08

08

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி மீது துன்புறுத்தல் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் (07) பார்வையிட சென்ற போதே, சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் முறையிட்டு அழுததாக உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்ரஸாவில் 13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட விவகாரம் – சிசிடிவி கமராவின் வன்பொருள் மாயம் !

13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மலசல கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் இன்று(5) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

 

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

 

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

 

மேலும் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

 

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் மாணவனின் மரணம் தற்கொலையல்ல என கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இதே வேளை அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 15 வயது சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் கடந்த சனிக்கிழமை(2) அன்று சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சிசிடிவி கமராவின் வன்பொருள்(HARD DISK) மாயமான விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை முன்னெடுத்து வரும் சாய்ந்தமருது பொலிஸார் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

 

மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம இன்று அறிக்கையிட்டுள்ள நிலையில் மேற்படி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

சிசிடிவி கமராவின் சேமிப்பகம் வன்பொருள் மீட்கப்பட்டால் உண்மைகள் பல வெளியாகும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

மேலும் குறித்த மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடர்ந்த வண்ணம் உள்ளது. அத்துடன் மாணவனின் மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் ஒன்றின் தடுப்பு காவலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

 

அத்துடன் நாளை (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜரபடுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் -மனித உரிமைகள் கண்காணிப்பகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

 

அத்துடன், குறித்த சட்டத்தை நீக்கும் வரையில், அதன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்தமைக்காக 9 தமிழர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு நீண்டகாலமாக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, மாற்றியமைப்பதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச நட்பு நாடுகள், வர்த்தக பங்காளிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பலமுறை உறுதியளித்துள்ளது.

 

எனினும் இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. ஏற்கனவே தொடர்ச்சியான அரசாங்க பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகத்தை மேலும் இது ஓரங்கட்டுவதாக அமைந்துள்ளதென என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார்

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘நல்லிணக்கம்’ பற்றி கருத்துரைக்கின்ற போதிலும், அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பு !

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்களினால் இமயமலைப் பிரகடனம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை இமயமலைப் பிரகடனம் உள்ளடக்கியுள்ளது.

 

இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பாக மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் இங்கு குறிப்பிட்டனர்.

 

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.

 

புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் அவசியம் எனவும், இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.

 

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் பாதித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

 

இதன்போது நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்தைப் பாராட்டிய உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், அதற்கு தமது முழு பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

 

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் இமயமலைப் பிரகடனம் வெளியிடக் கிடைத்தமை குறித்தும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்ஷங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பில் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்ஷங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

 

மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தமிழக முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே, இலங்கைக் கடற்படையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெய்ஷங்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.