17

17

அமெரிக்க – பிரித்தானியாவின் ஆதரவோடு இஸ்ரேலின் இனவெறித் தாக்குதல்: காஸா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி! அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடனான சந்திப்பை பாலஸ்தினிய விடுதலை அமைப்பின் தலைவர் அப்பாஸ் ரத்துசெய்துள்ளார்:

ஒக்ரோபர் 17 இன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவைச் சந்திக்கவும் அரபு நாடுகளின் ஆதரவைத் திரட்டவும் புறப்பட்டுள்ள நிலையில் இச்சந்திப்பு ஒருதலைப் பட்சமாக பாலஸ்தின, ஜோர்டன், எகிப்திய தலைமைகளால் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கு நாடுகளும் வழங்கியுள்ள கேள்வியற்ற ஆதரவுடன் பாலஸ்தினிய அரபுக்களை முஸ்லீம்களை அழிக்கும் திட்டம் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே மத்திய கிழக்கு அரசுத் தலைமைகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மத்திய கிழக்கில் பாலஸ்தினியர்களுக்கான ஆதரவு எப்போதுமே இருந்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் அண்மைக் காலம்வரை மேற்கு நாடுகளுடனும் இஸ்ரேலுடன் மிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் ஓக்ரோபர் 7ம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகந்து நடத்திய தாக்குதலும் இஸ்ரேல் தொடுத்த இன அழிப்பு யுத்தமும் இந்த உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த இன அழிப்பு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்களாகியும் உத்தியோக பூர்வமான எந்தக் குரல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

நேற்று ஒக்ரோபர் 16 ஐநா வின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஸ்யா கொண்டுவந்த யுத்தநிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர்த்திருந்தது. அதனைத் தொடர்ந்து பிரேசில் கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்நாடுகள் வாக்களிக்கவில்லை. பாலஸ்தினத்தில் நடக்கும் இன அழிப்பை ஊக்கப்படுத்துவதுடன் அதற்கு எண்ணை ஊற்றும் வகையில் அமெரிக்கா தன்னுடைய தாக்குதல் கப்பலை இஸ்ரேல் நோக்கி நகர்த்தி உள்ளது.

இன்று சில மணிநேரங்களுக்கு முன் காஸாவில் உள்ள அல் அஹாலி பப்ரிஸ்ற் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய அடிப்படை மனித விழுமியங்களுக்கு மாறான தாக்குதல் உலக நாடுகளின் பார்வையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய இன அழிப்பு இராணுவம் ஈவிரக்கமற்ற முறையில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று பாரபட்சமில்லாத தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் காஸவில் வாழும் மக்குளுக்கான அடிப்படைத் தேவைகளான தண்ணீர், உணவு மற்றும் மருந்து விநியோகத்தையும் முற்றாக தடுத்து அவர்களை மரணத்தின் விழிம்புக்குள் தள்ளிக்கொண்டுள்ளது. பாலஸ்தினத்தில் கடந்த 12 நாட்களில் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள்.

நூறு தமிழரைக் கொன்றால் அதில் ஒரு ஈழப் போராளியும் இருப்பான் என்று இஸ்ரேலின் புலனாய்வுத்துறை அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனவுக்கு ஆலொசணை வழங்கியிருந்தது. அதே செயற்திட்டத்தையே இஸ்ரேல் பாலஸ்தினத்திலும் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அமெரிக்க – பிரித்தானிய மேற்கு நாட்டு தலைமைகள் தொடர்ச்சியாக ஆதரவளிக்கின்றனர்.

இந்த மேற்கு நாடுகள் உலகில் நடைபெறும் பெரும்பாலும் அனைத்து யுத்தங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதுடன் இந்த யுத்தங்களை ஆரம்பிப்பவர்களாகவும் அதனை எண்ணையூற்றி வளர்ப்பவர்களாகவும் உள்ளனர். அது மட்டுமல்லாமல் அப்கானிஸ்தானில் அல்கைடாவை அமெரிக்கா உருவாக்கியது. அன்றிருந்த ரஸ்ய சார்பான மொஜஹிதீன்களுக்கு எதிராக அமெரிக்கா ஒசாமா பின் லாடனை உருவாக்கியது. அமெரிக்கா கற்றுக்கொடுத்ததை அல்கைடா ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்திய போது அமெரிக்கா அல்கைடாவை அழிக்க முனைந்தது.

