“அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் 15,000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வீடு திருத்த வேலைகளுக்காக இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படும் என அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் ஊடாக பயனாளிகளுக்கு இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டு வீடமைப்பு அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 7,650 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் முதல் வேலைத்திட்டமாக “அனைவருக்கும் வீடு” வீடமைப்பு கடன் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், கடந்த காலத்தில் பல்வேறு அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட 98,000 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அதிகார சபை கூறுகிறது.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.
இது தவிர, 94 கிராமங்களில் 2,063 வீடுகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 690 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 337 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மாத்தளை, கிளிநொச்சி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில வீட்டுக் கிராமங்களின் நிர்மாணப் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்காக செலவிடப்படும் மொத்தத் தொகை 1,200 மில்லியன் ரூபாவாகும். இதில் 803 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. நிர்மாணப் பணிகளின் இறுதிக்கட்டத்தில் வீடுகளுக்காக 397 மில்லியன் ரூபா பெறப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்திய உதவியின் கீழ் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஒரு பயனாளிக்கு 5 இலட்சம் ரூபாவும், திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் 100,000/= ரூபாவும் மொத்தமாக 6 இலட்சம்ரூபாவும் உதவித்தொகை மீளப் பெறாத அடிப்படையில் வழங்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
கடந்த 2020-2023 ஆகிய மூன்று ஆண்டுகளில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது நாடு முழுவதும் நிர்மாணிக்க ஆரம்பித்த 37,356 வீடுகளில் 30,894 வீடுகளைப் பூரணமாக நிர்மாணித்து முடித்துள்ளது.
மேலும் 6462 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை, மிஹிந்து நிவஹன, விரு சுமித்துரு, செவன மற்றும் சேவாபிமானி உட்பட 15 வீடமைப்பு உதவித் திட்டங்களின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த வீட்டுத் திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.18717.771 மில்லியன் ஆகும். இதுவரை 17146.078 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட திட்டங்களுக்குத் தொடர்புடைய திறைசேரி நிதி, செவன நிதி, உள்ளக உற்பத்தி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் பெறப்பட்ட பணத்தின் மூலம் வீட்டுத் திட்டங்களுக்கான பணம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவிக்கிறது.