December

December

பாராளுமன்ற உறுப்பினர்களின் மின் இணைப்புகளுக்கான 16 மில்லியன் ரூபா மீளப் பெறப்படவில்லை !

2022 ஆம் ஆண்டின் இறுதியில் பாராளுமன்ற பிரதிநிதிகளின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 74 மின் இணைப்புகளுக்கான 16 மில்லியன் ரூபா மீளப் பெறப்படவில்லை.

வருடாந்திர கணக்காய்வு அறிக்கை  மூலம்  இந்த தகவல் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதில் ரூ. 29 இணைப்புகள் தொடர்பான 5 மில்லியன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

மேலும் 30 இணைப்புகள் தொடர்பான 3 மில்லியன் ரூபா ஒரு வருடத்திற்கும் மேலாக மீட்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

ஜப்பானில் கட்டுமானத்துறையில் இலங்கையருக்கு புதிதாக கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் !

ஜப்பானில் கட்டுமானத்துறையில், இலங்கையருக்கு புதிதாக கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இதற்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்ச்சித் திறன் தேர்வு (01) ஆரம்பமாகவுள்ளது.

M4 பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்துகொள்ள முடியும் . இந்த தேர்வு நான்கு மத்திய நிலையங்களில் இடம்பெறுவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இதற்கமைவாக , கடந்த வருடம் முதல் நடைமுறையில் உள்ள பராமரிப்பு சேவை தொழில், உணவு பதப்படுத்துதல் . விவசாயம் ஆகிய நான்கு துறைகளுக்கான தேர்ச்சித் திறன் தேர்வு தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் பணியாற்றவிருக்கும் தொழிலாளர்களுக்கான குறிப்பிட்ட தேர்ச்சித் திறன் பரீட்சையை இன்று முதல் அறிமுகப்படுத்துவது தொடர்பாக தெளிவுபடுத்தும்,  ஊடகவியலாளர் மகாநாடு (01) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவர் (H. E. Mr. MIZUKOSHI Hideaki), JICA ஒத்துழைப்பு அமைப்பின் இலங்கைக்கான பிரிதி நிதி Mr. YAMADA Tetsuya, (Chief Representative of JICA Sri Lanka Office) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் திரு.ஏ.ஏ.ஹில்மி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்

கட்டுமானத்துறைக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக இன்று ஆரம்பமாகும் நேர்முகத்தேர்வுக்கு தகுதியானவர்கள் தோற்ற முடியும். தெரிவுசெய்யப்படுவோர் விசேட ஊழியர்களாக SSW பிரிவின் கீழ் ஜப்பானுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

ஜப்பானில் கட்டுமானத்துறையில் தற்போது பணிபுரிவோரில் பெரும்பாலானவர்கள்  இன்னும் பத்துவருடங்களில் ஓய்வுபெறவுள்ளனர். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு. அந்த நாட்டின் பல துறை தொழில்வாய்ப்புகளை இலக்காக்கொண்டு தற்போது பாடசாலை கல்வியில் ஜப்பான் மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இதன் அடிப்படையில் மாணவர்களை பயிற்றுவிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக JICA அமைப்பின் உதவியுடன் ஆசிரியர்களுக்கான ஜப்பான் மொழித் தேர்வுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜப்பானில் தற்போதுள்ள தொழில் வாய்ப்புக்களை கவனத்தில் கொள்ளும்போது,  ஜப்பான் நமக்கு இதில் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், அதிக சம்பளம் பெறும் திறன் கொண்ட SSW பிரிவின் கீழ் பராமரிப்பு சேவை , விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய துறைகளுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் இதுவரை எமக்கு இருந்தன. இதன் காரணமாக, அந்த துறைகளுக்கு மேலதிகமாக , கட்டுமானம், சுத்தம் செய்தல் மற்றும் ஆட்டோமொபைல் Automobile துறைகளிலும் எமக்கு புதிதாக தொழில் வாய்ப்புக்களை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவெனில் , பயிற்சியாளர்களைக்கொண்ட குழுவை நாம் அனுப்புகின்றோம். இதன் மூலம் அங்கு SSW பிரிவின் கீழ் அவர்கள் பணிபுரியும் துறையில் ஜப்பானிய தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் பெறும் வாய்ப்பு உண்டு.

இதேவேளை , ஜப்பானிய மொழி பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவது போன்று, வெளி நிறுவனத்தில் இருந்து ஜப்பானிய மொழியைக் கற்று வெளிநாடுகளுக்குச் செல்லும் பட்சத்தில் பணத்தை திருப்பிச் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஜப்பானிய மொழி கற்றலை மேலும் வலுப்படுத்த முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்குகிறது.

