December

December

“இது எங்களுடைய போர் மட்டுமல்ல. அமெரிக்காவின் போரும் கூட” – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இது எங்களுடைய போர் மட்டுமின்றி, பல வழிகளில் உங்களுடைய போரும் கூட என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பு, கடந்த ஒக்டோபர் 7 ந் திகதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. பெண்கள், முதியவர்கள் என பலரையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது. 200-க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டினுடன் இணைந்து கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

அப்போது, இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்காக தனது நன்றியை தெரிவித்து கொண்டார். தொடர்ந்து அவர் கூறும்போது,

“காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான நாகரீகத்தின் போரை நாங்கள் நடத்தி கொண்டிருக்கிறோம். நாங்கள் எப்போது பேசுகிறோமோ அப்போது, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றியை பெற வேண்டும் என்ற எங்களுடைய ஈடுபாட்டை நான் மீண்டும் வெளிப்படுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இது எங்களுடைய போர் மட்டுமின்றி, பல வழிகளில் உங்களுடைய போரும் கூட என நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில், உலகில் நாகரீகத்தின் சக்தியை நீங்கள் வழிநடத்தி செல்கிறீர்கள் என்று அமெரிக்காவை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

“வடக்கு கிழக்கில் மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாணசபைகளை  ஏற்படுத்த ரணில் தயாரில்லை .” – மனோ கணேசன்

“வடக்கு கிழக்கில் மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாணசபைகளை  ஏற்படுத்த ரணில் தயாரில்லை .” என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் அறிக்கையொன்றில் மேலும் கூறியதாவது,

உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, அழைத்து ஜனாதிபதி ரணில் பேசுவது நல்லதே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் உள்நாட்டில் தமிழருக்கு தொடர்ந்து தவறான சமிக்ஞைகளை தருகிறார். இதில் ஒன்று, மக்களுடன் எந்தவித நேரடி தொடர்புகளும் இல்லாத அமைச்சர் டிரான் அலசின் பேச்சை கேட்டு, எனது தொகுதி கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவுகளை ஆரம்பித்துள்ளமை ஆகும்.

இரண்டாவது, வடக்கு கிழக்கிலாவாது மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாணசபைகளை  ஏற்படுத்த ரணில் தயாரில்லை என்பதாகும். மூன்றாவது, பாதிட்டில் ரணில் உறுதியளித்த, மலைநாட்டில் 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாமையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்த வாரம் அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து மூன்று விடயங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி கோரிக்கை விடுத்தேன்.

தற்போது ஜனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பு சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளுக்கு மேலதிகமாக, உங்கள் அமைச்சர் டிரான் அலசின் பொலிஸ்காரர்களை தமிழர்களின் வீடுகளுக்கு சிங்களம் மட்டும் படிவங்களுடன் அனுப்பி, சிவில் அதிகாரிகள் செய்யும் வேலைகளை செய்து, எனது தொகுதி கொழும்பில் வாழும் தமிழர் மத்தியில் தேவையற்ற பதட்டங்களை ஏன் ஏற்படுத்துக்கிறீர்கள்?

குறைந்தபட்சம் உடனடியாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலாவது மாகாணசபை தேர்தல்களை நடத்தி, அங்கே முதற்கட்டமாக மாகாணசபை  நிர்வாகங்களை ஏற்படுத்தலாம். அதை ஏன் இழு, இழு என்று இழுத்துகொண்டே போகிறீர்கள்?

மலைநாட்டு பெருந்தோட்டங்களில், நீங்கள் பாதிட்டில் உறுதியளித்த 10 பேர்ச் காணி துண்டுகளை, பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கலாம்.

இந்திய, இலங்கை வீடமைப்பு திட்டங்களின் வீடு கட்டும் பணிகள், அரச நிர்வாக கட்டமைப்புகளின் ஊடாக நடைமுறையாக தாமதம் ஆகும். ஆகவே காணி வழங்களுக்காக நீங்கள் ஒதுக்கிக்கொண்டுள்ள 400 கோடி ரூபாயை பயன்படுத்தி, காணிகளை பிரித்து வழங்கலாம். ஆனால், இந்த 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் கூற வேண்டும். அல்லது அவருடன் கூட்டு குடித்தனம் செய்கின்றவர்கள் பதில் கூற வேண்டும். இவை தொடர்பில் கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கா, இந்தியா, சுவிஸ், நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ், தென்னாபிரிக்கா, இத்தாலி நாடுகளின் தூதுவர்களும் ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளின் துணை தூதர்களும், முதன்மை அதிகாரிகளும் கலந்துக்கொண்ட நிகழ்விலும் அவர்களுக்கு விளக்கமாக நான் எடுத்து கூறி இருந்தேன்.

வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கு – யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்., வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண விசாரணை தொடர்பான கட்டளை எதிர்வரும் ஜனவரி 2ம் திகதி வழங்கப்படவுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன், பொலிஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிஸார் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர் சாட்சியம் வழங்கினர்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த முன்னர் உயிரிழந்தவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெல்லிப்பழை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரை அனுமதித்தமை தொடர்பான மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அவர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கில் உயிரிழந்த இளைஞன் சார்பில் பெருமளவான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

தனியார் மயமாகும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் – போராட்டத்தில் ஊழியர்கள் !

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவன ஊழியர்கள் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் ஒன்று திரண்டு இன்று செவ்வாய்க்கிழமை (19) மதிய நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்துகின்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதலுக்கு எதிராகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை நிறுத்து , தேசிய வளங்களை விற்பதை நிறுத்து, பொருளாதாரத்தினை மேம்படுத்துவதாகக் கூறி நாட்டின் வளங்களை விற்பனை செய்வதற்கு இடமளிக்க முடியாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக  கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற இலங்கை புலம்பெயர் மக்களுடன்  இணைந்து செயற்பட தயார் – பிரதமர்  தினேஷ் குணவர்த்தன

சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற இலங்கை புலம்பெயர் மக்களுடன்  இணைந்து செயற்படுவதற்கும்  அவர்களது பங்களிப்பை  இலங்கையின் வளர்ச்சிக்கு பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்று பிரதமர்  தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

கடந்தவாரம் முழுவதும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின்  பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்தநிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்தன  புலம் பெயர் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த  இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மகாநாயக்கத் தேரர்கள், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன் இலங்கையை  மீள் கட்டியெழுப்புவதை நோக்கமாக கொண்ட இமயமலை பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில்  நான்  இந்தத் தரப்பினரை சந்திக்கவில்லை எனினும் ஒரு விடயத்தை   குறிப்பிட விரும்புகிறேன். அரசாங்கம் புலம்பெயர் மக்களின்  பங்களிப்பை பெறுவதற்கு தயாராக இருப்பதுடன் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டிருந்தார்.

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த  இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பல்வேறு தரப்பினரை சந்தித்திருந்தபோதிலும் கூட தமிழ்தேசிய மக்கள் முன்னணி  உள்ளிட்ட  சில அரசியல் கட்சிகளும்  சிவில் சமூக அமைப்புக்களும் இது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தன.  அதுமட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் பல்வேறு புலம்பெயர்அமைப்புக்களும் இந்த இமயமலை  பிரகடன முயற்சியை கடுமையாக விமர்சித்திருந்தன.

அந்தவகையில் பிரதமர்  தினேஷ் குணவர்த்தன இது தொடர்பில் மேலும்  குறிப்பிடுகையில் புலம் பெயர் மக்களின் பிரதிநிதிகளை இதற்கு முன்னரும் பல தடவைகள் சந்தித்திருக்கிறேன்.

அவர்கள் இலங்கையில் வந்து முதலீடு செய்யவும்  அபிவிருத்தியில் பங்கெடுக்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

அதற்காகவே  வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்காக ஒரு அலுவலகமும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. புலம்பெயர் மக்கள் இலங்கை  வந்து முதலீடு செய்ய விருப்பம்  தெரிவித்தால் அதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்றார்.

அரசாங்கம்   இவ்வருடத்தின் ஆரம்பத்தில் வெளிநாட்டுவாழ் இலங்கையர்களுக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தது. அதன்  பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட இராஜதந்திரி வீ. கிருஷ்ணமூர்த்தி செயற்பட்டு வருகின்றார்.

இலங்கையில் சடுதியாக அதிகரித்த யாசகர்களின் எண்ணிக்கை !

நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

65 இடங்களை மையப்படுத்தி அந்த திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, நாடு பூராகவும் 3,700 யாசகர்கள் உள்ளதாக அந்த அறிக்கை தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,600 யாசகர்கள் உள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான நால்வருக்கு பிணை வழங்க வாய்ப்பு !

