11

11

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் விக்கெட் கீப்பராக தமிழ் வீரர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஷாருஜன் சண்முகநாதன் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சினெத் ஜெயவர்தன தலைமையிலான குறித்த குழாமில் புலிண்டு பெரேரா, ஹிருன் கபுருபண்டார, ரவிஜான் நெத்சர, ருசன்ட கமகே, ஷாருஜன் சண்முகநாதன், டினுர கலுபஹன, மல்சா திருப்பதி, விஷ்வா லஹிரு, கருக சக்கெத், டுவின்டு ரத்நாயக்க, ருவிஷான் பெரேரா, சுபுன் வடுகே, விஹாஸ் தெவ்மிக மற்றும் விஷேன் ஹலம்பகே ஆகிய வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குழாமிற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி வழங்கியுள்ளார். கொழும்பு – கொட்டாஞ்சேனை , புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் மாணவனாவான் சாருஜன் சண்முகநாதன் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாமில் முதல் தடவையாக கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை முன்னுதாரணமாக கொண்டுள்ள சாருஜன், அவரைப் போலவே விக்கெட் காப்பு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டையும் திறம்பட செய்து 2022 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த விக்கட் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் காவலரண் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் !

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் பொலிஸாரின் காவலரண் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது !

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாறில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை , யுக்திய திட்டத்திற்கமைய கிடைக்கப்பெற்ற தகவலின்படி வில்கம் விகாரை பகுதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது

இஸ்ரேலை பாதுகாக்க செங்கடலுக்கு கடற்படைகளை அனுப்புவதை விட்டுவிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் – அரசிடம் ரவூப் ஹக்கீம் வலியுறுத்து !

செங்கடலில் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக கடற்படையை அங்கு அனுப்புவதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

 

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக புல்மோட்டை தொடக்கம் பொத்துவில் பானமை வரையும் அனைத்து கரையோர மற்றும் தாழ்நிலப்பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அந்த பிரதேச மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நீர் வலிந்து ஓடமுடியாமல் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. அதனால் போக்குவர்தது பிரச்சினைகளும் மிகவும் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.

 

அத்துடன் மக்களின் வாழ்விட பிரதேசங்களில் இருந்து நீரை அகற்றவேண்டிய நிலையும் கிணறுகளை சுத்தப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இந்த மோசமான காலநிலையால் பயிர் நிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்க, அரசாங்க அதிபர்கள் அதற்கான கணக்கீடுகளை செய்து, அதற்கான தேவையான வசதிகளை, அந்த விடயங்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

 

இந்த சந்தர்ப்பத்திலே அரசாங்கம் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதற்காக செங்கமலுக்கு எமது கடற்படையினரை அனுப்புவதற்கு பதிலாக, கடற்படையினரை இவ்வாறான அனர்த்த நிலைமைகளில் ஈடுபடுத்துவதே மிகவும் உசித்தமான விடயம். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்கிறேன்.

 

செங்கடலுக்கு இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாக்க எமது கடற்படையினரை அனுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் தீர்மானத்தை நான் கடுமையாக சபையில் விமர்சித்திருந்தேன். அதனால் இஸ்ரேலின் கப்பல்களை பாதுகாப்பதை விட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கு உதவிகளை செய்ய கடற்படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் வினயமாக ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன். அது அந்த மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்