வரலாற்றில் இருந்தே இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் நெருக்கமான நல்லுறவு நிலவிவருவதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஜப்பான் எமக்கு பக்கபலமாக இருந்துவருவதாக குறிப்பிட்ட அமைச்சர், நமது நாடு வங்குரோத்து நிலைக்கு உள்ளான போது ஜப்பான் முன்வந்து உதவியது. பல துறைகளில் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பில் உதவுவதற்கு முன்வந்துள்ள ஜப்பான் சர்வதேச நாணயத்தின் நாட்டுக்கான கடன் உதவிக்கும் ஒத்துழைப்பை வழங்கிவருகிறது. இதற்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு. மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

“SSW திட்டத்தின் கீழ் ஜப்பானில் ஒழுக்கமான வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான பணிச் சூழல்” தொடர்பாக JICA ஒத்துழைப்பு அலுவலகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி (YAMADA Tetsuya, Chief Representative of JICA Sri Lanka Office) இதன்போது விளக்கமளித்தார்.

சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் இருந்த சிறுவன் தாக்கி கொல்லப்பட்ட விவகாரம் – பிரேதப் பெட்டியுடன் மக்கள் போராட்டம் !

கல்முனையிலுள்ள சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனொருவன் பெண் பராமரிப்பாளர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இந்நிலையில் நேற்று மாலை குறித்த சிறுவனின் பிரேதப்பெட்டியுடன் ஊர்வலமாக வந்த மக்கள் கொக்குவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பிரேதப் பெட்டியை வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ”பொலிஸார் முறையான பாதுகாப்பு வழங்காதமையே  சிறுவன் உயிரிழந்தமைக்குக்  காரணம் ” என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.

அரச வங்கியில் பெற்ற 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தாத வர்த்தகர்கள் !

இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தத் தவறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

அரசியல் பாதுகாப்பு பெறும் அந்த பத்து வாடிக்கையாளர்களை நாட்டிற்கு வெளிப்படுத்த பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் நேற்று (02) நடைபெற்ற மாநாட்டில் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்,

“இந்த வங்கிகள் நாட்டின் மறுமுனையில் உள்ள விவசாயிகள் முதல் கொழும்பில் உள்ள பெரிய வியாபாரிகள் வரை கடன் கொடுத்துள்ளன. கடனை செலுத்துவது கடன் வாங்கியவரின் பொறுப்பு.

ஆனால் சிறப்பாக வர்த்தகம் செய்து அரசியல் பாதுகாப்பு பெற்று 10 பேர் தாம் ஈட்டிய பணத்தை வெளிநாடுகளில் வைப்பு செய்து இந்த இரண்டு வங்கிகளையும் புறக்கணித்து வருகின்றனர். இந்த வங்கிகளில் இலங்கை வங்கிக்கு மட்டும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை 50 பில்லியன் என்பதோடு, மக்கள் வங்கிக்கு 30 பில்லியன் கடன் செலுத்த வேண்டும்.  வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை கொண்டு வரும் பெருமக்களே இந்த  பணத்தை வசூலியுங்கள். இது மக்களின் பணம். முடிந்தால் அந்த 10 பேரின் பெயர்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துங்கள். இல்லையென்றால் இந்த நாட்டின், பொது நலனுக்காக நாம் அதனை வெளிப்படுத்துவோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்”என்றார்.

அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் – அனுரகுமார திசநாயக்க

அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் கலாச்சாரத்தை உருவாக்குவேன் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் அரசியல்வாதிகள் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் மக்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை பார்த்திருப்பீர்கள் எங்களுக்கு அவ்வாறான அரசியல் கலாச்சாரம் இங்கு தேவையா என கேள்வி எழுப்பியுள்ள அவர் நாங்கள் அந்த மாற்றத்தை அரசியல்கலாச்சாரத்தை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை பொறுப்பேற்பதற்கான பொருளாதாரத்திற்கு புத்துயுர்கொடுப்பதற்கான துணிச்சல் எங்களுக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ஆலோசகர்களாக பணியாற்றும் பதினைந்து பேருக்கான மாதாந்த செலவு 22 இலட்சம் ரூபா !

ஜனாதிபதி ஆலோசகர்களாக பணியாற்றும் பதினைந்து பேருக்கான மாதாந்த செலவு இருபத்தி இரண்டு இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுப்பனவுகள் உட்பட இவ்வாறு செலுத்தப்பட்ட தொகை இருபத்தி ஒரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தேழு ரூபாயாகும்.

பொருளாதார நிலைப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியன தொடர்பான ஆலோசகருக்கு மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். ஊடகம் மற்றும் தொடர்பாடல் ஆலோசகருக்கு இரண்டு இலட்சத்து பதின்மூன்றாயிரம் ரூபாவும், விஞ்ஞான விவகார ஆலோசகருக்கு ஒரு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது. இதில் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு பெண் உறுப்பினரும் அடங்குவர். இந்த மூவருக்கும் எம்.பி.யின் ஓய்வூதியம் உண்டு.

