09

09

“நாம் அனைவரும் ஒன்றுபடுவதே சேர்.பொன். அருணாச்சலத்திற்கு வழங்கும் உயரிய கௌரவமாகும்.” –

சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் இலங்கையர் எனும் எண்ணக்கருவை இலங்கையர்களின் தேவைகள் என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற சேர்.பொன். அருணாச்சலத்தின் நினைவுதின நூற்றாண்டு நிகழ்விலேயே அவர் இதனைக் தெவித்தார்.

இந்த நிகழ்வின்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

சேர்.பொன்.அருணாச்சலம் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்று அல்லாமல் இலங்கையர் என்ற எண்ணக்கரு தொடர்பாக அதிக நம்பிக்கை கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தார். அந்த கொள்கையை பின்பற்றிய டீ.எஸ்.சேனநாயக்க அனைத்து இனத்தவரையும்,  மதத்தவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையர்களின் தேவைகள் என்ற வேலைத்திட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் யுத்தம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் 2025 இற்குள் தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் சரிவடைந்த பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பயணத்தை ஆரம்பித்திருக்கும் தேசம் என்ற வகையில், அனைவரும் ஒன்றுபடுவதே சேர்.பொன். அருணாச்சலத்திற்கு வழங்கும் உயரிய கௌரவமாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்க விடும் ரணில் விக்கிரமசிங்கவை நம்ப முடியாது.” – ஜனாதிபதியின் முன்னாள் சகபாடி சி.வி. விக்னேஸ்வரன் !

ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயம் அரசியல் ரீதியானது. அவரது வருகையால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கபோவதில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஐயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜனாதிபதியின் வடக்கு விஐயம் தொடர்பில் தெற்கில் இருக்கும் கட்சிகள் கூட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இருக்கின்றன. குறிப்பாக அவர் மக்களுடைய பணத்தைச் செலவழித்து வீணாக வடக்குச் சென்று இருக்கின்றார் என்றும், இதனால் மக்களுக்கு எதுவும் கிடையாது என்றும் பல குற்றச்சாட்டுகளை அந்தக் கட்சிகள் முன்வைத்திருக்கின்றன.

அரசியல் நோக்கமாகவேதான் அவர் இங்கு வந்திருக்கின்றார் என்பது உண்மையிலேயே எல்லோருக்கும் தெரியும். அவருடைய செயற்பாடுகளும் அதனையே வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆனால், எங்களுக்கு இதில் மன வருத்தத்தைத் தருகின்ற விடயம் என்னவென்றால் அரசியல் ரீதியாக சில நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தபோது அதைத் தருகின்றோம், இதைத் தருகின்றோம் என்றெல்லாம் எங்களுக்கு அவர் கூறியிருந்தார்.

ஆனால், இங்கே வந்திருந்து பொருளாதார முன்னேற்றம் தொடர்பாகவும், அபிவிருத்தி வேலைத்திட்டம் சம்பந்தமாகவும் அவர் பேசி இருக்கின்றார். அதுவும் எங்களிடத்தே சொல்லியது போல் மக்களிடத்தேயும் அதைத் தருவேன், இதைத் தருவேன், அதைச் செய்வேன் என்பதாக அவர் சொல்லியிருக்கின்றார். எனினும், இதற்குரிய பணத்தை எங்கிருந்து எடுக்கப் போகின்றாரோ தெரியவில்லை. பணத்தை எங்கிருந்து, எந்த நாட்டில் இருந்து எடுக்கப் போகின்றார் என்றோ அல்லது இலங்கையில் அவ்வளவு பணம் இருக்கின்றதா என்றோ எனக்குத் தெரியவில்லை.

ஆனால், ரணில் விக்ரமசிங்க இதுவரையில் சொன்ன வேலைத்திட்டங்கள் அல்லது வாக்குறுதிகள் ஒன்றும் நடைமுறைப்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆகவே, இங்கு வந்து அவர் செல்வதில் எந்தவிதமான நன்மைகளும் நமது மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.

இந்த அரசைப் பொறுத்தவரையிலோ அல்லது ஜனாதிபதியை பொறுத்தவரையிலோ வடக்குக்கான இந்த விஐயம் என்பது பல்ஸை (பல்ஸ்) பார்ப்பதாகத்தான் அமைந்திருந்தது. இதற்கு என்ன விதமான வரவேற்பு தனக்கு இருக்கும் என அறிவதாகக் கூட அவருடைய விஜயம் அமைந்திருக்கலாம். ஆனால், முன்னரைப் போன்று அவருக்கு ஆதரவு இங்கே இல்லை என்றுதான் நான் நினைக்கின்றேன்.

அவருடைய வருகை அரசியல் ரீதியானது என்பது வெளிப்படை. ரணிலின் வருகையால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது. தானே கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டு இங்கு வந்து புதிதாக வாக்குறுதிகளைக் கொடுக்கும் ஒருவரை நாங்கள் நம்புவது மிகக் கடினமானது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபறமிருக்க ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பொறுப்பேற்ற போது தமிழ்தேசியம் பேசிய கட்சிகள் அவரை ஆதரிக்காத போதும் சி.வி. விக்னேஸ்வரன் ஆதரவு வழங்கியிருந்தமையும் கவனிக்கத்தக்கது.

