January

January

“பணத்தை தங்கள் பாக்கெட்டுகளில் போடுவதற்காக வரி விலக்கு அளிக்கும் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.” -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பணம் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“பணத்தை தங்கள் பாக்கெட்டுகளில் போடுவதற்காக வரி விலக்கு அளிக்கும் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரத்தினக்கல் தொழிற்துறையை பாரியளவில் முன்னேற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம்.

 

ஏனைய நாடுகளிடம் எப்போதும் உதவி கேட்க முடியாது. நமக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும். அதற்கு நாட்டின் பொருளாதாரம் தயார் படுத்தப்பட வேண்டும்.வாக்குறுதிகளை அளித்து இவற்றைச் செய்ய முடியாது.

 

அந்நியச் செலாவணியை ஈட்டும் புதிய பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். அது ஏற்றுமதி பொருளாதாரமாக இருக்க வேண்டும். மேலும், சுற்றுலாத்துறை மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.

நாம் ஒரு நாடாக முன்னேறுவதாக இருந்தால், நமது முயற்சியின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும்.

யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும். ஆனால் பெறுபேறுகள் கிடைக்க வேண்டும்.

நாம் அனைவரும் நாட்டின் உண்மையான நிலைமையை புரிந்து கொண்டு முன்னேறினால் 02 வருடங்களின் பின்னர் இந்நிலையிலிருந்து விடுபட முடியும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் சுமார் 25,000 பேர் வரை வருமான வரி இலக்கத்திற்கு பதிவு செய்கிறார்கள் !

நாளாந்தம் சுமார் 25,000 பேர் டின் இலக்கத்திற்காக பதிவு செய்கிறார்கள் என உள்நாட்டு வருவாய்த் துறை பணியாளர்கள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.டி.சந்தனா தெரிவித்துள்ளார்.

இதேவேளை TIN இலக்கத்தை கட்டாயமாக்குவதற்கான கால அவகாசத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவிதார்

 

முன்னதாக பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் TIN இலக்கத்தை பெற்றுக் கொள்வது கட்டாயம் என நிதி அமைச்சு அறிவித்திருந்தது.

 

இதேவேளை, நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் TIN இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்திய நடவடிக்கை – 863 சந்தேக நபர்கள் கைது !

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 863 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு கைதானவர்களில் 24 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் போதைக்கு அடிமையான 19 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

 

இந்த நடவடிக்கையின் போது 303 கிராம் ஹெராயின் போதைபொருள், 141 கிராம் ஐஸ் போதைப்பொருள், 10 கிலோ கஞ்சா, 66, 0573 கஞ்சா செடிகள், 4 கஞ்சா சுருட்டுகள் , 29 கிராம் தூல் போதைப்பொருள், 1250 போதை மாத்திரைகள், 135 கிராம் மதன மோதக குளிசைகள், ஒரு கிராம் குஷ் போதைபொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன .

 

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 39 பேர் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண், பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்த புதிய சட்டம் –

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்தார்.

 

ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

 

நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த வகையில் தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

அதற்கமையவே நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாகவும், தோட்ட பாடசாலைகள் தவிர்ந்த பாலர் பாடசாலைகளில் மட்டும் 120,000 மாணவர்கள் இருப்பதாகவும் தோட்ட பாலர் பாடசாலைகளிலிருக்கும் 35,000 மாணவர்களும் உள்ளடங்களாக 155,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார்.

 

அதேபோல் கர்பிணித் தாய்மாருக்கான போசாக்குப் பொதிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக 220,214 கர்பிணித் தாய்மாருக்கு 4,500 பெறுமதியான போசாக்கு பொதிகளை 10 மாதங்களுக்கு வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் பாலர் பாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் பாலர் பருவகால மேம்பாடு தொடர்பிலான தேசிய செயலாளர் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் 18,333 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பாலர் பாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 2500 ரூபாயினை வழங்கவும், அது போதுமான தொகை இல்லை என்பதால் அதனை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் அமைச்சினால் மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு 03 புதிய சட்டங்களை கொண்டுவரவிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதற்கமைய, ஆண், பெண் சமத்துவ சட்டம். (Gender Equality Bill) ஊடாக ஆண், பெண் சமத்துவத்தை பாதுகாக்கவும், LGBTIQ ஊடாக ஆண், பெண் சமூக சமத்துவத்தை நிலைப்படுத்தும் சபையொன்றை நிறுவி அதன் கீழ் சமூக சமத்துவ மத்தியஸ்த அதிகாரிகளின் (Gender Focal Point) என்ற அரச நிறுவனத்திற்கான ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல் பெண்கள் வௌிநாடு செல்லும் போது குழந்தையின் வயது குறைந்தபட்சம் 5 ஆக கருத்தில் கொள்ளப்படும் என்றும், 05 வயதுக்கு குறைவான குழந்தைகளிருக்கும் எத்தனை தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலக மட்டத்தில் தேடியறிவிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல் மாகாண ஆளுநர்கள், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் அறிவித்து மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் (CCTV) பொருத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

