December

December

மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை மேற்காள்ள தனியான நிறுவனம் – இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல

2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஏனைய சர்ச்சைக்குரிய விடயங்களைத் தடுக்க வழி ஏற்படும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

மேலும், சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சுகாதார அமைச்சின் மனித வளங்கள், சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல,

தற்போது, நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்குத் தேவையான தரமான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

தற்போதைய பொருளாதார நிலை காரணமாக சிகிச்சை மற்றும் பராமரிப்பு பணிகளில் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றைத் தவிர்த்து, அடுத்த ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளைக் கொண்டு எதிர்வரும் வருடத்தில் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், சுகாதார அமைச்சில் பல கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். கடந்த வாரம் சில மாற்றங்களைச் செய்தோம். அடுத்த வாரத்திலும் இதுபோன்ற சில மாற்றங்களைச் செய்ய தயாராக இருக்கிறோம்.

மேலும், மனித வளங்கள், சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் மாற்றங்களைச் செய்யவும் எதிர்பார்க்கிறோம். மருந்துக் கொள்வனவு செயல்முறையிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக, மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பான விசேட வழிகாட்டுதல்களை வெளியிடுதல் மற்றும் அதற்கென தனியான நிறுவனமொன்றை ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மருந்து இறக்குமதியின் போது இடம்பெறும் ஊழல், முறைகேடுகள் மற்றும் பிற சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தவிர்க்க முடியும்.

நாட்டில் உள்ள மருந்துகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்தல், அவற்றை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் பணியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறையில் தாக்கம் செலுத்தும் மனித வள மேலாண்மைக்காக பிரபலமற்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்காக, பதவிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த ஒவ்வொரு மாற்றங்களுடனும், தற்போது மருந்துகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராகி வருகிறோம். அனைவருக்கும் ஒரே மாதிரியான சுகாதார சேவையை எவ்வாறு வழங்குவது ((Universal Health Coverage)) மற்றும் (Social protection) சமூகப் பாதுகாப்பு வழங்குவது குறித்து உலகில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் சுகாதார அமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது.

மேலும், தற்போது பெய்து வரும் மழையால் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகிறது. சுகாதார குழுக்களின் முயற்சிகளினால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோய் இறப்பு விகிதத்தை குறைக்க முடிந்தது.“ என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல மேலும் தெரிவித்தார்.

வெளியான O/L பெறுபேறுகள் அடிப்படையில் தென் மாகாணம் முதலிடம்!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் முக்கியமான அறிவிப்பொன்றினை விடுத்துள்ளார்.

 

அவ்வகையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் சாதகமான வளர்ச்சி காணப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சித்தியடைந்தோர் வீதம் மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 473,014 ஆகும். இவர்களில் 394,878 பாடசாலை ஊடாக விண்ணப்பித்தவர்கள், மற்றும் 78,136 தனியார் விண்ணப்பதாரர்கள்.

 

மொத்த விண்ணப்பதாரர்களில் 428,299 பேர் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன், சித்தியடைந்தோர் தொடர்பிலான 90.54% வீதமானது மிகவும் சாதகமான நிலைமையாகும்.

 

இந்த வருட பொதுப் பரீட்சையின் பெறுபேறுகளை மாகாண ரீதியில் பகுப்பாய்வு செய்யும் போது 4 மாகாணங்கள் முன்னிலை பெற்றுள்ளதுடன் முதலிடத்தை தென் மாகாணம் பெற்றுள்ளது. இது 77.57% வீதமாக வீதமாக காணப்படுகிறது.

 

இரண்டாவது இடத்தில் 75.10% வீத சித்தி நிலையுடன் சப்ரகமுவ மாகாணமும், மூன்றாவது இடத்தினை 74.92% வீதத்துடன் மேல் மாகாணமும், நான்காவது இடத்தினை 74.50% வீதத்துடன் வடமேற்கு மாகாணமும் பெற்றுள்ளன.

