10

10

இலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

இலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு இலங்கை படையினர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 70 முன்னாள் இராணுவ வீரர்கள் உக்ரைனின் வெளிநாட்டுப் படைப்பிரிவில் இணைந்து கொள்ள விண்ணப்பம் செய்துள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் இலங்கையின் முன்னாள் இராணுவீரர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறியுள்ளார்.

உக்ரைனின் படையணியினரோடு இலங்கையின் முன்னாள் படைவீரர்கள் இணைந்து செயற்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர் தங்கள் சொந்த விருப்பத்தில் உக்ரைன் சென்றுள்ளனர்.

இலங்கையர்கள் அனைவருக்கும் நடமாடுவதற்கான சுதந்திரம் உள்ளது மேலும் அவர்கள் அங்கு சென்றதும் இலங்கையால் அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தாங்கள் தங்கியுள்ள நாட்டின் சட்டங்களை மீறினால் அல்லது இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பின்னர் தலைமறைவானால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

உக்ரைனிற்காக போரிட சென்ற முன்னாள் இராணுவவீரர்கள் குறித்த புள்ளிவிபரங்கள் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரியை அதிகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. – கலாநிதி ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரியை அதிகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது போக்குவரத்து சேவை, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதிக்க வேண்டாம் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. திரிபோஷா, முட்டை உட்பட உணவு பொருட்களுக்கு வரி விதிக்குமாறு நாணய நிதியம் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. புதிய வரிக் கொள்கையினால் சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிப்படையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெறுவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால், முறையான தரப்படுத்தல்களுக்கு அமைய தீர்மானங்களை எடுக்காமல அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுமாக இருந்தால் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

மொத்த தேசிய உற்பத்தியை 15 சதவீதமாக அதிகரித்துக்கொள்ளாவிட்டால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சியில் மொத்த தேசிய உற்பத்தி 20 சதவீதமாக இருந்தது. அதனை தொடர்ந்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளானது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தூரநோக்கமற்ற வகையில் எடுத்த தவறான தீர்மானத்தினால் 600 பில்லியன் ரூபா முதல் 700 பில்லியன் ரூபா வரையான வரி வருமானம் இழக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றது. பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு உயர்நீதிமன்றம் உறுதியான பதிலளித்துள்ளது.

ராஜபக்ஷர்கள், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், லக்ஷ்மன், திறைசேரியின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களும் தற்போது தெளிவடைந்துள்ளார்கள்.

பெறுமதி சேர் வரி (வற்) தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் நேரடியாக எதனையும் குறிப்பிடவில்லை. அடுத்த ஆண்டு முதல் 15 சதவீதமாக உள்ள வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படும். தற்போது பூச்சியமாக உள்ள வரி வீதம் அடுத்த ஆண்டு முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்பதை வெளிப்படைத்தன்மையுடன் குறிப்பிடுங்கள்.

வற் வரி தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் கலந்துரையாடப்பட்டது. ஆனால் குழு பரிந்துரைத்த விடயங்களை அரசாங்கம் செயற்படுத்த தயாரில்லை. அடுத்த ஆண்டு முதல் திரிபோஷா, முட்டை உட்பட சகல உணவுப் பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய வற் வரி அதிகரிக்கப்படுவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதிக்க வேண்டாம் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

திரிபோஷா, முட்டை ஆகியவற்றுக்கு வரி விதிக்குமாறு நாணய நிதியம் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை.

