January

January

அம்புலன்ஸ் வண்டிகள் கூட பயணிக்க முடியாத நிலையில் பிரதான வீதி – கிளிநொச்சியில் அல்லல்படும் மக்கள் !

கிளிநொச்சி, கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுண்டிகுளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியில் நோயாளர் காவு வண்டி கூட செல்ல முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்” வடமாகாணத்தில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகவும், சட்ட விரோத மணல் அகழ்வு செயற்பாடுகள் காரணமாகவும் சுண்டிகுளம் கடற்கரை செல்லும் பிரதான வீதி மற்றும் உள்ளகவீதிகள் அனைத்துமே மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகிறன.

இதனால் அப்பகுதியில் நோயாளர் காவு வண்டியைக் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதியில் பயணிக்கும் பேருந்துகள் தொடர்ச்சியாக பழுதடைந்து வருவதால்  தற்போது பேருந்து சேவையும் இடம்பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத காரணத்தினால்  மீன்பிடி தொழிலுக்காக செல்லும் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரத்திற்காக செல்பவர்களும் இதனால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும்” இவ்வாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்கலைகழங்களில் தொடரும் பகிடிவதைகள் – ஆறு மாத காலத்திற்குள் 82 முறைப்பாடுகள் !

பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 82 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்த விசேட தொலைபேசி இலக்கமானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த விசேட தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் காணப்படுவதோடு 3000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வரலாறு காணாத அளவிற்கு 2023ஆம் ஆண்டில் ஆயுதங்களை விற்றுத்தள்ளிய அமெரிக்கா !

கடந்த வருடம் (2023) அண்டை நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள இராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022இல் ரஸ்யா உக்ரைன் போர் ஏற்பட்டதையடுத்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் களமிறங்கின.

இந்நிலையில் தீவிரமாக போரிட்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் இராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இதற்கமைய, 2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையும் அமெரிக்க அரசு நேரடியாக $81 பில்லியன் விற்பனையும் இதில் அடங்கும்.

அமெரிக்கா அதிகளவில் ராணுவ தளவாடங்களை விற்பனை செய்த நாடுகளில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது.

ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நார்வே ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), ஆஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகிய நாடுகளும் குறித்த பட்டியலில் உள்ளன.

“பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்” என அமெரிக்கா தொடர்ந்தும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சரமாரித்தாக்குதல் – ஐவர் கைது !

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று (29) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவாக நின்றவர்களை சோதனையிட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் முயன்றுள்ளனர். இதன்போதே பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மானிப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவல்துறை உத்தியோகத்தரும் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக  விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை – முல்லைத்தீவில் நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாகவும் போராட்டம் !

கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என கோரி நீதிவேண்டி இரு குடும்பங்கள் நான்காவது நாளாக தொடர்ச்சியாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அயல் வீட்டு குடும்பஸ்தரினால் குறித்த கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்த நிலையில் அது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே கேப்பாபிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நான்கு நாட்களாக தொடர்ச்சியான முறையில் இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றையநாள் நான்காவது நாளாக தொடரும் இவர்களின் போராட்டத்தினை குறித்த பகுதி கிராம அலுவலரோ, பொலிஸாரோ கண்டுகொள்ளவில்லை. இதுவரை குறித்த போராட்டத்திற்கான நீதி கிடைக்காததனால் இரு குடும்பங்களும் வீட்டிற்கு செல்ல முடியாமலும், வீட்டில் இருக்க பாதுகாப்பற்ற நிலையிலும் வீதியிலேயே இருக்கின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபடும் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கும் போது குறித்த பகுதி கிராம அலுவலரும் தம்மை கண்டு கொள்ளவில்லை எனவும், பொலிஸார் நேரடியாக நீதிமன்றத்துக்கே தம்மை அனுப்புவதாகவும், தமக்கு குழந்தைகளும் இருப்பதனால் வீதியில் தொடர்ச்சியாக கொசுகடிக்குள் இருக்க முடியாது,வேலைக்கும் செல்ல முடியாது, வருமானமும் இல்லாமல் போக நாம் வீதியிலையே இருக்கின்றோம். எம் பிள்ளைகள் வீதியிலே போகும்போது எதிராளிகள் துப்புகின்றனர். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கின்றது எனவும், எம் உயிர் போக முன்னமே சமாதானமாக வாழ நீதியை பெற்றுதருமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட வேளை வீட்டில் தனிமையில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருந்தபோது பிரச்சினைக்குரிய அயல் வீட்டு குடும்பஸ்தர் அங்கு சென்று போதைப்பொருளை வைத்து விட்டு பொலிஸாரை அழைத்துவந்து குறித்த இரு சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல் வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும் அதற்கான நீதி தமக்கு வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி இரு குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸிற்கு உதவிய பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு – நிதி உதவியை இடைநிறுத்திய உலக நாடுகள் !

