December

December

வரி அதிகரிப்பினால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருபாலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது – ஹர்ஷ டி சில்வா

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வரி அதிகரிப்பினால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இருபாலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் தாங்கள் வெற்றி பெற்றோம் என்ற எண்ணத்தில் அரசாங்கம் இருந்தால் அது தவறு என அவர் வலியுறுத்தினார்.

முன்னைய தலைவர்கள் வரிகளை குறைப்பதற்கு மோசமான தீர்மானத்தை எடுத்ததன் காரணமாகவே இன்று இலங்கை இவ்வாறானதொரு நிலையை அனுபவித்து வருவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அவ்வாறு செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

 

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகொன் !

பாடசாலைக்கு உள்ளே மற்றும் வெளியே முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கு பொருத்தமற்ற போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகொன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சமீப காலமாக நாட்டில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பொருத்தமற்ற செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் பொருத்தமற்ற செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு உள்ளே மற்றும் பாடசாலைக்கு வெளியே பிள்ளைகளுக்கு பொருத்தமற்ற பல்வேறு விடயங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

பாடசாலைக்கு 500 மீற்றர் இடைவெளியில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமற்ற விடயங்களை விநியோகிக்கும் மற்றும் மாணவர்களை ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் போது இடம்பெறுவதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.

இது தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து பிரதேசங்களிலுமுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.

போலிஸாரை ஈடுபடுத்தி பாடசாலைக்குள் மற்றும் வெளியில் முன்னெடுக்கப்படும் அனைத்து முறையற்ற நடவடிக்கைகளும் ஒழிக்கப்படும்” என அவர் மேலும் தொவித்துள்ளார்.

Asian Classic Powerlifting Championship 2023 – இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை பெற்றுக்கொடுத்த புசாந்தன் !

மலேசியாவில் இடம்பெற்ற Asian Classic Powerlifting Championship 2023 போட்டியில் இலங்கையைச் பிரதிநிதித்துவப்படுத்தி பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டிருந்த புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்று இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

No photo description available.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு  பதக்கங்களைத்  தனதாக்கிக் கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியா / பசிபிக் / ஆப்ரிக்கா பளுத்தூக்கும் போட்டியில் squat முறையில் 325kg தூக்கி 3 ஆம் இடம்பெற்று வெண்கல பத்தக்கத்தினை புசாந்தன் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாதிரியார் கைது !

ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 63 வயதுடைய பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்டவொரு மத சபையொன்றின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் விடுதியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றள்ளது .

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 5 சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .

9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் குறித்த பாதிரியாரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விடுதி பதிவு செய்யப்படாத நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட பாதிரியார் தொடர்பான  மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – பொலிஸ் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கைது !

போதைப் பொருள் பாவனை  தொடர்பில்,  கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் நாடளாவிய ரீதியில்  மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2121  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும், 133 பேர்  புனர்வாழ்வுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ‘நிஹால் தல்துவ‘ தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் மற்றும் மாவா போதைப்பொருளுடன் யாழில் மூன்று இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பால்பண்ணை பகுதியிலேயே  20, 21,23 வயதுடைய மூவர் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் ஹெரோயின் மற்றும் மாவா என்பன கைப்பற்றப்பட்ட நிலையில் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகைதந்து இனவாதத்தை உருவாக்குகின்றார். – அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு !

மட்டக்களப்பிற்கு வருகைதந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு கெவிலியாமடு விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கெவிலியாமடு கிராமத்தை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வருகைதந்ததாகவும் அதற்கு தாமும் மக்களும் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 

திவ்லபொத்தானை கிராமத்தில் சிங்கள மக்கள் பல வருடங்களாக விவசாயம் செய்துவருகின்றனர் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இந்த விவசாய செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். குறித்த விவசாய நிலங்களை தமிழ் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக வாழ்ந்த நிலத்தை கால்நடைகளுக்காக வழங்கினால் சிங்கள மக்கள் எவ்வாறு வாழ்வார்கள். அதற்கு எதிராகவே நான் குரல் கொடுத்து வருகின்றேன்.

சிங்கள மக்களை ஆதரிக்கும் பிள்ளையான்: அம்பிட்டிய சுமனரத்ன தேரர் புகழாரம் | Pillaiyan Support Sinhalese Mayilathamaadu Affair

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகைதந்து இனவாதத்தை உருவாக்குகின்றார். மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் யுத்த காலத்திலும் தம்மை பாதுகாத்தார்கள். அன்று முதல் தமிழ் மக்களுடன் நான் இருந்துள்ளேன். எனினும் தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.  இது மிகவும் தவறானது. தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் எமது பங்காளிகள். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கே நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.

