14

14

பௌத்த மதகுருமார்களும் உலக தமிழர் பேரவையும் ஜனாதிபதியிடம் கையளித்த இமாலய பிரகடனம் – எங்களுக்கு எதுமே தெரியாது என்கிறது பௌத்த சாசன அமைச்சு !

பௌத்த மதகுருமார்களும் உலக தமிழர் பேரவை குழுவினரும் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்த இமாலய பிரகடனம் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்தவாரம் பன்முகதன்மையை முன்னிலைப்படுத்தும் இமாலய பிரகடனத்தை உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் பௌத்தமதகுருமாரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர்.

இந்நிலையில் இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்ட தரப்பினருடன் தங்களிற்கு எந்த தொடர்பும் இல்லை என பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரட்ண விதான பத்திரன ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பிரகடனம் குறித்த முழுமையான விபரங்கள் அமைச்சிற்கு இன்னமும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பிரகடனத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

குறித்த குற்றங்களை விசாரிப்பதற்காக பிரத்தியேகமான குழுவொன்றை உருவாக்குமாறு பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை பதிவிடுவோருக்கு எதிராக முறைபாடுகள் அளிப்பதற்கு விசேட தொலைப்பேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 

0112300637, என்ற தொலைப்பேசி இலக்கத்தினூடாகவும் 0112381045 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவும் முறைபாடு அளிக்கமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ccid.religious@police.gov.lk என்ற மின்னஞ்சல் வழியாகவும் முறைபாடுகளை அளிக்க முடியும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச வீடியோக்கள் வெளியிட்ட பட்டதாரி தம்பதி கைது !

பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை பொலிஸார் கைது செய்தனர்.

28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு திருமண விழாவும் நடைபெற உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட இருவரும் பட்டதாரிகள் என்பது சிறப்பம்சமாகும்.

 

பணம் சம்பாதிப்பதற்காக ஆபாச வீடியோக்களை தயாரித்து இணையத்தில் வெளியிட்டதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

 

இவர்கள் மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரூபாவை சம்பாதித்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

அவர்கள் கைது செய்யப்பட்ட போது, ​​ஆபாச வீடியோக்களை தயாரிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் கணினி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்படுள்ளன.

 

அத்துடன் படபிடிப்பிற்காக பயன்படுத்திய பாடசாலை சீருடைகள், டைகள் மற்றும் பிற பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

நீண்ட காலமாக இந்த மோசடியை மேற்கொண்டு வரும் சந்தேகநபர்கள் ஏற்படுத்திய இணைய கணக்கில் சுமார் 4,400 பயனாளர்கள் இருப்பதாகவும், அவர்களின் வீடியோக்கள் சுமார் 8.7 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆண் சந்தேக நபர் பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

 

பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தம்பதியொருவர் ஆபாசமான காட்சிகளை படம்பிடித்துக் கொண்டிருந்ததாக கடுகன்னாவ பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சமிந்த குணரத்னவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2024ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திலும் தமிழர்களுக்கு எதுவுமேயில்லை – நாடாளுமன்றத்தில் இரா.சாணக்கியன் !

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினுடைய மூன்றாம் வாசிப்பான நேற்று (13) கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் நடந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த நாங்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அதற்கான காரணம் ஜனாதிபதி கடந்த வருடம் 04.02.2023 அன்று அதாவது 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களினுடைய தேசிய இனப் பிரச்சினையினை தீர்ப்பதற்கு தான் முயற்சி எடுப்பதாக கூறினார்.

 

ஆகவே அவரது கூற்றினை வரவேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நாங்கள் அந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து அதனை தோல்வியடைச் செய்ய முடியுமாக இருந்திருந்தால் நாங்கள் அதற்கு வாக்களித்திருப்போம்.

 

2023 ஆம் ஆண்டிற்குள்ளே தமிழ் மக்களுக்கு எவ்வித நலன் சார்ந்த விடயமும் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை. இன்று வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் இந்த அரசாங்கத்தினால் இழைக்கப்படும் பாரிய கொடுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

 

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் கால்நடைகளை சுட்டு அழித்துக் கொண்டிருக்கும் கொடூர செயல் 90 ஆவது நாளாகவும் தொடர்கிறது. மேலும் இன்று தொல்பொருள் என்ற பெயரில் இனவாதிகள் இணைந்து வடக்கு, கிழக்கில் இருக்கும் எங்களின் ஆலயங்களை அழித்து கொண்டிருக்கின்றனர்.

 

கடந்த வாரம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இளைஞர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எமது மக்களினுடைய பிரதான ஜீவனோபாயமாக விவசாயம், மீன்பிடி, கால்நடை போன்றவை காணப்படுகின்றன.

