இலங்கையில் சிறுவர்கள் விளம்பர படங்களில் நடிக்க தடை – அனுர அரசின் வர்த்தமானி விரைவில்!
ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார்
“குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி 1ம் திகதி முதல் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான வர்த்தமானியை அமல்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்துள்ளோம். ஏனெனில் கடந்த அரசாங்கங்கள் இதனை 7-8 வருடங்களாக இழுத்தடிப்பு செய்தன. கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம், அதை நாங்கள் இழுத்தடிக்க போவதில்லை. ஜனவரி 1 முதல் இதை அமல்படுத்துவோம்.” என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
தொடரும் இனப்படுகொலை – இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் படுகொலை செய்கிறது என சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தனர். இப்போரில் இதுவரை 44,600பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளதாக சர்வதேச சேவை அமைப்புகள் அறிவித்துள்ளன. இதேவேளை பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் அமைப்பு (Committee to Protect Journalists ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 180க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அதிகமானோர் பாலஸ்தீனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் இன அழிப்பில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபை அமைப்பினுடைய விரிவான அறிக்கையில் ,
“ இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் நடத்தும் தாக்குதலை ஆய்வு செய்ததில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இன அழிப்பில் ஈடுபடுவது தெரியவருகிறது. இது சர்வதேச சமுதாயத்துக்கு ஓர் எச்சரிக்கை மணியாகும். இந்த இன இழிப்பு இப்போதே தடுத்து நிறுத்தப்படவேண்டும். இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாதுதான். அதே போல், காஸாவில் பொதுமக்களிடையே ஆயுதக் குழுவினர் கலந்திருப்பதையும் மறுப்பதிற்கில்லை. ஆனால், அந்தப் பகுதியில் இஸ்ரேல் நடத்திவருவது இன அழிப்பே ஆகும். இந்தக் குற்றத்துக்கு அமெரிக்காவும் இஸ்ரேலின் பிற நட்பு நாடுகளும் துணை போவதாகவே கருத முடியும். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சர்வதேச மன்னிப்பு சபைய் இந்த ஆய்வறிக்கை உண்மைகளைத் திரித்து பொய்யாகப் புனையப்பட்டது என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்புக் குறித்து தனது எக்ஸ் பக்கதில் பதிவிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,
இலங்கையின் மீட்புக்கு முக்கிய பங்காற்றிய யுஎஸ் எய்ட் மற்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் சந்திப்பை மேற்கொண்டார்.
இதன்போது, இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம்.
மேலும், இலங்கையின் மக்கள் நலனுக்காக பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை ஆதரிக்கத் தகுந்த திட்டங்கள், திறன் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம் நாம் இணைந்து செயல்படக்கூடிய வழிகளை இதன்போது ஆராய்ந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது – டிஜிட்டல் அமைச்சராக பொறுப்பேற்றார் ஜனாதிபதி அனுர!
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார திட்டங்கள் வெறுமனே ஐந்தாண்டு திட்டங்களை கொண்டவை அல்ல மாறாக அது இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கான பயணம் எனவும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பில் தங்களுடைய அதிக பார்வையும் கவனமும் இன்னமும் ஆழமாக இருக்கும் என தேசம் நெட் நேர்காணலில் தேசிய புத்தி ஜீவிகள் அமைப்பின் வடக்கு மாகாண இணைப்பாளர் அருள் கோகிலன் தெரிவித்திருந்தார். பாரம்பரிய பொருளாதார செயல்முறைகளை டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மறுசீரமைப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணையவெளி தளங்களை பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன் இலங்கையின் உற்பத்தி துறையை விருத்தி செய்யும் போது குறித்த உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தைகளை உருவாக்கி, ஏற்றுமதியை உயர்த்த நாம் எதிர்பார்ப்பதாகவும் அருள் கோகிலன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் 05.12.2024 அன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க டிஜிட்டல் அமைச்சராக பொறுப்பேற்றிருந்ததானது இலங்கையை டிஜிட்டல் துறை மற்றும் அதனூடாக டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தேசிய மக்கள் சக்தி கொடுக்கும் முக்கியத்துவத்தை தெளிவாக வெளிக்காட்டியிருந்தது. டிஜிட்டல் அமைச்சை பொறுப்பேற்றதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில் , நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில் வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும், வறுமையை ஒழித்தல், சமூக மனப்பாங்குகளை மாற்றுதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என்பன அரசாங்கத்தின் பிரதான இலக்குகளாகும். கட்டிடங்களை நிர்மாணிப்பதனால் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தியடையாது, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை அமைச்சொன்று இருந்ததை நினைவு கூர்ந்ததோடு, தற்போது ஒவ்வொரு அமைச்சும் நிர்மாணப் பணிகளையே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மனதார ஏற்கவில்லை .ஆனால் மதிப்பளிக்கிறோம் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தனது கன்னி உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாங்கள் எதிர்க்கட்சி என்ற பெயருடன் அமர்ந்துள்ளோம்.ஆனாலும் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முற்போக்கான செயற்பாடுகளுக்கும் நாம் உங்களுடன் இருப்போம். சிறுபராயத்தில் இருந்தே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலையுடன் வளர்ந்தவர்கள் நாங்கள்.
