04

04

உயர்தர பாடசாலை கல்வியை தொடர முடியாமல் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் நிதியுதவி !

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்று உயர்கல்வியை தொடர்வதற்கு நிதி வசதி இல்லாத மாணவர்களுக்கு அதிபரின் பணிப்புரையின் பேரில் விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் அதிபர் நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களில் உயர்கல்வியை தொடர முடியாமல் அதற்கான உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்காக இந்த விசேட கொடுப்பனவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதில், கல்விப் பிரிவுவொன்றுக்கு 30 பேர் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 கல்விப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 5000 கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களில் உயர்கல்வியை தொடர முடியாமல் அதற்கான உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்காக இந்த விசேட கொடுப்பனவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

அதில், கல்விப் பிரிவுவொன்றுக்கு 30 பேர் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 கல்விப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 5000 கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

அதற்கமைய அனைத்து மாதங்களிலும் பணிகளை ஆரம்பிக்கும் முதல் இரு தினங்களுக்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்புச் செய்யப்பட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் அறிவிக்கப்ட்டது.

தற்போது இந்த மாணவர்களுக்காக 10 மாதாந்த தவணை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் உயர்கல்வியை தொடர்வதில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக கல்விப் பிரிவொன்றுக்கு 50 பேர் என்ற அடிப்படையில் 100 கல்விப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 5000 மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை மாதாந்தம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு நிதியுதவி வழங்கப்பட வேண்டியவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

அதன்படி 90 மாணவர்களுக்கு 31.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது – சம்பிக்க ரணவக்க

அரசாங்கத்தின் யுக்திய நடவடிக்கையால் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் நிலையேற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கையின் போது தாயும் தந்தையும் கைதுசெய்யப்படுகின்றனர் இதனால் வீடுகளில் தனித்திருக்கும் சிறுவர்கள் பாதளஉலகத்தினருடன் இணையும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் பெண்கள் பாலியல் ஈடுபடும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பிள்ளைகள் தனித்துவிடப்பட்டுள்ளனர் உணவையோ பாதுகாப்பையோ பெற முடியாத நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க இந்த பிள்ளைகளிடம் தங்கள் பெற்றோருக்காக வாதாட சட்டத்தரணிகளை அமர்த்தும் வலுவோ பணமோ இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்முதலைகள் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடற்கரையோரங்களில் உள்ள ஹோட்டல்களை பொலிஸார் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்ததை நாங்கள் பார்த்துள்ளோம் கடற்கரையோரத்தில் உள்ள அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் அதிகாரம் கரையோரா பாதுகாப்பு திணைக்கத்திற்குள்ளது பொலிஸார் இவ்வாறான கட்டிடங்களில் தலையிட்டு அது போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் கட்டப்பட்டது என தெரிவிப்பது சட்டத்திற்கு விரோதமானது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் – பின்னணியில் மதபோதகரின் போதனைகள்..?

கடந்த சில நாட்களில் பதிவாகிய ஏழு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் போதனைகளுக்கு ஆளான நபர்கள் தங்கள் வீடுகளில் இருந்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குணரத்ன அண்மையில் ஹோமாகமவில் விஷம் அருந்தி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார்.

தத்துவ போதகரான ருவானுடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் இருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.

21 வயதான யுவதி ஒருவரும் 34 வயதுடைய ஆண் ஒருவரும் விஷம் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதியின் சடலம் யக்கல பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரின் சடலம் மஹரகமவில் உள்ள விடுதி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதம் தொடர்பான விரிவுரைகளை ஆற்றி வருபவர் என அறியப்பட்ட ருவன் பிரசன்ன குணரத்ன அண்மையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். பின்னர், அவரது மனைவியும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் இதேபோன்று இறந்து கிடந்தார்.

உயிரிழந்த பெண்ணும், ஆணும் ருவான் மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட போதகரின் பிரசங்கங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்க்கையை பரிதாபமாக முடித்துக்கொண்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ கூறினார்.

‘அடுத்த ஆன்மாவை நோக்கிய விரைவான மாற்றத்திற்கான ஒரு வழிமுறையே தற்கொலை” என இந்த பிரசங்கங்களில், குணரத்ன உயிரை மாய்ப்பதை ‘நியாயப்படுத்தியதாக’ கூறப்படுகிறது .

உயிரிழந்த போதகர், கொட்டாவ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மாதம் ரூ. 150,000 செலுத்தி வாடகைக்கு எடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸாரால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் வகையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில் 109 எனும் துரித இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Online மூலமாகவும் இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்ய முடியும் – இறைவரித் திணைக்களம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்தல் மற்றும் வரி இலக்கம் பெறுதல் போன்றவற்றை ஒன்லைனிலும், திணைக்களத்திற்கு பிரவேசிப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி இலக்கத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து அதன் நகலை அச்சிடலாம்.

 

எனவே, விண்ணப்பத்தைப் பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுடன் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

 

வரி இலக்கத்திற்கான விண்ணப்பத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் www.ird.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

 

கோரிக்கையை பரிசீலித்த பிறகு, வரி செலுத்துவோரின் அடையாள எண் மற்றும் ஒரு முறை கடவுச்சொல் ஆகியவற்றைக் குறிப்பிடும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபர் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் சென்று வரி இலக்கத்தை பெறும்போது, அதற்கான பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள முதன்மைப் பதிவுப் பிரிவில் அல்லது அருகில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

 

வரி இலக்கத்தை ஒன்லைனில் பெறுவதற்கு அதாவது இ-சேவை மூலம் பெறுவதற்கு தேசிய அடையாள அட்டையின் இருபுறமும் ஸ்கேன் செய்து PDF நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கும் தற்போதைய வசிப்பிட முகவரிக்கும் வித்தியாசம் இருப்பின் அதனை நிரூபிக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணத்தின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

 

2024 ஜனவரி 01ஆம் முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் வரி இலக்கத்தை பெறுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

 

இந்த இலக்கத்தை எடுத்துக் கொண்டால், ஒருவர் வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனவும், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் மாத்திரமே வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை !

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நல்லை ஆதீனத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

 

குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் பிரதிகளை வடக்கிற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதிக்கு நேரில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.