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதாக குறிப்பிட்டுக்கொண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஆனால் தற்போது வற் வரிக்குள் மண்வெட்டி கூட உள்ளடக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலன்புரி திட்டம் முறையற்ற வகையில் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தற்காலிகமானதே தவிர நிலையானதல்ல. புதிய வரிக் கொள்கையினால் அடுத்த ஆண்டு சமூக கட்டமைப்பு மிக மோசமாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

இந்நாட்டில் கிரிக்கெட்டை முகாமைத்துவம் செய்வதில் அதற்கு அரசாங்கம் அதிகம் தலையிடாமல் இருப்பதே எமது நோக்கமாகும். – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனால்தான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும், எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 02 பில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிதி நிர்வாகத்தையும், பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தியையும் சுயாதீன நிதியம் ஒன்றிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே அதன் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில், விளையாட்டானது வணிகமயமாக்கப்படும் என்றால் அது அரசியலில் இருந்து விடுபட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் சுபீட்சமான நாடாக மாறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக இலங்கை மீண்டும் மாற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்துவைத்த ஜனாதிபதி, பின்னர் விளையாட்டு சங்க உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் 2014 பந்துவீச்சு 20 (T20) உலகக் கிண்ணத்தை வென்ற அணிக்கும் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்துவம் இதன்போது வழங்கப்பட்டது.

மேலும் பல வருடங்களாக கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு பங்களிப்புச் செய்த உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வாழ்நாள் அங்கத்துவம் அதன் தலைவர் நிஷாந்த ரணதுங்கவினால் வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் 150ஆவது ஆண்டு விழாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே, அணிகள் இணைந்து விளையாட்டுக் கழகங்களை உருவாக்கின. மாலுமிகள் வரும்போதும், அவர்களும் தற்காலிக கிரிக்கெட் அணியை உருவாக்கினர். மலாய் படைப்பிரிவின் படைமுகாமில் தங்கியிருந்த வீரர்கள் கோல்ட்ஸ் என்ற அவர்களின் கிரிக்கெட் அணியை உருவாக்கினர்.

ஒருமுறை கோல்ஸ் மற்றும் றோயல் கல்லூரி, புனித தோமஸ் மற்றும் வெஸ்லி கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் பின்னர், சிங்கள விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் மற்றொரு கழகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் தமிழ் யூனியன் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, இன அடிப்படையில் பல விளையாட்டுக் கழகங்கள் உருவாகின. இவை மலாய், பறங்கியர், சிங்களம், தமிழ் ஆகிய வார்த்தைகளால் மட்டுமே பெயரிடப்பட்டிருந்தாலும், அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் அனைத்து இன மக்களும் இதில் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இதனை கண்டுகொள்ள முடிவதில்லை. அதனால்தான் நாம் இன்று இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். எவ்வாறாயினும், உங்களது பங்களிப்பு இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கையின் கிரிக்கட் ஆரம்பத்தை எடுத்துக்கொண்டால், பிரித்தானியர்கள் சிலர் இன்றுள்ள விதிகள் எதுவுமின்றி வெறும் மட்டையால் பந்து விளையாடிய காலத்திலிருந்து இன்று வரை கிரிக்கெட்டின் பரிணாமத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்திருக்கிறோம். அந்தக் காலத்தை கடந்திருக்கிறோம். இவ்வாறு நோக்கும்போது, கிரிக்கெட் வேகமாக மாறும் விளையாட்டு. நவீன தொழில்நுட்பத்துடன் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, விளையாட்டும் இப்போது மாறி வருகிறது.

இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட விவாதத்திலும் கிரிக்கெட் முக்கிய இடம் பிடித்திருப்பதை பார்த்தோம். இம்முறை வரவு செலவுத் திட்ட விவாதம் முக்கியமாக கிரிக்கெட் தொடர்பிலேயே இடம்பெற்றது. வரவு செலவுத் திட்டம் பற்றி அல்ல, அதாவது அரசாங்கத்தையும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளையும் விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் இருக்கவில்லை.

இதேவேளை, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட்டின் முன்னைய நிலைமையை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து அமைச்சர் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ICC) கலந்துரையாடி வருகிறார். அவை அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, எமக்கு மீண்டும் உலகத்துடன் செயற்பட கிடைக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திப்போம்.