ஜனாதிபதியின் ஆலோசகர்களின் எண்ணிக்கை இருபத்தி மூன்று மற்றும் அவர்களில் எட்டு பேர் சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் இல்லாமல் சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கையில் நாளொன்றுக்கு 938 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் உற்பத்தி – 4 வீதம் மாத்திரமே மீள்சுழற்சிக்கு உள்ளாகின்றன !

நாளொன்றுக்கு சராசரியாக 938 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில், அவற்றில் 32 சதவீதம் மாத்திரமே மீள சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் 4 வீதம் மாத்திரமே இயந்திரங்களின் ஊடாக மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படாத பிளாஸ்டிக், கழிவுப்பொருளாக சூழலில் விடுவிக்கப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும்போது தொழில்துறையின் தேவைக்கேற்ற வகையில் அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்தது.

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் அஜித் மான்னப்பெரும தலைமையில் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

வருடாந்தம் இலங்கைக்கு 4 இலட்சம் மெற்றிக் தொன் பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், வருடாந்தம் 20,000 மெற்றிக் தொன் கழிவுப் பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றமை இங்கு புலப்பட்டது.

கடந்த வருடத்தில் 20,000 மெற்றிக் தொன் கழிவுப் பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், தொழில்துறையினால் 5,179 மெற்றிக் தொன் கழிவுப் பிளாஸ்டிக் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது.

எனவே, இவ்வாறான அனுமதியை வழங்கும்போது தொழில்துறையினரின் தேவையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் அனுமதியை வழங்குமாறும், குறிப்பிட்ட 5 ஆண்டுகளுக்குள் கொண்டு வரப்படும் பிளாஸ்டிக்கை சேகரிப்பதற்கான கட்டமைப்பை தயாரிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் சராசரியாக நாளொன்றுக்கு 938 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் 32 வீதம் மாத்திரமே மீள சேகரிக்கப்படுவதாகவும், இவ்வாறு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் 4 வீதம் மாத்திரமே இயந்திரங்களின் ஊடாக மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது.

மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படாத பிளாஸ்டிக், கழிவுப் பொருளாக சூழலில் காணப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மீள்சுழற்சிக்கான பிளாஸ்டிக்கை சேகரிப்பதில் காணப்படும் அதிக செலவீனம் காரணமாக அதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பிளாஸ்டிக் சேகரிப்புக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவை அதிகரிப்பதன் ஊடாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என குழுவின் தலைவர் தெரிவித்தார். அத்துடன் உத்தேச சுற்றாடல் சட்டமூல வரைபை விரைவில் நிறைவு செய்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

காசா பகுதியில் அகதி முகாமை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – குழந்தைகள் உட்பட 13 பேர் பலி !

மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள பல வீடுகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சனிக்கிழமை இரவு இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் அகதிகள் முகாமில் உள்ள அசார் மற்றும் ஜாகவுட் குடும்பங்களின் குடியிருப்புகள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தபட்சம் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

 

காயமடைந்தவர்கள் காசாவின் மத்திய மாகாணத்தில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உள்ளனர்.

நுசிராத் அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு மேலதிகமாக இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா நகரில் உள்ள அல்-ஜலா வீதியில் உள்ள மக்களின் குடியிருப்பு பகுதியிலும் தாக்குதலை மேற்கொண்டன.இங்கும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் இரண்டும் பதிவாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஒக்டோபர் 7 ம் திகதி காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து, 6,500 குழந்தைகள் மற்றும் 4,500 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 16,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 38,000 பேர் காயமடைந்துள்ளனர்.

போலி ஸ்டிக்கர்களை சரிபார்த்ததால் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரிப்பு !

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சரிபார்த்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிபருக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் ஆகியோர் அந்தக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டதுடன், மதுவரி சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியமும், எழுமாறான சோதனைகள் தொடர்வதும் மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்களை ஒட்டுவதை மேலும் குறைக்கும் என அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

R.A.M.I.S அமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், ஏனைய அரச நிறுவனங்களுடன் இந்த அமைப்பை இணைப்பதன் தற்போதைய நிலை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த தரவு முறைமை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் செயற்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் அறிவித்துள்ளனர்.

தற்போதுள்ள 07 இலட்சம் வரி ஆவணங்களை எதிர்வரும் காலங்களில் 10 இலட்சம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மனித – யானை மோதலில் கடந்த ஆண்டு 433 யானைகள் பலி !

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி, மனித – யானை மோதலால் கடந்த ஆண்டு 433 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டு யானை – மனித மோதலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு குழுவின் தலைவரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் மான்னப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார்.