06

06

“நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும்.” – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில்

“அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்கள் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும்.” என ஜனாதிபதி ரணில் தெரிவித்தரணில்ள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (06) முற்பகல் யாழ்.மாவட்ட சர்வ மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகத் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமாகாண பாதுகாப்புப் பிரிவினரின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுவதுடன், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்கள் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும். கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பாக மடு தேவாலயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறியதாகவும், அவர்கள் மீள்குடியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். அனைத்து மதம் தொடர்பிலும் செயற்பட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் சமய மற்றும் கலாசார விழுமியங்களை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அநுராதபுரம் மற்றும் கண்டியை மையப்படுத்தி பௌத்த சமய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் தெற்கு கைலாயத்தை மையப்படுத்தி இந்து சமய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அது பற்றிய அறிக்கையை அவருக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இந்த செயற்பாடுகள் பெரும் உறுதுணையாக அமையும்.

வடமாகாண சமய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வடமாகாண ஆளுநரிடம் அனைத்து மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

யாழ்ப்பாண சர்வமதக் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது பரிந்துரைகளைக் கையளித்தது. அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு மதத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் அனைத்து சமய திணைக்களத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

 

நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை !

நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (02) நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கி சூடு காயங்கள் இருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் பல் வைத்தியர் என்பதோடு நீண்ட காலமாக இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சடலம் கண்டெடுக்கப்பட்ட காரிலிருந்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை மிரட்டல் தொடர்பில் உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததோடு, அது தொடர்பில் உரிய முறையில் பொலிஸார் கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரவோடு இரவாக ஏற்படுத்தப்பட்ட இராணுவமுகாம் !

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவு வேளையில்  அமைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ காவலரனொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

அதன் பின்னரும் குறித்த காவலரண் அகற்றப்படாத நிலையில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு (05.01.24)  கனரக வாகனங்கள் சகிதம் சென்ற இராணுவத்தினர் குறித்த பகுதியால் நிரந்தரமாக பாரியலவிலான இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இதன் காரணமாக பயணிகளும் குறித்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அச்சத்துக்குள்ளாகியுள்ள நிலையில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என கோரியுள்ளனர்.

“காலங் காலமாக யாழ்ப்பாணத்துக்கு வரும்போதெல்லாம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழர்களை ஏமாற்றுகின்றார் ரணில் .” – கஜேந்திர குமார் பொன்னம்பலம்

தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் திருகோணமலை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை இன்று சனிக்கிழமை (06) பகல் 1.30 மணியளவில் சந்தித்தார்.

புதிதாக கொண்டு வரப்பட இருக்கின்ற மீனவர் சட்ட மூலம் தொடர்பாக கலந்துரையாடலை மீனவர்களுடன் மேற் கொண்டார்.

இக் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ் விஜயத்தின் போது 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் சகல அதிகாரங்களும் மாகாண சபைக்கு இருக்கின்றன ஆனால் அவர் மாகாண சபை தேர்தலை நடாத்த முற்படவில்லை.  காலங் காலமாக யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழர்களை ஏமாற்றுகின்றார்.

இது போன்று பல தடவைகள் ஏமாற்று வேலைகளை செய்துள்ளார் இம் முறையும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார்.ஆனால் இவருடைய பொய்யான ஏமாற்று வேலைகளை நம்புவதற்கு தமிழர்கள் முட்டால்கள் இல்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த  வேண்டும் – மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த  வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா ஆகியோரும் அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில், மாணவர்களினால், மாணவ விடுதிகளில் உள்ள குறைபாடு, முகாமைத்துவ பீடத்திற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்தல், சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்தல், இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.

இக் கலந்துரையிடாலில் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 37 மாணவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட 21வயது மௌரி பழங்குடி பெண் மைபி கிளாக் !

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மௌரி பழங்குடி பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மைபி கிளாக், தங்களின் பாரம்பரிய வெற்றி முழக்கதை முழங்கிவிட்டு தனது உரையை ஆரம்பித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தை அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.

நியூசிலாந்து நாட்டின் 170 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஒக்டோபரில் 21 வயது இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

https://x.com/Enezator/status/1743003735112962184?s=20

நியூசிலாந்து நாட்டின் மௌரி பழங்குடி பெண் நாடாளுமன்ற உறுப்பினரான மைபி கிளார்க் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட காணொளி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதேவேளை, நியூசிலாந்தை பொறுத்தவரை ஹக்கா நடனம், நியூசிலாந்து மௌரி பழங்குடியினரின் ஆதி பழக்கங்களில் ஒன்று, போர்,வெற்றி,ஒற்றுமை,இன குழுவின் பெருமை என எல்லாவற்றையும் சொல்ல பயன்படுத்தபடும் முறையாக கருதப்படுகிறது.

