December

December

யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் – குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு!

அண்மையில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்து அவரது குடும்பத்தினரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 

கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவியே கடந்த 23 ஆம் திகதி உயிரிழந்தார்.

 

இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து குறித்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவுக்கு ஆதரவாக உஸ்மான் கவாஜாவின் விழிப்புணர்வுக்கான கோரிக்கை – நிராகரித்தது ICC !

காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றைய போட்டியில் தனது கிரிக்கெட் மட்டை மற்றும் காலணிகளில் ஆலிவ் கிளை மற்றும் புறாவை காட்சிப்படுத்த வேண்டும் என்ற உஸ்மான் கவாஜாவின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

 

அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது, காசா மக்களுக்கு ஆதரவாக அவர் கையில் கருப்பு பட்டியை அணிந்திருந்தார்.

 

மேலும் பயிற்சியின் போது அவர் தனது காலணிகளில், ‘எல்லா உயிர்களும் சமம்’ மற்றும் ‘சுதந்திரம் ஒரு மனித உரிமை’ போன்ற என்ற வாசகத்தை வைத்திருந்தார்.

 

இந்த நடவடிக்கைக்காக கவாஜா ஐசிசி.யால் எச்சரிக்கப்பட்டிருந்தார்.

 

மேலும் அவர் கருப்புக் பட்டி அணிந்தமை மற்றும் உபகரணங்களில் வைத்திருந்த வாசகங்கள் ஐசிசி விதிமுறைகளை மீறுவதாகக் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பின் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் பணயக் கைதிகள் சடலமாக மீட்பு !

ஹமாஸ் அமைப்பினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களான இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை இஸ்ரேல் படையினர் சடலமாக மீட்டுள்ளனர்.

காசாவில் ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களை பாதுகாப்புப்படையினர் இஸ்ரேலுக்கு கொண்டு சென்றனர்.

காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உலக ஊழல் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் – பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் கவலை !

உலகில் ஊழலில் இலங்கை முதலிடத்தில் இருப்பது வருத்தமளிப்பதாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தெரிவித்துள்ளார்.

கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற பிரதான நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தனது நத்தார் ஆராதனை உரையில் மேலும் தெரிவிக்கையில்,

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் சட்டத்தையும் புறக்கணிக்கும் மோசடியின் கைக்குள் நாடு வீழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கம் கிடைத்துள்ளதால் இந்த நாடு ஊழலிலிருந்து விடுபடும் நாள் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என கர்தினால் மேலும் தெரிவித்தார்.

 

 

14 வயது சிறுமியை காதலித்ததற்காக 16 வயது சிறு வயது பிக்கு கைது !

14 வயதான சிறுமியுடன் காதல்வயப்பட்ட 16 வயதான பிக்கு, அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவரை, ஜனவரி 4ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நத்தாரைக் கொண்டாட பணம் இல்லை – ஐந்து பிள்ளைகளின் தந்தை தற்கொலை முயற்சி!

நத்தாரைக் கொண்டாட பணம் இல்லாததால் 5 பிள்ளைகளின் தந்தையொருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நேற்றிரவு 11 மணியளவில் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ள நிலையில் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்த குற்றச் சாட்டில் குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அல்-மகாஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 70 பேர் வரை பலி !

காசாவின் அல்-மகாஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில், சுமார் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

 

இதேவேளை அந்த பகுதியில் அதிகளவான குடும்பங்கள் வசித்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மேலும் பலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மக்கள் அடர்த்தியான குடியிருப்பு தொகுதி அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் பேச்சாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரவித்துள்ளார்.

 

குறித்த தாக்குதலால் மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது.

அத்துடன் மக்கள் அடர்த்தியான குடியிருப்பு தொகுதி அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் பேச்சாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரவித்துள்ளார்.

 

குறித்த தாக்குதலால் மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுவதாகவும் அறிய முடிகிறது.

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது – இரா.சம்பந்தன்

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அதிகாரப்பகிர்வை நோக்கிய செயற்பாட்டில் தொடர்ந்தும் பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது, புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு விடயங்களை ஒரு வருட கால அவகாசத்துக்குள் முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், கருத்து வெளியிடும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் நீண்டகாலமாக இனப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்றை வலியுறுத்தி வருகிறார்கள். அவர்கள் அதற்காக தொடர்ச்சியாக தமது ஆணையை வழங்கியும் வருகின்றார்கள்.

 

அந்த வகையில், ஆட்சியாளர்கள் இனப் பிரச்சினைக்கான தீர்வினை தொடர்ந்தும் காலம் கடத்திச் செல்ல முடியாது. அவர்கள் தீர்வினை வழங்குவதிலிருந்து விலகி நிற்கவே முடியாது.