 

பெரும்போக விவசாயத்தினை மட்டக்களப்பில் மேற்கொள்வதற்கான திகதியினைக் குறிக்கும் படி கூறியிருந்தும் இன்று வரை அதற்கான திகதி குறிக்கப்படவில்லை. இந்த வருடமும் உரத்திற்கான நிதியின்றி விவசாயிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

 

வட மாகாணத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மக்கள் அச்சுறுத்தலின் காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழ் மக்கள் வாழும் பல இடங்களிலும் மேய்ச்சல் தரைகளை இனங்கண்டு கால்நடைகளை அழித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

 

இவ்வாறான காலப்பகுதியிலேயே 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமானது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

30 வருட காலமாக நிகழ்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வட மாகாண மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை. வட மாகாணத்திலுள்ள விமான நிலையத்தினை விஸ்தரித்து சர்வதேச விமான நிலையமாக மாற்றி பல விமானங்களும் வந்து செல்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதியினை ஒதுக்கவில்லை ஆனால் 4 ஆவது விமான நிலையத்தினை அமைப்பதற்கு பேசிக்கொண்டு இருக்கின்றார்.

இவ்வாறான வரவு செலவுத் திட்டத்திற்கு வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு ஆதரவு வழங்கலாம் எனும் கேள்வியை எமது மக்கள் எழுப்ப வேண்டும். வரவு செலவுத் திட்டத்தினூடாக எமது மக்களுக்கு நிதி ஒதுக்கவில்லையாயினும், பொருளாதார ரீதியாக அவர்களை எழுச்சியடையச் செய்யாதுவிடினும் எமது மக்களை அவர்களது கிராமங்களில் நிம்மதியாக வாழச் செய்யலாம்.

 

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் விடலாம். இவ்வாறு எமது மக்களை அவர்களது இயல்பு நிலைக்கு ஏற்ப வாழ விடாத அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் எமது மக்கள் சரியான பாடத்தினை அவர்களுக்கு புகட்ட வேண்டும்.

 

18% வரியினை அதிகரித்துள்ள அரசாங்கம் பால்மா தொடங்கி அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரியினை அதிகரிப்பதற்கு முயன்றுள்ளனர்.

 

எமது மக்களிடமே பணத்தைப் பெற்று மீண்டும் கிள்ளி எரிகின்றனர். கிள்ளி எறியும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம் எனக் கூறுபவர்களை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எமது பிரதேசத்தில் மலசலகூடமொன்றினை அமைப்பதாக இருந்தாலும் எமது மக்களது வரிப்பணத்திலேயே அதனை மேற்கொள்கின்றனர்.

 

நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல அபிவிருத்திகளை வடக்கு, கிழக்கில் மேற்கொண்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியாவின் அனுசரணையுடன் வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டதோடு நெடுஞ்சாலைகளும், புகையிரத நிலையங்களும் அமைக்கப்பட்டன.

 

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பணத்தில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. நல்லாட்சி காலப்பகுதியிலேயே இலங்கை அரசாங்கத்தினுடைய நிதி வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டது.

 

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு சார்பாக வாக்களிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அத்துடன் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கும் எமது தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சிறந்த பதிலடியினை வழங்குவார்கள் என்பது முற்றிலும் உண்மை என தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி ஆதரவாக 122 பேரும் எதிராக 81 பேரும் வாக்களித்திருந்தனர்.

 

இதேவேளை பொதுஜன பெரமுன வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரித்து வாக்களித்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்து வாக்களித்தது.

 

அத்துடன் தேசிய மக்கள் சக்தி எதிராகவே வாக்களித்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மேலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

 

மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குடும்ப வன்முறைகள் தொடர்பில் அறிவிக்க புதிய தொடர்பாடல் இலக்கத்தை அறிமுகம் செய்துள்ள குடும்ப சுகாதார பணியகம் !

குடும்பங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைகளைத் தடுக்கும் விதமாக மிது பியச’ பிரிவுக்கு விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.

‘070 2 611 111‘ என்ற குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடான எந்த நேரத்திலும் அழைப்பினை ஏற்படுத்தி குடும்பத்தில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து தெரியப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை ”குடும்பங்களில் வன்முறைகள் அதிகரிப்பதற்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களின் பாவனையே பிரதான காரணமாக அமைந்துள்ளதாக” களுபோவில வைத்தியசாலையின் மித்ரு பியசவுக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி ஹேஷானி கருணாதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஆண்களுக்கு எதிராக அதிகரித்துள்ள துஷ்பிரயோகங்கள்!

நாட்டில் 10 வீதமான ஆண்களும் 90 வீதமான பெண்களும் வீடுகளில் பலவிதமான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“2022 ஆம் ஆண்டு குடும்ப சுகாதார பணியகத்திற்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள்.

 

இவ்வாறு அதிகமான பெண்களே வருகின்றார்கள். எமது தரவுகளின்படி 90 வீதமான பெண்களும் 10 வீதமான ஆண்களும் எமது நிலையத்திற்கு வருகின்றார்கள்.

 

உடல் ரீதியான துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், பொருளாதார துஸ்பிரயோகம், உளவியல் துஸ்பிரயோகம் என பல்வேறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்கள் வருகின்றார்கள்.

 

இவ்வாறு வீடுகளில் துஸ்பிரேகத்திற்க உள்ளாகுபவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப சுகாதார பணியகத்திற்கு சென்று ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

 

அதேநேரம் 070 2 611 111 எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்கலாம். அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி இந்த நிலையங்கள் காணப்படுகின்றன.

 

நாடளாவிய ரீதியிலும் அனைத்து விசேட நிபுணத்தவ வைத்தியசாலைகளிலும் இந்த நிலையம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.