எனது தந்தை ஒரு பொதுநலவாதி, தனது வாழ்க்கை முழுவதும் தூய்மையான கம்யூனிசவாதியாக வாழ்ந்தவர். நான் அவரின் வளர்ப்பில் வந்ததால் இன,மத, குல வேறுபாடு எனக்கில்லை. ஆனால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையானவர்கள் அனைத்து விதத்திலும் இந்த நாட்டின் ஏனைய மக்களுடன் சமனாக நடத்தைப்படவில்லை என்ற எண்ணத்துடன் வளர்ந்தவர்கள். அதனாலோ என்னவோ எமது நாட்டின் தேசியகீதத்தையும் தேசியக்கொடியையும் நாங்கள் மனதார விரும்பவில்லை, ஆனால் மதிப்பளிக்கின்றோம். இந்த மனநிலை எனக்கு மட்டுமல்ல எனது வயதையொட்டிய இன்னும் பல ஆயிரக்கணக்கனவர்களுக்கு உள்ளது.
ஆனால் அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலை ஏற்பட்டதையிட்டு பல சந்தர்ப்பங்களில் நான் மனவேதனை அடைந்துள்ளேன் .நான் விரும்பும் தேசியகீதத்தையும் நான் விரும்பும் தேசியக்கொடியையும் எனது வாழ்க்கைக்காலத்திற்குள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு இந்த அரசினுடையது.
நான் சொல்ல விழையும் விடயத்தை நீங்கள் அனைவரும் புரிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில் சமாதானம் ஒவ்வோர் மனதிலும் இருந்து தொடங்கவேண்டும் என குறிப்பிட்டார். உண்மை, ஆனால் அதை எங்கிருந்து தொடங்கலாம் என்று சிந்தித்தாலத அது உங்கள் பக்கத்திலிருந்துதான் தொடங்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
யுத்தத்தால் இறந்த உறவுகளை வணங்கும் நினைவேந்தலுக்கு நீங்கள் தடை போடவில்லை, அது உங்கள் நல்லெண்ணத்தை காட்டுகிறது. அதேநேரம் பலநூற்றுக்கணக்கான இறந்தவர்களின் உடல் புதைக்கப்பட்ட துயிலும் இல்லத்தில் இன்று இராணுவமுகாம் உள்ளது, இவ்விடத்தை விடுவிக்க நடவடிக்கை எடுத்து நல்லெண்ணத்தை காட்டுங்கள்.
அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யுங்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு மனச்சாட்சியுடன் விடையை தேடுங்கள், அதனூடாக உங்கள் நல்லெண்ணத்தை காட்டுங்கள். மகாவலி – எல் வலயத்தில் மூவினமக்களிற்கும் காணிகளை பகிர்ந்தளியுங்கள்.
ஜனாதிபதி தலைமையில் வரும் அரசாங்கம் நாட்டில் காணப்படும் இருமுக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் என்ற நம்பிக்கையில்தான்.
முதலாவதாக இந்தநாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு
இரண்டாவதாக பொருளாதார பிரச்சனைக்கான தீர்வு.
முதலாவது பிரச்சனைக்கு தீர்வுகாணாமல் இரண்டாவதற்கு முழுமையான தீர்வொன்றை காணமுடியாது.
ஜனாதிபதி தனது உரையில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை என எமது உறுப்பினர்கள் சொன்னாலும், இரு தினங்களுக்கு முன்னரவ அவரை சந்தித்தபோது அரசியல் தீர்வு விடயத்தில் தனது நேர்மையான நல்லென்னத்தை வெளிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்காலத்தில் புதிய அரசியல் யாப்பின் வரைபு தயாரிக்கப்பட்டபோது வழிநடத்தல் குழுவில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி தனது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
அந்த முயற்சி தொடரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். உங்களுடன் சேர்ந்து முன்செல்ல நாங்கள் தயாராகவே உள்ளோம்.
பொருளாதார பிரச்சனை ஏற்பட காரணம் இடம்பெற்ற யுத்தம், நாட்டின் வளங்களையும் இந்த நாட்டிற்கு உள்ள சந்தர்ப்பங்களையும் பிரதிபலிக்கும் பொருளாதாரக் கொள்கை இன்மையாலம்.
