிவமே மட்டக்களப்பு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம்.

வடகிழக்கு தமிழர்களின் இறைமையை அங்கீகரிக்காமல், அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றாமல், அவர்களது பாரம்பரிய தாயக பூமியை ஆக்கிரமித்து பௌத்த பூமியாக்க துடிக்கும் பௌத்த துறவிகளுக்கு அனுமதி அளிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாலஸ்தீன-/ இலங்கை நட்புறவு அமைப்பின் தலைவராக இருப்பது தேச விடுதலைக்காக ஏங்கி நிற்கும் பாலஸ்தீன மக்களுக்கு அவமானமே. இலங்கை மக்களுக்கு அது நகைப்புக்கிடமானதே.

அது மட்டுமல்ல, பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தெற்கின் சக்திகள் முகநூலில் பதிவிடுவதோடு போராட்டத்தை முன்னெடுப்பதோடு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதனை நாம் வரவேற்கின்றோம்.

அதே நேரம் அவர்களிடம் நாம் “வடகிழக்கு தமிழர்களின், மலையகத் தமிழர்களின் இறைமைக்கும், அரசியல் அவிலாசைகளுக்கும், தாயக கோட்பாட்டுக்கும் ஆதரவாகவும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்பதோடு பௌத்த சிங்கள நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கூறுகின்றோம். அவ்வாறு நீங்கள் செய்தால் மட்டுமே பாலஸ்தீனத்துக்கான உங்கள் போராட்டம் உண்மையானதாக அமையும்.

யுத்த வடுக்களோடு வலிகளையும் சுமந்து தமிழர் தேசியம் காக்க போராடும் சமூகமாக பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகவும் தாயக மீட்புக்காகவும் நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.

இன விடுதலைக்காக போராடும் இயக்கங்களை அழிக்கலாம்; ஒழிக்கலாம். ஆனால், கொள்கை பற்றோடு, தனியாக மண் தாகத்தோடு கொள்கை உள்ள உணர்வுகளை எவராலும் அழிக்க முடியாது. அது புதிய வடிவங்களோடு, புதிய வீச்சோடு தொடரும் என்பதே உண்மை.

உலக பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் வல்லரசுகள் தனது சுயநல அரசியலில் இருந்து விலகி உலகின் அமைதிக்காக ஒடுக்கப்படும் இனங்களின் விடுதலைக்காக ஐக்கிய நாடுகளின் ஒழுங்கு விதிகளை முறையாக கடைப்பிடித்து சமாதானத்துக்கு வழிகாட்ட வேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம் என்றிருந்தது.

சிறுமி துஷ்பிரயோகம் – மன்னாரில் இளைஞர்கள் மூவருக்கு விளக்கமறியல் !

மன்னாரில் 17 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 23, 18, 17 வயதுகளையுடைய இளைஞர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயாரால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள்  மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களை பொலிஸார்  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில்  எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் முயற்சி – இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமை நீக்கம் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இன்றிலிருந்து கடமை நீக்கம் செய்யப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நுழைவாயிலில் வைத்து, வைத்தியசாலைக்கு வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டியது. இந்த விடயத்தை நான் மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளதோடு குறித்த பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் தனியார் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு காவலாளிகளையும் இன்றிலிருந்து வைத்தியசாலை பாதுகாப்பு கடமைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்களுக்கு எச்சரித்துள்ளேன். எனினும் இவ்வாறான சம்பவங்களை இனி மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பொதுமக்கள் வைத்தியசாலைக்கு சுதந்திரமாக வந்து தமது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இவ்வாறான ஒருசில சம்பவங்கள் மூலம் அவை மழுங்கடிக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்துகொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்டபோதே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தரப்பு தெரிவித்தது.

தற்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் தாக்குதல் நடத்திய காவலாளிகள் தாங்கள் தாக்குதல் நடத்தியமை  தொடர்பில் பொலிஸில் விளக்கமளித்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனையால் விரக்தி..? – தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!

திருகோணமலை – மட்கோ பகுதியில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

 

இச் சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக திருகோணமலை ரயில்வே திணைக்களத்திடம் விசாரித்தபோது குறித்த சம்பவம் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு இன்று (14) காலை வந்த ரயிலின் சாரதியிடம் விசாரித்ததாகவும் குறித்த சம்பவம் இடம்பெற்றது தொடர்பாக தனக்கு தெரியாது எனவும் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு !

யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சுபோகரன் கருத்துத் தெரிவிக்கையில்

”உக்க முடியாத , 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன் , வண்டே கப் , பிளாஸ்ரிக் ஸ்ரோ , பிளாஸ்ரிக் இடியப்ப தட்டுக்கள் , பிளாஸ்ரிக் பூமாலை , பொதியிடலுக்கு பயன்படுத்தும் கவர் பிளாஸ்ரிக் கரண்டிகள் என்பவை தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.

அவற்றினை வைத்திருத்தல் , விற்பனை செய்தல் பயன்படுத்தல் ஆகியவை தண்டனைக்கு உரிய குற்றங்கள் ஆகும். யாழ்.மாவட்டத்தில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 13 தடவைகள் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் போது , உணவகங்கள் , விற்பனை நிலையங்கள் என 205 வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது.

 

அவற்றில் 14 உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். எதிர்வரும் காலங்களிலும் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். எனவே வர்த்தகர்கள் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் என்பவற்றை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ உடமையில் வைத்திருக்கவோ வேண்டாம்” இவ்வாறு சுபோகரன் தெரிவித்துள்ளார்.