17

17

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – இரண்டு சிறுவர்கள் பலி – அதிகரிக்கும் பதற்றம் !

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவுக்குச் சொந்தமான இரண்டு தளங்களைத் தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) செவ்வாயன்று தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குஹே சப்ஸ் பகுதியில் குறிவைக்கப்பட்ட ஜெய்ஷ் உல்-அட்லின் தளங்கள் பயங்கரவாதக் குழுவின் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகும் என்று அரசு நடத்தும் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன” என்று ஈரானிய அரசு ஊடகம் விரிவாகக் கூறாமல் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதேவேளை ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இந்த தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்ததாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கண்டனத்தில்

“பாகிஸ்தானின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து இரண்டு அப்பாவி குழந்தைகளின் மரணத்திற்கு காரணமானதுடன் மூன்று சிறுமிகளை காயப்படுத்தியதை கடுமையாக கண்டிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இறையாண்மையை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த சம்பவம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

“ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் எப்போதும் கூறியுள்ளது. இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்கள் அண்டை நாடுகளின் உறவுகளுக்கு எதிரான செயற்பாடாகும்.அத்துடன் இருதரப்பு நம்பிக்கையையும் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நலனுக்காகவே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கினேன் – முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ

நாட்டின் நலனைகருத்தில்கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில் தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார்.

எனக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் துமிந்த சில்வாவை சிறையில் வைத்திருப்பது அவரது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வேறு பல காரணங்களை முன்வைத்து அவருக்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எனக்கு விடுக்கப்பட்டமை நினைவில் உள்ளது என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

துமிந்தசில்வாவிற்கு நான் பொதுமன்னிப்பை வழங்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் ஆவணங்கள் காணப்பட்டன எனவும் சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ள கோட்டாபய நான் தேசிய நலனை கருத்தில் கொண்டே பொதுமன்னிப்பை வழங்கினேன் எனவும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசியில் தெரிவித்துள்ளார்.

துமிந்தசில்வாவிற்கு வழங்கிய பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என தெரிவித்து நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில் இந்த சத்தியக்கடதாசியும் இடம்பெற்றுள்ளது.

தொடரும் யுக்திய நடவடிக்கை – ஒரே நாளில் மேலும் 1024 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 1024 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் 8 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு கோட்டாபாய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியது தவறு – உயர் நீதிமன்றம் தீர்ப்பு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read More …

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் !

மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் – நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சைவ மகா சபையினர், மத தலைவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலர் கைது – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கவலை !

ஒருசில சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதுபாரிய பிரச்சினையாகும். யுக்திய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைது செய்யப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டுள்ள நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ திங்கட்கிழமை (15) யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கைதிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதுடன் சிறைச்சாலை சமையலறை, பெண்கள் பிரிவு மற்றும் கைதிகளின் உற்பத்திகளையும் கண்காணித்தார். கண்காணிப்பு விஜயத்துக்கு பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒருசில சிறைச்சாலை அதிகாரிகள் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு இருப்பதாக பாரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. யுக்திய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின்போது சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். என்றாலும் யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இல்லை என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதனை மதிக்கிறோம்.

அத்துடன் எமது நாட்டில் ஏனைய சிறைச்சாலைகளைவிட மிகவும் சுத்தமாக சிறைச்சாலை வளாகத்தை வைத்திருப்பதற்கு இங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

முன்மாதிரியான நிறுவனமாக யாழ்ப்பாண சிறைச்சாலையை அறிமுகப்படுத்தலாம். இது தொடர்பாக சிறைச்சாலை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிப்பதுடன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு தேவையான குறைபாடுகளை பூரணப்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

யாழ். சிறைச்சாலையில் நேற்று 16ஆம் திகதிவரை 852 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதில் 38 பெண் சிறைக்கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.