இந்தநிலையில், மைபி கிளார்க் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட காணொளி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

மதகுருவின் உபதேசங்களால் தொடரும் தற்கொலை முயற்சி – 26 வயதுடைய இளைஞர் ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்ய முயற்சி !

தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சமய உபதேசங்களை மேற்கொண்டு வந்து கடந்த மாதம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட ருவன் பிரசன்னவின் உபதேசங்களில் கலந்து கொண்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 28 ஆம் திகதி மாலபே, மாகும்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 47 வயதுடைய நபர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். ருவன் பிரசன்ன எனும் குறித்த நபர் அடிப்படைவாதம் தொடர்பில் உபதேசம் செய்த ஒருவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதனிடையே இவரது இறுதி கிரியைகள் இடம்பெற்ற நாளில் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் விஷம் அருந்தி உயிரிழந்திருந்தனர். இதேவேளை யக்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 21 வயதுடைய யுவதியொருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருந்தார். எவ்வாறாயினும் யுவதி அருந்திய விஷத்தின் உறையும் இதற்கு முன்னர் உயிரிழந்தவர்கள் அருந்திய விஷத்தின் உறையும் சமமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரயில் வீதியில் உள்ள வீடொன்றில் விஷம் அருந்தி 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். குறித்த விஷத்தின் உறையும் இதற்கு முன்னர் உயிரிழந்தவர்கள் அருந்திய விஷ உறைக்கும் சமமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தவர்களுக்கு இடையில் தொடர்பு இருப்பதாகவும் யக்கல மற்றும் மஹரகம பகுதியில் உயிரிழந்தவர்கள் முதலாவதாக உயிரிழந்தவரின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த ருவன் பிரசன்ன சமய விஷயங்களை போதித்துள்ளார்.

உயிரிழந்த அனைவரும் குணரத்னவின் பிரசங்கங்களை பின்பற்றியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவர் அதிகமாக அடிப்படைவாதம் தொடர்பில் உரையாற்றியுள்ளார். குணரத்னவின் பிரசங்கங்களில் கலந்து கொண்ட பலரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய அதேவேளை குறித்த நபர் சயனைட் போன்ற விஷத்தை வழங்கினாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் நேற்றுமுன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அடிப்படைவாதம் தொடர்பில் உபதேசங்களை மேற்கொண்டு வந்த ரூவன் பிரசன்னவின் உபதேசங்களில் கலந்து கொண்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திம்புலாகல, சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் ரூவன் பிரசன்னவின் மத உபதேசங்களில் கலந்து கொண்டுள்ளதாகவும் அவரது இறுதி கிரியையில் குறித்த நபர் மற்றும் அவரது மனைவி உட்பட மேலும் 5 பேர் கலந்து கொண்டுள்ளதாகவும் இளைஞனின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உபதேசங்களை மேற்கொண்டு வந்த ருவன் பிரசன்ன தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் 6 வருடங்கள் வாடகைக்கு வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தற்கொலை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் அன்றாட உணவுத்தேவைக்கே திண்டாடும் கடனாளிகளாக்கப்பட்டுள்ள ஆறு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் !

நாட்டிலுள்ள முப்பது இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முந்நூறு குடும்பங்களில் ஆறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக மாறியுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தகவல்கள் தெரிவிப்பதாக பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்தக் கடனாளி குடும்பங்களில் உணவுக்காகக் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 22.3 வீதமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

69,7800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யக் கடனாளியாக உள்ள நிலையில் இரண்டு இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து இருநூறு பேர் அதற்குள் அடங்குவதாகவும் பேராசிரியர் கூறினார்.

இதேவேளை, கடனை மீளச் செலுத்துவதற்காக ஏறக்குறைய 370,000 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாகவும், 491000 குடும்பங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்றுள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அது கோரள தெரிவித்தார்.

53,200 குடும்பங்கள் கட்டடங்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியின் பின்னர் (2022க்குப் பின்னர்) 688,000 குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாகத் தெரிவித்த வசந்த அத்துகோரள, பெரும்பாலானோர் அடமானச் செயற்பாடுகளில் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

அடமான முறையில் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 9,70,000 என்று அவர் கூறினார். இது தவிர வங்கிகளில் 97000 குடும்பங்களும், நிதி நிறுவனங்களில் 272250 குடும்பங்களும், பண தரகர்களிடம் 303500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல் !

வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (05) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இதனையடுத்து, வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டநிலையில் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்றையதினம் மாலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், மற்றைய பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

“13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஒவ்வொரு மாகாணமும் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என்றும் அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையில் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.