மாவீரர் தின நிகழ்வின்போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தரமாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்திய இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மாணவனை இன்று செவ்வாய்க்கிழமை (19) நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று பிணை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு குறித்த மாணவனின் கோவைகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த மாணவனின் கோவைகள் இன்றைய தினம் 11 மணியாவில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சாணக்கியனால் விசேட விதமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை துரிதகதியில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் – 18 வயதுடைய இளைஞர் கைது !

14  வயதான பாடசாலை மாணவியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்று துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் நவகத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுடைய இளைஞரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலுவெல வஹ்ரக பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

நவகத்தேகம – வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்துக்கு  உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்  ஆனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அரை ஏக்கர் நிலத்தில் மிளகாய் பயிர்ச்செய்கை – ஒரு கோடி ரூபாய்களை  வருமானமாக பெற்ற விவசாயி !

அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பந்துல என்ற விவசாயி அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபாய்களை  வருமானமாகப் பெற்று மிளகாய் பயிர்ச்செய்கையில் சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் விவசாயத்தில் புரட்சி செய்த விவசாயி - tamilnaadi.com

விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது.

பந்துல  10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய சந்தை மிளகாயின் விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடியும் எனவும்   தெரிவித்துள்ளார்

இதற்கு முன்னர், மிளகாய் பயிர்ச்செய்கையில் அதிக வருமானம் பெற்ற இரு விவசாயிகளும் திரப்பனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் 50 இலட்சமும் மற்றவர் 60 இலட்சம் ரூபாவையும் ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ள சமூக சவால்கள் தொடர்பில் யாழில் கருத்தறியும் நடவடிக்கை !

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM)   ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின்  யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில்  பொதுமக்களின் கருத்தறிந்தது - PMD | PMD

சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை  சந்திப்புக்கள் நடத்தப்பட்டன.

இடைக்கால செயலக அதிகாரிகள் குழுவின் யாழ்ப்பாண விஜயமானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான விடயங்கள்  மற்றும் பரிந்துரைகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ள சமூக சவால்கள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் பற்றிய விரிவாக இந்தச் சந்திப்புக்களில் ஆராயப்பட்டன.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், யாழ் மறைமாவட்ட ஆயர் வண.கலாநிதி ஜெஸ்ரின்  பீ ஞானப்பிரகாசம்,   யாழ் நாக விகாரையின் தம்மிக தேரர் உள்ளிட்ட மதத் தலைவர்களுடன் இடைக்காலச் செயலக அதிகாரிகள் குழு முக்கிய கலந்துரையாடல்களை மேற்கொண்டது.

பொதுமக்களின் எதிர்பார்ப்புகள், கருத்துக்கள் மற்றும் கவலைகள் தொடர்பில் சமயத் தலைவர்கள் இதன் போது கருத்துத்  தெரிவித்ததுடன், நாட்டில் இன நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு  நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றியடைய பிரார்த்தனை செய்ததுடன் ஆசிகளையும் வழங்கினர்.

இடைக்கால  செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவன்ச, இடைக்கால செயலகத்தின் செயற்பாடுகள் குறித்து  மதத் தலைவர்களுக்கு விளக்கமளித்ததுடன், பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படவுள்ள  உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்த விளக்கங்களை வழங்கினார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், இடைக்கால செயலகம் சிவில் சமூக அமைப்புகள், யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள், யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட கல்வியியலாளர்கள், துறைசார் நிபுணர்கள், இளைஞர் குழுக்கள், பெண்  உரிமை  அமைப்புப் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களையும் திரட்டியது.

இந்த ஆலோசனைகள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் கவலைகள் பற்றிய விரிவான புரிதலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கிய பங்குதாரர்களுடன்  நடத்தப்பட்ட விரிவான பொது ஆலோசனைச் செயல்பாட்டில் பணிப்பாளர் நாயகத்தின் நிறைவேற்று மற்றும் சட்ட அதிகாரி  அஷ்வினி ஹபங்கம,கொள்கைப் பிரிவுப் பிரதானி கலாநிதி யுவி தங்கராஜா, இடைக்கால செயலகத்தின்  மக்கள் தொடர்பு மற்றும் கொள்கைப் பிரிவைச் சேர்ந்த  சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் இதில் பங்கெடுத்திருந்தனர்.