22

22

“காலத்துக்கு காலம் அரசாங்கங்கள் மாறும் போது தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளது.” – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

தேசிய பௌதீகத் திட்டத்தை உடனடியாக ஒவ்வொரு மாவட்டக் குழுவிற்கும் சமர்ப்பித்து அனுமதி பெறுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

 

பாராளுமன்ற வளாகத்தில் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்கள அதிகாரிகளுடன் அண்மையில் (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

 

நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களில், அதற்கான நிறுவனங்களை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படுவதால், அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் அடிக்கடி தாமதம் ஏற்படுகிறது. காலத்துக்கு காலம் அரசாங்கங்கள் மாறும் போது தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும், தேசிய பௌதீக திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்கள் மிகவும் வினைத்திறனுள்ளதாகவும் மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

 

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் “தேசிய பௌதீக திட்டம் – 2048” தயாரிக்கப்பட்டுள்ளது. அது 2000/49 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நகர மற்றும் கிராம திட்டமிடல் கட்டளையின் படி உள்ளது. தேசிய பௌதீக திட்டம் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் கிடைத்தது. இந்த தேசிய பௌதீக திட்டத்திற்கு அனைத்து மாவட்ட குழுக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அங்கு ஆலோசனை வழங்கினார்.

 

மேலும், இத்திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட உள்ளது. பின்னர் அது வர்த்தமானியில் வெளியிடப்படும். தேசிய பௌதீக திட்டம் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

 

முதலாவதாக, 2007 இல் தேசிய பௌதீக திட்டம் தயாரிக்கப்பட்டது. பின்னர் அது 2019 இல் புதுப்பிக்கப்பட்டது. “தேசிய பௌதீக திட்டம் – 2048” பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிஞர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எடுத்துக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கு “ஒரு திட்டமிடப்பட்ட நிலையான வளமான நிலம்” என்பதாகும். இந்த தேசிய பௌதீக திட்டம், அமைச்சின் செயலாளர்கள் குழுவிற்குள் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.

 

நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய பௌதீக திட்டத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி தனித்துவமான பங்களிப்பை வழங்கும் நகர அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், புகையிரத, போக்குவரத்து போன்ற அனைத்து அபிவிருத்தி செயன்முறைகளையும் முன்னெடுப்பதன் மூலம் நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை பெருமளவில் தவிர்க்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும், பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்த தேசிய பௌதீக திட்டம் மிகவும் முக்கியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

“இலங்கையர்களுக்கு காணாமல்போன மாகாண சபை தேர்தலும் புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் அவசியம்.” – மகிந்த தேசப்பிரிய

“இலங்கையர்களுக்கு காணாமல்போன மாகாண சபை தேர்தலும் புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் அவசியம்.” என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எனினும் முன்னர் கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் சட்டங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள மகிந்த தேசப்பிரிய ஆறுமாதங்களில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியை ஆணைக்குழு பூர்த்தி செய்வது மிகவும் கடினம், பல மணித்தியாலங்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டியிருக்கும் ஒருவருட காலத்திற்கு கூட இது நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் ; சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை அவை இந்த காலத்தின் தேவை எனினும் இவற்றிற்கு முன்னர் எங்களிற்கு காணாமல்போன மாகாண சபை தேர்தலும் புதைக்கப்பட்ட உள்ளுராட்சி சபை தேர்தலும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கிழக்கில் இருந்து சிங்களவர்களை வெளியேற்ற கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் முயற்சி..?

கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில நாட்களாக பௌத்த குருமார்கள் தன்னையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் குறை கூறி கொண்டு செயற்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அத்துடன் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்ளை கைப்பற்றினால் அது எந்த இனத்தவர்களாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

நாட்டில் மீண்டும் ஒருமுறை இனப்பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

தனியாருக்கு சொந்தமாகும் சிறீலங்கா டெலிகொம்!

சிறிலங்கா தொலைத் தொடர்பு நிறுவனத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான சொத்து எண்ணிக்கை கணக்கிடும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

வெளிநாட்டு நிறுவனமொன்றினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்தார்.

இந்த நிலைமையை தடுக்க எதிர்வரும் நாட்களில் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் மூலம் இந்நிறுவனத்தின் பெறுமதி கணக்கிடப்படுவதாகத் தெரிவித்த அவர், தனியாருக்கு கடன் வழங்குவதே இந்த நிறுவனத்தின் பொறுப்பாகும் என்றார்.

இது மிகப் பெரிய மோசடி என்றும், இதற்கு எதிராக கடுமையான தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் ஐவர் கைது !

4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நீண்ட நாள் மீன்பிடி படகில் பயணித்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரும் கடற்படையினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

இன்று(22) காலை தேவேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்த குறித்த படகை சோதனையிட்ட போது, அதிலிருந்து சுமார் 200 கிலோகிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படும் அபாயம்..?

