16

16

யாழில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது !

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா (வயது 23) என்கிற இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (16) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீட்கப்பட்டபோது வீட்டில் கணவன் இல்லாத காரணத்தால் கணவரே கொலை செய்திருக்க வேண்டும் என்கிற பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.

அதனையடுத்து, கணவரை பொலிஸார் தேடிய நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் சந்தேக நபர் தப்பிக்க முற்பட்டவேளை கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தபோது, சந்தேக நபர், தான் மனைவியை தாக்கிய பின்னர், வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், மனைவி உயிரிழந்தது தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதனையடுத்து, கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் , தான்மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது எனவும் மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலே இருவரையும் தாக்கினேன்” எனவும் விசாரணைகளில் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஏற்கனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதுடன் வேறு சில குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவராகவும் கருதப்படுகிறார். உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை மற்றும் சட்ட மருத்துவ அறிக்கை மேற்கொண்டதன் பின்னரே தெரியவரும். சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்றைய தினம் சகோதரரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.எமது விசாரணைகள் நிறைவுற்றதும் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு 50 வருட குத்தகைக்கு வழங்கப்பட்ட யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகை !

தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது சுமார் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (16) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்கும் திட்டம்: கிளம்பியது எதிர்ப்பு - தமிழ்வின்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, தலைவர் இண்டி பத்மநாதன் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் எல். ரத்நாயக்க மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனேடிய முதலீட்டாளருடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இதனை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதன்படி இதன் முதலீட்டு மதிப்பு அண்ணளவாக 5,000 பில்லியன் ரூபாய்களாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதி ஆலோசகரான சாகல ரத்நாயக்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகையின் நிர்மாணப் பணிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,  இந்த ஜனாதிபதி மாளிகையினை நிர்மாணிக்கும் போது புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதன் கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இலங்கைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) இந்த ஜனாதிபதி மாளிகையின் மிகுதி கட்டட பணிகளை விரைவாக முடித்து முழு அளவிலான தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றும் என நம்பப்படுகிறது.

இந்த தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தினை நொதேர்ன் யுனி (Nothern Uni) பல்கலைக்கழகமாக உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 1500 மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகளை வழங்கக்கூடியவாறும், வடக்கில் உள்ள மாணவர்களுக்கு உயர் தரத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் SLIIT நிறுவனம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதன் நீண்ட கால இலக்காக இலங்கையை தாண்டி அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி கற்க வாய்ப்பளிக்கும் தளமாக இதனை மாற்ற விரும்புவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

பாலஸ்தீன தூதருடனான கலந்துரையாடலின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, உலகில் எங்கும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும், போர் தீர்வு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியின் அவசரத்தை வலியுறுத்தியோதோடு இது இரு நாடுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு செழிப்புக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது என்றார்.

“பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கத்தின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் நான் பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன். யுத்தம் ஒருபோதும் தீர்வாகாது” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளிற்கு  மேற்குலகம் ஆதரவளிக்கும்.” – நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச

தேர்தல்களை பிற்போடும்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளிற்கு  மேற்குலகம் ஆதரவளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

ஒன்பது பேர் – மறைக்கப்பட்ட கதை என்ற தனது நூலின் ஆங்கில ரஸ்ய மொழிபெயர்ப்பை வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மாகாணசபை உள்ளுராட்சி தேர்தல்களை காணாமல் ஆக்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தல்களிற்கும் அதனை செய்வது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு முடியாத விடயமல்ல. தேசிய தேர்தல்களை பிற்போடுவதற்கு ஏற்ற விதத்தில் வன்முறையான சூழல்ஒன்று உருவாக்கப்படலாம் மேற்குலகம் அதற்கு உதவலாம்.

வாக்காளர்களை தன்னால் கவரமுடியாது என்பதால் தேர்தல்களை பிற்போடுவது குறித்து ஜனாதிபதி உறுதியாக உள்ளார். கோட்டாபய ராஜபக்ச பதவிவிலகிய பின்னர் தன்னை( சபாநாயகரை ) ஜனாதிபதியாக்க  அமெரிக்க தூதுவர் முன்வந்தார் என்ற எனது குற்றச்சாட்டை சபாநாயகர் இன்னமும் மறுக்கவில்லை.

இந்த நூல் வெளியீடு அன்று ஏப்பிரல் 25 ம் திகதி நான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இன்னமும் சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை ஜனாதிபதியின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து நேர்மையான எதிர்கட்சிகள் பொது உடன்பாட்டிற்கு வராவிட்டால் நாடு மீளமுடியாத பலவீனமான பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிப்பு !

நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிகமானோர் பதின்ம வயதினர் என ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் சுட்டிக்காடியுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா மேலும் தெரிவித்தார்.

குழந்தை பருவ வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தின் போதே தாய் – சேய் குடும்ப சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பதின்ம வயதினரிடையே ஏற்படும் தனிமை , மனக் குழப்பங்கள், மன அழுத்தங்கள், எரிச்சல்கள் மற்றும் கோபங்கள் போன்ற செயற்பாடுகளினால் ஏற்படும் மனநல பாதிப்பின் உச்சகட்டமே தற்கொலை போன்ற நிலைமைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவு !

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் 150 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குறித்த பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி நபர் ஒருவரின் பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடியுள்ளனர்.  அத்துடன் அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இதன்போது இளைஞர்களின் செயற்பாடானது அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இச்சம்பவம் குறித்து யாழ் பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய போதும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ”சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி, மக்களின் இயல்வு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்தவகையில் இச்சம்பவம் தொடர்பில்  இருவரை கைது செய்த பொலிஸார் அவர்களை கடந்த 14 ஆம் திகதி நீதவான் முன்னிலையில்  ஆஜர்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

இதனையடுத்து  பொலிஸார் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.