அதே போல் யஸீர் அரபாத்தின் தலைமையிலான பாலஸ்தின விடுதலை அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் எண்பதுக்களில் உதவி அமைப்பாக செயற்பட்ட அமைப்பை ஹமாஸாக உருவாக்கி கொம்பு சீவிவிட்டது. சிரியாவிலும் அமெரிக்கா ஐஎஸ்ஐஎஸ் அடிப்படைவாதிகளுக்கு ஆயதங்களை விநியோகித்தது. பெரும்பாலான இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை உருவாக்கி வளர்த்துவிட்டவர்கள் முஸ்லீம்கள் அல்ல. அமெரிகாவினதும் அதன் நேசநாடுகளினதும் புலனாய்வுப் பிரிவினரே. காலனித்துவகால பிரித்தாளும் தந்திரத்தின் தொடர்ச்சியே இது. நவகாலனித்துவம்.

மனித உரிமைகள் என்று முதலைக்கண்ணீர் விடும் அமெரிக்க – பிரித்தானிய நேசநாடுகள் மிகமோசமான மனித அவலங்களுக்கு பொறுப்புடையவர்கள். அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாடுகளிலும் மத்திய கிழக்கிலும் தங்களுடைய சொந்த நலன்களுக்காக தலையீடு செய்து அங்கு மிகப்பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தினர். இந்நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகவும் நலன்களுக்காகவும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாட்டு மக்களின் பெயரில் வலிந்து தாக்குதல் நடத்தி உலக சமாதானத்தை சீர்குலைக்கின்றனர். தங்கள் நாடுகளில் தங்களுடைய இருப்புக்கு ஆபத்து வருகின்ற போது அவர்களுடைய வாக்கு வங்கி சரிகின்ற போது இவர்கள் உலகின் பதட்டமான பகுதியில் யுத்தத்தை ஆரம்பிப்பார்கள்.

பிரித்தானியாவின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரதமராக இருந்த போது தன்னுடைய பார்டிகேற்றை மறைக்க உக்ரைன் போருக்கு ஆயதங்களை வாரி வழங்கினார். உக்ரைனுக்கு ஆயதம் விற்று லாபமடைந்த ஜோ பைடன் குடும்பம் உக்ரைன் போரில் உரிந்துபோட்டு ஆடுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இப்போது மோசடி, லஞ்சம், ஊழலுக்கு பெயர் போன இஸ்ரேலிய பிரதமருக்கு இஸ்ரேலிலேயே பல வழக்குகள் உள்ளது. இதில் இருந்து தப்பிக்கொள்ளவே அவர் ஹமாஸைச் சீண்டிவிட்டு இந்த யுத்தத்தில் ஆடாத ஆட்டம் ஆடுகின்றார்.

இதனாலேயே தற்போது உலகம் முழவதும் அமெரிக்கா – பிரித்தானிய நேச நாடுகளுக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்துள்ளது. உலகம் முழவதும் இந்நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கு முன் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், இவற்றுக்கான மூலகாரணமாக இஸ்ரேலிய ஒடுக்குமுறை பாலஸ்தினிய பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது நடைபெறாவிட்டால் ஹமாஸ் அழிக்கப்பட்டாலும் அதனிலும் மோசமான அமைப்பொன்று இன்னும் சில ஆண்டுகளில் உருவாகும். இஸ்ரேலின் அடக்குமுறைகளும் ஆக்கிரமிப்புகளும் ஹமாஸிலும் பார்க்க பல மடங்கு தீவிரமான தீவிரவாதிகளை உருவாக்கும். உலக அமைதி கேள்விக்குறியாகவே இருக்கும்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றி முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் !

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பராமரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த எண்ணின் மூலம் உரிய தகவல்களை வழங்கவும் முடியும்.

 

அந்த இலக்கத்தின் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் நச்சு போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனூடாக அளிக்கும் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் தவறானவை என்பதோடு, அநீதியானவை.” – நாடாளுமன்றத்தில் பகீர் கிளப்பிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“இரண்டு நாட்களுக்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் ரோஹான் குணரத்ன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணைக் குழுக்களுக்கு வெளிப்படுத்த முடியாத, மிகவும் இரகசியமான அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிக்கைகளை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கையை கையளிக்கும்போது, தனியான ஒரு பைலை, கையளித்தனர்.

