November

November

அங்காடிகள், கஃபே, ஏடிஎம், உணவு விடுதிகளுடன் இணைந்தவாறு எரிபொருள் நிலையங்கள் – சீனாவை அடுத்து இலங்கையில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம்!

உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமையுடைய எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவவுள்ளது.

 

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் நீண்ட கால ஒப்பந்தத்தின்படி ஷெல் தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படும் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அவற்றில் சிறிய அளவிலான பல்பொருள் அங்காடிகள், வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதிகள், கஃபே, ஏடிஎம், உணவு விடுதிகள் இருக்கும் என்றும் இலங்கை முதலீட்டு சபை அறிவித்துள்ளது.

 

அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறந்து பெட்ரோலிய விநியோக நடவடிக்கைகளை குறித்த நிறுவனம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனமும் ஷெல் நிறுவனமும் இணைந்து இலங்கையில் 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது – ஐ.நா

காஸாவில் 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

 

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீனத்தின் காஸாவில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது எதிர்பாராத திடீர் தாக்குதல் நடத்தினா்.

 

இதில் இஸ்ரேலை சோ்ந்த சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்களை பணயக்கைதிகளாக ஹமாஸ் படையினா் பிடித்துச்சென்றனா்.

 

இதைத் தொடா்ந்து, காஸா மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.

 

காஸாவில் உள்ள மருத்துவமனைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில், காஸா நிலவரம் குறித்து தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்து வரும் நிலையில், ஐ.நா. உணவு அமைப்பு, காஸாவில் தற்போது 22 இலட்சம் பேருக்கு உணவு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.

 

மேலும், அங்கு மக்கள் உணவு, எரிபொருள் இன்றி தவிப்பதாகவும் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

 

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மருத்துவமனைகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் எகிப்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் தங்களது செயற்பாட்டிற்காக பயன்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டி வரும் இஸ்ரேல் இராணுவம், மருத்துவமனைகளில் சோதனை நடத்தி வருகிறது.

 

இரண்டு மூன்று சுரங்கங்கள் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றேன் – சபையில் மகிந்த ராஜபக்ச

பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

 

“கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இந்த சபையில் பொருளாதாரம் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம். தற்போது ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பறிப்பதற்கு பேசுபவர்கள் அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது.

 

எனினும், குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதாக சேற்றின் மீது கை வைக்க தேவையா? அதனால், சேறு பூசுபவர்கள் கைகளில் சேறு உள்ளதை கூற விரும்புகிறேன்.

 

ஒருவருடைய உரிமையை அழிக்கப் பேசுபவர்கள் குறைந்தபட்சம் நாட்டு மக்களின் உரிமைகளையாவது உறுதி செய்ய செயற்பட்டிருக்க வேண்டும்

 

வரலாறு நெடுகிலும் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தந்ததன் மூலம் எமது கடமையை நிறைவேற்றியுள்ளோம்.

 

எனவே, ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள், ஒரு உரிமையைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்கியது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) !

இலங்கை அணி தொடர்ந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று (21) அஹமதாபாத்தில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கடந்த 10 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கையை செவிமடுத்ததன் பின்னர் இருதரப்பு கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை அணியால் பங்கேற்க முடியும் என இன்று தீர்மானிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இலங்கைக்கு வழங்கப்படும் பிரதான கொடுப்பனவு கட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக்குழு கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வாவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது!

இந்திய கடற்படையினரால் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறியே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் மக்கள்  நீதி கேட்டு போராட்டம் !

யாழ் – வட்டுக்கோட்டைப்  பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள்  நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த  இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைக்காக மயானத்திற்கு எடுத்து செல்லும் போது  அப்பகுதி மக்களால் குறித்த கவனயீர்ப்புப்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ” அலெக்ஸ் இறந்து 48 மணி நேரம் கடந்தும் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸ் விசாரணைக்குழு 48 மணி நேரத்திற்கு மேலாக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் பொலிசாரின் விசாரணை மீது எமக்கு திருப்தி ஏற்படவில்லை. மாறாக அவர்கள் மீது சந்தேகம் தான் வலுத்து வருகின்றது” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிலிப்பைன்ஸ் National Masters & Seniors Athletics போட்டி – 75 வயதில் வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்த அகிலத்திருநாயகி !