ஆட்சியாளர்களினதும் சகபாடிகளினதும் ஊழல், துஸ்பிரயோகம், வீண்விரயம் யுத்தம் முடிவிற்கு வந்து 15 வருடங்களாகிவிட்டது.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மொத்த தேசிய வருமானத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு எவ்வளவு? இன்று எமது மக்களின் பொருளாதாரம் மிக நலிவடைந்துள்ளது. 15,000 மேற்பட்ட முன்னாள் போராளிகள், 75,000 விசேட தேவைகள் உள்ள மக்கள், பெண் தலைமைத்துவகுடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் என சமூகத்தில் 1/3 பகுதியினர் ஏனையவர்களின் உதவியின்றி சுயமாக எழுந்து நிற்க முடியாதவர்கள்.
எனவே வடக்கு- கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார மீட்சித்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டிய பொறுப்பு இந்த அரசிற்குள்ளது, அதற்கான முயற்சியில் உங்களுக்கு கை கொடுக்க நாங்கள் உள்ளோம்.
தொடர்ந்தும் நிவாரணத்தை நம்பி வாழும் மற்றவர்களில் தங்கிவாழும் சமூகத்தை உருவாக்கதீர்கள். அரசாங்கத்தாலும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதாரத்திட்டங்களை ஆராய்ந்து பாருங்கள். அவற்றில் வெற்றியடைந்த திட்டங்கள் எத்தனை?. தமது சொந்த உழைப்பில் வாழும் சமூகத்தை கட்டியெழுப்ப பொருளாதார திட்டங்களை தீட்டுங்கள். பாழடைந்த குளங்களை புனருத்தாரணம் செய்து விவசாயக்காணியற்ற குடும்பங்களிற்கு குறைந்தது 2 ஏக்கர் வயல் காளிகளை வழங்குங்கள். இவ்வாறான திட்டங்கள் வெற்றியடைய நாமும் உங்களுடன் சேர்ந்து உழைக்க ஆயத்தமாக உள்ளோம்
சர்வதேச சட்டத்திற்கு முரணாக ஆட்கடத்தல்காரர்களால் கடத்திச்செல்லப்பட்டு ரஸ்ய ராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை விடுவித்து தருமாறும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அவர்களது உறவுகள் கோரிக்கை விட்டுள்ளார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலும் சில வார்த்தைகள் சொல்ல எண்ணுகிறேன். திட்டமிடப்படாத கட்டுமானங்களும், வடிகால் அமைப்பு சீரின்மையும் அனுமதியற்ற கட்டிட நிர்மானங்களும் வெள்ளமேற்பட முக்கிய காரணங்களாகும்.
பாதிக்கப்பட்ட மக்களிற்கான உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இங்கும் சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்
இறுதியாக நாங்கள் இந்த நாட்டின் பூர்வ குடியாக, ஒரு தேசிய இனமாக எங்களின் அடையாளங்களை பேணிக்கொண்டு ஒரு பன்முகத்தன்மை உள்ள வளமான நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் என தெரிவித்தார்.
ரஷ்ய இராணுவத்தில் வலிந்து இணைக்கப்பட்ட யாழ் இளைஞர்களை மீட்டுத்தாருங்கள் – பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி – தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் ரஷ்யா !
இலங்கையிலிருந்து முகவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களை மீட்டுத் தருமாறு நாடாளுமன்றத்தில் சி.சிறிதரன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கச்சேரியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றும் கரவெட்டியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் சுயனிகாந் பகீரதன் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த 46 வயதுடைய சுந்தரலிங்கம் பாலச்சந்திரன் மற்றும் யாழ். குருநகரைச் சேர்ந்த 37 வயதுடைய கீதபொன்பலம் பிரதாப் மற்றும் 31 வயது ஸ்ரீபன் சுரேஸ் ஆகியோர் ஏமாற்றப்பட்டு ரஷ்யா இராணுவத்தில் வலிந்து இணைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள அவர்களுடைய புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே கெளரவ சபாநாயகர் அவர்களே இதில் 3 பேரினுடைய படங்களும் இருக்கின்றது. தயவு செய்து இவர்களை இந்த நாட்டுக்கு எடுப்பதற்கு ஒரு வழிமுறையை எடுத்து எம்மிடம் மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என சபையில் சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விசிட் விசா ஊடாக பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகளுக்கு பயணிக்க முற்பட்ட யாழ்.இளைஞர்களை உக்ரைன் யுத்தத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக வௌியான செய்திகள் ஆதராமற்றவை என ரஷ்ய தூதரகம் 04.12.2024 அன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – ரஷ்யா இடையிலான பாரம்பரிய நட்பு ரீதியான உறவை இழக்கச் செய்வதை நோக்காகக் கொண்டு வௌிப்படுத்தப்படும் உறுதிப்படுத்தப்படாத தரவுகள் தொடர்பில் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் எனினும் உள்நாட்டிலுள்ள சட்டவிரோத வௌிநாட்டு முகவரகங்கள் இலங்கையர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியமை தொடர்பில் தூதரகத்திற்கு எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ள கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை தரப்பிலிருந்து ஏதேனும் கோரிக்கைகள் விடுக்கப்படும் பட்சத்தில் ஆதரவு வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ரஷ்ய தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ அல்லது விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
அரசியல், பொருளாதார விடயங்கள் தொடர்பில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ அல்லது விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. எனினும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான போலித் தகவல்களை வெளியிட வேண்டாமென இலத்திரனியல் ஊடக நிறுவன பிரதானிகளிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார்.
இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மிகச்சிறந்த அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில், ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாகவே, தாம் கருதுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பல தசாப்த காலங்கள் நாடு யுத்தத்துக்கு முகம் கொடுத்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.
மகாவலி வந்தால் பிரச்சினை – ‘பார் பெமிட்’ வந்தால் சுயநிர்ணயம் வந்தமாதிரி !
மக்களிடம் சொன்னதை ‘வன்ஸ் மோர்’ தமிழரசுக் கட்சியிடமும் சொன்னார் ஜனாதிபதி !
1. தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழு – ஜனாதிபதி சந்திப்பு: மக்களிடம் சொன்னதை ‘வன்ஸ் மோர்’ தமிழரசுக் கட்சியிடமும் சொன்னார் ஜனாதிபதி !
ஜனாதிபதி அனுரவைச் சந்தித்த தமிழரசுக் கட்சியிடம் ஜனாதிபதி புதிதாக எதுவும் சொல்லவில்லை. வாக்குறுதிகளும் வழங்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களிடம் என்ன சொல்லப்பட்டதோ அதனை ‘வன்ஸ் மோர்’ தமிழரசுக் கட்சியிடமும் ஜனாதிபதி அனுரா சொல்லியுள்ளார். ஜனாதிபதி அநுரவை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து ஒரு மணிநேரம் கலந்துரையாடியுள்ளனர். வடக்கு, கிழக்கில் தெரிவு செய்ப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், ராசமாணிக்கம் சாணக்கியன்;, ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளயதம்பி சிறிநாத், துரைராசா ரவிகரன் ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். “இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போதே கவனத்தில் கொள்ள முடியும் என அவர் எம்மிடம் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருட இறுதிக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எம்மிடம் உறுதியளித்தார். 13ஆவது திருத்தம் தொடர்பில் அவர் எம்மிடம் எதுவும் கூறவில்லை. உள்ளூராட்சித் தேர்தலை நீதிமன்ற உத்தரவின் படி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்” என்றும் பா உ சிறிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பா உ சிறிதரன் மேலும் குறிப்பிடுகையில் காணாமற்போனோர் விடயத்தில் தம்மால் உடனடியாக எதுவும் செய்ய இயலாது என்றும் படிப்படியாக அந்த விடயத்துக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொல்பொருள் திணைக்களம், வனவள திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் காணிகள் விடுவிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
2. ஊழலற்ற ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தை வரவேற்கின்றோம் – உலகவங்கி
ஊழலற்ற ‘சுத்தமான இலங்கை’ க்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் பரமேஸ்வரன் ஐயர். சுத்தமான இலங்கை திட்டத்தை வரவேற்றுள்ள ஐயர், இதுவைர இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுள்ள திட்டங்களை எவ்வித தடையுமின்றி தொடர்வோம் எனவும் மேலும் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் உலகவங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜனாதிபதி அனுரவுடன் தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த, பிரதி நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சருமான கலாநிதி ஹார்சன சூரியப்பெருமா ஜனாதிபதியின் செயலாளர் நத்திக சனத் குமாரநாயக்கே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில் ஜனாதிபதி அனுரா தன்னுடைய எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை உலகவங்கியோடு கலந்துரையாடினார். கிராமப்புறங்களில் வறுமையை இல்லாதொழிப்பது, பொருளாதாரத்தை எண்ணியப்படுத்துவது – டிஜிற்றலைசேசன், எண்ணிய அடையாள அட்டை டிஜிற்றல் ஐடி காட் என்பன பற்றி ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார். வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறிப்பாக மலைநாட்டு மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைக் கையாள்வது பற்றியும் உரையாடப்பட்டுள்ளது. விவசாயம். மீன்பிடி, சுற்றுலாத்துறை, கல்வி, சுகாதாரம் என்பவற்றின் வளர்ச்சி தன்னுடைய அரசாங்கத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என ஜனாதிபதி அனுர சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அவற்றை மேற்கொண்டு பார்ப்பதற்கான ஆலோசணைக் குழுவை அமைக்க உலக வங்கி தயாராக இருப்பதாக பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.
3. 13வது திருத்தச் சட்டம் யாருக்கு லாபம்!