 

இந்த பைலை சட்டமா அதிபருக்கோ, புலனாய்வுப் பிரிவினருக்கோ, சி.ஐ.டியினருக்கோ, பொலிஸாருக்கோ வழங்காமல், தனிப்பட்ட ரீதியாக வைத்துக் கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ரோஹான் குணரத்ன இரகசியமான அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இரகசியமான பைல் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் தவறானவை என்பதோடு, அநீதியானவை என்பதை இங்கே நான் கூறிக்கொள்கிறேன்.

 

சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாட்டில்தான் நானும் உள்ளேன்.

 

இந்த நாடாளுமன்றில் இதற்கு முன்னரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

 

இதில், எனக்கு எதிரானவர்கள் மட்டும்தான் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

 

வன்மத்துடன், பழி வாங்கும் நோக்கத்துடன் தான் இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன் மீதான போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற ரஷ்யாவின் பிரேரணை ஐ.நா பாதுகாப்பு அவையால் நிராகரிப்பு!

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தொடர்ந்து 11 ஆவது நாளாக நடந்து வருகிறது.

 

இதற்கிடையே, போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் எனும் பிரேரணையை ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷ்யா கொண்டு வந்தது.

 

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ரஷ்யாவின் வரைவு பிரேரணையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை நிராகரித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு அவையில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

இங்கு கொண்டுவரப்படும் ஒரு தீர்மானம் நிறைவேற 9 நாடுகளின் ஆதரவு தேவை. இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ரஷ்யா கொண்டு வந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்யாவின் பிரேரணைக்கு ஆதரவாக சீனா, கபோன், மொசாம்பிக், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் வாக்களித்தன. அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், கானா, மால்டா, ஸ்விட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதனால், இந்த பிரேரணை தோல்வி அடைந்தது.

 

முன்னதாக, இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் தொடர்பாக ரஷ்ய பிரேரணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதனை ஆதரிக்க முடியாது. ஹமாஸ் அமைப்பின் செயலை கண்டிக்காததன் மூலம் அத்தகைய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அப்பாவி மக்களை கொன்றுள்ளது, கடத்திச் சென்றுள்ளது. இதில், அமெரிக்கக் குடும்பங்களும் உள்ளன. காஸா மக்கள் தற்போது சந்தித்து வரும் துயரங்களுக்குக் காரணம் ஹமாஸ்தான், என குறிப்பிட்டார்.

 

இதேபோல், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தூதர்களும் ரஷ்ய பிரேரணைக்கு எதிராக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

இலங்கை பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் !

இலங்கை பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் ஹூவாவி நிறுவனத்துடன் பீஜீங்கில் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

 

சீனாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி, பீஜிங் நகரிலுள்ள ஹூவாவி நிறுவனத்தின் ஆய்வு, அபிவிருத்திக்கான மத்திய நிலையத்திற்கு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டபோதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 

இந்த சுற்றுப்பயணத்தின் போது ஹூவாவி நிறுவனத்தின் பிரதி தலைவர் Simon Lin-ஐ ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

 

இலங்கையில் மென்பொருள், வன்பொருள் பொறியியலாளர்களை வருடாந்தம் உருவாக்குவதற்கான கற்பித்தல் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாரென ஹூவாவி நிறுவனத்தின் பிரதி தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் கலந்தாலோசிக்கவே இம்முறை வருகை தந்திருப்பதாகவும், டிஜிட்டல் கல்வி முறைமை, பசுமை வலு சக்தி உற்பத்தி தொடர்பில் சீன அரசாங்கம், ஹூவாவி நிறுவனத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சர்வதேச ஒத்துழைப்பிற்கான மூன்றாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.

 

சர்வதேச ஒத்துழைப்பிற்கான மூன்றாவது மாநாடு சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படுவதுடன், அரச தலைவர்களுக்கு இரவு நேர விருந்துபசாரம் நேற்று வழங்கப்பட்டது.

யாழ்.பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்ததூபி – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்த விரிவுரையாளர் !

யாழ்.பல்கலைக் கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும் யாழ்ப்பாணம் கட்டுடை மற்றும் கிளிநொச்சி விசுவமடு ஆகிய பிரதேசங்களைச்  சேர்ந்த இருவரும் குறித்த முறைப்பாட்டை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில்  விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, தூபியை அமைக்க பெறப்பட்ட , செலவழிக்கப்பட்ட நிதி விபரங்கள் , தூபிக்கான அனுமதிகள் தொடர்பிலான ஆவணங்களுடன் எதிர்வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு  சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி இரவு இடிக்கப்பட்டது.