வடக்கு கிழக்கில் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர். தேசிய ஒருமைப்பாடு சிதைந்துவருவதால் தற்போதைய ஆட்சியாளர்கள் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பிள்ளையான், வியாழேந்திரன் மற்றும் ஏனைய முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் இனவாதம் பேசவில்லை. நாடு நெருக்கடியில் இருக்கும் தருணத்தில் இதுபோன்ற செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்  மேலும் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளைக்கொடியுடன் வந்த பணயக்கைதிகளை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் – எதிர்ப்புப்போராட்டத்தில் மக்கள் !

வெள்ளை கொடியுடன் காணப்பட்ட பணயக்கைதிகளையே இஸ்ரேலிய படையினர் சுட்டுக்கொன்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

காசாவில் மேற்கொண்ட இராணுவநடவடிக்கையின் போது ஹமாசிடம் பணயக்கைதிகளாகயிருந்த மூவரை தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

யொட்டாம் ஹைம் சமெர் தலக்கா அலோன் சர்மிஸ் என்ற மூன்று பணயக்கைதிகளையே தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவின் வடபகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலிய படையினரால் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூன்று பணயக்கைதிகளும் ஒரு கட்டடிடத்திலிருந்து சேர்ட் இல்லாமல் வெளியே வந்தனர் ஒருவரின் கையில் தடியுடன் வெள்ளை கொடி காணப்பட்டது என்ற விபரம் தெரியவந்துள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பத்து மீற்றர் இடைவெளியில் காணப்பட்டதால் படைவீரர் ஒருவர் அச்சமடைந்தார் அவர்கள் பயங்கரவாதிகள் என அறிவித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் இருவர் உடனடியாக கொல்லப்பட்டனர் காயமடைந்த மற்றைய நபர் கட்டிடத்திற்குள் ஓடினார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்

கட்டிடத்தின் உள்ளேயிருந்து ஹ{ப்ருமொழியில் கூக்குரல் கேட்டது  அந்த பிரிவிற்கான தளபதி உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார் எனினும் காயமடைந்த மூன்றாவது நபர்வெளியே வந்ததும் உடனடியாக சுடப்பட்டார் என இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பணயக்கைதிகளை ஹமாஸ் கைவிட்டிருக்கவேண்டும் அல்லது ஹமாஸ் உறுப்பினர்கள் தப்பியோடியிருக்கவேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  இஸ்ரேலில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்

டெல்அவியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அவர்கள் தாயகம் கொண்டுவாருங்கள் என கோசமிட்டுள்ளனர்.

 

 

 

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதல் – இரண்டு பெண்கள் பலி!

காசாவில் சனிக்கிழமை இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட சினைப்பர் தாக்குதலில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் தஞ்சமடைந்திருந்த தாயும் மகளும்  கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்குகரை காசா இஸ்ரேல் ஜோர்தானில் கிறிஸ்தவ தேவலாயங்களை மேற்பார்வை செய்யும்  Latin Patriarchate of Jerusalem, என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

யுத்தம் ஆரம்பித்த பின்னர் காசாவில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள்இந்த தேவாலயத்திற்குள் தஞ்சமடைந்துள்ளனர் என  Latin Patriarchate of Jerusalem, தெரிவித்துள்ளது.

தேவாலயத்தின் கன்னியாஸ்திரிகள் பிரிவில் நடமாடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சினைப்பர் தாக்குதலிற்குள்ளாகினர் காயமடைந்த ஒருவரைதூக்கிசெல்லப்பட்டவர் கொல்லப்பட்டார்என Latin Patriarchate of Jerusalem  தெரிவித்துள்ளது.

எந்த முன்னெச்சரிக்கையும் முன்னறிவித்தலும் இன்றி இந்த தாக்குதல் இடம்பெற்றது எந்த அத்துமீறல்களும் இடம்பெறாத தேவாலயவளாகத்திற்குள் அவர்கள் சுடப்பட்டனர் எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.

54 மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த அன்னை தெரேசாவின் சகோதரிகள் என்ற கன்னியாஸ்திரிகள் மடமும் இஸ்ரேல் இராணுவத்தின் டாங்கிகளின் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது,இதன் போது அந்த கட்டிடத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கான ஒரேயொரு வழிமுறையாக காணப்பட்ட மின்பிறப்பாக்கி சேதமடைந்துள்ளது எனவும் Latin Patriarchate of Jerusalemதெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு வாளுடன் தயாராக இருந்த இளைஞன் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது !

யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலைச் சேர்ந்த இளைஞன் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறைப் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞனே வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுவில் கண்ணன் கோவிலுக்கு அருகில் வாள் வெட்டுக் கும்பல் ஒன்று மோதல் சம்பவம் ஒன்றுக்கு செல்வதற்காக தயாராகி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசாரை கண்டதும் வாள் வெட்டு கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளது.

பொலிஸார் துரத்தி சென்று இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன், கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து வாள் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.