ஹமாஸின் ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலிற்கு  பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு உதவியதாக தெரிவித்து அந்த அமைப்பிற்கான நிதி உதவியை உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.

பிரிட்டன் உட்பட எட்டு நாடுகள் பாலஸ்தீனத்தின அகதிகளுக்கான ஐநா அமைப்பிற்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளன. உலகநாடுகளின் இந்த நடவடிக்கையை ஐநா அமைப்பு கண்டித்துள்ளது.

உலகநாடுகளின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

யுஎன்ஆர்டபில்யூஏ என்பது பிரதானமாக காசாவிற்கான மனிதாபிமான அமைப்பு இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் உயிர்வாழ்வதற்காக அந்த அமைப்பினை நம்பியிருக்கின்றனர் என அந்த அமைப்பின் தலைவர் பிலிப்பே லசாரினி தெரிவித்துள்ளார்.

சிறிய எண்ணிக்கையிலான பணியாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது  என தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாங்கள் சில பணியாளர்களை இடைநிறுத்தியுள்ளோம்  விசாரணைகள் தொடர்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் யுத்தம் இடம்பெயர்வு அரசியல் நெருக்கடிகள் காணப்படும் சூழ்நிலையில் இந்த தடைகள் பொருத்தமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலை போரை நிறுத்துமாறு கூறாத சர்வதேச நீதிமன்றம் ஓர் அர்த்தமற்ற மாயை“ – அமைச்சர் டக்ளஸ்

தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்ற தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டாவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடகா தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தரப்படும் என்ற கோஷங்களை சில தமிழ் தரப்புக்கள்; மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.

குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உயிரிப்புக்களுக்கான நீதி மற்றும் காணாமல் போனோருக்கான பரிகாரம் போன்றவற்றை சர்வதேச நீதிமன்றத்தின் மூலமே பெற்றக்கொள்ள முடியும் எனவும் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் சொல்லுகின்ற தமிழ் அரசியல் தரப்புக்கள், தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மாயையை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

தற்போது, இஸ்ரேல் விவகாரத்தில் தென்னாபிரிக்காவினால் சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, சர்வதேச நீதிமன்றின் சிந்தனை மற்றும் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

ஆயிரக்கணக்கான மக்களை தினமும் அழித்துக் கொண்டிருக்கிற தாக்குதல்களை நிறுத்துமாறு உலகின் அதியுச்ச நீதிமன்றக் கட்டமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச நியமங்களை மதித்து நடக்குமாறு சொல்லியிருக்கிறது.

காஸாவில் குறுகிய பிரதேசத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் என்பதோ, தாக்குதல் தொடர்ந்தால் அப்பாவி மக்களின் அழிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதோ சர்வதேச நீதிமன்றிற்கு தெரியாத சமாச்சாரங்கள் இல்லை.

அப்படியிருந்தும் தாக்குதலை நிறுத்துமாறு தீர்ப்பில் சொல்லப்படவில்லை.

இவ்வாறான சம்பங்கள் ஊடாக, சர்வதேச கட்டமைப்புக்களின் மனோநிலையையும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் எத்தகையவை என்பதையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தெரிவில் குளறுபடி- ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் மாநாடு !