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறை கொஞ்சம் கூட முஸ்லீம் மக்களை கவனத்தில் கொண்டு உருவாக்கப்படவில்லை என சட்டத்தரணியும் – சமூக செயற்பாட்டாளருமான சைய்ட் பஷீர் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களும் – தமிழ் அரசியல்வாதிகளும் தங்களை பெரும்பான்மை சிங்களவர்கள் அடக்குகிறார்கள் என கூறிக்கொண்டே தங்களுக்குள் உள்ள இன்னுமொரு இனத்தவர்களான தமிழ்பேசும் முஸ்லீம்களை – அவர்களின் அரசியல் உரிமைகளை கிஞ்சித்தும் கணக்கெடுக்காத துயரம் தொடர்கிறது. புலிகளின் வழியில் முஸ்லீம் எதிர்ப்பு அரசியல் தொடர்வதாக பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களும் தமிழர்களும் இணைந்து வாழும் ஓர் இணைப்பான சூழல் உள்ள நிலையில் முஸ்லீம் எதிர்ப்பை சூசகமாக வெளிப்படுத்தியே இரா.சாணக்கியன் தன் பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைத்துக் கொண்டார் என சமூக வலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே முஸ்லிம்களுக்கு கொஞ்சமும் சாதகமான சூழல் இல்லாத மாகாண சபை முறையை தமிழ்தேசிய அரசியல் தரப்பு மீள மீள வலியுறுத்தி வருகிறது. கிழக்கில் தமிழ், முஸ்லீம், சிங்கள் மக்கள் சரிக்குச் சமனாக ஒவ்வொருவரும் உள்ளனர். ஆனால் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லீம்கள் 18 வீதமாகச் சிறுபான்மையினராக்கப்பட்டனர்.
தமிழர்களுக்கான தீர்வு என இந்திய நலன்விரும்பிகள் எதிர்பார்த்த மாகாண சபை முறை முழுவதுமாக ஊழல் நிறைந்ததாகவும் – பக்கச்சார்பாகவும் காணப்பட்ட நிலையில் அது தோல்வியடைந்த அமைப்பாக மாறியது அறிந்ததே. இதேநேரம் தமிழர்களை காக்க வந்த மீட்பர் என கஜா – கஜா அணியினர், தமிழரசுக் கட்சியினர் பதவியேற்றிய நீதியரசர் விக்கினேஸ்வரன் முதலமைச்சர் பதவியையும் அனுபவித்து பார்பேர்மிட் பெற்றது தான் மிச்சம். இதேவேளை 13ஆவது திருத்தம் வேண்டாம், மாகாண சபை வேண்டாம் என கூறி தெருத்தெருவாக கோசமிட்டு திரிந்த கஜா – கஜா அணி மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது. இப்படியான நிலையில் எந்த பயனுமே இல்லாத மாகாண சபை முறையை நீக்கி அதற்கு மேலான அதிகாரங்களுடன் கூடிய ஓர் அரசமைப்பு முறையை கொண்டுவர எண்ணுகிறோம் என தேசிய மக்கள் சக்தி கூறியதற்கு தான் இத்தனை எதிர்ப்புக்களை முன்வைக்கின்றனர் குறுந்தேசியவாதிகள்.
இந்த நிலையில் தேசம் நெட் நேர்காணலில் பேசிய சட்டத்தரணி சைய்ட் பஷீர் “மாகாண சபை முறையால் முஸ்லீம்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. மாறாக அது புதிய பல சிக்கல்களைத்தான் தோற்றுவித்தது. இதனாலேயே மூத்த அரசியல்வாதி அஷ்ரப் 13ஆவது திருத்தம் முஸ்லீம்களின் மீது எழுதப்பட்ட அடிமைசாசாசனம் என கூறுகிறார். தேசிய மக்கள் சக்தி அனைத்து மக்களுக்கும் பயனளிக்க கூடிய ஓர் அரசியலமைப்பு முறையை உருவாக்க எத்தனிக்கிறது. அதற்கு சிறுபான்மை இனங்களின் தலைவர்கள் இடமளிக்க வேண்டும் என்கிறார். இதேவேளை பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க , இன்னும் மூன்று வருடங்களில் தான் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும். அனைத்து தரப்பினருடனும் பேசியே அரசியலமைப்பு பற்றிய தீர்மானங்கள் எட்டப்படும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
4. அரசாங்கத்துக்கும் மக்களுக்குமான ஒப்பந்தம் – கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றம்:
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. கடந்த நவம்பர் 21 ஆம் திகதி 10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்திருந்தார். கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க: நீதித்துறையின் மாண்பு மீள உறுதி செய்யப்படும், ஊழல் – பக்கச்சார்பற்ற அரசசேவை முன்னெடுக்கப்படும், இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை, இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை, நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் போன்ற விடயங்களை வலியுறுத்தியிருந்தமை கவனிக்கத்தக்கது.