இதனையடுத்து , பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து மீண்டும் 10ஆம் திகதி துணைவேந்தர் சிறிசற்குணராஜாவினால் அடிக்கல் நாட்டப்பட்டு புதிய தூபி நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 56 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிப்பு !

இலங்கையில் 56 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் உள்ள குடும்பங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பகுதியினர் பாதுகாப்பான ஊட்டச்சத்து பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“அரச வருமானத்தை விட அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் அதிகம்.”- அசோக அபேசிங்க

அரசாங்கத்தின் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக கணக்கு போட்டால் அது அரச வருமானத்தை விட அதிகம் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் அரசின் வருமானம் 2 மில்லியன் கோடி என்றும் அரச வருமானத்தை விட அதிக ஊழல் மோசடிகள் அரச நிறுவனங்களில் நடந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க கணக்குகள் குழுவின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அசோக அபேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

100 வருடங்களாக அரசாங்க கணக்குகள் குழு இந்த விடயங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிவித்த போதும் அவை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு ஊழல் செய்தவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அடைந்த நஷ்டத்தை மீட்பதற்கோ, வழக்கு தொடரவோ இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் அத்துமீறும் சிங்கள குடியேற்றவாசிகளின் ஆதிக்கம் – பண்ணையாளர்களின் இரண்டு கால்நடைகள் சுட்டு கொலை !

மயிலத்தமடு பகுதியில் பண்ணையாளர்களின் இரண்டு கால்நடைகள் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் நேற்று(16) சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

மாதவன மயிலத்தமடு பகுதியில் அத்துமறிய சிங்கள குடியேற்ற வாசிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் பண்ணையாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களது கால்நடைகளை சுட்டுக் கொண்டுள்ள கோரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக இலங்கை ஜனாதிபதிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பு மாதவன மயிலத்தமடு பகுதியில் அராஜகம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரு சாராருக்கும் சுகமான ஒரு சூழலை ஏற்படுத்தி முரண்பாடுகளை தவிர்க்க அதிபர் பணிபுரை வழங்கியிருந்தாலும் அவருடைய பணிபுரைகள் அனைத்துமே காற்றில் பறக்கின்ற நிலைதான் இன்று காணப்படுகின்றது.

 

அத்து மீறிய பேரினவாத குடியேற்றவாசிகளின் அராஜக தனம் வாய்பேச முடியாத மிருகமான கால்நடைகளில் இன்று அரங்கேறியுள்ளது. குறித்த குடியேற்றவாசிகளின் செயல் அங்கு தங்கியிருக்கும் பண்ணையாளர்களுக்கும் உயிர் ஆபத்து ஏற்படலாம் எனவும் இதன் மூலமாக ஒரு இனமுறுகள் ஏற்படும் அபாயம் அதிகமாக காணப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கரடியினாறு போலீசாருக்கு முறைப்பாடு ஒன்றை செய்வதற்கு பாதிக்கப்பட்ட கால்நடையின் பண்ணையாளர்கள் சென்றிருந்த போதும் முறைப்பாட்டினை ஏற்க மறுத்த கரடியினாறு காவல்துறை பொறுப்பதிகாரி பொய்யான தகவல்களை வழங்குவதாக கூறி இருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் குறித்த காவல்துறையினரின் நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லப் போகின்றோம் என்ற காரணத்தினால் அவர்களது கால்நடை உயிரிழந்த சம்பந்தமான முறைப்பாட்டை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச்  செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்.” – சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் !

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச்  செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமெனவும், இதற்காக விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன் ஓர் அங்கமாகவே  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான தொழில் மதிப்பு  அங்கீகாரம் இன்னும் முறையாக கிடைக்கப்பெறாத வகையில், அதனை எவ்வாறு தொழில்சார் நடவடிக்கையாக மாற்றுவது  என்பது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இலங்கையில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் மலையக மக்களும் பெரும்பாலும் இடம்பெறுகின்றனர் எனவும் வீட்டு பணிப்பெண்ணாகச்  செல்லும் அவர்கள் பல்வேறு  சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், அவர்களின் பாதுகாப்புக்காக விசேட பிரிவொன்று ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார்.