அதேபோல் பொது போக்குவரத்து சேவைகளுக்குள் பெண்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிகளை ஓரளவு தடுக்கும் எதிர்பார்ப்புடனேயே கெமராக்களை பொருத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்காக பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் கெமராக்களை பொருத்த வேண்டியது அவசியம் என்ற நிபந்தனையுடன் அனுமதி பத்திரங்கைளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் விக்கெட் கீப்பராக தமிழ் வீரர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஷாருஜன் சண்முகநாதன் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சினெத் ஜெயவர்தன தலைமையிலான குறித்த குழாமில் புலிண்டு பெரேரா, ஹிருன் கபுருபண்டார, ரவிஜான் நெத்சர, ருசன்ட கமகே, ஷாருஜன் சண்முகநாதன், டினுர கலுபஹன, மல்சா திருப்பதி, விஷ்வா லஹிரு, கருக சக்கெத், டுவின்டு ரத்நாயக்க, ருவிஷான் பெரேரா, சுபுன் வடுகே, விஹாஸ் தெவ்மிக மற்றும் விஷேன் ஹலம்பகே ஆகிய வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குழாமிற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி வழங்கியுள்ளார். கொழும்பு – கொட்டாஞ்சேனை , புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் மாணவனாவான் சாருஜன் சண்முகநாதன் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாமில் முதல் தடவையாக கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை முன்னுதாரணமாக கொண்டுள்ள சாருஜன், அவரைப் போலவே விக்கெட் காப்பு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டையும் திறம்பட செய்து 2022 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த விக்கட் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் காவலரண் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் !

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் பொலிஸாரின் காவலரண் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது !

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாறில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை , யுக்திய திட்டத்திற்கமைய கிடைக்கப்பெற்ற தகவலின்படி வில்கம் விகாரை பகுதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது

இஸ்ரேலை பாதுகாக்க செங்கடலுக்கு கடற்படைகளை அனுப்புவதை விட்டுவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் – அரசிடம் ரவூப் ஹக்கீம் வலியுறுத்து !

செங்கடலில் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக கடற்படையை அங்கு அனுப்புவதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

 

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் பானமை வரையும் அனைத்து கரையோர மற்றும் தாழ்நிலப்பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அந்த பிரதேச மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நீர் வலிந்து ஓடமுடியாமல் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. அதனால் போக்குவர்தது பிரச்சினைகளும் மிகவும் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.

 

அத்துடன் மக்களின் வாழ்விட பிரதேசங்களில் இருந்து நீரை அகற்றவேண்டிய நிலையும் கிணறுகளை சுத்தப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இந்த மோசமான காலநிலையால் பயிர் நிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்க, அரசாங்க அதிபர்கள் அதற்கான கணக்கீடுகளை செய்து, அதற்கான தேவையான வசதிகளை, அந்த விடயங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

 

இந்த சந்தர்ப்பத்திலே அரசாங்கம் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கமலுக்கு எமது கடற்படையினரை அனுப்புவதற்கு பதிலாக, கடற்படையினரை இவ்வாறான அனர்த்த நிலைமைகளில் ஈடுபடுத்துவதே மிகவும் உசித்தமான விடயம். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்கிறேன்.

 

செங்கடலுக்கு இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாக்க எமது கடற்படையினரை அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானத்தை நான் கடுமையாக சபையில் விமர்சித்திருந்தேன். அதனால் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் வினயமாக ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன். அது அந்த மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மலையக தியாகிகளின் தினம் அனுஷ்டிப்பு !

மலையக தியாகிகள் தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக மாணவர்களால் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பிரதான பொது ​தூபியில் தியாகிகள் தின நினைவேந்தல் நடைபெற்றது.

இவ் நினைவேந்தலில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் , ஊழியர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

மலையக தமிழ் மக்களின் உரிமைகளுக்காககவும் – சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் மலையகத்தின் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அரசு அடக்கு முறைகளை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் பிரதமராக 34 வயது கேப்ரியல் அட்டால் நியமனம்!

பிரான்சுக்கான அடுத்த பிரதமராக இளம் வயது அரசியல்வாதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், கேப்ரியல் அட்டால் (Gabriel Attal, 34) என்ற இளம் வயது அரசியல்வாதி ஒருவர் ஆவார்.

இந்நிலையில், பிரான்ஸ் வரலாற்றில், இவ்வளவு இளம் வயதில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் இவர் ஆவார்.

குறித்த நபர், பத்து வருடங்களுக்கு முன் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்ததோடு, 2017ஆம் ஆண்டு மேக்ரான் தேர்தலில் வென்றபோது, கேப்ரியல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அத்தோடு, திறம்பட நாடாளுமன்றத்தில் வாதாடும் கேப்ரியல், மேக்ரானின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

29 வயதில், கல்வித்துறையில் ஜூனியர் அமைச்சரான கேப்ரியலுக்கு, 2020 இல் பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மேக்ரான் மீண்டும் அதிபராக பதவியேற்றபோது, சிறிது காலம் பட்ஜெட் அமைச்சராக இருந்த கேப்ரியலுக்கு, கடந்த ஜூலை மாதம் கல்வித்துறை கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.