அவருடைய உரையின் பெரும்பகுதி பொருளாதாரம் மற்றும் அதனை மீளக் கட்டியெழுப்புவது பற்றியுமே அமைந்திருந்தது. பொருளாதார அபிவிருத்தியை ஜனநாயகப்படுத்துவது பற்றி தனது கொள்கைப் பிரகடன உரையில் குறிப்பிடுகையில் மேல்மாகாணம் மற்றும் அல்லாமல் பொருளாதார அபிவிருத்தி எல்லா மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு அதன் செல்வம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பகிரப்படும் எனவும் தெரிவித்திருந்தார். சிறுவர்களின் வறுமை ஒழிப்பு கல்வி என்பனவற்றுக்கும் அக்கொள்கைப் பிரகடனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக் தவிர்க்க முடியாமல் ஐஎம்எப் இன் விதிமுறைகளை அனுசரித்துச் செல்லவேண்டிய கட்டாயத்தையும் ஜனாதிபதி அனுரா குறிப்பிட்டிருந்தார். நாட்டு மக்கள் தேர்தல் வாக்களிப்பினூடாக அரசாங்கத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அந்த ஒப்பந்தப்படி அம்மக்களுடைய நலனின் அடிப்படையில் ஆட்சியை நடத்துவோம் என்ற உறுதியையும் ஜனாதிபதி அனுர தனது கொள்கைப் பிரகடணத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
புதிதாக மதுபான சாலைக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார். இது பா உ சிறிதரனை குறிவைத்து சுமந்திரனால் எய்யப்பட்ட அம்பா என்றும் அரசியல் அவதானிகள் புருவத்தை உயர்த்துகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் முதல் பார்பெர்மிட் தொடர்பான விடயங்கள் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருந்தது. பார் பெமிட் கொடுத்தவர்கள் தேர்தலில் நிற்கவே பயந்து ஒதுங்கிக்கொண்டனர் முன்னால் வடமாகாண முதலமைச்சர். மணிவண்ணனின் மான் தோல்வியடைந்ததற்கு இவரே காரணம் என பலரும் விரல் நீட்டினர். ஒதுங்காதவர்கள் மக்களால் ஒதுக்கப்பட்டனர். சிலர் உச்சிக்கொண்டு திரும்பவும் பாராளுமன்றம் வந்துவிட்டனர்.
இப்பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்களை 2024ஆம் ஆண்டில் வழங்கியுள்ளார், ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 21, 2024 வரை 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்ததாக அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ”மொத்தமாக 362 அனுமதிப் பத்திரங்களில் 172 அனுமதிப் பத்திரங்கள் குடு4 எனப்படும் சில்லறை மதுபான விற்பனை (றiநெ ளவழசநள) அனுமதிப் பத்திரங்களாகும். இதன்படி வடக்கு மாகாணத்துக்கு 32 அனுமதிப்பத்திரங்களும், கிழக்கு மாகாணத்துக்கு 22 அனுமதிப்பத்திரஙகளும் வழங்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகப்படியான மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள விடயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாட்டின் தலைநகரான மக்கள் தொகை அதிகமானதும் செறிவானதுமான கொழும்பு மாவட்டத்துக்கு 24 மதுபான சாலைகளும் கம்பஹா மாவட்டத்துக்கு 18 மதுபான சாலைகளுக்குமான அனுமதியே வழங்கப்பட சனத்தொகை குறைந்த களிநொச்சி மாவட்டத்தில் 16 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2 என்ற வகையிலும் மதுபானச்சாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கில் மட்டக்களப்பு 1, திருகோணமலை 4, அம்பாறை 5 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள்: மேல் மாகாணத்துக்கு 110 மதுபான அனுமதிப் பத்திரங்களும், தென் மாகாணத்துக்கு 48, மத்திய மாகாணத்துக்கு 45, வடமத்திய மாகாணத்துக்கு 14, வடமேல் மாகாணத்துக்கு 30, ஊவா மாகாணத்துக்கு 30, சப்ரகமுவ மாகாணத்துக்கு 30 என்ற அடிப்படையில் 331 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள மதுபான சாலைகள் தொடர்பில் அப்பகுதி அரசியல்வாதியன பா உ எஸ் சிறீதரன் தான் அவ்வாறு எந்த பார் பெமிற்றும் எடுக்கவில்லை என்றும் யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை என்றும் அவ்வாறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் தேர்தலுக்கு முன்னதாக சூழுரைத்திருந்தார்.