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் – நாளாந்தம் அங்கவீனர்களாகும் நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது கால்களை இழந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து Save the Children அமைப்பின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ”3 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல், காசாவின் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இத்தாக்குதல்களினால் ஏராளமான சிறுவர்கள் கொல்லப்படுவதும், ஊனமாக்கப்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதவொன்றாக உள்ளது.

இத்தாக்குதல் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழந்துள்ளனர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 50 % க்கும் அதிகமான சிறுவர்கள் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் சிறுவர்களின் உடல் நலத்துக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் யுனிசெப் அமைப்பு கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைள் இடம்பெறுகின்றது – மனிதஉரிமை ஆணைக்குழு விசனம் !

இலங்கையின் மனிதஉரிமை ஆணைக்குழு இலங்கையின் பொலிஸாரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து முன்னெடுக்கும் யுக்திய நடவடிக்கை குறித்து கரிசனம் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 17 ம் திகதி முதல் 31 ம் திகதி முதலான வரையான காலப்பகுதிக்குள் 20,000க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மனித உரிமை ஆணைக்குழுபோதைப்பொருளை திட்டமிட்ட குற்றச்செயல்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள மனித உரிமை ஆணைக்குழு எனினும் யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல் கண்மூடித்தனமான கைதுகள் தடுத்துவைத்தல் என்பன காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

யுக்திய நடவடிக்கை குறித்து கடும் கரிசனையை வெளியிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த நடவடிக்கை பரந்துபட்ட நீதியுடன் இணங்காணப்படுவதாக மாறியுள்ளது யுக்திய என்ற சிங்கள சொல்லிற்கு பொருத்தமற்றதாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது இளைஞர்கள் உட்பட்டவர்களை ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துதல் குறித்த அறிக்கைகளால் கலக்கமடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கிறது – மிசெல் ஒபாமா

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் குறித்து அச்சமடைந்துள்ளதாக மிசெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கும்  விடயங்களில் ஒன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்ன  நடக்கப்போகின்றது நான்  என்ன நடக்கலாம் என்பது குறித்து அச்சமடைந்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் எங்கள் தலைவர் யார் என்பது மிகவும் முக்கியமான விடயம் நாங்கள் யாரை தெரிவு செய்கின்றோம் யார் எங்களிற்காக பேசப்போகின்றார் என்பது முக்கியம் என மிச்செல்ஒபாமா  தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்கள் எதனையும் செய்யவில்லை மக்கள் நினைக்கின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் முதல் பெண்மணி அரசாங்கம் எல்லாவற்றையும் எங்களிற்கு செய்யவேண்டுமா என்பதே எனது கேள்வி ஜனநாயகத்தை நாங்கள் சில வேளைகளில் அலட்சியமாக எடுத்துக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த தொடங்கியுள்ள சூழலிலேயே மிச்செல் ஒபாமாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தின் எதிர்காலத்தை இந்த வருட தேர்தலே தீர்மானிக்கும் என்ற செய்தியை பைடன் முன்னிறுத்திவருகின்றார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் பைடனிற்கும் இடையில் கடும் போட்டி காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள  ஜனநாயக கட்சியினர் பைடனின் செய்தி மக்களை சென்றடையவில்லை என தெரிவித்து வருகின்றனர்.

வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சியினர் !

வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (09) கறுப்பு ஆடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அரசாங்கத்தின் வரிக் கொள்கையினால் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த வருடம் முதன்முறையாக நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடியது. அதன்படி, நாடாளுமன்றம் இன்று (09) முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சின்னம்மை தடுப்பூசி திட்டம் 83 சதவீதம் வெற்றி !

சின்னம்மை தடுப்பூசி திட்டம் 83 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர்  வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்தார்.

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சின்னம்மை தடுப்பூசி திட்டமே வெற்றியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி சின்னம்மை தடுப்பூசி திட்டத்தில் யாழ். மாவட்டத்தில்  93 சத வீதமும், கண்டி மாவட்டத்தில் 90 சத வீதமும், குருநாகல் மாவட்டத்தில்  88.7 சத வீதமும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட வேண்டிய 30,455 குழந்தைகள் இன்னும் இருப்பதுடன் , அவர்களில் 25,286 பேர்  கடந்த ஞாயிற்றுக்கிழமை  (06) தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர் .

தடுப்பூசி போட வேண்டிய குழந்தைகளுக்கு எதிர்வரும் மூன்று வாரங்களில், சனிக்கிழமைகளில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அப்போது நூற்றுக்கு நூறு வீதம் முழுமையாக இதனை அனைத்து குழந்தைகளுக்கும் வழங்க முடியும் என்றும் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.