January

January

இந்த நாட்டை இதுகாலவரை ஆட்சி செய்த அரசியல்வாதிகள் அனைவரும் விடுதலைப்புலிகளுக்கு சமமானவர்கள் – மிஹிந்தலை மகாநாயக்க தேரர்

இந்த நாட்டை இதுகாலவரை ஆட்சி செய்த அரசியல்வாதிகள் அனைவரும் விடுதலைப்புலிகளுக்கு சமமானவர்கள் என மிஹிந்தலை மகாநாயக்க தேரர் வளவா ஹெங்குணவெவே தம்மரத்ன தெரிவித்தார்.

நடைபெறவுள்ள தேர்தலில் யாரை தெரிவு செய்யவேண்டும் மற்றும் நாட்டின் எதிர்கால நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

அடுத்துவரும் தேர்தல் நாட்டை பாதுகாத்துக்கொள்ள கிடைத்த இறுதி சந்தர்ப்பமாகும். அதனால் அரசியல்வாதிகளிடம் தொடர்ந்து ஏமாறாமல் உண்மையாக சேவை செய்யக்கூடிய சிலரை தெரிவு செய்து நாட்டை கட்டியெழுப்ப தயாராக வேண்டும்.

நாட்டை ஆட்சி செய்யப்போகிறவர் யார் என்பது எமக்கு முக்கியம் இல்லை. அதேபோன்று எந்த கட்சி ஆட்சி செய்யப்போவது என்பதும் எமக்கு தேவையில்லை. எமது நாடே எமக்கு முக்கியம். அதனால் தற்போது எங்களுக்கு கதைத்துக்கொண்டிருக்க நேரம் இல்லை.

அதேபோன்று போராட்டம் செய்யவோ ஹர்த்தால் மேற்கொள்ளவோ எமக்கு தேவையில்லை. தற்போது எமக்கு தேவையாக இருப்பது, சிறந்த சிந்தனையும் இலக்கும் உள்ள இளைஞர்களாகும்.

இன்று ஆட்சியாளர்கள் மக்கள் பக்கம் இல்லை. அதனால்தான் ஆட்சியாளர்கள் கிராமங்களுக்கு செல்லும்போது அந்த பிரதேச மக்கள் அவர்களை விரட்டுகின்றார்கள். அதனால் எமது நாட்டை எமக்கு கட்டியெழுப்ப முடியும். அதற்காக உண்மையான, வேலை செய்ய முடியுமான இளைஞர்கள் எமக்கு தேவை. அவர்கள் முன்வரவேண்டும்.

எதிர்வரும் தேர்தல் எமக்கு இறுதி சந்தர்ப்பமாகும். இதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாவிட்டால் எமக்கு இனி ஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்காது. அத்துடன் 75 வருடங்களாக அரசியல்வாதிகள் எங்களிடம் வேலை வாங்கினார்கள். அதனால் தற்போது நாங்கள் எங்களுக்கு தேவையான ஒருவரை தெரிவுசெய்துகொள்ள வேண்டும்.

இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு சமமானவர்கள். ஏனெனில் இவர்கள் அனைவரும் இந்த நாட்டை அழித்தவர்கள். அதனால் நாட்டு மக்கள் அனைவரும் இந்த அரசியல்வாதிகளுக்கு ஏமாந்ததுபோதும் இனியும் ஏமாறக்கூடாது.

அதனால் சிறந்த இளைஞர்கள் குழுவை இணைத்துக்கொண்டு நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அதனை எங்களால் செய்ய முடியும் என்றார்.

ரஸ்யாவின் பகுதி மீது உக்ரைன் தாக்குதல் ..? – 27 பேர் பலி !

ரஸ்யா ஆக்கிரமித்துள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மிகவும் மும்முரமான சந்தையில் பயங்கரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பிராந்தியத்தின் ரஸ்ய சார்பு தலைவர் டெனிஸ் புஸ்சிலின் தெரிவித்துள்ளார். அவர் உக்ரைனே இந்த தாக்குதலை மேற்கொண்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் அந்த பகுதியில் செயற்படும் உக்ரைன் இராணுவத்தினர் இதனை நிராகரித்துள்ளனர்.

அழிக்கப்பட்ட கடைகளையும் அவற்றின் முன்னால் சடலங்களையும் காண்பிக்கும் படங்களை ரொய்ட்டர் வெளியிட்டுள்ளது.

எறிகணைவருவதை சத்தத்தின் மூலம் அறிந்துகொண்ட நான் கடைக்குள் பதுங்கிக்கொண்டேன் என உயிர்பிழைத்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

புகைமண்டலத்தையும் மக்கள் அலறுவதையும் பெண் ஒருவர் அழுவதையும் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பாடசாலையிலேயே தொழிற்கல்வி – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

உயர் தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலையிலேயே தொழிற்கல்வி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி அறிவு கொண்ட தொழில்சார் கல்வி குறித்த நடைமுறை பயிற்சி மற்றும் கோட்பாட்டு ஒத்திகையுடன் கூடிய நிகழ்ச்சி இவ்வாறு நடத்தப்படவுள்ளது.

உயர்தரக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்தும் நோக்கில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உயர் தரப் பரீட்சைக்காக தோற்றியுள்ள மாணவர்கள் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி முன்னர் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்தி தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி !

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகளால் குறித்த கவனயீர்ப்பு மற்றும் அடையாள உண்ணாவிரத போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.

பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுதந்திரமான வெளிப்படுத்துவதற்கும் ஒன்றுசேருவதற்குமான உரிமையினை உறுதிசெய், அரசே இலங்கை அரசியல் யாப்பிலுள்ள மனித உரிமையை மீறி செயற்படாதே, மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசுடைய கடமையாகும், பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு உட்பட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதன்போது, கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டு அவை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.

சர்வதேச ரீதியில் நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டியது அவசரத் தேவை – G 77 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் !

சர்வதேச ரீதியில் நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை தற்போது எழுந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று ஆரம்பமான G 77 மற்றும் சீனா 3ஆவது தென்துருவ நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

“வளர்ந்து வரும் நாடுகளின் மிகப்பெரிய குழுவாக ஒன்றிணைந்து செயல்படுவதும், நாம் எதிர்கொள்ளும் பல சவால்களை சமாளிக்க உலகளாவிய தெற்கின் நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்துவதும் இன்றியமையாதது.

உலக நிதிக் கட்டமைப்பை முன்னெப்போதையும் விட இப்போது மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசரத் தேவை உள்ளது. பரிஸ் கிளப் மற்றும் லண்டன் கிளப் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட உலகத்திற்கே நவீன சர்வதேச கடன் தீர்வு மாதிரி மிகவும் பொருத்தமானது.

இன்று, உலகளாவிய கடன், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் கடன், பரிஸ் கிளப் மற்றும் சர்வதேச பிணைமுறிச் சந்தையினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

கையிருப்பிலிருக்கும் நிதி வளங்களை கடன் சேவைகளாகப் பெற்றுக்கொள்ளும் போது பொதுத் தேவைகள், மனித அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆகியவற்றுக்குத் தேவையான செலவுகளுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. இதனால் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இந்த விடயம் தாக்கம் செலுத்துகிறது.

தற்போது காணப்படும் பொது வரைவு விரைவில் கடன் தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு போதுமானதாக இல்லை.

மேற்படி வரைவு மற்றும் நடைமுறையில் காணப்படும் பொருத்தமற்ற தன்மைகள் காரணமாக இலங்கை உள்ளடங்களாக நமது நாடுகள் அனைத்தும் அரச கடன் நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கான முயற்சிகளை தாமதிக்க வேண்டியுள்ளது.

நாம் உலக பொருளாதாரம் மற்றும் முதலீடுகளின் இலகுத் தன்மை, உயர்ந்தபட்ச செயற்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். G 77 அமைப்பு இந்த செயற்பாடுகளை பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் திருத்தங்களை செய்வோம் – சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான  அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ளுமென அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை, நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது தான் அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது காணப்படும் பிரச்சனைகளுக்கான நேரடி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியுள்ளது.

இதன்படி, தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமென அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டாலும் தமது கட்சி நிச்சயம் மேற்கொள்ளுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்திருந்ததாக சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை மகிழ்வளிக்கிறது – எனது முழுமையான ஆதரவை அவருக்கு வழங்குவேன்” – எம்.ஏ.சுமந்திரன்

ஜனநாயக தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், தலைவர் சிறீதரனுக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என்றும் சக தலைமைப்பதவிப் போட்டியாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் கூறுகையில்,

 

தமிழரசுக் கட்சித் தலைவருக்கான தேர்தலிலே மிக ஆரோக்கியமாக, எமது கட்சி உட்கட்சி ஜனநாயகத்தினை நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் முன்மாதிரியாக நடத்திக் காட்டியிருக்கின்றது.

 

இதிலே வெற்றிபெற்ற நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

எமது தலைவர் மாவை சேனாதிராஜா வழிநடத்திய தமிழரசுக் கட்சிப் பொறுப்பு, இப்பொழுது சிறிதரனுக்கு வழங்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும்.

 

இந்தப் பயணத்திலே நாம் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம். இதை நாம் இருவரும் தேர்தல் காலத்திலும் தெளிவாக மக்களுக்குச் சொல்லியிருக்கின்றோம். அவ்வாறே தொடர்ந்து பயணிப்போம்.

 

ஆகவே, எனது முழுமையான ஆதரவினை தற்போது ஜனநாயக முறையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தலைவர் சிறீதரனுக்கு முழுமையாக வழங்குவேன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக சி.சிறீதரன் !

இலங்கத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

திருகோணமலையில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.

புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

அமெரிக்க தளத்தை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல் – ஈரான் சார்பு குழுவினர் மீது அமெரிக்கா சாடல் !

ஈராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்க தளமொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். ஆசாட் விமானபடைதளம் மீது ஈரான் சார்பு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டனர் என அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது.

ஏவுகணைகளையும் ரொக்கட்களையும் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பிடபடாத எண்ணிக்கையிலான அமெரிக்க படையினர் மூளை காயங்களிற்கு உட்பட்டுள்ளனரா என்ற மதிப்பீடுகள் இடம்பெறுகின்றன. ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஈராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பே இந்த தாக்குதலை மேற்கொண்;டுள்ளது,2023 இல் உருவான இந்த குழு ஈராக்கில் உள்ள பல ஆயுதகுழுக்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

இந்த குழுவினரே ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களிற்கு உரிமை கோரிவருகின்றனர்.

அல்ஆசாட் தளம் தொடர்ச்சியாக தாக்குதலிற்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வித்தியா கொலை வழக்கு – மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு !

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் கடந்த 09 ஆம் திகதி அழைக்கப்பட்டது. அதன்போது, இந்த வழக்கு தொடர்பான சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது. 2015 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்தது. தமக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள விதம் சட்டத்துக்கு முரணானது என குறித்த பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, குற்றச்சாட்டில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.