ஏற்கனவே கிளிநொச்சியின் பகுதிகளில் வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை, என சமூக சீர்கேடுகள் மலிந்து போயுள்ள நிலையில் புதிதாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான சாலைகளில் பெட்டிக்கடைகள் போல மதுபான சாலைகள் குவிந்து போயுள்ளது என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர். இதேவேளை பாடசாலைகள் மற்றும் வழிபாட்டு தலங்களை அண்மித்த இடங்களில் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என்ற நியதி காணப்படும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப் பிரதான நகரப் பாடசாலைகளுக்கு அருகில் இரண்டு அல்லது மூன்று என்ற வகையில் சாராயக் கடைகள் காணப்படுவது எதிர்கால தலைமுறையினருக்கு கல்வி மீதான நாட்டம் குறைவடைய காரணமாக அமையும் எனவும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மீதும் சமூகவலைத் தளங்களில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றது. முன்னதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்கினேஸ்வரன் ஓர் மதுபான சாலைக்க்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்று ஓர் பெண்ணுக்கான வாழ்வாதார உதவி வழங்கியதாக கூறியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.
சர்வதேசச் செய்திகள்: சர்வதேச அரசியலில் ஏற்பட்டுள்ள கொதிநிலைகள் மற்றும் பதட்டங்கள்
6. தென்கொரியாவில் இராணுவச் சட்டம் உடனடியாக முடிவுக்கு வந்தாலும் பதட்டம் தொடர்கின்றது!
தென் கொரியாவில் டிசம்பர் 03ஆம் திகதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட ராணுவ ஆட்சி டிசம்பர் 4 திரும்பப் பெறப்பட்டது. ஆனால், மக்கள் தொடர்ந்து அதிபர் யூன் சாக் யோல் பதவியில் இருந்து விலக வேண்டும் எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்கொரியாவில் 1979ஆம் ஆண்டு ராணுவ ஆட்சி இருந்திருக்கின்றது. அதற்குப் பின் இப்போது தான் மறுபடியும் இராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றவும் அரசியலமைப்பை பாதுகாக்கவுமே இத்தகையை நடவடிக்கையை எடுத்தாக அதிபர் யூன் சாக் யோல் அரச தொலைக்காட்சியூடாக மக்களுக்கு உரையாற்றி உள்ளார்.
ஆனால் அதிபரின் மனைவி ஊழல்களில் சம்பந்தப்பட்டதும் இமெல்டா மார்க்கோஸ் போல் பொருட்களை வாங்கிக் குவிப்பதும் அதனை எதிர்க்கட்சிகள் கேள்விக்கு உட்படுத்தியதும் இந்த இராணுவச் சட்டங்களுக்குப் பின்னிருந்த காரணம் எனத் தெரியவருகின்றது. அதனால் எதற்கும் சமாதானம் அடையாத தென்கொரிய மக்கள் அதிபர் யூன் சாக் யோலை பதவி விலக கோரி தெருவில் இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
7. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போய் டொனால் ட்ரம் வருமுன் போர்க்களங்களைத் திறக்கிறது அமெரிக்கா!
மறுபுறம் சிரியா உள்நாட்டு போர் தொடங்கி 14 வருடங்களின் பின்னர் இப்போது மேற்கு நாடுகளின் துணையோடு செயற்படும் கிளர்ச்சிப் படைகள் அசாத் அரசாங்கத்திற்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஆதரவு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (ர்வுளு) எனும் ஜிகாதிகள் சிரியாவின் இரண்டாவது பெரிய நகரான அலப்போவை கைப்பற்றியதன் மூலம் காத்திரமான வெற்றியை அடைந்து தொடர்ந்து ரஸ்ய மற்றும் ஈரானிய ஆதரவு ஆட்சியாளர் அசாத் படைகளை சண்டையில் பின்வாங்கச் செய்து முன்னேறி வருகின்றனர்.
அசாத்திற்கு ஆதரவு கொடுக்கும் முகமாக 2016க்குப் பின்னர் ரஸ்யாவும் வான்வெளியாக விமானத் தாக்குதலை தொடங்கியுள்ளது. கடந்த 2018 முதல் சிரியா, உள்நாட்டுப் போரால் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ‘பஷர் அல்-அசாத், குர்திஷ் படைகள், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் என அனைவரும் வெவ்வேறு பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். சிரிய உள்நாட்டுப் போர் மீண்டும் கொழுந்துவிட்டெரிய அமெரிக்காவின் பைடன் அரசாங்கத்தின் தூண்டுதல் பின்னணியில் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஜனவரியில் புதிய ஜனாதிபதி டொனால்ட் ரம் பதவியேற்க முன்னரே பைடன் தனது ஆட்சியின் குறுகிய இறுதிக்காலத்திற்குள் மனித சமுதாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்திவிட்டு போகப் போறார் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இதையே தான் உக்கிரைன்- மற்றும் ரஸ்ய போரிலும் பைடன் செய்துள்ளார். சமீப வாரங்களில் உக்கிரைனுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியளித்து ரஸ்யாவை தூண்டிவிட்டுள்ளார். தற்போது ரஸ்ய மற்றும் உக்கிரைனுக்கிடையிலான யுத்தம் ஐரோப்பிய நேட்டோ நாடுகளுக்கும் பரவும் அபாயம் தோன்றியுள்ளது. ஆயுத வியாபாரிகள் வயிறு வளர்க்க உலகெங்கும் ஆயுதமோதல்கள் காலங்காலமாக மேலாதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டு வருகின்றன.
8. பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது!
சிறுபான்மை அரசுகளால் ஆளப்படும் மேற்கு ஜரோப்பிய நாடுகள். ஜேர்மனி வரிசையில் பிரான்ஸிலும் நடப்பு பிரதமர் மிஷெல் பார்னியோர் தலைமையிலான அரசாங்கம் டிசம்பர் 4 இல் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் கவிழ்ந்தது. இடது மற்றும் தீவிர வலதுசாரிகள் உட்பட பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள் 574 பேர்களில் 331 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரான்ஸில் புதிய தேர்தலுக்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.
இதேபோன்று கடந்த வாரங்களில் ஜேர்மனியில் ஆளும் ஓலாப் சொல்ஸ் தலையிலான கூட்டணிக்கட்சி அரசாங்கம் ஆட்சியிலிருந்து எப். டி. பி கட்சி வெளியேறியதை தொடர்ந்து அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இழந்துள்ளது. வரும் வாரங்களில் ஜேர்மனியின் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெற உள்ளமையும் புதிய தேர்தலுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் தொழில்துறை வீழ்ச்சியால் கடும் பொருளாதார நெருக்கடியை இந்நாடுகள் சந்தித்து வருகின்றன. பிழையான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளால் விரக்கத்தியடைந்துள்ள பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நாட்டு மக்கள் தீவிர வலதுசாரி கட்சிகளின் பரப்புரைகளின்பால் ஈர்க்கப்பட்டு வருகின்றமை இந்நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டவர்களுக்கு இருப்பிற்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவுக்கு செல்லவுள்ளோருக்கு செக் வைத்த கனடா – தமிழிலும் வெளியான கனேடிய அரசின் அறிவித்தல் !
அண்மைய காலங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கனடா நோக்கி விசிட் விசாவில் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுதாண்டி கனடா மோகம் தமிழர் பகுதிகளில் உள்ள மாணவர்கள் இடையே ஆழமாக ஊடுருவி உள்ளதை சர்வசாதாரணமாக அவதானிக்க முடிவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி மீதான ஆர்வம் மிக்க பின்தங்கிய நிலையை அடைந்துள்ளதாகவும் கல்வியாளர்கள் பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் கனடாக்கனவை வளர்த்துள்ள பல இலங்கை வாழ் தமிழர்களுக்கு இடியாய் ஓர் செய்தியை கனேடிய அரசு வெளியிட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் புலம்பெயர்வோரையும், அகதிகளையும் பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கும் நாடாக இருந்துவரும் கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.
இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ் உள்ளடங்கலாக 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்படவிருப்பதாக கனடாவின் குடிவரவுத்திணைக்களம் ‘ரொயிட்டர்’ செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளது.
அகதி அந்தஸ்த்து கோரலை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தினால் இப்பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த 4 மாத இணையவழி விளம்பர பிரசாரத்துக்காக கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இதனைப்போன்ற விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத்தொகையில் மூன்று பங்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று (04) இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பி இருந்தார்.
தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
Bar Permit பெற்றுக் கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு நான் எழுப்பிய கேள்விக்கு அமைய Chief Government Whips அவர்கள் கடந்த 03 ஆம் திகதி மாலை அந்த தகவல்களை வெளியிடுவதாக கூறியிருந்தார். அதற்கமைவாக ஆளும் கட்சியினுடைய சபைக்குரிய தலைவர் ரத்னாயக்க அவர்கள் மாலை வேளையில் அப் பட்டியலினை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பட்டியலில் Bar Permit பெற்றுக் கொண்டோருடைய பெயர்கள் மாத்திரம் காணப்பட்டதே வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆகவே இவ்வாறான விண்ணப்பங்கள் வருகின்ற பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட சிபார்சு கடிதங்கள், ஏனைய விண்ணப்ப விடயங்கள் தற்போது எங்கே உள்ளதென்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது CID அல்லது ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றதா? என்பது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 18 Bar Permits வழங்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் காணப்படுகின்றனர். ஆகவே 5,000 வாக்காளர்களுக்கு 1 Bar எனும் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா? இல்லையா? என்பதற்கான பதிலை கூறுவதுடன் அவ்வாறு இரத்து செய்யாதுவிடின் வழங்கப்பட்ட Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். Bar Permit தொடர்பிலான இந்த கேள்வியை எழுப்புமாறு மக்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இச் சபையிலே இக் கேள்வியை தொடுத்தேன் என தெரிவித்தார்.