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியினை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

 

எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள் , நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், சட்டத்தின் ஆட்சியை நடத்துமாறும் வெளிப்படைத்தன்மையை மக்களோடு பேணுமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

“நாடாளுமன்றத்தில் மரியாதை, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் அதனை எதிர்கொள்ளும் அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த வரைவை தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் மரியாதை, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

 

எனவே, நாடாளுமன்றத்தின் ஒழுக்கம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், இங்கிலாந்தின் நாடாளுமன்ற நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“றமேஷ் வேதா” – லண்டன் தமிழ் ஆளுமையின் மறைவு !

நகைச்சுவை கலைஞர் றமேஷ் வேதநாயகம் இன்று அதிகாலை 22 ம் திகதி ஒக்ரோபர் இயற்கையை எய்தினார். அவர் மோட்டோ நீயுரோன்ஸ்- நரம்பு தொடர்பான நோயினால் இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல்

பாதிக்கப்பட்டிருந்தவர்.
மிக அரிதானதும் இலட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் இந்நோயானது படிப்படியாக உடலின் ஒவ்வொரு அவயங்களாக செயலிழக்கச் செய்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக றமேஷ் வேதாவும் இந்நோயினால் பாதிக்கப்பட்டு இயற்கையை எய்தினார்.

புலம்பெயர் தொலைக்காட்சிகளில்,, “பிடிக்கல பிடிக்கல” என்ற நாடக தொடர் மூலமும் பல குறும்படங்கள் ஊடாகவும் மற்றும் முழு நீள திரைப்படங்கள் ஊடாகவும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவர் ஒரு சிறந்த நகைச்சுவை நாடகக் கலைஞரும் ஆவார்.

இலங்கையில் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த பல தசாப்தங்களாக லண்டனில் வாழ்ந்தவர். கணக்கியளாளராக பணியாற்றிய இவர் நடிப்புத் துறை மீதான ஈர்ப்பினால் கலைத்துறையில் முழு ஆர்வத்தோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது நகைச்சுவை நடிப்பினாலும் குணாதிசயத்தாலும் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.

2023 ஆம் ஆண்டு சிவஜோதி ஞாபகார்த்த விருது – ” நகைச்சுவை தென்றல்” என்ற பட்டத்தை காலஞ் சென்ற றமேஷ் வேதாவுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருந்ததாக “லிட்டில் எயிட்டின்” நிர்வாக இயக்குநர் ஹம்சகௌரி தெரிவித்திருந்தார்.

விருது வழங்கும் விழா நவம்பர் 18 இல் நடைபெற இருந்த நிலையில் சடுதியாக றமேஷ் வேதாவின் மரணச் செய்தியை கேட்டு தான் அதிர்ச்சியும் மிகுந்த கவலையும் அடைந்ததாக தெரிவிக்கும் ஹம்சகௌரி லிட்டில் எயிட்டின் சார்பாக றமேஷ் வேதாவின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்தார்.

ஒரு நல்ல மனிதரை, நல்ல கலைஞரை மற்றும் நல்ல நண்பரை தான் இழந்து தவிப்பதாக இவர் நடித்த படங்களையும் நாடகங்களையும் இயக்கிய கலைத் தம்பதியினர் றஜிதா மற்றும் பிரதீபன் அவர்களும் தேசம்நெட்டுக்கு தெரிவித்தார்கள்.
என்றும் ஆர்வம் குன்றாத றமேஷ் வேதா எமது திரைகுழுமத்திற்கு மிகப்பெரும் பலமாகவும் ஊக்கியாகவும் இருந்தவர். அவருடைய மறைவு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்ல எமக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என ஈழத்தமிழ் முன்னணி இயக்குநரான ஆர். புதியவன் தேசம்நெட்டுக்கு தெரிவித்தார்.

தேசம்நெட் மற்றும் தேசம்திரையுடன் நீண்ட காலமாக உறவைக் கொண்டிருந்தவர் றமேஷ் வேதா. இவருடைய பிள்ளைகள் சிறுவர் தேசம் பகுதியில் எழுத்தாளர்களாகவும் இருந்தவர்கள். றமேஷ் வேதாவின் மறைவுச் செய்தி ஈழத்தமிழர்களுக்கு நகைச்சுவை உலகில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறும் தேசம் ஜெயபாலன் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறான நல்ல மனிதருக்கு இக் கொடியநோய் ஏற்பட்டதும் அவருடைய திடீர் மறைவும் இயற்கை இழைக்கும் அநீதியின் மீது கோபத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

நகைச்சுவை கலைஞர் றமேஷ் வேதநாயகத்தின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினரின் பிரிவுத்துயரில் கலைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றனர். நகைச்சுவைகலைஞர் றமேஷ் வேதாவின் இறுதி நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.