உயர்தர கல்வி மேலும், உயர்தர வகுப்பில் கல்வியை தொடர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த சதவீதம் படிப்படியாக அதிகரித்துள்ளது.

 

2014 இல் 69.02% ஆகவும், 2015 இல் 69.33% ஆகவும், 2016 இல் 69.4% ஆகவும், 2017 இல் 73.05% ஆகவும், 2018 இல் 75.09% ஆகவும், 2018 இல் 73.84% ஆகவும், 2018 இல் 73.84% ஆகவும், 2018 இல் 76.59% ஆகவும், 2015 இல் 76.59% ஆகவும், 74.59% ஆகவும் உள்ளது.

 

 

இந்நிலையில், மிகவும் துல்லியமான பெறுபேறுகளை வழங்குவதற்கு கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இரவும் பகலும் கடுமையாக உழைத்துள்ளனர்.

 

 

மேலும், பெறுபேறுகள் வெளியாகும் வரை பரீட்சைக்கு வெற்றிகரமாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.” என வலியுறுத்தியுள்ளார்.

தமிழர், முஸ்லீம் மட்டுமே என்பதாலா கிழக்கு சதொச கிளைகள் மூடப்பட்டன..? – நாடாளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் கேள்வி !

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

 

நேற்றைய தினம் (01) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

 

“நான் கைத்தொழில் வர்த்தக அமைச்சைப் பொறுபேற்ற போது 275 சதொச கிளைகளே இயங்கின. எனது பதவிக்காலத்தில் அவற்றை 400 ஆக அதிகரித்து, இந்த நிறுவனத்தை இலாபகரமானதாக ஆக்கினேன். கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் இயங்கிய சதொச கிளைகள் திட்டமிட்டு மூடப்பட்டன. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். 35௦௦௦ ரூபா சம்பளத்தில் இவர்கள் வெளிமாவட்டங்களில் எவ்வாறு பணிபுரிய முடியும்? தமிழ், முஸ்லிம் என்பதனாலா இவர்கள் இவ்வாறு பழிவாங்கப்படுகின்றனர்? எனவே, மூடப்பட்டுள்ள சதொச கிளைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

 

இதற்கு பதிலளித்த வர்த்தக வாணிப அமைச்சர் ரமேஷ் பத்திரன, “நீங்கள் சொல்வது முற்றிலும் சாதாரணமானதும் நியாயமானதும் கூட. இருப்பினும், நிறுவனத்தின் இலாபத்தையும் கருத்திற்கொண்டு, அவற்றை மீளத் திறக்க நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 25, 27 ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதில் அரசாங்கமே நினைவு கூறலாம் என தெரிவித்துவிட்டு வடக்கு கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிசார் முயற்சி எடுத்து போது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவு கூறுவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அதேவேளை விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் அந்த நினைவேந்தல் நடைபெறமுடியும் எனவும் கட்டளை வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் அந்த நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ் மக்கள் நியாயமில்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாது நடந்து கொண்ட போதும் அவர்கள் மீது குறிவைக்கப்படுகின்றது.

 

இதனை தமிழத் தேசிய மக்கள் முன்னணியாக கடுமையாக எதிர்க்கின்றோம்.

 

இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாது நாங்கள் இதை எதிர்நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இதனை எதிர்கொள்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகரித்த போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் அதிகரித்த எய்ட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையால் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு ஆண்டும் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாகக் கூடிக் கொண்டே போகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது பெருமளவான போதைப்பொருள் பாவனையாளர்கள் இரத்த நாளங்களின் ஊடாக உடலில் போதைப்பொருளை ஏற்றிக்கொள்கின்றார்கள். அதனால் எயிட்ஸ் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.

 

சாதாரண ஒரு ஸ்ரிஞ் மூலம் ஒரு ஊசியை பலர் பாவிப்பதால் ஒருவருக்கு எயிட்ஸ் தொற்று இருந்தால், அதனை பாவிக்கும் மற்றவருக்கும் தொற்றக்கூடிய சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகின்றது.