 

தமிழ் மக்கள் தங்களுடைய கருமங்களை தாங்களே ஆற்றும் வகையில் சுய நிர்ணய அடிப்படையில், சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் மீளப் பெற முடியாத வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவது நோக்கி நாம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள இணையம் மூலமான பண மோசடி – யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத்

விளம்பரங்களின் மூலம் பல லட்சம் ரூபா மோசடிஇடம்பெறுவதாக யாழ். மாவட்டத்தில் பலர்முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர் என யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.

இணையம் ஊடாக பணம் உழைக்கலாம் என்று ஆசைகாட்டி யாழ்ப்பாணத்தில் சுமார் பல லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள் தற்போது பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.

 

இணையத்தின் ஊடாகப் பணம் உழைக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான விளம்பரங்களை நம்பியே இவர்கள் பணத்தை இழந்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம், கோப்பாய் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விளம்பரத்தை நம்பி 30 லட்சம் ரூபா, 16 லட்சம் ரூபா என அவர்கள் இழந்துள்ளனர்.

 

விளம்பரம் மூலம் தொடர்பு கொள்வோர், சிறு தொகையை முதலீடு செய்யக் கூறுவார்கள். அந்தத் தொகையை அனுப்பியதும் ஒரு சிறிய வேலை (டாஸ்க்) ஒன்று கொடுக்கப்படும். அதைச் செய்ததும் அவர்கள் வைப்பிலிட்ட பணத்தை விடவும் அதிக பணம் மீண்டும் வழங்கப்படும்.

 

இது சிறிதுகாலம் தொடர, இதன்மூலம் பணம் ஈட்டலாம் என்ற நம்பிக்கை ஏற்படும்போது, மெல்ல மெல்ல பெரிய தொகைகளை முதலீடக் கூறுவார்கள். பணத்தை மீளப் பெறலாம் என்ற நம்பிக்கையில் இங்குள்ளவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்யும்போது, பணத்தைச் சுருட்டிக்கொண்டு அவர்கள் காணாமல் போகின்றனர். யாழ். மாவட்டத்தில் மட்டும் இவ்வாறு பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

 

இது தொடர்பாக யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்ததாவது-

 

இவ்வாறான மோசடிகள் தற்போது அதிகம் நடக்கின்றன. மோசடியாளர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமே மக்களைக் குறிவைக்கின்றனர். இந்த மோசடிகளில் சிக்கிப் பலர் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறான விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் – என்றார்.

சிறிய மீன்களை பிடித்ததன் பின்னர், பாரிய மீன்களை இலகுவாக எம்மால் கண்டுபிடிக்க முடியும். – தொடர் கைதுகள் தொடர்பில் தேசபந்து தென்னக்கோன் !

சிறிய மீன்களை பிடித்ததன் பின்னர், பாரிய மீன்களை இலகுவாக எம்மால் கண்டுபிடிக்க முடியும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், குற்றங்கள் பாரியளவில் குறைவடைந்துள்ளது, தற்போதைய சுற்றிவளைப்புகளை விஸ்தரிக்கும் பட்சத்தில் 6 மாதங்களில் குற்றங்களை 50 வீதமாக குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

பாரியளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், நெத்தலிகளே கைது செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அந்த கருத்தில் ஒரு உண்மையும் இருக்கிறது. நெத்தலிகள் போதைப்பொருளுடன் வீதிக்கு இறங்கும்போதே அவர்களை கைது செய்ய காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்கின்றனர்.

 

அவர்களை அவ்வாறே விட்டுச் செல்ல முடியாதல்லவா? போதைப்பொருள் பாவனையாளர்களும் போதைப்பொருள் வர்த்தகர்களும் இருவேறு தரப்பினர் அல்ல.

 

 

கடந்த 17ஆம் திகதியின் பின்னரும் அதற்கு முன்னரும் உள்ள நிலைமையும் நான் அவதானித்தேன். நாம் கண்டறிந்துள்ள 1,091 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் முழு நாட்டிலும் இருக்கின்றனர்.

இவர்கள் காலையில் குற்றங்களை செய்துவிட்டு இரவில் போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்கிறார்கள்.

காலையில் கொலை செய்துவிட்டு இரவில் வெளிநாட்டுக்கு செல்லும் முறைமை ஜனவரியிலிருந்து மாற்றமடையும்.

 

ஜனவரி மாதம் அவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள். மேலும், 31 பாதாள குழு உறுப்பினர்கள் சிறைச்சாலையில் இருந்து குற்றங்களை வழிநடத்துகின்றனர்.

 

 

இவர்களையும் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாதாரண மக்களுக்கு எதிராகவோ அல்லது காவல்துறையினருக்க எதிராகவோ பாதாளக் குழு உறுப்பினர்கள் ஆயுதங்களை ஏந்தி செயல்படும்போது அவர்களுக்கு காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் தகுந்த பாடம் புகட்டப்படும்.” என்றார்.