15

15

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை – ஆளுந்தரப்பு திட்வட்டம் !

சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

‘வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசுக்கும் ஆதரவு வழங்கத் தயார்’ – என இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ரணில் விக்ரமசிங்கவிடம் நிபந்தனைகளை முன்வைத்து அவருக்கும் அரசுக்கும் ஆதரவு வழங்குவது போல் பாசாங்கு செய்து தங்கள் காரியங்களை நிறைவேற்ற சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.

அவர்களின் வியூகம் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரிந்த விடயம். எனவே, சம்பந்தனின் ஆதரவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோ ரணில் அரசுக்குத் தேவையில்லை.

அபிவிருத்தியில் அதிகூடிய கவனம் எடுத்துச் செயற்படும் ரணில், அதற்கான இலக்கை அடையும் தருவாயில் அரசியல் தீர்வுக்கான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து அதிலும் வெற்றி காண்பார். இதற்குத் தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.’ என்றார்.

யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் நல்லிணக்க தைப்பொங்கல் !

யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவில், வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது.

 

 

 

 

 

ரணில் விக்ரமசிங்க அரசுக்கு ஆதரவு வழங்கத் தயார் – இரா.சம்பந்தன் நிபந்தனை !

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அவரது அரசுக்கு ஆதரவு வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தச் செய்தியில் சம்பந்தன் கூறியதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கடந்த காலங்களில் நாட்டின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்காக தைப்பொங்கலையும், சிங்கள – தமிழ் புத்தாண்டையும் தெரிவு செய்திருந்தனர். எனினும், தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஒவ்வொரு தைப்பொங்கலையும், தமிழ் – சிங்கள புத்தாண்டையும் தமிழ் மக்கள் மிகவும் எதிர்பார்புடனேயே கடந்து சென்றுள்ளனர்.

இந்தத் தடவை தைப்பொங்கல் காலத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அதற்கு ஏற்ற முறையில் அவர் செயற்படுவார் என நம்புகின்றோம்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வடக்கு, கிழக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆசை அன்றிலிருந்து இருந்தது. எனினும், அவரைச் சுற்றியிருந்தவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். அதனால் தமிழ் மக்களின் நம்பிக்கை ஏமாற்றத்தில் முடிவடைந்தது.

தென்னிலங்கையின் இனவாத அரசியலுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்குவது மிகவும் கடினமான விடயம் என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.

ஆனால், தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் 400,000 அமெ­ரிக்க டொலர்­களை வழக்குச்  செலவுத் தொகை­யாக வழங்க வேண்டும் – நீதி­மன்­ற­ம் உத்தரவு !

நியூயோர்க் ரைம்ஸ் பத்­தி­ரி­கைக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சில­ருக்கும் அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சுமார் 400,000 அமெ­ரிக்க டொலர்­களை வழக்குச்  செலவுத் தொகை­யாக வழங்க வேண்டும் என அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று உத்­த­ர­விட்­டுள்­ளது.

டொனால்ட் ட்ரம்பின் சொத்து விப­ரங்கள், வரி ஏய்ப்பு முயற்­சிகள் தொடர்­பாக, 2018 ஆம் ஆண்டு நியூ­யோர்க் ரைம்ஸில் வெளி­யி­டப்­பட்ட புல­னாய்வுக் கட்­டு­ரைக்கு புலிட்ஸர் விருது வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அக்­கட்­டு­ரைக்­காக தனது வரி விப­ரங்கள் அடங்­கிய ஆவ­ணங்­களை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் பெற்­றுக்­கொண்­ட­தாக மேற்­படி பத்­தி­ரிகை மீதும், 3 ஊட­வி­ய­லா­ளர்கள் மீதும் குற்றம் சுமத்­திய டொனால்ட் ட்ரம்ப் 100 மில்­லியன் டொலர் இழப்­பீடு கோரி 2021 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தார்.

ட்ரம்பின் உற­வி­ன­ராக மேரி ட்ரம்ப்பும்,  டொனால்ட் ட்ரம்­பினால் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்­களில் ஒருவர்.

இவ்­வ­ழக்கை நியூயோர்க் மாநில உயர் நீதி­மன்றம் கடந்த மே மாதம் தள்­ளு­படி செய்­தி­ருந்­தது.

இந்­நி­லையில், மேற்­படி வழக்­குக்­கான செலவுத் தொகை­­யாக நியூயோர்க் ரைம்ஸ் பத்­தி­ரிகை மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மூவ­ருக்கு 392, 638 அமெ­ரிக்க டொலர்­களை (சுமார் 12.5 கோடி இலங்கை ரூபா) டொனால்ட் ட்ரம்ப் வழங்க வேண்டும் என நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (12)  உத்தரவிட்டுள்ளது.

“அனைவருக்கும் வீடு” திட்டம் – 15,000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் !

“அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் 15,000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வீடு திருத்த வேலைகளுக்காக இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படும் என அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் ஊடாக பயனாளிகளுக்கு இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டு வீடமைப்பு அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு 7,650 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் முதல் வேலைத்திட்டமாக “அனைவருக்கும் வீடு” வீடமைப்பு கடன் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், கடந்த காலத்தில் பல்வேறு அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட 98,000 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அதிகார சபை கூறுகிறது.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு  வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

இது தவிர, 94 கிராமங்களில் 2,063 வீடுகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 690 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 337 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிடுகின்றார்.

இதன்படி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, கண்டி, வவுனியா, பதுளை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதுதவிர மாத்தளை, கிளிநொச்சி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில வீட்டுக் கிராமங்களின் நிர்மாணப் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக செலவிடப்படும் மொத்தத் தொகை 1,200 மில்லியன் ரூபாவாகும். இதில் 803 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. நிர்மாணப் பணிகளின் இறுதிக்கட்டத்தில் வீடுகளுக்காக 397 மில்லியன் ரூபா பெறப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்திய உதவியின் கீழ் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஒரு பயனாளிக்கு 5 இலட்சம் ரூபாவும், திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் 100,000/= ரூபாவும் மொத்தமாக 6 இலட்சம்ரூபாவும்  உதவித்தொகை மீளப் பெறாத அடிப்படையில்  வழங்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

கடந்த 2020-2023 ஆகிய  மூன்று ஆண்டுகளில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது நாடு முழுவதும் நிர்மாணிக்க ஆரம்பித்த 37,356 வீடுகளில் 30,894 வீடுகளைப் பூரணமாக நிர்மாணித்து முடித்துள்ளது.

மேலும் 6462 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைய உள்ளதாகவும் அந்த  அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை, மிஹிந்து நிவஹன, விரு சுமித்துரு, செவன மற்றும் சேவாபிமானி உட்பட 15 வீடமைப்பு உதவித் திட்டங்களின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டுத் திட்டங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவு ரூ.18717.771 மில்லியன் ஆகும். இதுவரை 17146.078 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட திட்டங்களுக்குத் தொடர்புடைய திறைசேரி நிதி, செவன நிதி, உள்ளக உற்பத்தி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின்  பெறப்பட்ட பணத்தின் மூலம் வீட்டுத் திட்டங்களுக்கான பணம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவிக்கிறது.

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இரண்டு வருடங்களாக விவசாயிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் நாடு வெற்றிப் பாதைக்குள் பிரவேசிக்கும் வேளையில் தைப்பொங்கல் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகிறது. வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம் என பொங்கல் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள பொங்கல் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும்.

வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல் திருநாள் குறிக்கிறது. தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் சூரியன் வடக்குக்கு நகரும்போது, நிகழும் மங்களகரமான அறுவடைக் காலத்தின் ஆரம்பமாக தைத்திருநாள் அமைந்துள்ளது.

இன்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக சோழர்களின் ஆட்சிக்காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடைக்காக தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அறுவடையின் செழுமைக்கு வித்திட்ட இயற்கை, கால்நடைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் மனதார நன்றி கூறுவதே பண்டிகையின் நோக்கமாகும்.

இரண்டு வருடங்களாக விவசாயிகளின் அர்பணிப்புக்களுக்கு மத்தியில் நாடு வெற்றிப் பாதைக்குள் பிரவேசிக்கும் வேளையில் தைப்பொங்கல் பண்டிகை இம்முறை கொண்டாடப்படுகிறது.

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம்.

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாடளாவிய ரீதியில் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்த ஆரம்பித்துள்ளது. அந்த அனைத்து பணிகளும் வெற்றியளிக்க இம்முறை தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.

அதேபோல் தைப்பொங்கல் நமக்கு சகவாழ்வையும் மதிப்பையும் போதிக்கிறது. அதற்கமைய நாட்டின் எதிர்காலத்துக்கான புதிய எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கு ஒருதாய் மக்களாக முன்னேற்றம் அடைய வேண்டும் என அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்ளும் அதேநேரம், தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதை விடுத்து உள்நாட்டு பிரச்சினைகளிற்கு தீர்வை காணுங்கள் – கர்தினால் மல்கம் ரஞ்சித்

அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ள அவர் உள்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன  என குறிப்பிட்டுள்ளார்.

பொரளைதேவலாயத்தில் இரண்டு வருடங்களிற்கு முன்னர் கைக்குண்டு மீட்கப்பட்டதை குறிப்பதற்காக இடம்பெற்ற விசேட ஆராதனையின்போது இதனை தெரிவித்துள்ள அவர் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் கைக்குண்டினை வைத்த உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறிவிட்டனர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார் ஊடகங்களை  துன்புறுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படுவார்களா என்பதை பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் பிரகீத்எக்னலிகொடவின் கொலைக்கு யார் காரணம் என்பதும் லசந்தவை யார் கொலை செய்தார்கள் என்பதும் எவருக்கும் இதுவரை தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்தும் மூடிமறைக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் உள்நாட்டு பிரச்சினைகளிற்குதீர்வை காண்பதற்கு பதில் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு தேர்தல்களி;ன் ஆண்டு என அறிகின்றோம் இந்த தடவை சரியான தலைவர்களிடம் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.