10

10

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மலையக தியாகிகளின் தினம் அனுஷ்டிப்பு !

மலையக தியாகிகள் தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக மாணவர்களால் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பிரதான பொது ​தூபியில் தியாகிகள் தின நினைவேந்தல் நடைபெற்றது.

இவ் நினைவேந்தலில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் , ஊழியர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

மலையக தமிழ் மக்களின் உரிமைகளுக்காககவும் – சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் மலையகத்தின் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அரசு அடக்கு முறைகளை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் பிரதமராக 34 வயது கேப்ரியல் அட்டால் நியமனம்!

பிரான்சுக்கான அடுத்த பிரதமராக இளம் வயது அரசியல்வாதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், கேப்ரியல் அட்டால் (Gabriel Attal, 34) என்ற இளம் வயது அரசியல்வாதி ஒருவர் ஆவார்.

இந்நிலையில், பிரான்ஸ் வரலாற்றில், இவ்வளவு இளம் வயதில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் இவர் ஆவார்.

குறித்த நபர், பத்து வருடங்களுக்கு முன் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்ததோடு, 2017ஆம் ஆண்டு மேக்ரான் தேர்தலில் வென்றபோது, கேப்ரியல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அத்தோடு, திறம்பட நாடாளுமன்றத்தில் வாதாடும் கேப்ரியல், மேக்ரானின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

29 வயதில், கல்வித்துறையில் ஜூனியர் அமைச்சரான கேப்ரியலுக்கு, 2020 இல் பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மேக்ரான் மீண்டும் அதிபராக பதவியேற்றபோது, சிறிது காலம் பட்ஜெட் அமைச்சராக இருந்த கேப்ரியலுக்கு, கடந்த ஜூலை மாதம் கல்வித்துறை கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் வழக்கை மீள விசாரணைக்குட்படுதத்துங்கள் – கரு ஜயசூரிய கோரிக்கை!

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் வழக்கை மீள விசாரணைக்குட்படுத்துமாறு நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய கோரியுள்ளார்.

தற்போதைய ரணில்-ராஜபக்ச அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக லசந்த விக்ரமதுங்கவின் 15 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சண்டே லீடர் எனும் பத்திரிகையின் ஸ்தாபகரும், ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

அவர் கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் ஆன போதிலும், இந்த கொலைக்கு காரணமானவர்கள் முன்னாள் ஆட்சியாளர்களால் இதுவரை தண்டிக்கப்படவில்லை என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிபாதுகாப்பு வலையத்துக்குள் கொல்லப்பட்ட லசந்த விக்ரமதுங்வின் மரணத்துக்கு இதுவரை நீதி கிடைக்காமை, அரசாங்கத்தின் இயலாமையை வெளிக்காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இது இலங்கை, பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி நீதியை நிலைநாட்டும் செயல்முறையிலும் தோல்வி கண்டுள்ளதை வெளிக்காட்டுவதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

VAT செலுத்த வேண்டிய அனைவரும் VAT செலுத்துவதற்கு பங்களிக்க வேண்டும். –

VAT செலுத்த வேண்டிய அனைவரும் முறையாக அந்த கொடுப்பனவுகளை செய்தால், செலுத்தப்படும் VAT சதவீதத்தை குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

VAT வரி செலுத்துதல்களை முறையாகச் செய்தால் வருமானம் பெருகும் என்றும், அதன் விளைவாக VAT வரியை குறைக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

எனவே VAT செலுத்த வேண்டிய அனைவரும் VAT செலுத்துவதற்கு பங்களிக்க வேண்டும். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் VAT செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் VAT சதவீதத்தைக் குறைக்க முடியும் என்றும், VAT செலுத்தாத வர்த்தகர் வாடிக்கையாளர்களிடமிருந்து VAT வசூலித்தால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அது தொடர்பான அறிவிப்பை வழங்கும் முறையை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகச் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று !

யாழில் 1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற நான்காவது உலகச் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (புதன்கிழமை) முற்றவெளியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அதன்படி முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாலயத்திலேயே இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கலந்து கொண்டிருந்தவர்கள், சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனதில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. – சரத் வீரசேகர

தேசிய ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை ஸ்தாபித்ததன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் அதனையும் செய்ய வேண்டும். ஆகவே நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

 

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழு ஊடாக இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்ட முடியும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ அதிகாரிகள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலத்தில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு உருவாக்கப்பட்ட அரச கொள்கைகளை செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் இந்த அலுவலகத்தின் ஊடாக அதனையும் செயற்படுத்த வேண்டும். 29 ஆயிரம் இராணுவத்தினர் இதற்காகவே உயிர் நீத்தார்கள்.

 

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் சூழ்ச்சி நிறைந்தது. எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற தேசிய ஒற்றுமைக்கும்,நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

44 ஆண்டுகளில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் – நாடாளுமன்றத்தில் சிறீதரன்!

பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்தவை என்பதால் இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

 

பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு 44 ஆண்டுகளில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டதையும் சிறிதரன் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

நீதி அமைச்சர் புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்துள்ள போதும் இதில் தமிழ் மக்களுக்கு திருப்தி இல்லை என சிறிதரன் தெரிவித்தார்.

 

எனவே பயங்கரவாத சட்டத்தில் சிறு சிறு மாற்றங்களை கொண்டுவராமல் முழுமையான மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டார்.