03

03

கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது – வவுனியாவில் சம்பவம் !

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடி ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்த காதல் ஜோடியானது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டதாகவும் சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை இடப்பட்டது.

இதன்போது அங்கு தங்கி இருந்த காதல் ஜோடியிடம் கஞ்சா மற்றும் தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப் பொருளும் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த காதல் ஜோடி இன்றைய தினம் (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் காவல்துறையினர் நீதிமன்றத்தின் அனுமதிய பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Virtual reality Metaverse game இல் சிறுமி மீது இணையவழியில் கூட்டுப்பாலியல் வன்புணர்வு !

பிரித்தானியாவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் Virtual reality எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டின் மூலம் உள ரீதியாக கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“Metaverse game” எனப்படும் விளையாட்டின் மூலமே குறித்த சிறுமி உடல் ரீதியாக அல்லாமல் உளரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (Artificial Intelligence) மூலம் பல இடங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

Metaverse game எனப்படுவது செயற்கை நுண்அறிவு விளையாட்டாகும், இதில் பயனர்கள் தத்தமது கதாபாத்திரங்களை (Avatar) தமக்கு ஏற்றவகையில் வடிவமைத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபடும்போது பயனர்களும் இனந்தெரியாத நபர்களினால் பயனர்களின் கதாபாத்திரங்களை துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பிரிட்டன் உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர் இது பற்றி தெரிவித்த போது இந்த விளையாட்டு மூலமான பாலியல் தொல்லைகள்ட அதிகரித்து வருவதாகவும் இதனை சாதாரணமான பிரச்சினையாக கடந்து செல்ல முடியாது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறைக்கு வந்த புதிய வரிகள் – எகிறும் பொதுக் கழிப்பறை கட்டணங்கள் !

புதிய வரித் திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நீர் கட்டணம் அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு பொதுக் கழிப்பறைக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ரூபாயாக இருந்த கழிவறை கட்டணம் புதிய திருத்தத்தின் கீழ் 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

போதைபொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தேகம் !

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைகள் சந்தேகத்தினை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காணொளி ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல இரத்நாயக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்விடயத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போதைப் பொருள்பாவனைக்கு எதிராக யாழ் மாவட்டத்தில் பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் அதிருப்தியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது.

சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருள் வியாபாரிகள் தப்பித்துக் கொள்வதற்கான காலஅவகாசத்தினை பொலிஸார் வழங்கியதான சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

அதேபோன்று, வற் அதிகரிப்பு உட்பட்ட பொருளாதார நெருக்கடிகள் எதிர்கொண்டுள்ள வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதால், அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் காத்திரமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டிய அவசியமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தை மீறி எங்களால் செயற்படமுடியாது – அரசாங்கம் திட்டவட்டம் !

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு தினத்திற்கும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும் எந்த ஜனாதிபதி நாட்டை ஆண்டாலும் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இரண்டு வாரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு விடும். தடம் புரண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடத்தில் மீள நிவர்த்தி செய்துள்ளது. பிறந்துள்ள புதிய வருடம் தீர்க்கமான ஒரு வருடமாகும்.

 

தற்போது நிலவும் பொருளாதார சவால் 2027 ஆம் ஆண்டு வரை தொடரும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டம் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும் வரை சட்டப்படி செயற்பட்டாலே நெருக்கடியை நிவர்த்தி செய்ய முடியும்.

சர்வதேச இணக்கப்பாட்டுடனான சட்டங்கள் மற்றும் நிதி முறைமைக்கு இணங்க நாடு என்ற ரீதியில் நாம் நிதி சந்தைக்கு சென்று பிணைமுறியை விநியோகித்து கடனைக் கோரினாலும் 2027 ஆம் ஆண்டு எமக்கு 1500 மில்லியன் டொலர்களை மட்டுமே கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

2027 ஆம் ஆண்டு வரை மூன்று, நான்கு வருடங்களுக்கு இந்த சவால்கள் தொடரும்.

பெருமளவு இறக்குமதியிலேயே தங்கியுள்ள பொருளாதாரத்தை கொண்டுள்ள எமது நாடு எரிபொருள், உரம், மருந்து, இரசாயன பொருட்கள், அரிசி, மா, சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, மிளகாய் உள்ளிட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும்.

அவற்றை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கத்தின் கையிருப்பின் அடிப்படையில் கடன் பத்திரத்தை விநியோகிப்பது அவசியம். இந்த பொருட்களைக் கொள்வனவு செய்யாமல் இரண்டு வாரங்களையும் எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாது.” என்றார்.

யாழில் பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் இறந்ததை மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (02) தீர்ப்பளித்துள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (02) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றது. அதில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் இளைஞனின் உடலில் காணப்பட்டதாகவும் இதனால் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அத்துடன் குறித்த வழக்கு விசாரணைகளில் 21 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இளைஞனின் உயிரிழப்பு, “மனித ஆட்கொலை” என நீதவான் தெரிவித்தார்.

மேலும் இரண்டாவது சாட்சி ஐந்து பொலிஸார் சித்திரவதை செய்ததாக தெரிவித்த நிலையில், இது வரையில் நால்வரே கைது செய்யப்பட்டுள்ளாதாகவும் மற்றைய சந்தேக நபரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறு இந்த வழக்கின் விசாரணை பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் , குறித்த வழக்கு விசாரணை ஆவணங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்துமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்துள்ளார்.

பெறுமதி சேர் VAT வரிகாரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் – சஜித் பிரேமதாச

புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும், இதனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத குடும்பங்கள் காரணமாக தற்கொலை சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் அவலத்தை மேலும் கூட்டி வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய VAT வரியை அமுல்படுத்துவது அத்தகைய நடவடிக்கையாகும் என்றார்.

அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கு VAT வரியை அதிகரிப்பது மாத்திரம் அல்ல என சுட்டிக்காட்டிய அவர், நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை மீள்குடியேற்றுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதே மற்றுமொரு வழியாகும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் திருடர்களை நம்பி ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக் கொண்டமையினால் இதனைச் செய்ய முடியாதுள்ளது.

திருடர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கம்பஹாவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்

கொழும்பு துறைமுக நகரத்தில் தனியார் வைத்தியசாலை !

கொழும்பு துறைமுக நகரத்தில் தனியார் வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆசிரி போர்ட் சிட்டி ஹொஸ்பிட்டல் (தனியார்) கம்பனியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டின் கீழ் கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்தியசாலையொன்றை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்காக விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குதல் தொடர்பான வழிகாட்டல்)
கட்டளைகளின் 2(ஆ) இன் கீழ் குறித்த கருத்திட்டத்தை விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கான தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த ஏற்பாடுகளின் கீழ் விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை வழங்குவதற்காகவும், குறித்த கருத்திட்டத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகமாக வர்த்தமானி அறிவித்தல் விதியொன்றின் மூலம் வெளியிட்ட பின்னர், குறித்த விதியை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு, எதிராக வழக்கு தாக்கல் !

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு, எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினது சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க கோரியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதால், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் என எட்டு பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பில் அவர்களுடைய தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ முன்வைப்பதற்கு இன்றைய தினம்(3) அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.