2030இல் இலங்கையின் கிரிக்கெட் எங்கு இருக்க வேண்டும் என்ற இலக்கு எனக்கு உள்ளது. எனவேதான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மட்ட கிரிக்கெட் வளர்ச்சிக்காக 1.5 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கு மட்டுமன்றி இந்த இலக்கு நிறைவேறும் வரை இந்த நிதியை வழங்குவோம். இதனை வருடத்துக்கு 02 பில்லியன் வரை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நாட்டில் கிரிக்கெட்டை முகாமைத்துவம் செய்வதில் அதற்கு அரசாங்கம் அதிகம் தலையிடாமல் இருப்பதே எமது நோக்கமாகும். மேலும், எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் புதிய சட்டங்கள் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும்.

இந்த நிதி நிர்வாகத்தையும் பாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சியையும் ஒரு சுயாதீன நிதியத்திற்கு நாம் ஒப்படைப்போம். மீதமுள்ள பகுதி நிர்வாக சபைக்கு உள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்படும். விளையாட்டுத்துறையை மேம்படுத்த அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது.

மைதானங்கள், உபகரணங்கள் என எதற்கு இந்த நிதி செலவிடப்பட்டாலும் அது மூலதனச் செலவில் குறிப்பிடப்படும். எனவே, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள பாடசாலை கிரிக்கெட் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதே அதன் அர்த்தம். அதன் பின்னர் எமக்கு மாகாண மட்டத்தில் கிரிக்கெட்டை முன்னேற்ற முடியும்.

நாம் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும். இந்த நிதியை கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவே நாம் பயன்படுத்துகிறோம். ஆண் பிள்ளைகள் மாத்திரமன்றி, பெண் பிள்ளைகளும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். இதன் மூலம் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை ஒரு குறிப்பிட்ட தரத்திற்கு கொண்டு வருவோம்.

மேல் மாகாணத்தில் கிரிக்கெட் பற்றிப் பேசும்போது கொழும்பில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர பாதுக்க, கிரிந்திவெல, அகலவத்தை போன்ற பகுதிகளில் கிரிக்கெட் எந்த வகையிலும் வளர்ச்சியடையவில்லை. எனவே, அனைத்து பாடசாலைகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

கிரிக்கெட் ஒரு வளர்ந்து வரும் விளையாட்டு. எல்லா ஆட்டத்திலும் எங்களால் வெற்றி பெற முடியாது. ஆனால் அவற்றில் சிலவற்றை நம்மால் வெல்ல முடியும்.

எனவே இதற்காக பணத்தை செலவிட தயாராக உள்ளோம். அத்துடன், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை விளையாட்டுப் பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்வதற்கும் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அதற்காக நாம் கிரிக்கெட் நிர்வாக சபையை இணைத்துக் கொள்ளவுள்ளோம்.

நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், வளமான தேசமாக மாற்றவும் அவசியமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பொருளாதாரத்தில் மட்டுமன்றி பாடசாலைகளில் கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ்வதை உறுதி செய்வோம். பொருளாதாரம் என்பது பணம். விளையாட்டு வணிகமயமாக்கப்பட்டால் நாமும் அதற்குள் நுழைவோம்.

மேலும், விளையாட்டை வணிகமயமாக்கினால், அதை அரசியல் தலையீடு இல்லாமல் பேணிக் கொள்வோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, தற்போதைய மற்றும் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கழக அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள் – இரா.சம்பந்தன் கவலை !

திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஒழுக்காற்று குழுவிடத்தில் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் மூலக்கிளைகள் மற்றும் தொகுதி, மாவட்டக்கிளைகள் புனரமைப்பு அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் மூலக்கிளை உள்ளிட்டவற்றின் புனரமைப்பின்போது, இலங்கை தமிழரசுக்கட்சியில் நீண்டகாலமாக செயற்படும் அங்கத்தவர்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் தாம் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்ற இரா.சம்பந்தனுக்கு குறித்த விடயம் சம்பந்தமாக உரிய தெளிவு படுத்தல்களுடன் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த விடயம் சம்பந்தமாக கரிசனை செலுத்திய இரா.சம்பந்தன், குறித்த மூலக்கிளை உள்ளிட்ட புனரமைப்பின்போது அங்கத்தவர்கள் தெரிவில் தாம் திருப்தி அடையவில்லை என்றும் அந்த தெரிவுகள் இதயசுத்தியுடன் நடைபெற்றாது தன்னை ஆதரிக்கும் கட்சியின் உறுப்பினர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசனத்தை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியின் ஒழுக்காற்றுக்குழு விசாரணைகளை நடத்தி உரிய தெளிவுபடுத்தல்களை செய்ய வேண்டும் என்றும், தவறுகள் இடம்பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் தெரிவு முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக உள்ள சீனித்தம்பி யோகேஸ்வரன், சம்பந்தனின் குறித்த முறைப்பாடு சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்காலிக பொதுச் செயலாளர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கத்தின் திகதி ஒதுக்கீட்டுடனான அனுமதிக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு கிளை மற்றும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை தொகுதி கிளை தெரிவுகள் சம்பந்தமாகவும் முறைப்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, கொழும்புக்கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் தலைமையில் நடைபெற்ற தெரிவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மூன்று உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதேபோன்று காங்கேசன்துறை தொகுதிக்கான அங்கத்தவர்கள் தெரிவில் குறைபாடுகள் உள்ளதாக கட்சியின் தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனதிராஜா விசனம் வெளியிட்டுள்ளார். எனினும் அது தொடர்பில் இன்னமும் எழுத்துமூலமான முறைப்பாடு ஒழுக்காற்றுக்குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் விஹாராதிபதி கைது !

கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த பாடசாலை ஆசிரியர் மற்றும் விஹாராதிபதி என இருவர் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கடந்த 7ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 17 போதை மாத்திரைகள், 80 மில்லி கிராம் கஞ்சா, 04 கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிப் பெட்டி, 02 எரிவாயு சிலிண்டர்கள், மற்றுமொருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் 4 தேசிய அடையாள அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இன்று ஞாயிற்றக்கிழமை (10) காலை 10 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தின்போது ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா’ போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் இனிமேல் குற்றங்களுக்கு தண்டனையில்லை – நீதியமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு !

வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு அவர்களை ஒப்படைக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

சில நீதிமன்றங்கள் சிறு குற்றங்களை செய்தவர்களை சிறையில் அடைப்பதோடு, பிணை வழங்குவதில் நீதிமன்றங்கள் தனது விருப்புகளை காட்டி வருகிறது, இந்த நாட்டின் சட்டப்படி விசாரணைகள் நிறைவடையாதது, சில இளைஞர்கள் சிறையில் இருந்து விடுதலை போன்ற காரணங்களால் பிணை மறுக்க வாய்ப்பு உள்ளது. எனவே , பிணை வழங்கும்; சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதாக நம்புவதாக அமைச்சர் கூறினார்.

“எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம்.” – வடபகுதி மக்களிற்கு ஜேவிபியின் தலைவர் அழைப்பு !

எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம் என  வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்து நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும். ஆகவே பொருளாதார அரசியல் முடிவுகளை எடுக்கும்போது அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பது குறித்து நாங்கள்கவனம் செலுத்துவோம்

இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள் மத்தியிலேயே பூகோளஅரசியலில் போட்டி காணப்படுகின்றது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இல்லை. இந்த நாட்டில் சில பிரச்சினைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் குறிப்பாக தமிழர்கள் முஸ்லீம்கள் தொடர்பில் – அவர்களது மொழி கலாச்சார விடயங்கள் மற்றும் ஆட்சி முறையில் பங்கெடுத்தல் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன.

இந்த விவகாரங்களிற்கு நாங்கள் தீர்வை காணவேண்டும். வடக்கு மக்களிற்கு தேசிய மக்கள் சக்தி  விடுக்கின்ற வேண்டுகோள் இதுதான் எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்.

ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்து கொள்ள வேண்டும்.