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் பெரும்பான்மையான பொதுச்சபை உறுப்பினர்கள் அப்பதவிக்கு மீள் தெரிவைச் செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், மற்றும் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபை கூட்டத்தின் முதலாம் நாள் அமர்வு ஆகியன சனிக்கிழமை (27) திருகோணமலை உப்புவெளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது முதலில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவு நடைபெற்றது. அச்சயமத்தில் அரியநேத்திரன், ஸ்ரீநேசனை முன்மொழிந்தார். அதனையடுத்து குலநாயகம் தனக்கு அப்பதவியை வழங்குமாறு கோரினார். பின்னர் சுமந்திரன் தனக்கு சிரேஷ்ட துணைத்தலைவர் பதவியை வழங்குவதாக புதிய தலைவர் சிறீதரன் தெரிவித்துள்ளபோதும் தான் பொதுச்செயலாளர் பதவியையே விரும்புவதாக தெரிவித்தார்.

அதனையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக அப்பதவியை ஸ்ரீநேசனுக்கே வழங்க வேண்டும் என்று அரியநேத்திரன் மற்றும் யேகேஸ்வரன் வலியுறுத்தினார்கள். அச்சமயத்தின் கொழும்புக்கிளையின் உறுப்பினர் ஒருவர் மட்டக்களப்புக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், அதனை சாணக்கியனுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதன்பின்னர் சுமந்திரன்;, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் தலைவர்களாக உள்ள சாணக்கியன், கலையரசன், குகதாசன் ஆகிய ஒருவருக்கு அப்பதவி வழங்குவது பொருத்தமானது என்றுரைத்தார்.

இதற்கிடையில் சிறீதரன் ஸ்ரீநேசனுடன் உரையாடி, ஒருவருடத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டவாறாக அப்பதவியை குகதாசனுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாட்டை எட்டினார்.

அதனடிப்படையில் பதவிநிலைகள் தெரிவு செய்யப்பட்டன. அதனடிப்படையில், பொதுச் செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதோடு, சிரேஷ்ட உபதலைவராக சி.வி.கே.சிவஞானமும் இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரும், துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், பாக்கியசெல்வம் அரியநேந்திரன், வைத்தியர் சத்தியலிங்கம், ஆகியோரும் இணை செயலாளர்களாக திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் சுமந்திரன் உட்பட 13உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பொதுச்சபைக் கூட்டத்தின் முதன் நாள் அமர்வு நடைபெற்றது.  இதன்போது, குகதாசனின் நியமனத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான பொதுச்சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, அரியநேத்திரன், கோடிஸ்வரன், யோகேஸ்வரன் போன்றவர்கள் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு அமைவாக ஸ்ரீநேசனுக்கே அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தொடர்ந்து ஸ்ரீநேசன், தான் பதவிக்காக போட்டியிட வேண்டும் என்ற மனநிலையில் இல்லாது விட்டாலும் தனது ஆதரவாளர்களும், பொதுச்சபை உறுப்பினர்களும் அப்பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால் அதல் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து பொதுச்செயலாளர் தெரிவுக்காக வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அதில் ஸ்ரீநேசன் மற்றும் குகதாசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும் முடிவானது. தேர்தலை நடத்துமாறு மாவை.சோ.சேனாதிராஜா, சுமந்திரனை நியமித்தார்.

அச்சமயத்தில், சுமந்திரன், மத்திய குழு ஏற்கனவே நிருவாகம் ஒன்றை தெரிவு செய்துள்ளதால் தனியாக பொதுச்செயலாளரை தெரிவு செய்வதற்காக மட்டும் வாக்கெடுப்பை நடத்தமுடியாது. ஓட்டுமொத்தமாக மத்திய குழு அனுமதித்த நிருவாகத்தை அங்கீகரிப்பதா இல்லையா என்பதற்காகவே பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்த முடியும். அதில் மத்திய குழு உறுப்பினர்கள் பங்கேற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதற்கு அமைவாக நிருவாகத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் புதிய தலைவர் சிறீதரனால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு பீற்றர் இளைஞ்செழியன் வழிமொழிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 112வாக்குகளும், எதிராக 104வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளின் அடிப்படையில் புதிய நிருவாகத்திற்கு பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக சுமந்திரன் அறிவித்ததோடு கூட்டம் நிறைவடைவதாகவும் அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பொதுச்சபை உறுப்பினர்கள் மிகக் கடுமையாக புதிய தலைவருடன் தர்க்கம் செய்தனர். புதிய பொதுச்செயலாளரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டனர். அதுமட்டுமன்றி, தமக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஸ்ரீநேசனையே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலைமைகளை சுமூகமாக்குவதற்கு புதிய தலைவர் சிறீதரனும், சேனாதிராஜாவும் முயன்ற போதும் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில், தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை புதிய தலைமையின் மீது ஏமாற்றத்தை அளிப்பதாக அவர்கள் நேரடியாகவே தெரிவித்தனர். இதனையடுத்து சேனாதிராஜா மாநாட்டை ஒத்திவைத்தார்.

அதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள, பொதுச்சபை உறுப்பினர்கள், பொதுச்செயலாளர் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது பொதுச்சபைக்கு வருகை தந்திருந்த 115 உறுப்பினர்கள் அரங்கிலிருந்து வெளியேறியிருந்தார்கள். அத்துடன் அரங்கிற்கு வருகை தந்திருந்த பொதுச்சபை உறுப்பினர்களின் ஆதரவாளர்களில் சிலரும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், பொதுச்செயலாளர் தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துமாறே கோரியபோதும் அது திசைதிருப்பப்பட்டு நிருவாகத்திற்கன அங்கீகரம் தொடர்பான வாக்கெடுப்பாக மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே இந்த முடிவினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய தலைவர் ஸ்ரீநேசனை பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் பொதுச்செயலாளர் பதவிக்காக மீண்டும் பொதுச்சபையில் வாக்கெடுப்பு உரிய முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்தச் செயற்பாடுகள் நடைபெறாது, தற்போது மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அந்த தெரிவுகளுடன் மாநாடு நடைபெற்றால் அதில் பங்கேற்கப்போவதுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வின்போது பதவிநிலைத் தெரிவுகள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பில் முடிந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொதுச்சபை உறுப்பினர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைகழகத்தில் மாணவி ஒருவரை பகிடிவதைக்குட்படுத்திய 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது !

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பகிடிவதைக்குட்படுத்திய 6 மாணவர்கள் சமனலவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதியன்று ‘1997’ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

குறித்த மாணவர்கள் 6 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) சமனலவெவ பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரவக, ருக்கஹவில, அலுத்தாராம, இமதுவ மற்றும் கித்தலாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23, 24 மற்றும் 25 வயதுடைய மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் சுமந்திரன் கோரிக்கை!

உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளீர்க்கப்படும் வரையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு சபாநாயகரிடத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,நிகழ்நிலைப் காப்புச் சட்டமூலம் நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றம் சதாரண பெரும்பான்மையுடன் அச்சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதாக இருந்தால் சில பரிந்துரைகளைச் செய்திருந்தது.

ஆனால், பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டபோது எமக்கு அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமாக குழு நிலையில் தெளிவாக வழங்கப்படவில்லை.

அத்தோடு அத்த திருத்தங்கள் 12 மணிக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் எமக்கு வழங்கப்பட வேண்டும் என்ற முறைமையும் உள்ளது.

ஆகவே உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் அதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில் நான் 13 விடயங்களை உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிட்டும் அவை உள்ளீர்க்கப்படவில்லை என்பதை கண்டறிந்துள்ளேன்.

அதன்பின்னர் அதனை சபையில் சுட்டிக்காட்டி சபாநாயகரிடத்தில் எழுத்துமூலமாக வழங்கினேன். அதனை சட்டமா அதிபரின் பிரதிநிதிகளிடத்தில் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அத்திருத்தங்களை அமைச்சர் குழுநிலையில் இணைத்துக்கொள்வார் என்று குறிப்பிட்டார்கள்.

ஆனால் குழுநிலையில் அவை இணைத்துக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தற்போதைக்கு தெளிவாக இல்லை.

ஆகவே முழுமையாக ஆராயாத வரையில் குறித்த சட்டத்தில் கையொப்பமிடாதிருக்குமாறு நாம் சபாநாயகரைக் கோருவதற்கு உள்ளோம் என்றார்.