இவ்வாண்டிற்கான (2023) தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டி ( National Masters & Seniors Athletics) அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இலங்கை சார்பில் அகிலத்திருநாயகி கலந்துக்கொண்டு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தராவார். இவர் தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டியில் ( National Masters & Seniors Athletics) போட்டியில் பங்கேற்று 02 தங்கம் மற்றும் ஒரு வெங்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

1500m ஓட்டப்போட்டி மற்றும் 5000m விரைவு நடைப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்று 02 தங்கப் பதக்கங்களையும் 800m ஓட்டப் போட்டியில் வெங்கலப் பதக்கத்தையும் 5000m ஓட்டப் போட்டியில் பங்குப் பற்றி நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

 

மாவீரர் நினைவேந்தலை தடை செய்ய கோரிய பொலிஸார் விண்ணப்பத்தை நிராகரித்தது மல்லாகம் நீதவான் நீதிமன்றம்!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது.

 

நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நினைவேந்தல் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுஸ்டிப்பதை தடை செய்ய கோரியே காவல்துறையினர் விண்ணப்பம் செய்தனர்.

 

நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது. எதிர்மனுதாரர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதத்தை தொடர்ந்து, வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம், நினைவு கூரும் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது.

 

தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் நினைவேந்தலை நினைவுகூர முடியும் என தெரிவித்ததுடன் காவல்துறையின் தடை கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது.

 

எதிர்மனுதாரர்களின் சார்பில் வி.மணிவண்ணன் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

 

இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி கடந்த வெள்ளியன்று மல்லாகம் நீதிமன்றத்தில் மானிப்பாய் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கட்டளை நாளை (21) வழங்கப்படவுள்ளது.

“புலிகளிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பாதுகாத்ததும், துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான்” – விமலவீர திஸாநாயக்க

மகிந்தவின் புண்ணியத்தால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குகூட சுதந்திரமாக நடமாடமுடிகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளும், ஜே.விபியினரும்தான் இந்நாட்டை சீரழித்தனர். ராஜபக்சக்கள்தான் இந்நாட்டை மீட்டெடுத்தனர். அபிவிருத்தியில் புரட்சி செய்தனர். எல்லா வீதிகளும் ‘காபட்’ இடப்பட்டு புனரமைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டன. அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. பாடசாலைகள் கட்டியெழுப்பட்டன. இப்படி ராஜபக்ச யுகத்தில்தான் நாட்டுக்கு பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றன. மஹிந்த ராஜபக்சவுக்கு முன் இருந்த தலைவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை.

 

எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இருக்கவில்லை. கடவுளும் வரவில்லை.எமக்கு உயிர் தந்தது மஹிந்த ராஜபக்சதான். நாட்டை மீட்டெடுத்ததும் அவர்தான்.எனது கிராமத்தையும் பாதுகாத்து தந்தது மஹிந்ததான்.

அதனால் யார் என்ன கூறினாலும் நான் அவருக்கு சோரம்போவேன்.

தலதாமாளிகை தாக்கப்படும் போதும், எல்லை கிராமங்களில் தாக்குதல் நடக்கும்போதும் நாட்டை மீட்கயார் இருந்தது? அவ்வாறு மீட்ட மஹிந்த துரோகியா? எமக்கு மூச்சு தந்த ராஜபக்சக்கள் துரோகிகளா?

மரண பீதியுடன் வாழ்ந்தவர்களுக்கு உயிர் தந்த ராஜபக்சக்களை வீரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் துரோகிகள் ஆக்கியுள்ளனர்.

 

போர் காலத்தில் இந்த வீரர்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை.ராஜபக்சக்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோதும் நாட்டை மீட்டது ராஜபக்சக்கள்தான். கொரோனாவால் மக்கள் செத்து மடியும்போது மக்களை பாதுகாத்தது ராஜபக்சக்கள், இப்படியானவர்கள் துரோகிகளா? ராஜபக்சக்கள் இல்லாவிட்டால் நானும் ஈழத்தில்தான் வாழவேண்டி வந்திருக்கும்.

 

மஹிந்தவின் புண்ணியத்தால்தான் சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆணையிறவு, வவுனியா என எல்லா பகுதிகளிலும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான் என விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் தாக்கியதாலேயே இளைஞர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் – வெளியானது சட்ட மருத்துவ அறிக்கை!

களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.

 

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே நேற்றைய தினம் உயிரிழந்தார்.

 

சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவரே உயிரிழந்தார்.

 

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த 8ஆம் திகதி திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

 

தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் சந்தேக நபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

 

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

 

இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறைக்கவாலரின் காவலுடன் உயிரிந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

 

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டிருந்தது. உடற்கூறு பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.