02

02

தொடரும் யுக்திய விசேட நடவடிக்கை – இரகசிய தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் !

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள விசேட சோதனை நடவடிக்கைக்கு (யுக்திய ) தகவல்களை வழங்குவதற்காக இன்று (02) அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில், குறித்த அவசர இலக்கம் காவல்துறை தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

071 859 88 00 என்ற குறித்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ காவல்துறை  நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 273 கிராம் ஹெரோயின், 111 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 426 போதை மாத்திரைகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களைச் சிக்க வைக்க விசேட அதிகாரங்களைக் கொண்ட புதிய படை !

போதைப்பொருள் தடுப்பு, பாரிய கடத்தல்காரர்களைச் சிக்க வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ‘தேசிய போதைப்பொருள் தடுப்புக் கட்டளை’ (போதைக்கு எதிரான கட்டளை) பிரிவு என்ற படையை உருவாக்குவதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சு ஆகியன இணைந்து சட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரத்தை உருவாக்கி, பாரியளவிலான கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான விசேட அதிகாரங்களைக் கொண்ட ‘தேசிய போதைப்பொருள் எதிர்ப்புக் கட்டளை’ பிரிவை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விதிமுறைகள் – குடும்பத்தை அழைத்து வர தடை !

இங்கிலாந்தில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விதியை அந்நாட்டு அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் இங்கிலாந்நதில் கல்விகற்றால் அவர்கள் குடும்பத்தை அழைத்து வர முடியாது.

இந்த மாதத்திலிருந்து கற்றலை தொடங்கும் எந்தவொரு சர்வதேச மாணவர்களும், முதுகலை ஆராய்ச்சிப் படிப்புகள் அல்லது அரசாங்கத்தின் உதவித்தொகையுடன் கூடிய படிப்புகளில் இருந்தால் தவிர, அவர்கள் சார்ந்திருப்பவர்களை பிரிட்டனுக்கு அழைத்து வர முடியாது.

“விசா முறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும்” அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த மே மாதம் இந்த மாற்றங்கள் முதலில் அறிவிக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 140,000 குறைவானவர்கள் இங்கிலாந்துக்கு வருவதைக் காண முடியும் என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

டிசம்பர் 2022 இல் முடிவடைந்த ஆண்டில், விண்ணப்பதாரர்களுக்கு 486,000 மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன – 2019 இல் 269,000 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு, சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட மாணவர் விசாக்களின் எண்ணிக்கை 136,000 ஆக இருந்தது – 16,000 ஆக 2019 இல்  வழங்கப்பட்ட நிலையில் தற்போது எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.பருத்தித்துறைப் பகுதியில் களஞ்சியசாலையில் தீ விபத்து – மலையகத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை முனைப் பகுதியில் உள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையிலேயே இன்று (02) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அண்மைக்காலமாக யாழில் தீ விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் !

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

யாழ் நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிவேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் டெங்கு நோய்ப்  பரவலை  கட்டுப்படுத்தும் விதமாக நேற்றைய தினம் வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படத்த சுகாதார திணைக்களம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவம் ஆகியோரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்கள் மீதும் கடுமையா  நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது.” – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச 

2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் தேர்தலை இலக்காகக்கொண்டு நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுவருடத்திற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு  நேற்று (01) நீதி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதை நாம் அறிவோம். அடுத்து எந்த மாதிரியான தேர்தல் வந்தாலும் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது. ஜனநாயக சமூகத்தில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை அமைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரச ஊழியர்கள் என்றவகையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் உறுதிப்பிரமாணம் வழங்கினாலும் அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை.

எனினும் நீதி அமைச்சின் அதிகாரிகளாக நாங்கள் நாட்டில் இருக்கும் முன்மாதிரியான அமைச்சு என்பதை மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தி இருக்கிறோம். அத்துடன் உலகில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும்போது இந்தளவு குறுகிய காலத்துக்குள் ஸ்திரநிலைக்கு வந்த வேறு நாடு இல்லை.

எமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. நாங்கள் தற்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 2023ஆம் ஆண்டும் ஜீ.எஸ்பி பிளஸ் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையை பெற்றுக்கொள்ள தேவையான முக்கியமான அளவுகோல்களை பூரணப்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டது நீதி அமைச்சாகும்.

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக கடந்த ஒன்றரை வருட காலத்துக்குள் நாங்கள் நாடவடிக்கை எடுத்தோம்.

மேலும் 2024ஆம் ஆண்டுக்குள் 60 புதிய சட்ட மூலங்களை அனுமதித்துக்கொள்ள தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியலமைப்பு புரட்சி 21ஆம் அரசியலமைப்பு திருத்தமாகும். ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல புதிய சட்டங்களை அனுமதித்துக்கொண்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம்.

அதனால் மதம், மொழி, இன வர்க்கமாக பிளவுபட்டு செயற்பட்டால் நாடு என்ற வகையில் நாங்கள் எதிர்பார்க்கும் இலக்குக்கு செல்ல முடியாது. அதனால் 2024 ஆம் ஆண்டின் முதல் வாரத்துக்குள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்வோம்” என தெரிவித்தார்.