 

இலங்கையில் தற்போது 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதிலே வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 90 பேர் இன்று வரைக்கும் எச்ஐவி தொற்று உள்ளவர்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள்.

அதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சுமார் 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

O/L பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கான மாதம் 6000 ரூபா கொடுப்பனவு திட்டம் – விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

 

அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் இன்று (01) ஆரம்பிக்கப்பட்டது.

 

அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது.

 

கடந்த வருடத்தில் 3000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தினால் புலைமைப் பரிசில் வழங்கப்பட்டது.

 

2022 (2023) ஆண்டில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரப் பயில்வதற்கு தகுதிபெற்றிருப்பது, அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்பது, குடும்ப மாத வருமானம் 100,000 ரூபாவிற்கு குறைவாக இருப்பது இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது.

 

இந்த புலைமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி செலயகம் presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையதளங்களில் தறவிறக்கம் செய்யலாம்.

 

அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதாரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது.

இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் தொற்று – ஒரே வருடத்தில் 43 பேர் பலி !

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.

 

தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல் 427 நோயாளிகளைக் கண்ட 2022 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவிகித அதிகரிப்பை இது பிரதிபலிக்கிறது.

 

செப்டெம்பர் வரை பதிவான எயிட்ஸ் நோயாளர்களில் , 72 ஆண்களும் ஏழு பெண்களும் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள், மீதமுள்ள எயிட்ஸ் நோயாளர்களில் 25 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்.

 

2023 இல் பதிவாகியுள்ள எச்.ஐ.வி நோயாளர்களில் ஆண்-பெண் விகிதம் 8.7:1 ஆக உள்ளது.

 

இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 2009 முதல் ஒரே காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

மேலும், 2023 இல் இதுவரை எய்ட்ஸ் தொடர்பான 43 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, இலங்கையில் உத்தியோகபூர்வமாக திருநங்கைகள் மத்தியில் 10 எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் , 2009 முதல் இதுவரை மொத்தம் 4,095 ஆண்களும் 1,391 பெண்களும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது – அமெரிக்கா

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுவதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

 

ஆகவே கருத்து சுதந்திரத்தையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியாவில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை!

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் உள்ளனர் எனவும் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் வவுனியா பொதுய் வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமதி அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச எய்ட்ஸ் தினமான இன்று (01.) வவுனியா பொது வைத்தியசாலையில் பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”சமூகத்தை வலுப்படுத்துவோம்- எய்ட்ஸ் தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் 35 ஆவது எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை எச்.ஐ.வி நோய் பரவல் குறைந்த நாடாகவே கருதப்படுகின்றது. இங்குள்ள சனத்தொகை அடிப்படையில் 0.1 வீதத்துக்கு குறைவானவர்களே தொற்றுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இதில் 86 விதமான எச்.ஐ.வி தொற்று பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் ஏற்படுகின்றது. ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடிய அளவில் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பாக 52 வீதமாக காணப்படுகின்றார்கள்.

 

வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் 2002 ஆம் ஆண்டு முதல் 33 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 19 ஆண்களும் 13 பெண்களும் அடங்குகின்றனர். இதில் 12 பேர் இறந்துள்ளார்கள். தற்போது வவுனியாவில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் சிகிச்சை சுகதேகிகளாக உள்ளனர். இவர்களில் 12 ஆண்களும், 09 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வருடம் 2 பேர் அடையாளங்கள் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் ஆண்களாக காணப்படுகின்றனர்.

