13

13

இஸ்லாமிய அமைப்பின் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து – யூத எதிர்ப்பு மற்றும் ஹமாஸ் ஆதரவு காரணமாம் !

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மேரியட் நட்சத்திர விடுதியில் இடம்பெறவிருந்த இஸ்லாமிய அமைப்பின் மாநாடு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத எதிர்ப்பு மற்றும் ஹமாஸ் ஆதரவு உள்ளிட்டவற்றை அந்த இஸ்லாமிய அமைப்பு ஊக்குவிப்பதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது

குறித்த விடயம் தொடர்பாக போராட்டக்காரர்களிடம் இருந்து 100-க்கும் அதிகமான அழைப்புகள் விடுதி நிர்வாகத்துக்கு வந்ததாகவும், இதனால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டு மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

30 மசூதிகள் மற்றும் இதர அமைப்புகளின் கூட்டணியான தெற்கு புளோரிடா இஸ்லாமிய அமைப்பு நடத்தவிருந்த இந்த மாநாட்டில் ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரியட் விடுதியின் இந்த முடிவு தெற்கு புளோரிடாவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு அதிர்ச்சியளிப்பதாக அந்தக் கூட்டமைப்பின் தலைவர் சமீர் கக்லி தெரிவித்துள்ளார். ஏனென்றால் இதற்கு முன்னர் இஸ்லாமிய குழுக்களும் குடும்பங்களும் பெரியளவிலான திருமண நிகழ்வுகளையும் மற்ற நிகழ்வுகளையும் அந்த விடுதியில் நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு தொடர்பான புகார் விடுதியின் தரப்பில் எழுவதற்கு முன்பே நகரத்தின் காவல்துறையையும் தனியார் பாதுகாப்பு குழுக்களையும் ஏற்பாடு செய்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வு முழுவதற்கும் காவல்துறையால் பாதுகாப்பு உறுதி அளித்திட இயலும் என சொல்ல இயலாது. இருந்தபோதும் நிகழ்வை ரத்து செய்தது முழுக்கவே விடுதி நிர்வாகத்தின் முடிவு என புளோரிடா காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துவரும் காஃப்மேன் கருத்துத் தெரிவிக்கையில், “அங்கு பேச வருபவர்கள் குறித்து எங்களுக்கு கவலையில்லை, அமைப்பு மற்றும் அதன் தலைமை மீதே எங்களுக்கு விமர்சனம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் வெளியான சம்பவம் – CID விசாரணை ஆரம்பம் !

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 10 ஆம் திகதியன்று இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முன்னதாகவே குறித்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த வினாத்தாளுக்கான பரீட்சை இடம்பெறவுள்ள புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வினாத்தாளின் கேள்விகள் மற்றொரு தாளில் கையாள் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

14 மாதங்களில் 14 நாடுகளுக்கு சென்ற ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களுக்காக 200 மில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடு – அனுரகுமார விசனம் !

நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக வெளிநாட்டு விஜயங்கள், எரிபொருள் மற்றும் வாகனப் பராமரிப்பு ஆகியவற்றிற்காக 200 மில்லியன் ரூபாவை மேலதிக ஒதுக்கீடாக பாராளுமன்றத்தின் அனுமதியை கோரியிருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நிதி ஒழுக்கத்தை முதலில் கடைப்பிடிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவித்த அவர், வரி செலுத்துவோரின் பணத்தை செலவழித்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு இவ்வளவு பாரிய தொகையை ஒதுக்குவதற்கு முன் பாராளுமன்றமும் ஜனாதிபதியும் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் பாராளுமன்றத்தில் நிதி ஒழுக்கம் பற்றி பேசுகிறோம். ஜனாதிபதி நிதி ஒழுக்கத்தை முதலில் கடைபிடிக்க வேண்டும். அவர் நான்கு தடவைகள் ஐக்கிய இராச்சியத்திற்கும் இரண்டு முறை ஜப்பானுக்கும் விஜயம் செய்துள்ளார். அவர் 14 மாதங்களில் 14 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்,”

பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் மீதித்தொகை இன்னும் வழங்கப்படாத நிலையிலும், பாடசாலை சீருடைக்கான கொடுப்பனவுகளும் இதுவரை வழங்கப்படாத நிலையில் ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணங்களுக்கு மேலதிக ஒதுக்கீட்டை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சாமானியர்களின் பால், அரிசி, டீசல், பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு VAT வரியை விதித்து சேகரிக்கப்பட்ட நிதியில் ஜனாதிபதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என கூறிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இது 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்செயல் செலவாகும் என்றும், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6.1 இன் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார்.