வரி செலுத்துவோர் நிகர வரி ஏய்ப்பவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு உள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க

வரி செலுத்துவோர் நிகர வரி ஏய்ப்பவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு உள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

வரி செலுத்துவதைத் தவிர்க்க முயற்சிப்பவர்கள் குறித்து வரி செலுத்துவோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறையில் வரி தளத்தை விரிவுபடுத்துவது தனிநபர் வரிச்சுமையை குறைக்க மட்டுமே உதவும் என்றார்.

பொருளாதார அடிப்படைகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 2022 ஆம் ஆண்டை விட நேர்மறையான குறிப்பில் இலங்கை 2023 இல் அடியெடுத்து வைத்தது என்றும், இந்த ஆண்டு நனவாகும் சிறந்த வாய்ப்புகள் நாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேபோன்ற பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேறு எந்த நாட்டையும் விட இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை மிக விரைவாக மீட்டெடுத்தது என வலியுறுத்துகிறது. அர்ஜென்டினா, ஜிம்பாப்வே மற்றும் லெபனான் போன்ற நாடுகளை அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு மூன்று சதவீத வளர்ச்சியை நாடு எதிர்பார்க்கிறது என்றும் பணவீக்கம் ஐந்து சதவீதமாக நிலைபெறும் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 1 முதல் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரமே VAT வரி – நுகர்வோர் விவகார அதிகாரசபை

நேற்று முதல் நடைமுறைக்கு வரும் பெறுமதி சேர் வரியின் (VAT) சமீபத்திய அதிகரிப்பு ஜனவரி 1 முதல் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் பொருட்களுக்கு மாத்திரமே உயர்த்தப்பட்ட VAT விகிதங்கள் பொருந்தும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெளிவுபடுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் சந்தையில் வெளியிடப்பட்ட பொருட்களுக்கான VAT அடிப்படையிலான விலை மாற்றங்கள் பொருந்தாது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தையை ஆய்வு செய்து வருவதாகவும், தன்னிச்சையாக விலையை உயர்த்தும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் பொருட்கள் விலை உள்ளிட்ட அச்சிடப்பட்ட VAT வரியுடன் ஜனவரி 1 ஆம் திகதி சந்தைக்கு வெளியிடப்பட வேண்டும்.

“நுகர்வோர் பொருட்களின் விலையை ஒருதலைப்பட்சமாக தங்கள் விருப்பப்படி உயர்த்தும் அதிகாரம் வர்த்தகர்களுக்கு இல்லை என அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்தகைய நடவடிக்கைகள் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நுகர்வோர் பொருட்களின் மீது தன்னிச்சையாக விலைகளை உயர்த்துவதற்கு வர்த்தகர்களுக்கு அதிகாரம் இல்லை என அதிகாரசபை வலியுறுத்துகிறது. மீறினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”

குறிப்பிட்ட சில நுகர்வோர் பொருட்கள் 18 சதவீத வெட் வரிக்கு உட்பட்டவை, ஏனையவை ஏற்கனவே 15% VAT வரி விதிக்கப்பட்டிருந்தால், இப்போது மூன்று சதவீத VAT வரிக்கு மட்டுமே பொருந்தும்.”

இலங்கையர்களுக்கு ஜப்பானில் நான்கு துறைகளில் வேலைவாய்ப்பு !

ஜப்பானிய அரசாங்கம் நான்கு துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான திறன் பரீட்சையை இலங்கைக்கு திறந்து வைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

ஒரு அறிவிப்பை வெளியிட்டு, SLBFE 2024/25 ஆம் ஆண்டிற்கான திறன் தேர்வு ஜப்பானில் குறிப்பிட்ட திறன் தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

கட்டுமானம், தங்குமிடம் மற்றும் வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புத் துறைகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் வேலைகளுக்கான திறன் தேர்வு திறக்கப்பட்டுள்ளது.

திறன் பரீட்சை இலங்கையில் நடத்தப்படும் எனவும் ஜப்பானிய மொழியில் மாத்திரம் நடத்தப்படும் எனவும் SLBFE மேலும் தெரிவித்துள்ளது.

இறைவரித் திணைக்களத்தின் பதிவு இல்லாத இலங்கையர்களுக்கு 50,000 வரை அபராதம் – பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்..?

இம்மாதம் முதலாம் திகதி முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை (TIN) பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்மொன்று இருப்பதை போலவே TIN Number இருக்க வேண்டியதும் அவசியமாகும். வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானம் இருக்குமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கான வரிக் கோப்பும்திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு வருடத்தில் (ஒரு வருடத்தின் ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை) 1,200,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் நபர்கள் வருமான வரிக் கோப்பை திறக்க வேண்டும்.

இதனை, பொது மக்கள் www.ird.gov.lk என்ற இணையத்தில் பதிவு செய்யலாம், தபால் மூலம் பதிவு செய்யலாம் அல்லது இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் நேரில் பதிவு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.