21

21

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உறுதி !

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

 

நாட்டிற்கு பெரும் கேடாக விளங்கும் போதைப்பொருள் பாவனையையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டிரான் அலஸ்,

 

“யுக்திய” என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கை குறித்து தற்போது நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலக செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவற்றை யாராவது நிறுத்த வேண்டும். எனவே இதனை நிறுத்த தீர்மானித்தேன். அதற்காகத்தான் “யுக்திய” சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த விடயத்தில் சமூக பொலிஸ் குழுக்களுக்கும் விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த நடவடிக்கை வெற்றியடைய மக்களின் ஆதரவும் குறிப்பாக ஊடகங்களின் ஆதரவும் அவசியம். முப்பது வருட யுத்தம் வடக்கு கிழக்கில் மாத்திரமே இருந்தது. ஆனால் தற்போதுள்ள இந்த யுத்தம் நாடு பூராகவும் பரவியுள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்கள் வழங்கும் ஆதரவு பாதுகாப்புத் துறைக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

 

எனவே, இதற்குத் தேவையான ஆதரவையும் சரியான தகவல்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு முழுமையான ஒத்துழைப்பு கிடைத்தால் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒழிக்க முடியும் என நான் நம்புகிறேன்.

 

அத்துடன், கடல் மார்க்கமாக இந்நாட்டுக்கு போதைப்பொருள் கொண்டு வருவதைத் தடுக்க விசேட செயல்திட்டமொன்றை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். முதலில், நாட்டில் இயங்கும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நிறுத்த வேண்டும். இரண்டாவதாக போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பாதாள உலக செயற்பாடுகள் நிறுத்த வேண்டும்.

 

மூன்றாவதாக, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். போதைக்கு அடிமையானவர்களுக்குப் பதிலாக போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கினேன்.

 

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 4,665 பேர் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. இவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். கடந்த 04 நாட்களில் மாத்திரம் புலனாய்வுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 731 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்படாத சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதற்கு மேலதிகமாக 8,451 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 346 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 61 பேர் சொத்து விசாரணைக்காகவும், 697 பேர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 04 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 431 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா, ஹஷிஸ், ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட பெருந்தொகை போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு சொந்தமான வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களின் பெறுமதி சுமார் 162 மில்லியன் ரூபாவாகும். எனவே, இதன் ஊடாக இந்த முயற்சி எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு கைப்பற்றப்படும் அனைத்துப் பொருள்களையும் நீதிமன்றம் மூலம் அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பணிகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினேன். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் உள்ளார். எனவே ஜனாதிபதியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகள் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் நிறுத்தப்பட மாட்டாது. அதேபோன்று, இதனை ஒரு வாரத்துடன் நிறுத்தாது தொடர்ந்து செயல்படுத்துவோம். இந்நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டு, எதிர்கால சந்ததியினர் அச்சமோ சந்தேகமோ இன்றி வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம்.

சிறுவர்கள், பெண்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இந்த முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பாதுகாப்புத்துறைக்கு அவசர தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளேன். எனவே, இந்த விசேட தொலைபேசி எண்ணின் கீழ் பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். பெரும்பாலும் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை ஆண் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கூறத் தயங்குகிறார்கள்.

எனவே, 24 மணி நேரமும் இயங்கும் இந்த செயற்பாட்டு அறையில், பெண் காவலர்களை மாத்திரம் பணியமர்த்தப்படுவார்கள். இது தவிர, தமிழில் முறைப்பாடுகளை அளிக்கக்கூடிய வகையில் மேலுமொரு புதிய எண்ணை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவால் பிரித்தானியாவின் தேர்தலுக்கு அச்சுறுத்தல் !

உலகெங்கிலும் நடைபெறும் தேர்தல்களை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் ஜனநாயகத்திற்கு தெளிவான மற்றும் தற்போதைய ஆபத்தாக கருதும் இந்த விடயத்தை சமாளிக்க இன்னும் அதிகளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நீதித்துறை செயலாளர்  Robert Buckland வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவில் உருவாக்கிய தவறான தகவல்களால் ஜனநாயகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் எதிர்காலத்தைப் பற்றிய கவலையை ஏற்படுத்தும் என முன்னாள் நீதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2025 ஜனவரிக்குள் நடக்க வேண்டிய அடுத்த பொதுத் தேர்தல், 2017ல் காணப்பட்ட இடையூறுகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணிக்குழு மூலம், வெளிநாட்டு தலையீட்டிலிருந்து தேர்தலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தடை !