“வழக்கமாக மார்ச் மாதத்திற்குப் பிறகு துணை மதிப்பீடுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். ஜனவரியில் நாங்கள் ஒருபோதும் துணை மதிப்பீடுகளை முன்வைத்ததில்லை. நாங்கள் நிதியாண்டை மட்டுமே தொடங்கினோம். இது 2023 இல் செய்யப்பட்ட தற்செயல் செலவினத்தை பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க மட்டுமே” என ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை !

லண்டனில் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கத்திக்குத்து தாக்குதல் கடந்த திங்கட்கிழமை இரவு (08) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞன் ரயிலில் பயணிக்கும் போது பின்னால் வந்தவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரச நிறுவனங்களில் வரி இலக்கம் திறக்கும் திட்டம் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக ஒத்திவைப்பு !

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக அரச நிறுவனங்களில் வரி இலக்கம் திறக்கும் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த மாதம் முதல் நடப்பு கணக்கு தொடங்கும் போதும், வாகனங்களை பதிவு செய்யும்போதும், புதுப்பிக்கும்போதும் டின்இலக்கம் கட்டாயமாக்கப்படும் என்ற தீர்மானம் ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவத்துள்ளார்.

ஆண்டுக்கு 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே வரி செலுத்தத் தகுதியுடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வரி இலக்கத்தை பெற வேண்டும் எனவும், அவை அனைத்தும் வரிப் பொறுப்புக்கு உட்பட்டவை அல்ல எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஆகவே, ஏப்ரல் மாதம் முதல் நடப்புக் கணக்கு தொடங்குதல், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி கோருதல், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பித்தல் மற்றும் நில உரிமைப் பதிவு போன்றவற்றிலும் வரி இலக்கம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் தினமும் சுமார் 25,000 பேர் வரி அடையாள இலக்கமான வுஐே இலக்கத்திற்காக பதிவு செய்வதாக உள்நாட்டு வருமானவரி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சந்தனா தெரிவித்துள்ளார்.

360 சதவீத  வட்டி வரை அறவீடு – நுண்கடன் திட்டங்களால் திணறும் இலங்கை பெண்கள் !

நுண்கடன் திட்டங்களால் 95 சதவீதமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலானோர் உரிய காரணிகள் ஏதுமின்றி வெறும் நுகர்வுகளுக்காக கடன் பெற்றுள்ளார்கள். நுண்கடன் திட்டங்களால் நிதி நெருக்கடியுடன் சமூக நெருக்கடியும் தற்போது தலைதூக்கியுள்ளது. இருமாத காலத்துக்குள் ‘புதிய நுண்கடன் மற்றும் கடன் கண்காணிப்பு அதிகார சபை ‘ஸ்தாபிக்கப்படும். முறையற்ற வகையில் செயற்பட்டுள்ள நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை கடன் வழங்கும்  நிறுவனங்களை கடுமையாக ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு உட்படுத்துதல் தொடர்பிலான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சமூக கட்டமைப்பில் பாரிய  நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள நுண்கடன் திட்டங்களை கண்காணிப்பதற்கு 2021 ஆம் ஆண்டு முதல் விசேட கவனம்  செலுத்தப்பட்டுள்ளது. ஒருசில நுண்கடன் திட்ட நிறுவனங்கள்  120 சதவீத வட்டியல்ல,360 சதவீத  வட்டி அறவிடப்படுகிறது.

நுண்கடன் திட்டத்தால் 95 சதவீதமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலானோர் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஏதும் இல்லாமல் வெறும் நுகர்வுக்காகவே  கடன்களை பெற்றுக்கொண்டுள்ளார். பெரும்பாலானோர் கடன் பத்திரத்தின் நிபந்தனைகளை கூட அறிந்திருக்கவில்லை.

நுண்கடன் திட்டங்களினால் நிதி நெருக்கடியுடன், சமூக நெருக்கடிகளும் தற்போது தோற்றம் பெற்றுள்ளன. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நடுத்தர மக்களை இலக்காக கொண்டு புதிய கடன் வழங்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

ஆகவே கடன் இலகுவாக கிடைக்கிறது என்பதை மாத்திரம் ஆராயாமல் அதன் எதிர்விளைவுகள் பற்றியும் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

நுண்கடன் மற்றும் குத்தகை கடன் வழங்கல் நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் ‘புதிய நுண்கடன் மற்றும் கடன் கண்காணிப்பு அதிகார  சபை சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி, நிதியமைச்சு மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்த சட்டமூலத்தை அடுத்த மாதத்துக்குள் சட்டமாக்க எதிர்பார்த்துள்ளோம்.

நுண்கடன்  மற்றும் கடன் கண்காணிப்பு அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அனுமதி வழங்கப்பட்ட கடன் வழங்கல் நிறுவனங்களும் கண்காணிக்கப்படும். முறையற்ற வகையில் செயற்பட்டுள்ள நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.