 

2030ல் எயிட்ஸ் முடிவுக்கு கொண்டுவரும் மகத்தான இலக்கை நோக்கிய முதலாவது படியாக எச்.ஐ.வி பரிசோதனை உள்ளது. இந்த பரிசோதனையை இலங்கையில் உள்ள அனைத்து எஸ்டிடி சிகிச்சை நிலையங்களிலும் இலவசமாக செய்ய முடியும். அதன் முடிவுகள் இரகசியமாகவும் பேணப்படும்” இவ்வாறு அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிராமங்களில் அதிகரிக்கும் நுண்நிதி கடன்களுடன் தொடர்புடைய கடன் சுமை – பாலியல் இலஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்படும் பெண்கள்!

கிராமப்புறங்களில் பெண்களை வீட்டுத் தலைவியாகக் கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் முறைசாரா நுண்நிதி கடன் நிறுவனங்களிடம் சிக்கொண்டுள்ளன. இந்தக் கடனை அடைக்க முடியாத போது பாலியல் இலஞ்சம் பெறும் நிலைக்கு ஆளாகுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

ஆய்வுகளின் பிரகாரம் கிராமப்புற மக்களில் பெண்களை வீட்டுத் தலைவியாகக் கொண்ட பெரும்பாலான குடும்பங்கள் முறைசாரா நுண்நிதி கடன்களுடன் தொடர்புடைய கடன் சுமை காரணமாக காதணிகளைக் கூட அடகு வைத்து வருகின்றனர்.

 

நாட்டில் தற்போது 11,000 நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. கிராமங்களில் ‘படுக்கைக் கடன்’ என்று அழைக்கப்படும் இந்தக் கடனை அடைக்க முடியாத போது,பாலியல் இலஞ்சம் பெறும் நிலை காணப்படுகிறது.

 

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளதன் பிரகாரம்,கடந்த மாதம் 15 வயதுக்குட்பட்ட 169 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதோடு,அதில் 26 சிறுவர்கள் கர்ப்பமடைந்துள்ளனர்.

 

அத்துடன் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்கள் தடுப்பு பணியகத்தின் அறிக்கையின் படி, கடந்த 9 மாதங்களில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

மேலும் 1086 பாலியல் வன்கொடுமைகள்,கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் 425 பதிவாகியுள்ளன. இந்நிலையில் இருந்து சிறுவர் தலைமுறையை பாதுகாக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

 

அத்துடன் இதுவரை 2000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு 533858 பேர் வேலை இழந்துள்ளனர். 20 சதவீத ஆடைத் தொழிற்சாலைகள் மூன்று மாதங்களுக்குள் மூடப்பட்டுள்ளன. இதில் 10 நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்கி ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.இதனால் அவர்களது குடும்ப நலன் நடவடிக்கைகள் கூட முடங்கியுள்ளன. வேலையிழந்ததால் பெண்கள் வேறு வழிகளில் பணத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

மேலும் பொருளாதார நெருக்கடியை படிப்படியாக தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும்,சாதாரண மக்களைப் பார்க்கும் போது அவர்களின் பரிதாப நிலை குறையவில்லை. பொருளாதார நெருக்கடியால் பெண்கள் மற்றும் சிறுவர்களே நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2023 மே மாதத்திற்குள் 39 இலட்சம் பேர் மிதமான உணவுப் பாதுகாப்பின்றிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷாவில் கூட அப்ளாடோக்சின் என்ற நச்சு இரசாயனம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

அண்மையில் சுகாதார அமைச்சு,”தேசிய போஷாக்குக் கொள்கை 2021-2030” பத்தாண்டு கொள்கையை வெளியிட்டது. இதனை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் என்ன என கேட்கிறோம். ,2023 இல் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தால் வெளியிடப்பட்ட Understanding Multidimensional Vulnerability Impact on People of Sri Lanka குறியீட்டின் பிரகாரம், இலங்கை 0.026A தரப்படுத்தல் நிலையில் உள்ளது,10 பேரில் 6 பேர் பன்முக ஆபத்தில் உள்ளனர். இது மொத்த சனத்தொகையில் 55.7 வீதமாகும் என்றார்.