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ(Colorado) உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

அரசியலமைப்பின் கிளர்ச்சி என்ற வாக்கியத்தை குறிப்பிட்டுக்காட்டி, ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் அல்லவென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

எவ்வாறாயினும் இந்த தீர்ப்பு மீதான மேன்முறையீடு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் இந்த தீர்ப்பு கொலராடோ மாநிலத்திற்கு வௌியே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வேகமாக பரவிவரும் கொரோனா – எச்சரிக்கிறது உலக சுகாதார ஸ்தாபனம் !

புதிய ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் JN.1 பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், மக்களுக்கான ஆபத்து தற்போது குறைவாக உள்ளதாகவும் தற்போதைய தடுப்பூசிகள் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

 

எனினும், குளிர்காலத்தில் கொரோனா மற்றும் பிற நோய் தொற்றுகள் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிப்பு !

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் படி, நாட்டில் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 1 சதவீதமாக இருந்தது.

அதேசமயம், அக்டோபர் மாதத்தில் -5.2 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், நவம்பரில் -2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், 2023 ஒக்டோபரில் உணவு அல்லாத பணவீக்கம் 6.3 சதவீதமாக இருந்தது, நவம்பரில் 7.1 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

தரம் 9 வகுப்பு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய விஞ்ஞான பாட ஆசிரியர் கைது !

நுவரெலியாவில் பாடசாலை ஒன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதன் பேரில் அதே பாடசாலையின் விஞ்ஞான பாட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் குறித்த மாணவிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளையும் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்தோடு, பாடசாலையில் 9 ஆம் தரத்தின் பொறுப்பான ஆசிரியரும் இவரே என்றும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் வாட்செப் செயலியின் ஊடாக நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருப்பதும் தெரியவந்ததையடுத்து அவரது தொலைபேசியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (21) வலப்பனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவிகள் மூவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக ரிக்கிலகஸ்கட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்ய முடியும் – பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனின் தொடரும் கைதுகள்!

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்நாள் சுற்றிவளைப்புகளில் 2296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்ய முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

 

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முப்படைகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்த விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் சுற்றிவளைப்புகளில் 2,296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 6,583 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

இவற்றுள் செவ்வாய்க்கிழமை (19) இரவு புளுமெண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை, சட்டவிரோத மதுபானம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஹொரனை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை கொரியர் சேவையூடாக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்து வந்த யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சியம்பலாவௌ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கோப்பாய் பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபரிடமிருந்து இதன்போது வெவ்வேறு வகையான போதைப்பொருள் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 ஆயிரம் போதைப்பொருள் மாத்திரைகளுடன் மீனவர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 184 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் தேடப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும் இதன்போது 1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் மாவா மற்றும் 19,507 போதைப்பொருள் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இணையத்தை பயன்படுத்தி பௌத்த சமயத்தை அவமதிக்கும் சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு!

இணையத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவுகள் இடப்பட்டுள்ள சமூக வலைத்தள கணக்குகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதியளித்து கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். இளங்கசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இணையத்தைப் பயன்படுத்தி ‘புஸ் புத்தா’, ‘புஸ் புத்தாவைப் பின்பற்றுபவர்கள்’ என்ற பெயர்களில் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் பௌத்தம் மற்றும் புத்தரை அவமதிக்கும் வகையிலான பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கண்டியில் 132 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – கண்டி தேசிய வைத்தியசாலை

கண்டி மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், கடந்த 3 வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த 132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் பாலித பண்டார சுபசிங்ஹ, கண்டி மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், சுமார் 132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

 

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சிறுமிகளின் பெரும்பாலானோர் தங்களுடைய விருப்பத்தின் பேரிலேயே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டள்ளமையானது பெரும் அபாயகரமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில், 16 வயதுக்கும் குறைந்த சிறுமிகள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 6 ஆயிரத்து 307 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.