02

02

தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 25, 27 ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதில் அரசாங்கமே நினைவு கூறலாம் என தெரிவித்துவிட்டு வடக்கு கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிசார் முயற்சி எடுத்து போது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவு கூறுவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அதேவேளை விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் அந்த நினைவேந்தல் நடைபெறமுடியும் எனவும் கட்டளை வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் அந்த நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ் மக்கள் நியாயமில்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாது நடந்து கொண்ட போதும் அவர்கள் மீது குறிவைக்கப்படுகின்றது.

 

இதனை தமிழத் தேசிய மக்கள் முன்னணியாக கடுமையாக எதிர்க்கின்றோம்.

 

இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாது நாங்கள் இதை எதிர்நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இதனை எதிர்கொள்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகரித்த போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் அதிகரித்த எய்ட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையால் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு ஆண்டும் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாகக் கூடிக் கொண்டே போகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தற்போது பெருமளவான போதைப்பொருள் பாவனையாளர்கள் இரத்த நாளங்களின் ஊடாக உடலில் போதைப்பொருளை ஏற்றிக்கொள்கின்றார்கள். அதனால் எயிட்ஸ் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.

 

சாதாரண ஒரு ஸ்ரிஞ் மூலம் ஒரு ஊசியை பலர் பாவிப்பதால் ஒருவருக்கு எயிட்ஸ் தொற்று இருந்தால், அதனை பாவிக்கும் மற்றவருக்கும் தொற்றக்கூடிய சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகின்றது.

 

இலங்கையில் தற்போது 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதிலே வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 90 பேர் இன்று வரைக்கும் எச்ஐவி தொற்று உள்ளவர்கள் என இனங்காணப்பட்டுள்ளார்கள்.

அதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சுமார் 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

O/L பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கான மாதம் 6000 ரூபா கொடுப்பனவு திட்டம் – விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

 

அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் இன்று (01) ஆரம்பிக்கப்பட்டது.

 

அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலைமைபரிசில் வழங்கப்படவுள்ளது.

 

கடந்த வருடத்தில் 3000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக ஜனாதிபதி நிதியத்தினால் புலைமைப் பரிசில் வழங்கப்பட்டது.

 

2022 (2023) ஆண்டில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரப் பயில்வதற்கு தகுதிபெற்றிருப்பது, அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்பது, குடும்ப மாத வருமானம் 100,000 ரூபாவிற்கு குறைவாக இருப்பது இந்த புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க அடிப்படை தகுதியாக கருதப்படுகிறது.

 

இந்த புலைமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி செலயகம் presidentsoffice.gov.lk, ஜனாதிபதி நிதியம் presidentsfund.gov.lk ஜனாதிபதி ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையதளங்களில் தறவிறக்கம் செய்யலாம்.

 

அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதாரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும். இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை ஜனாதிபதி நிதியம் எதிர்பார்க்கிறது.